Skip to main content

First Blood- ரீல்களுக்குள் நடுவே

 சிறுகதை





எம். பிரபு

 

இது மாதிரியான சூழ்நிலையில் ஹமீட் மிகவும் கடுப்பாகி விடுவான். அவன் நிலைமையை நிலைகுலையச் செய்துவிடும். அவனுக்கு பதற்றமான ஒரு மனநிலையில் வேலை செய்வதே பிடிக்காத ஒன்று. அது அவன் மனதையும் உடலையும் வெகுவாகவே சோர்வடையச் செய்துவிடும். என்ன செய்வது, பிடிக்கிறதோ இல்லையோ ஒரு வாய்ச் சோற்றுக்கு பொறுத்துத்தானே போக வேண்டும். 

இது அவனுக்கு இரண்டாவது முறை.

இன்னும் சிறிது நேரத்தில் அவன் மெந்தகாப் ரயில் நிலையத்திற்கு சென்றாக வேண்டும். அங்கிருந்து அந்தப் பெட்டியை வாடகை வண்டியில் ஏற்றிக் கொண்டு மீண்டும் பெந்தோங்கிற்கே வர வேண்டும். மிஸ்டர் ங் அவனை மிகவும் சிரமப்படுத்துவதாக அவனுக்கு தோன்றிற்று. சென்ற தடவை பரவாயில்லை; இன்று போல அவசர தேவை அல்ல.

அவருக்குத் தெரியும்தானே இன்று மதியம் இந்தப் படம்தான் போடப் போகின்றோம் என்று, ஏன் அதை முன்கூட்டியே வாங்கி வைக்க வேண்டியதுதானே அல்லது போன தடவை போல மறுவாரம் போட்டுத் தொலைக்க வேண்டியதுதானே. இதில் என்ன அவசரம்? படம் பார்க்க வருபவர்கள் என்ன ஓடியா போய்விடுவார்கள்? இத்தனைக்கும் அது புதுப்படம் கூட அல்ல.

இப்போதுதான் ஹமீடுக்கு புரிகின்றது, ஏன் முன்பு இங்கு வேலைப் பார்த்தவர்கள் எல்லாம் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்கவிலையென்று. முனகிக் கொண்டே கத்தே (Cathay) திரையரங்கிலிருந்து பெந்தோங் பேருந்து நிலையத்திற்கு நடந்தே சென்றான்; தூரமில்லை.

காலை 9 மணிக்கு தெமர்லோ போகும் பஸ்ஸில் அவன் ஏறியாக வேண்டும். போகும் வழியில் மெந்தகாப்பில் இறங்கி, அங்கிருந்து நடந்து ரயில் நிலையத்தை அடைய வேண்டும். குவாலா லிப்பீஸ் பேரடைஸ் (Paradise) திரையரங்கிலிருந்து ரயிலில் அனுப்பப்படும் ஃபர்ஸ்ட் பிளட் (FIRST BLOOD) படச்சுருள் பெட்டியை பெந்தோங்கிற்கு கொண்டுப் போக வேண்டும். 2 மணிக்கு ஆட்டத்தை வைத்துக் கொண்டு காலையில் போய் படப்பெட்டியை எவனாவது எடுக்கச் சொல்வானா? சுத்த பைத்தியக்காரத்தனமான செயல் என பொருமினான் ஹமீட்.

33 வயதாகும் ஹமீட், பத்து வயதிலிருந்தே ரவுப் கம்பூங் தெர்சாங்கில் பலவிதமான வேலைகளை செய்து வந்துள்ளான். அவனது தகப்பனார், ஹமீடுக்கு எட்டு வயதிருக்கும் போதே மாரடைப்பால் இறந்து விட்டார். பள்ளிக்கு தொடர்ந்து செல்லாமல் தன் உடன்பிறப்புக்களை பார்த்துக் கொள்வதும் அந்த சிறிய வயதிலேயே பால் மரம் சீவும் வேலையெல்லாம் செய்துள்ளான். அவனது தாயார்தான் சிரமப்பட்டு காய்கறிகள் நட்டு கோழி வளர்த்து எல்லோரையும் காப்பாற்றினார். காலையில் பால் மரம் சீவிவிட்டு சாயங்காலம் தன் தாயாருக்கு உதவி புரிந்தான் ஹமீட்.

தன் அப்பா இறந்து மூன்று வருடங்களில் ஹமீடின் தாயார் வேறொரு திருமணம் புரிந்தார். மாற்றான் தந்தை மிகவும் நல்லவராக இருந்தார். பதின்ம வயதில் ஹமீட் கோப்பிக் கடையிலும் தன் புதிய தந்தையுடன் மர ஆலையிலும் வேலை செய்தான். அதன் பிறகு ஹமீடுக்கு ரவுப் பட்டணத்தில் உள்ள கத்தே திரையரங்கில் டிக்கெட் கிழிக்கும் வேலை கிடைத்தது. ஹமீடுக்கு மிகவும் சந்தோஷம், தினந்தோறும் வேலையைப் பார்த்த மாதிரியும் இருக்கும், இலவசமாய் படம் பார்த்த மாதிரியும் இருக்கும்.

ரவுப் கத்தேயில் ஹமீட் திரையரங்கு வாசற்கதவில் டிக்கெட் கிழிப்பதோடு மட்டுமல்லாமல், இருட்டில் படம் பார்க்க வருபவர்களுக்கு கைலாம்பு வெளிச்சத்தில் அவர்களின் இருக்கைகளைக் காட்ட வேண்டும்; குப்பைகளைக் கூட்ட வேண்டும்; அரங்கத்தை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். அதவும்ம் தமிழ்ப் படங்கள் போட்டால் வெற்றிலைக் கறைகள் கண்ட இடங்களில் துப்பிக் கிடக்கும். அதோடு மட்டுமல்லாது பலகையினால் செய்யப்பட்ட முன் வரிசை இருக்கைகளை நாசம் செய்தும் வைத்திருப்பார்கள். பீர் போத்தல்களும் சமயங்களில் உடைந்துக் கிடக்கும். அதோடு, எல்லா வரிசைகளிலும் குவாச்சியின் தோல்களையும், சிகரெட் துண்டுகளையும் அதன் சாம்பல்களையெல்லாம் அப்புறப்படுத்துவதே பெரும் பாடாகிவிடும். ஒழுங்காக பள்ளிக்குப் போயிருந்தால் இந்த நிலைமை தனக்கு ஏற்பட்டிருக்காது என்று நினைத்துக் கொள்வான் ஹமீட். என்ன செய்வது, அல்லாஹ் தமக்கு வித்தித்த விதிபடிதான் தன் வாழ்க்கை ஓட்டம் ஓடும் என்று சுதாகரித்துக் கொண்டான்.


படம் பார்க்கும் சந்தோஷமெல்லாம் சில மாதங்கள் வரையில்தான். ஒரு நாளுக்கு மூன்று ஆட்டம். சனிக்கிழமைகளில் நள்ளிரவுக் காட்சியோடு சேர்த்து நான்கு காட்சிகள். அதே படத்தை ஒரு வாரமோ அல்லது இரு வாரங்களுக்கு ஓட்டினால் பார்க்க ஆசையாகவா இருக்கும்? படங்களில் வரும் ஒவ்வொரு காட்சியும் வசனங்களும் அவனுக்குப் புரிகின்றதோ இல்லையோ, தன்னையறியாமலேயே படத்தை பார்க்காமலேயே ஹமீடுக்கு மனப்பாடம் ஆகிவிடும்.

கீழ் மாடிகளிலேயே தினசரி வேலைப்பார்ப்பது அவனுக்கு போரடித்ததால் ஹமீட் அவ்வப்போது ரிசர்வ் மாடிக்கு மேல் உள்ள ப்ரொஜெக்க்ஷன் அறைக்கு ஏறிப்போவது வழக்கமான ஒன்று. ஃபிலிம் ப்ரொஜெக்டர் ஆப்பரேட்டராக வேலைப் பார்க்கும் சின்னையாவிற்கு ஹமீட் அடிக்கடி மேலே வருவது பிடிக்காது. அவர் வேலை செய்யும் போது யாரும் அவரை தொந்தரவு செய்யக்கூடாது. அதனால் ஹமீடுக்கு அடிக்கடி பாட்டு விழும்.

ஹமீட், சின்னையா ஃபிலிம் ரீலை ப்ரொஜெக்டரில் பொருத்தி வெள்ளித் திரையில் திரையிடும் விதத்தைப் பார்த்து மிகவும் உற்சாகம் அடைவான். ப்ரொஜெக்டரின் சத்தமும் ஃபிலிம் ஸ்பூலின் சுழற்சியும் அவனை உற்சாகப்படுத்தியது. அவனுக்கு ஃபிலிம் ரோல்களையும் ரீல்களையும் தொட்டுப் பார்க்க வேண்டும், அவற்றை ப்ரொஜெக்டரில் இணைத்து, கார்பன் விளக்கை ஏற்றி, வெள்ளித்திரையில் திரையிட வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருந்தது. அந்த வேலை, காட்சி முடியும் வரை தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய வைக்கும். அதுதான் ஹமீடுக்கு வேண்டும். ஆனால் சின்னையா அவனுக்குக் கற்றுக்கொடுக்க விரும்பவில்லை.

ஹமீட் தைரியமாகத் தன் ஆசையை திரையரங்க மேனேஜர் திரு. நாதனிடம் கூறினான். ஹமீடை திரு. நாதன் நடத்திய விதம் சின்னையாவுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் வேறு வழியின்றி ஹமீடை தன் உதவியாளராக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. மேனேஜரின் பேச்சை அவரால் எப்படி மீற முடியும்?

ஹமீட் இரண்டே நாட்களில் ப்ரொஜெக்டரில் ஃபிலிம் ரீல்களைப் பொருத்துவது, ஃபிலிமை மீண்டும் ஸ்பூலில் சுற்றுவது மற்றும் ஸ்லைடுகளைக் காண்பிப்பது போன்ற வேலைகளை மிகவும் எளிதாகக் கற்றுக்கொண்டதைப் பார்த்து சின்னையாவே ஆச்சரியமும் வியப்பும் அடைந்தார்.

அதன் பிறகு ஹமீடும் சின்னையாவும் நல்ல நண்பர்களானார்கள். சின்னையா அவனுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார். ஸ்பூலில் இடத்தை மிச்சப்படுத்துவதற்காக ஃபிலிம்களை ஒட்டுவதற்கும் இணைப்பதற்குமான முறைகளையும் ஹமீட் கற்றுக்கொண்டான். திரையிடலின் போது ஃபிலிம் தீப்பற்றி எரிந்துவிட்டால், அதை வெட்டி மீண்டும் இணைப்பது/ஒட்டுவது எப்படி என்பதையும் அவன் கற்றுக்கொண்டான்.

ஹமீட் பொத்தானை அழுத்தியதும் மணியடித்தது. பேருந்திலிருந்து இறங்கி மெந்தகாப் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தான். சற்று தூரம்தான். அப்போது காலை மணி 10.30. வெயில் நன்றாகவே கொளுத்தியது. பெந்தோங்கிலிருந்து மெந்தகாப்பிற்கு ஏறி இறங்கும் பயணிகளுடன் பேருந்தில் ஏற்கனவே கூட்டம் நெரிசலாக இருந்தது. வியர்வையினால் அவனுடைய வட்டக் கழுத்து டீ-ஷர்ட்டும் ஜீன்ஸ் சிலுவாரும் உடலில் ஒட்டிக்கொண்டன.

குவாலா லிப்பிஸிலிருந்து வரும் ரயில் காலை 11 மணிக்கு வந்துவிடும் என்று ஹமீட் நினைத்தான். காத்துக் காத்துப் பார்த்து, மதியம் 12 மணிக்கு மேல்தான் ரயில் வந்தது. தண்டவாளத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் ரயில் வர தாமதமாகிவிட்டதாக ஸ்டேஷன் மாஸ்டர் கூறினார். பசி அவன் வயிற்றைக் கிள்ளியது. இன்று காலை அவன் இரண்டு தாவா பிஸ்கட்களையும் 'காபி ஓ'வையும் மட்டுமே சாப்பிட்டிருந்தான்.

மிகவும் சிரமப்பட்டு 7 ஃபிலிம் ரீல்கள் அடங்கிய, சுமார் 25 கிலோ எடையுள்ள அந்த உலோகப் பெட்டியை பிளாட்ஃபார்ம் தரையில் இறக்கினான். 'இது சரிவராது' என்று யோசித்துவிட்டு, ஒரு டாக்ஸி டிரைவரைத் தேடிச் சென்றான். அதிர்ஷ்டவசமாக, ரயில் நிலையத்திற்கு சற்று தொலைவில் உள்ள ஒரு மரத்தடியில் இரண்டு டாக்ஸிகள் பயணிகளுக்காகக் காத்திருந்தன.

“அப்பேக், நான் பெந்தோங் போகணும். வந்து சாமானைத் தூக்க எனக்கு கொஞ்சம் உதவி செய்கிறாயா?”

மரத்தடியில் சிகரெட் பிடித்துக்கொண்டே 'நான் யாங் சியாங் பாவ்' செய்தித்தாள் படிப்பதில் மூழ்கியிருந்த டாக்ஸி டிரைவர், ஹமீடை மேலிருந்து கீழ் வரை நிமிர்ந்து பார்த்துவிட்டு பின் அவன் பின்னாலேயே சென்றார்.

“ஐயோ! என்ன சாமான் இது? இவ்வளவு கனமா இருக்கு!”

“சினிமா ஃபிலிம் பெட்டி.”

இருவரும் அந்த ஃபிலிம் பெட்டியை காரின் டிக்கியில் வைத்தார்கள். அப்பேக் ஹமீடுக்கு உதவி செய்வதில் சற்றே வருத்தமடைந்தது போல் தெரிந்தது. பிறகு வாடகைக் கட்டணத்தைக் கூட்டி வசூலித்து விடவேண்டியதுதான் என்று தன் மனதிற்குள் கணக்குப் போட்டுக் கொண்டார்.

காரில் உட்கார்ந்த பிறகுதான் ஹமீடுக்கு நிம்மதியாக இருந்தது. அவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி மதியம் 12.45 எனக் காட்டியது. அவன் இதயம் வேகமாக அடித்துக்கொண்டது.

ஹமீட் முன் இருக்கையில் உட்கார்ந்தான். டாட்சன் (Datsun) டாக்ஸியின் என்ஜின் ஸ்டார்ட் செய்யப்பட்டு, கார் மெதுவாக நகரத் தொடங்கியது. டாக்ஸிக்குள் இருந்த காற்றாடியின் சுழற்சி உடலைக் குளிர்விக்காமல், ஹமீடின் உடலை மேலும் சூடாக்கியது.

“அப்பேக், மதியம் இரண்டு மணிக்கு முன்னாடி பெந்தோங் போய் சேர முடியுமா?”

“போக முடியும்னு நினைக்கிறேன்.”

“சும்மா நினைக்காதே அப்பேக். நான் கண்டிப்பா ஒரு ஒன்றரை மணிக்குள்ள அங்கே இருக்கணும். நிறைய வேலை இருக்கு. ரெண்டு மணிக்கு இந்த படத்தைப் போட்டாகணும்.”

“ரெண்டு மணிக்கு படம் போடணும்னா, இப்பதான் இத எடுக்க வருவியா?”

“உனக்குத் தெரியுது, என் மேனேஜருக்குத் தெரியலையே!”

ஹமீட் தன் சிலுவார் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து நெற்றியிலும் முகத்திலும் வழிந்த வியர்வையை அழுத்தித் துடைத்துக் கொண்டான்.

“நீ, இந்த வேலைக்குப் புதுசா?”

“முன்னாடி நான் ரவூப் கத்தேலே வேலை செஞ்சேன், அப்பேக். பெந்தோங் கத்தேல அஞ்சு வருஷமா இருக்கேன்.”

அப்பேக் காரை மிகவும் மெதுவாக ஓட்டியதால் ஹமீடின் பதற்றம் மேலும் அதிகரித்தது.

“உனக்கு எத்தனை குழந்தைங்க?”

இந்த அப்பேக் காரை ஓட்டப்போகிறானா அல்லது தன்னிடம் நேர்காணல் நடத்தப்போகிறானா? ஹமீடுக்கு அசௌகரியமாகவும் அமைதியில்லாமலும் இருந்தது. வயிற்றிலும் பசி. ஏதேனும் கடையில் சாப்பிடுவதற்காக நின்றால், இன்று பெந்தோங் கத்தே திரையரங்கத்தில் பெரிய கலவரமே நடந்துவிடும்.

“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல அப்பேக். இரவும் பகலும் தியேட்டருக்குள்ளயே உட்கார்ந்திருக்கேன். அப்புறம் எங்கே 'ஆ மோய்' தேட நேரம் இருக்கும்?”

அப்பேக்கின் டாக்ஸி மெந்தகாப் மருத்துவமனையையும் கம்போங் பத்து கப்பூரையும் தாண்டியது.

“ஹையா, வேலையும் செய்யணும், கல்யாணமும் பண்ணிக்கணும்ல! உங்க மலாய் மக்கள் ரொம்ப சீக்கிரமா கல்யாணம் பண்ணிப்பீங்க. உன்னைப் பார்த்தா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு!”

ஃபிலிம் ஒட்டும் பசையைக் கொண்டு அப்பேக்கின் வாயை ஒட்டிவிட வேண்டும் போல் ஹமீடுக்குத் தோன்றியது. காரைத்தான் மெதுவாக ஓட்டுகிறார், ஆனால் வாய்தான் அதிகமாகப் பேசுகிறது. கோபப்பட்டால், பெரியவருக்கு மரியாதைகொடுக்கவில்லை என்று சொல்லிவிடுவார்கள்.

“அது அவங்க விருப்பம், நான் வேற மாதிரி அப்பேக்,” ஹமீட் அலட்சியமாகப் பதிலளித்தான்.

“இந்தப் படம் ரொம்ப நல்ல படமா, ஏன் லாரியில அனுப்பாம நீயே வந்து எடுத்துட்டு போற?”

“இந்த 'ஃபர்ஸ்ட் பிளட்' (First Blood) படம் ரொம்ப நல்ல படம். மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்தப் படம்தான் இப்போ கத்தே மேனேஜர் இதை மீண்டும் வாடகைக்கு எடுக்க விரும்புறார். அடுத்த மாசம் இதோட இரண்டாம் பாகமும் லிடோவில் திரையிடப்பட இருக்கு. சீக்கிரம் திரையிடணும், லாரி வரும் வரை காத்திருக்க முடியாது. சில சமயம் பஸ்ஸில அனுப்புவாங்க. லிப்பிஸிலிருந்து பெந்தோங்கிற்கு பஸ் இல்லை. அதனாலதான் நான் இங்கே வந்தேன் அப்பேக்.”

“உனக்கு சம்பளம் அதிகமா?”

“எங்கே அதிகமா இருக்கு அப்பேக் ... நூற்றி ஐம்பது வெள்ளிதான். இப்போதைக்கு இது போதும். நான் கத்தே தியேட்டருக்குப் பின்னாடிதான் தங்கியிருக்கேன். அம்மா சமைச்சுத் தரும் சாப்பாட்டை எடுத்துட்டு வந்துடுவேன்.”

“ஓஓஹ்!”

அப்பேக் இன்னும் பல கேள்விகளைக் கேட்டார். சிலவற்றிற்குப் பதில் அளிக்கப்பட்டது, சிலவற்றிற்குப் பதில் அளிக்கப்படவில்லை. ஹமீட் தன் பழைய கைக்கடிகாரத்தில் நேரத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான்.

கத்தே தியேட்டரின் வராந்தாவில் மிஸ்டர் ங் கோபத்துடன் இடுப்பில் கை வைத்தபடி ஹமீடுக்காகக் காத்திருப்பது போல் இருந்தது. தியேட்டருக்குள் இருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கத்திக்கொண்டே திரையை நோக்கி கண்ணாடி பாட்டில்களை வீசிக் கொண்டிருந்தனர். டிக்கெட் விற்கும் சீனப் பெண்மணி டிக்கெட் கவுண்டருக்குள்ளிருந்து கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார். ஃபிலிம் ரீல்கள் ப்ரொஜெக்க்ஷன் அறையின் மேல் படிக்கட்டுகளிலிருந்து கீழே உருண்டு விழுந்து, ஹமீடின் உடல் முதல் தலை வரை ஃபிலிம் சுருள்களால் சுற்றப்பட்டுக்கிடந்தது. ஹமீடின் முகம் ஃபிலிமால் மூடப்பட்டிருந்ததால் அவனால் எதையும் சரியாகப் பார்க்க முடியவில்லை.

ஹமீட் திடுக்கிட்டு விழித்தான். தான் சிறிது நேரம் தூங்கிவிட்டதை உணர்ந்தான்.

மணி பிற்பகல் 1.45 ஆகிவிட்டது!

அப்பேக்கின் டாக்ஸி காராக் பட்டணத்தைக் கடந்து கொண்டிருந்தது.

“கொஞ்சம் வேகமா போ அப்பேக்!”

“இந்த கார் ரொம்ப பழையது. இதைவிட வேகமா போக முடியாது. அடுத்த வருஷம் எனக்கு 'புரோட்டான் சாகா' கார் வாங்கித் தரேன்னு என் மகன் சொல்லியிருக்கான்.”

அப்பேக்கை டாக்ஸியிலிருந்து வெளியே தள்ளிவிட்டு, டிரைவர் சீட்டில் அமர வேண்டும் போல் ஹமீடுக்குத் தோன்றியது. ஆனால் என்ன செய்வது, அவனுக்கு கார் ஓட்டத் தெரியாதே.

எப்படியோ டாக்ஸி பெந்தோங் கத்தே திரையரங்கு வளாகத்தை வந்தடைந்தபோது மணி பிற்பகல் 2.30 ஆகிவிட்டது. ஹமீட் அவசர அவசரமாக டாக்ஸியிலிருந்து இறங்கி, டிக்கியை திறக்குமாறு அப்பேக்கை அவசரப்படுத்தினான்.

திரையரங்க வளாகத்தின் சுவர்க் கண்ணாடிப் பேழையில் ஒட்டப்பட்டிருந்த படங்களைப் பார்த்துக் கொண்டு இரண்டு பேர் மட்டுமே நின்றிருந்தனர். டிக்கெட் கவுண்டர் திறக்கப்படவில்லை. நிச்சயம் பார்வையாளர்கள் அனைவரும் உள்ளே காத்துக்கொண்டு கத்திக் கொண்டிருப்பார்கள் என்று அவன் நினைத்தான். அப்போது கத்தேயின் பகுதிநேர ஊழியரான 'அங்கிள் லிங்கம்' நொண்டியபடி அவர்களை நோக்கி வந்தார்.

“நல்லவேளை இன்னைக்கு கரண்ட் இல்லை. காலைல பதினொரு மணிக்கு முழு பெந்தோங் நகரத்துலயும் கரண்ட் போயிடுச்சு. இப்பதான் எல்.எல்.என் (L.L.N - தேசிய மின்சார வாரியம்) ஆளுங்க வந்து மிஸ்டர் ங்கை பார்த்துப் பேசிட்டு போனாங்க. இன்னைக்கு ராத்திரிதான் கரண்ட் வரும்னு சொல்லியிருக்காங்க.”

ஹமீடும் அப்பேக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

 

 முற்றும் 

 



Comments

  1. நல்லா எழுதியிருக்கீங்க மகேந்திரன். புரோஜெக்டர் விவரணையெல்லாம் நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள். 🤝

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பழைய நிழற்படங்கள்

  கட்டுரை          தகப்பனார் திரு. எஸ். மாதவனின்  பள்ளி வகுப்புப் படம் , சிகாமட் ஜொகூர் 1940க்களில் எம். பிரபு   சிறுபிராயத்தில் இருந்தே எனக்கு பழைய நிழற்படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் மிகுதி. எங்கள் வீட்டில் எங்கள் தகப்பனார் திரு. எஸ். மாதவன் அவர்களின் ஆல்பங்களை அப்போதிலிருந்தே பார்த்துக் கொண்டு வருவதால் , இந்த ஆர்வம் பிறந்தது எனலாம். அதுவும் கறுப்பு வெள்ளைப் நிழற்படங்கள் என்றால் அலாதி ஆர்வம். வீட்டில் உள்ள ஆல்பங்களின் படங்கள் , 1940 -ஆம் ஆண்டுகளின் மத்தியில் முதற்கொண்டு எடுத்தப் படங்களாக இருக்கும். அந்தப் படங்களை எடுத்தவர் என் தகப்பனாரின் உறவுக்காரர்   என்று மட்டும்   தெரியும் ஆனால் அவர் யார் என்று இதுவரையில் எனக்குத் தெரியாது. இதைத் தவிர்த்து 1950-ஆம் 1960-ஆம் ஆண்டுகளில் எங்கள் உறவினர்கள் ஸ்டூடியோவில் பிடித்த நிழற்படங்களும் எங்கள் வீட்டு ஆல்பங்களை நிரம்பியிருக்கும். பெரும்பாலான கருப்பு வெள்ளைப் படங்கள் பல வித அளவு கொண்ட பிரிண்ட்டுகளில் போடப்பட்டிருக்கும் . ஒரு முழு ஆல்பம்  அளவு முதற்கொண்டு , சுண்டு விரல் அளவு வரைக்கும் படங்...

சிறுமி நீய்ஹா மதனின் சாதனைகள்

  அனுபவம்      எம்.   பிரபு   நான் தொடக்கப்பள்ளியில் படித்த காலத்திலிருந்தே மணிமேகலை நாயர் அவர்களின் குடும்பத்தை அறிந்திருந்தேன். மணிமேகலையும் அப்போது சிறுமியாக இருந்தார்.    என் தந்தை திரு. எஸ். மாதவன் அவர்கள்   National Union of Plantation Workers ( தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்) அமைப்பில் பொருளாளராகப் பணியாற்றினார். ஒவ்வொரு மாதமும்  அவர் மற்றும் ஓட்டுநர்   திரு. கோவிந்தன் அவர்களுடன் பஹாங்கில் உள்ள பல தோட்டங்களுக்கு Peugeot   404 காரில் சென்று தொழிலாளர்களிடமிருந்து சங்க ச்   சந்தாவை வசூலி ப்பதோடு  தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிவார்கள். அந்த வயதில் அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த மாதச்   சந்தா,  தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும்   நலனுக்காகவும்  மேற்கொள்ளப்பட்டதாக அறிவேன். பொதுவாக தோட்ட பிரதிநிதிகள் மூலம் மாதச் சந்தா சேகரிக்கப்பட்டன. பள்ளி விடுமுறைகளில் நான் மற்றும் என் சகோதரர் ,  தந்தையுடன் அந்தப் பயணங்களின் போது...

முருகனே துணை

  சிறுகதை   எம். பிரபு       இத்தனை காலமாக நான் வணங்கி வந்த அந்த முருகப் பெருமான் மெல்ல மெல்ல என்னை கை விட்டு விட்டதாக அப்போது உணர்ந்தேன். நான் ஒரு தவறும் செய்யவில்லையே, இருந்தும் அண்மைய காலமாக ஏன் என்னை சோதனை மேல் சோதனை செய்கின்றான் அந்த முருகன். நான் அவனுக்கு என்ன குறை வைத்தேன்? வாரம் தவறாமல் அவன் சன்னிதிக்குச் சென்று, அவன் பெயரிலேயே அர்ச்சனை செய்கின்றேனே. நெய் தீபம் ஏந்தி கோவிலை வலம் வருவேனே. கோவிலுக்குப் போகும் போதெல்லாம் அர்ச்சகருக்கும் கோயில் உண்டியலிலும் என்னால் முடிந்த அளவுக்கு காணிக்கை செலுத்துவேனே. உனக்கு என்ன குறை வைத்தேன் முருகா? சொல் முருகா! சிறு வயதிலிருந்தே என் அப்பன் முருகன் என்னைக் கைவிட்டதே இல்லை. என்ன பிரச்சனை வந்தாலும், அது அப்படியே பனி போன்று மறைந்துப் போகும். எனக்கே அது மிகவும் ஆச்சர்யத்தை கொடுக்கும். எல்லாம் முருகனின் செயல் என்று நான் அறிவேன். இரண்டோ அல்லது மூன்று வயது இருக்கும் போதே எனக்கு முருகன் என்றால் அவ்வளவு பிரியம். கோவிலில் முருகன் சிலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு. “ உனக்கு முருகன் வேஷம் போட்டா அழகா இருக்கும், ...