சிறுகதை
எம். பிரபு
இத்தனை காலமாக நான் வணங்கி வந்த அந்த முருகப் பெருமான் மெல்ல மெல்ல என்னை கை விட்டு விட்டதாக அப்போது உணர்ந்தேன்.
நான் ஒரு தவறும் செய்யவில்லையே, இருந்தும் அண்மைய காலமாக ஏன் என்னை சோதனை மேல் சோதனை செய்கின்றான் அந்த முருகன். நான் அவனுக்கு என்ன குறை வைத்தேன்?
வாரம் தவறாமல் அவன் சன்னிதிக்குச் சென்று, அவன் பெயரிலேயே அர்ச்சனை செய்கின்றேனே. நெய் தீபம் ஏந்தி கோவிலை வலம் வருவேனே. கோவிலுக்குப் போகும் போதெல்லாம் அர்ச்சகருக்கும் கோயில் உண்டியலிலும் என்னால் முடிந்த அளவுக்கு காணிக்கை செலுத்துவேனே.
உனக்கு என்ன குறை வைத்தேன் முருகா? சொல் முருகா!
சிறு வயதிலிருந்தே என் அப்பன் முருகன் என்னைக் கைவிட்டதே இல்லை. என்ன பிரச்சனை வந்தாலும், அது அப்படியே பனி போன்று மறைந்துப் போகும். எனக்கே அது மிகவும் ஆச்சர்யத்தை கொடுக்கும்.
எல்லாம் முருகனின் செயல் என்று நான் அறிவேன்.
இரண்டோ அல்லது மூன்று வயது இருக்கும் போதே எனக்கு முருகன் என்றால் அவ்வளவு பிரியம். கோவிலில் முருகன் சிலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு.
“உனக்கு முருகன் வேஷம் போட்டா அழகா இருக்கும், செல்வி,” என்று அம்மா பாராட்டிப் பேசுவார். அது போன்றே முருகன் வேடமிட்டு படமும் பிடித்தார்கள். அது இன்னமும் எங்கள் வீட்டின் ஹாலில் மாட்டியிருக்கும்.
அம்மாவுக்கு கந்தசஷ்டி கவசம், சுப்ரபாதம் போன்ற பக்திப் பாடல்கள் சிடியிலே கேட்கப் மிகவும் பிடிக்கும். எனக்கோ அதோடு சேர்த்து அப்பா போடும் டி.எம்.எஸ் பாடின முருகன் பாடல்கள் அதற்கு மேலும் பிடிக்கும். என் தம்பி தங்கைகளுக்கு பக்திப் பாடல்களெல்லாம் அவ்வளவாகப் ஒத்து வராது. ஹரிஹரன் பாடிய பாடல்கள் அல்லது ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பார்கள். இளையராஜா பாடல்களும் அவர்களுக்குப் பிடிக்காது. என்னைப் பார்த்து ஏன் வயசானவங்க பாடல்களெல்லாம் கேட்கின்றாய் என்று கிண்டல் செய்வார்கள்.
முருகன் பாடல்களைக் கேட்கக் கேட்க என் உள்ளம் அந்த சின்ன வயசிலேயே உருகிவிடும். ஆனந்தத்திலும் ஆனந்தம் முருகனை தினம் நினைத்து பாடல்கள் கேட்பதும் பாடுவதுமே.
‘உள்ளம் உருகுதையா முருகா உன்னடிகாண்கையிலே அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா ...உள்ளம் உருகுதைய்யா ...'
பிறருடைய துன்பத்தை பொருட்படுத்தாத முருகன் என்னை மட்டும் தனியாக கவனிக்கின்றான் என்று நினைத்து புளகாங்கிதம் அடைவதுண்டு.
இருக்காதா பின்னே.
கீழே விழுந்து காலில் அடிப்பட்டால் சீக்கிரம் ஆறிவிடும், காலையில் காய்ச்சல் வந்தால் மாலையில் காணாமல் போய்விடும், ஒரு வருடத்திற்கு ஒரு தடவைதான் சளி, இருமல் வரும். அதுவும் கடல் தேங்காய் முத்திரையிட்ட இருமல் மருந்து குடித்தால் மறுநாளே எல்லாம் பறந்து போகும்.
பள்ளியில் என் தோழிகளின் மூக்கில் வாரக்கணக்கில் சளி ஒழுகிக் கொண்டிருக்கும். அதைப் பார்க்க அருவருப்பாக இருக்கும். எனக்கு இந்த மாதிரி சளித் தொல்லையே முருகன் கொடுத்ததில்லை.
ஏனென்றால் எனக்கு முருகனே துணை.
எனக்கு ஒன்றும் ஆவதில்லை என்ற மமதை இருந்தாலும், நான் அதை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. என் தம்பி தங்கைகளுக்கும் அடிக்கடி நோய் வந்துப் போகும். பள்ளிக்கூடத்தில் அவர்களுக்கு பிரச்சனைகளும் வரும். எனக்கோ நல்லபடியாகவே எனது பள்ளி நாட்கள் கடந்துச் சென்றன.
எல்லாம் முருகனின் செயல் என்று நான் அறிவேன்.
பள்ளிப் படிப்பிலும் நான் சோடை போனதில்லை. எல்லாப் பாடங்களிலும் 'ஏ’ எடுக்காவிட்டாலும் என் தம்பி தங்கைகள் போன்று அடிக்கடி சிவப்பு மார்க் வாங்கியதே இல்லை. அக்காள் என்ற முறையில் அவர்களுக்கு எனக்குத் தெரிந்தவற்றை சொல்லிக் கொடுப்பதும் உண்டு. இருந்தாலும் என் கெட்டிக்காரத்தனத்தை அவர்களிடம் காட்டிக் கொண்டதில்லை. அப்பாதான் அக்காளைப் பாருங்கள், அவள் நன்றாகப் படிக்கின்றாள், பேச்சுப் போட்டியிலும், திருமுறை ஓதும் போட்டிகளிலும் பங்குப்பெற்று கேடயங்கள் கொண்டு வருகின்றாள் என்று அவர்களிடம் பெருமைப்பட்டுக்கொள்வார்.
என்னதான் நான் பக்திப்பிளம்பாக இருந்தாலும், நானும் எல்லோரையும் போன்று ஒரு சராசரி பெண்தானே. எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் அல்லவா.
இடைநிலைப் பள்ளியில் பயிலும் போது சக மாணவிகள் ஆண்களைப் பற்றியும் அல்லது அவர்களுக்கு பிடித்த நடிகர்களைப் பற்றியும் பேசும் போது, நான் எதுவும் பேசாதிருப்பேன். சிலருக்கு அந்த வயதிலேயே காதலர்களும் உண்டு. அவர்களைப் பார்க்க எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும். பொறாமையாகவும் இருக்கலாம்.
எனக்கும் அது போன்று ஆசைகள் வருவது போன்று தோன்றினாலும் நான் என் முருகனை நினைத்து நினைத்து ஆசைகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விடுவேன்.
பள்ளியில் பயிலும் போது எந்த மாணவனும் என்னை சீண்டியதும் இல்லை. நான் அழகாக இல்லையா என்று எனக்கே சந்தேகம் வந்தது. மிகவும் அழகாக இல்லாவிட்டாலும். சற்று லட்சணமாகவே இருக்கின்றேன் என்பதை உணர்ந்தேன்.
என்னை சீண்டும் அளவுக்கு நான் எந்த மாணவனிடமும் நட்பு வைத்துக் கொண்டதும் இல்லை. எல்லோருடனும் அளவோடு பழகும் விதமும் நான் போட்டிருக்கும் மூக்குக் கண்ணாடியும் ஒரு வேளை அவர்களை பயமுறுத்தியிருக்கலாம். அதுவரைக்கும் நான் என் முருகனுக்கு மிகவும் நன்றிக்கடன் பெற்றுள்ளேன். இல்லாவிட்டால் நன்றாக படித்து ஓர் ஆசிரியராகி இருக்க முடியாது. அது மட்டும் நிச்சயம்.
பள்ளியில் பயிலும் போது எதுவும் நடக்கவில்லை, பயிற்சியில் இருக்கும் போதும் ஒன்றும் அமையவில்லை, ஆனால் பள்ளியில் பயிற்றுவிக்கும் போது அது நடந்தே தீர்ந்தது.
ஏனென்றால் அதுவும் முருகனின் செயலே.
“டீச்சர், நீங்க மத்த டீச்சர்கள விட வித்தியாசமா இருக்கீங்க. ஏதோ ஒரு ஈர்ப்பு உங்க கிட்ட இருக்கு.”
இப்படிச் சொல்லித்தான் அவர் என் வாழ்க்கையில் நுழைந்தார்.
முதல் தடவையாக ஒரு ஆண் என்னை இப்படிப் புகழ்ந்த போது நான் மிகவும் வெட்கப்பட்டேன் என்றாலும் மகிழ்ந்துதான் உண்மைதான். அவர் அப்படி சொன்னவுடன் ஏனோ தெரியவில்லை, இவர்தான் எனக்கு கணவராக வர வேண்டுமென்று மனது முடிவு செய்தது.
நான் எப்படி அப்படி யோசித்தேன் என்று எனக்கே என் மீது சந்தேகமாக இருந்தது. ஆனால் எனக்குத் தெரியும் இதுவும் அந்த முருகனின் செயலாகத்தான் இருக்கும் என்று. என் அப்பன் முருகன் எனக்கு எல்லா விதத்திலும் மாய்ந்து மாய்ந்து, அதுவும் எனக்குத் துணை தேடித் தரும் அளவுக்கு உதவி புரிகின்றான் என்றால் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.
அவரும், அதாவது ஜீவா பார்ப்பதற்கு அஜித் குமார் சாயலில் மிகவும் லட்சணமாகவும் ஸ்டைலாகவும் இருந்தார். நாங்கள் இருவரும் ஒரே ஆரம்பத் தமிழ் பள்ளியில் பணிபுரிந்தோம்.
“டீச்சர், உங்கள் நடை, உடை, நீங்க எல்லோருடன் பேசும் விதம் பழகும் விதம் மிகவும் தனித்தன்மையா இருக்கு. உங்களுக்கு முருகக் கடவுள்ன்னா ரொம்பப் பிடிக்குமா?”
“ஆமாம், சார்.”
“எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு, டீச்சர். திருமணம் செய்தா உங்கள மாதிரி பெண்ணைத்தான் திருமணம் செய்துக்கணும்னு என்னோட ரொம்ப நாள் கனவு.”
அப்போது ஆகாயத்தில் பறப்பது போன்றதொரு பிரம்மை ஏற்பட்டது. சொல்ல இயலா இன்பம்.
“டீச்சர், இன்னிக்கி ராத்திரி நாம எங்கேயாவது சாப்பிடப் போகலாமா?” என்றும் ஒரு நாள் கேட்டார். இதற்கும் என்னால் உடனடியாக பதில் கூற இயலவில்லை.
எனக்கும் ஆசையாகத்தான் உள்ளது. இருந்தாலும் எனக்கு நானே வகுத்துக் கொண்ட கட்டுப்பாடு என்னை தடுத்தது. என்னால் மற்ற பெண்கள் போன்று ஊர் சுற்றுவது பிடிக்காது. ஆசையாக இருந்தாலும், அது தப்பாகத்தான் எனக்குப் பட்டது.
எனக்கு கோவிலும் முருகனும்தான் எல்லாமே.
“என்னால் அப்படி எல்லாம் வெளியே வரமுடியாது, சார்,” என்றேன்.
“நான் ஒன்னும் தவறா கேட்கலையே. இத்தனைக்கும் நானும் உங்கள மாதிரி ஆசிரியர், அதுவும் ஒரே பள்ளிலே சொல்லிக் கொடுக்கிறோம்,” என்னைக் கட்டாயப்படுத்துவது போன்ற தொனியில் கேட்டார்.
சற்று நேரம் யோசித்தப் பின், முருகனிடம் மனதில் அனுமதி கேட்டப் பிறகு, நான் சம்மதம் தெரிவித்தேன்.
இவ்வளவு காலமாக அடங்கி ஒடுங்கி வாழ்ந்து, வாழ்க்கையில் முதல் தடவையாக ரத்த உறவு சம்பந்தம் இல்லாத ஆணுடன் வெளியே போவது பயமாகவும், படபடப்பாகவும், வெட்கமாகவும், அதே சமயம் ஏதோ ஒரு வித புத்துணர்ச்சியையும் என்னுள் உண்டுபண்ணியது.
அட, இதுவுமே அந்த முருகனின் செயலாகத்தான் இருக்கும் என நம்பினேன்.
சற்று விலையுயர்ந்த உணவுக் கடைக்கு அழைத்துச் சென்றார் என்னவர் ஜீவா. எவ்வளவு தைரியமிருந்தால் அவரை நானே என்னவர் என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன். மிகவும் சந்தோசமாக இருந்தது.
சாப்பிட்டு முடிந்தப் பின், படம் பார்க்கப் போகலாமா என்று அழைத்தார். என்ன இது ஒன்றின் பின் ஒன்றாக புது வித அனுபவமாக கிடைக்கின்றதே. எதுவும் தப்பு தண்டா நடக்காமல் என் அப்பன் முருகன்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முருகா!
படம் பார்க்கவும் இசைந்தேன். பெர்ஜயா டைம் ஸ்க்வேரில் ‘கோலி சோடா' படம் பார்த்தோம்.
படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதைவிட என்னவர் என் பக்கத்தில் அமர்ந்து படம் பார்த்தது மிகவும் பரபரப்பாகவும், படபடப்பாகவும் இருந்தது. இவர் எனக்கு கணவராக வரக்கூடியவர் ...நிச்சயம் இவர்தான் என் கணவர் என்று நினைக்கும் போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதற்கு அந்த முருகன் அருள்பாளிக்க வேண்டும்.
மறுநாள் பள்ளியில் நாங்கள் இருவரும் சக ஆசிரியர்கள் போன்று எப்போதும் போலவே பழகினோம். எதுவும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இரவில் எஸ்.எம்.எஸ் மூலம் தொடர்பைத் தொடர்ந்தோம். எனக்கே இதெல்லாம் செய்து கொண்டிருப்பது நான்தானா என்று சந்தேகம் எழும்.
எல்லாம் முருகனின் செயல்.
வீட்டில் நடந்தவற்றை ஒன்று விடாமல் அம்மாவிடம் தெரிவித்தேன். அம்மாவும் நல்ல பையனாகத்தான் இருப்பார் என்றும், எதுக்கும் அவருடைய பெற்றோரை வீட்டில் வந்துப் பார்க்கச் சொன்னார்.
அதுவும் நடந்தது.
என்னதான் வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயம் தொடங்கினாலும் நான் முருகனை எப்போதும் போலவேதான் வணங்கினேன். தினந்தோறும் போற்றி வந்தேன். எப்படிப் பார்த்தாலும் என்னவர் என் உள்ளத்தில் முருகனுக்கு அடுத்துதான்.
இதுவும் அந்த முருகனின் செயலே.
எது எல்லாம் எனக்கு நடக்காது, நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அதன் ஆரம்பக் கட்டம் ஆரம்பமானது. ஆமாம், அதுதான் அதன் ஆரம்பம். எந்தக் காலத்திலும் என்னை பாதிக்காத சனிப்பெயர்ச்சி என்னை பாதித்தது.
முதன் முறையாக முருகன் மெல்ல மெல்ல என்னை விட்டு விலகுவது போன்று உணரலானேன். அப்படி நினைப்பதும் தவறாகக் கூட இருக்கலாம்.
சில மாதங்களாக நல்ல முறையில் என்னுடன் பழகி வந்த என்னவர் ஜீவா, அவருடைய பெற்றோருடன் வீட்டில் என்னைப் பெண் பார்க்க வந்தப் பிறகு மெது மெதுவாக என்னை விட்டு விலக ஆரம்பித்தார். பள்ளியிலும் சரியாக பேசுவதில்லை. இரவில் எஸ்.எம்.எஸ்ஸும் செய்வதில்லை. நான் அழைத்தாலும் அலைபேசியை எடுப்பதுமில்லை.
நான் மிகவும் வேதனையடந்தேன். என்னை அவர் வெறுப்பதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை, புரியவில்லை. இப்படியாக இருக்குமோ அல்லது அப்படியாக இருக்குமோ என்று பல வித யூகங்கள் உள்ளத்தில் தோன்றி மறைந்தன.
மாணவர்களுக்கு நான் பாடம் சொல்லிக் கொடுப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டது. ஆனால் முருகனை வழிபடுவதில் தடங்கள் ஏற்படவில்லை. கண்ணீர் மல்க காலையிலும் மாலையிலும் முருகனிடம் மன்றாடினேன்.
பள்ளியில் யாருக்கும் எங்களது உறவைப் பற்றி தெரியாததால் யாரும் கண்டுகொள்ளவில்லை. தலைமையாசிரியர்தான் நான் பாடம் சொல்லிக் கொடுப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரி செய்ய வேண்டும் என கண்டித்தார்.
முருகா! இதுவும் உன் செயல்தானா?
ஒரு நாள் மதிய வகுப்பு நேரத்தில் ஆசிரியர் அறையில் நானும் அவரும் மட்டும் தனியாக வேலை பார்க்கும்படி வாய்ப்புக் கிட்டியது. இனியும் பொருத்திருக்க முடியாது என்று என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.
அதற்கு அவர்,
“மன்னிச்சிருங்க டீச்சர், என்னால் என்ன காரணம்னு சரியா சொல்லத் தெரியல ... ஆனா இனிமே முந்தைய மாதிரி முடியாது,” என்றார்.
செல்வி என்பதற்கு பதிலாக டீச்சர் என்று அழைத்தார்.
“நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும், ஜீவா,” கண்ணீரோடு கூறினேன்.
என்னால் அப்போது சார் என்று அழைக்க முடியவில்லை.
“அது வந்து ... எங்க அப்பா அம்மா ...”
“அப்புறம்?”
என் இதயம் படபடத்தது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. அவருடைய பெற்றோர் என்ன சொல்லியிருப்பார்கள் என்ற ஆர்வமும் பயமும் என்னைக் கவ்வியது.
“உன்னை மாதிரி பெண் வேண்டாம்னு சொல்லிட்டாங்க,” என் முகத்தை நேராக பார்க்காமல், நோட்டு புத்தகங்களை சரிபார்த்துக் கொண்டே பதிலளித்தார்.
இவர்தானே அன்று என்னை போன்று பெண்னைத்தான் தேடிக்கொண்டிருந்ததாகக் கூறினார். இப்போது வேறு கதை சொல்கின்றார்.
இன்னும் என்ன கேட்பதென்று தெரியவில்லை. துக்கம் வேறு தொண்டையை அடைத்தது. போத்தலிலிருந்த தண்ணீரைப் பருகினேன்.
“என்னை மாதிரி பெண் வேண்டாம்னா ...பிறகு எந்த மாதிரி பெண் வேணும்?”
அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. எனக்கு அழுகையும் ஆத்திரமும் சேர்ந்தாற்போல் வந்தது. அந்த அறையை விட்டு கிளம்பினேன்.
என்னிடத்தில் என்ன குறை?
என்னிடத்தில் என்ன குறை முருகா?
சொல் முருகா!
இத்தனை காலமாக நான் வணங்கி வந்த அந்த முருகப் பெருமான் என்னை கை விட்டு விட்டதாக அப்போது உணர்ந்தேன்.
நான் ஒரு தவறும் செய்யவில்லையே, இருந்தும் அண்மைய காலமாக ஏன் என்னை சோதனை மேல் சோதனை செய்கின்றான் அந்த முருகன். நான் அவனுக்கு என்ன குறை வைத்தேன்?
அப்படி இப்படி என்று பல காரணங்கள் சொல்லி, மன்றாடி செலாங்கூரிலிருந்து இந்த பகாங் மாநிலக் காட்டிற்கு மாற்றலாகி வந்தேன்.
வீட்டில் சில வரன்கள் பார்த்தார்கள். நான் எதற்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை.
எனக்கும் இப்போது வயது நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இனி யாரும் என் வாழ்க்கையில் குறுக்கிட முடியாது.
எனக்கு இனி என்றும் ... எப்போதும் ...
முருகனே துணை.
முற்றும்


Comments
Post a Comment