சிறுகதை
எம். பிரபு
எல்லாப் பொண்ணுங்களுக்கும் அவங்கவங்க இஷ்டப்படி வாழ்க்கை அமைஞ்சிடாது. நெனச்சது ஒன்னு, நடந்தது இன்னொன்னா இருக்கும். என் வாழ்க்கையும் அதுபோலத்தான். ஆம்பளைங்க பரவாயில்ல. அவங்க எங்க வேணும்னாலும் போகலாம், வரலாம். யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க. எல்லா வீட்டுலயும் எங்க வீட்டுல உள்ளது போலத்தான் நடக்குது போல.
அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சிங்க எல்லாம் ஒரே அப்பனுக்கும் அம்மாவுக்கும் பொறந்திருந்தாலும், அவங்கள வளர்க்கிற விதம் வேற வேற மாதிரி இருக்கும். ஆம்பளப் பசங்கள வேற மாதிரி வளர்ப்பாங்க, பொம்பளப் புள்ளைங்கள வேற மாதிரி வளர்ப்பாங்க.
எனக்கு ஒரு அண்ணன், ரெண்டு தம்பி, அப்புறம் ரெண்டு தங்கச்சிங்க. நாங்க சின்னப் புள்ளைங்களா இருக்கும்போது அப்பாவும் அம்மாவும் எங்க எல்லாரையும் ஒரே மாதிரியாகத்தான் பார்த்துக்கிட்டாங்க. அப்புறம் நாங்க ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சதும் எல்லாம் மாறிப்போச்சு.
அண்ணனையும் தம்பிகளையும் ஸ்கோலா மெனங்காஹ் வரைக்கும் அனுப்புனாங்க. ஆனா, என்னையும் என் ரெண்டு தங்கச்சிங்களையும் தமிழ் ஸ்கூலோட நிப்பாட்டிட்டாங்க. அதுவும் என்னை நாலாம் வகுப்போட நிப்பாட்டிட்டாங்க. ஏன் என்னை நிப்பாட்டினிங்கன்னும் கேட்கக்கூட முடியாது.
அதுதான் அவங்களே முடிவு பண்ணிட்டாங்களே, நான் வீட்டுல தம்பி, தங்கச்சிங்களப் பார்த்துக்கணுமாம். ஆயாக் கொட்டாயிலலாம் விட முடியாதாம். அந்தக் கந்தசாமிப் பொம்பள, பிள்ளைங்கள நல்லாப் பார்த்துக்காதாம். நான் சின்னக் கொழந்தையா இருக்கிறப்ப அவங்கதான் என்னைப் பார்த்துக்கிட்டாங்க. அவங்க என்னை அடிச்சதே இல்லையே.
இது காரணம் இல்லன்னு எனக்கு அப்பத் தெரியல. எனக்கு வயசாக வயசாகத்தான் அப்புறம் பல விஷயம் புரிஞ்சது. எல்லாக் காலத்திலேயும் இதே மாதிரிப் பிரச்சினைங்க அப்போலருந்து இப்போவரைக்கும் அப்படியேதான் இருக்கு. காலம்தான் மாறியிருக்கு.
பொண்ணுங்க உடை உடுத்துறதுலாம் இப்ப ரொம்பவே மாறியிருக்கு. அப்பவே எனக்கு சீனத்திங்க உடுத்துற மாதிரி உடுத்தணும்னு ரொம்ப ஆசை. நம்ம பொண்ணுங்க யாரும் அந்த மாதிரி உடுத்தாதனால நானும் உடுத்தல. இப்ப உடுத்துன்னா அசிங்கமா இருக்கும். வயசும் ஆகிடுச்சி.
இந்தக் காலத்துல நடை, உடை மாறியிருக்கலாம். பொண்ணுங்களாகிய நாங்க அனுபவிக்கிற பிரச்சினைங்க அப்படியேதான் இருக்கு. அதுதான் ரொம்ப ரொம்ப ஆச்சரியம்.
அதுதான் ஏன்னு எனக்கும் புரியல. உலகத்துல உள்ளதெல்லாம் புதுசு புதுசா மாறிக்கிட்டே இருக்கு. ஆனா, பொண்ணுங்களுக்கு இன்னும் தொந்தரவு கூடிக்கிட்டே போகுது. இது ஏன் இப்படி நடக்குதுன்னு யாருக்கும் தெரிய மாட்டேங்குது. ஆனா, நடந்துக்கிட்டேதான் இருக்கு.
போலீஸ் கார், போலீஸ் மோட்டார் சைக்கிள் எல்லாம் புதுசு புதுசா இருக்கு. அதே மாதிரி நம்ம நாட்டுலயும், உலகம் பூராவும் உள்ள பொண்ணுங்களுக்கு நடக்கிற கொடுமைங்க மட்டும் நாளுக்கு நாள் புதுசு புதுசா வந்துக்கிட்டே இருக்கு. மாறிக்கிட்டேயும் இருக்கு. போலீஸ்க்காரங்க நடக்கிற இந்த அக்கிரமங்கள ஒழிச்சப்பாட்டக் காணாம்.
என்னோட அப்பாவும் அம்மாவும் என்னை ஒழுங்கா ஸ்கோலா மெனங்காஹ்க்கு அனுப்பல. அது பரவாயில்ல. அதை நான் எப்படியோ பொறுத்துக்கிட்டேன்.
ஆனா, எனக்கு கல்யாணம் செஞ்சி வெச்சாங்க பாரு ஒருத்தனுக்கு, நான் என்னத்த சொல்ல...
ஒரு பொண்ணுன்னா, அவளுக்கு அமையிற புருசன் எப்படி இருக்கணும்?
சரி, நான் என்ன கமல்ஹாசன் மாதிரி மாப்பிள்ளை வேணும்னு ஆசப்பட்டேனா? மோகன் மாதிரி வேணும்னு ஆசப்பட்டேனா? இல்ல, கார்த்திக் மாதிரி மூஞ்சி உள்ள மாப்பிள்ளை வேணும்னு ஆசைப்பட்டேனா?
குறைஞ்சது ஒரு பாண்டியன், ஒரு முரளி மாதிரி ஒரு மாப்பிள்ளையாவது எனக்குப் பார்க்க வேணாமா?
போயும் போயும் ஒரு செந்தில் மாதிரி கட்டையா நிக்ரோகாரன் கலர்ல இருக்கிற மாப்பிள்ளையா பார்த்துக் கட்டி வெப்பாங்க? ரஜினி மாதிரி கருப்புன்னா கூட ஏதோ ஒரு விதத்துல சேர்த்துக்கலாம்.
ஆனா, இந்த ஆளு இருக்காரே... சரி, மூஞ்சியும் உடம்பும்தான் பார்க்க நல்லால்ல. அந்த ஆளோட நடவடிக்கையாவது ஓரளவுக்குச் சந்தோசம் அளிக்குதான்னு பார்த்தா, அதுவும் இல்ல.
அந்த ஆளு என்னைப் பொண்ணுப் பார்க்க வீட்டுக்கு வந்தப்பவே, நான் அம்மாக்கிட்ட மாப்பிள்ளையோட மூஞ்சியும் மொகறையும் சரியில்லன்னு சொல்லிட்டேன்.
அப்படில்லாம் பேசக்கூடாதாம். அதுவும் அந்த ஆளு அம்மாவோட தூரத்து சொந்தமாம். மெந்தகாப்புல ஜே.கே.ஆர்ல வேலை செய்றாருன்னும், அரசாங்க வேலை செய்ற மாப்பிள்ளைன்னும் என் தலையில் கட்டி வெச்சிட்டாங்க. ஆமா, என் தலையில கட்டி வெச்சிட்டாங்க.
ஆம்பிளைங்களுக்கு மட்டும் என்னைப் போல ஒல்லியா, அழகா, சிவப்பா இருக்கிற பொண்ணுங்க வேணும். ஆனா, எங்களைப் போல அழகான பொண்ணுங்களுக்கு அசிங்கமான ஆம்பிளைங்களைக் கட்டி வெச்சிடுவாங்க. எங்க இருக்கு நியாயம்?
சொந்தம், பந்தம்னு சொல்லி எங்க வாழ்க்கை முழுதும் இம்சைப்படுத்திடுவாங்க.
என்ன செய்றது? நம்ம ஆளுங்க ஆம்பிளைங்கள்ல நூத்துல பத்து பேருதான் அழகா இருப்பானுங்க. அப்படியே அழகா இருந்துட்டாலும் திமிரு பிடிச்சவனாவும் இருப்பானுங்க போல. எப்படிப் பார்த்தாலும், நான் யாரைக் கட்டியிருந்தாலும் சந்தோசமா வாழ்ந்திருப்பேனான்னு சந்தேகம்தான்.
நான் கட்டிக்கிட்ட புருசன் செந்தில் மாதிரி இருந்தாலும், எனக்குப் பிடிக்காமலேயே முதலிரவு நடந்துச்சி. முதலிரவை ரசிக்கவும் முடியல, ருசிக்கவும் முடியல. முதலிரவிலேயே தண்ணி போட்டிருந்தாரு. அதுவும் பத்தாம சிகரெட் வேற. ரெண்டும் கலந்தா அந்த வாடையே வாந்தி எடுக்க வச்சிரும். எல்லாம் முடிஞ்சப்பறும்தான் பாத்ரூம்ல போய் வாந்தியெடுத்தேன். முதலிரவு அன்னிக்கே வாந்தியெடுத்த பொண்ணு நானாகத்தான் இருப்பேன், போல. இப்ப நினைச்சா சிரிப்பு வருது, ஆனா அந்த நாள்ல நான் அனுபவிச்ச கொடுமை சொல்ல வாய் பத்தாது.
எனக்குப் பிடிக்காமலேயே மூணு கொழந்தைங்க பொறந்துருச்சிங்க. மூனும் பையன்கள்தான். நல்ல வேளை என் பையன்கள் எல்லாமே என் ஜாடைதான். அதுக்கு மேல நான் அந்த ஆள என்கிட்ட நெருங்கவிடல.
மூனு பிள்ளைங்க ஆனப்பிறகும் ஆசையும் சபலமும் எனக்குள்ளேயே இருந்துக்கிட்டேதான் இருந்துச்சி. அது ஏன்னு எனக்கு சரியா புரியில.
எனக்கு மூனாவது பையனுக்கு ஒரு வயசு ஆகப் போகுது, அப்போதான் அது நடந்துச்சி. எனக்கே தெரியாது நான் இந்த மாதிரி நடந்துக்குவேன்னு.
ஒரு அழகான ஆணப் பார்த்தா இவரு மாதிரி நமக்கும் மாப்பிள்ளையா வந்தா எவ்வளவு நல்லாருக்கும்னு தோணும். எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னும் சரி, பிள்ளைங்க பெத்ததுக்கப்புறமும் சரி, அந்த எண்ணம் இருந்துக்கிட்டே இருந்துச்சி.
அழகான ஆம்பிளைங்கள கோவில்ல, கடைத் தெருவுல பார்க்கிறதோட சரி. நமக்கு அமைஞ்சது அவ்வளவுதான்னு பேசாமல் இருந்துடுவேன்.
ஆனா, இந்தவாட்டி அப்படியில்ல. எது எனக்கு நல்லபடியா நடக்கணும்னு ஏங்கிக்கிட்டிருந்தேனோ அதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைச்சது. அது நல்லதுக்கா கெட்டதுக்கா பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்ல. எவ்வளவு காலத்துக்குத்தான் இந்த செந்தில் கட்டையன் கூட வாழ்க்கை நடத்தறது? நல்லதை, கடவுளே எனக்குப் பார்த்துக் கொடுக்கிறப்போ நான் ஏன் அதைத் தட்டிக் கழிக்கணும்.
***
அந்த அழகனை கோவில்லதான் பார்த்தேன். செக்கசெவேர்னு பார்க்க அரவிந்தசாமியும் மோகனும் கலந்த மாதிரி இருந்தாரு. அந்த வெள்ளிக்கிழமை பிள்ளைங்கள யாரையும் கோவிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போகாம, வீட்டுல அம்மாக்கிட்ட விட்டுட்டு தனியாவே போயிருந்தேன்.
இதுதான் மொத தடவை அவரை இந்தக் கோயில்ல பார்க்கிறேன். முன்னாடி ஒரு தடவைகூட இவரைப் பார்த்ததில்ல. என்னம்மோ தெரியல, அவரைப் பார்க்கும்போது என் இதயம் படக் படக்குன்னு ரொம்ப வேகமா துடிக்கும்.
ஆள் நல்ல உசரமா வேஷ்டி ஜிப்பாவோட... அப்பப்பா, பார்க்கவே என் ரெண்டு கண்ணு பத்தாது. அவரோட வயசு என்னோட கொஞ்சம் கொறவாத்தான் இருக்கும் போல. எனக்கு இப்ப 35 வயசுன்னா, நிச்சயம் அவருக்கு 25 இல்லனா 27 வயசாச்சும் இருக்கும். ஆனா, அவருக்கு கல்யாணம் ஆகியிருக்குமா இல்லையான்னு தெரியல. மூனு வாரமா அவரைப் பார்க்கும் போதெல்லாம் தனியாத்தான் கோவிலுக்கு வரார், போறார். சிவப்பு கலரு புரோத்தோன் சாகா கார் பாவிக்கிறார். நல்ல வசதி படைச்சவர்தான் போல.
அவர் பாட்டுக்கு வெள்ளிக்கிழமை பூசைக்கு வருவார், நல்லா கீழே விழுந்தெல்லாம் சாமி கும்பிடுவாரு. பொங்கச் சோறு சாப்பிட்டிட்டு என்னை மாதிரி அவரும் யாரு கூடவும் பேசாம அப்படியே கிளம்பிடுவாரு. அவரு வீடு இந்த மெந்தகாப்புல எந்த இடத்தில இருக்குன்னும் தெரியல.
என் வீட்டுக்காரர்... அதான் அந்த செந்தில் கூட கேட்டார், ஏன் நான் இப்பல்லாம் பசங்கள கோவிலுக்குக் கூட்டிட்டு போறதில்லன்னு. பசங்களுக்கு வீட்டுப் பாடம் செய்யணும், அப்புறம் அந்த நேரத்துலதான் டிவில நல்ல நல்ல படம் போடுவான்னு சாக்குப் போக்குச் சொல்லி சமாளிச்சேன்.
அந்த ஆளு நம்பிட்டார். நல்ல வேளை அந்த ஆளுக்கு கோவிலுக்குப் போற பழக்கம் இல்லை. இல்லாட்டி ரொம்ப கஷ்டமாயிடும்.
போன வருசம் தியேட்டர்ல தளபதி படம் என் வீட்டுக்காரர் கட்டையன் கூட பார்த்தப்பவே ரஜினியை ரசிச்சதை விட நான் அரவிந்தசாமியைத்தான் ரொம்ப ரொம்ப ரசிச்சிப் பார்த்தேன். ஷோபனா, அரவிந்தசாமிய கல்யாணம் செஞ்சிக்கிட்டது எனக்கு பொறாமையை உண்டு பண்ணினாலும், ரௌடி ரஜினிய விட்டுட்டு வந்தது எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சி.
ஷோபனா ரஜினிய காதலிச்சாங்க, ஆனா கல்யாணம் செஞ்சிக்கில. அதனால அவங்களுக்கு பிடிக்கலனாலும் அரவிந்தசாமிய கைப்புடிச்சிட்டாங்க. அரவிந்தசாமி கூட வாழ்க்கை நடத்தினதுக்கப்புறம் நிச்சயம் அவங்களுக்கு நல்ல வேளை ரஜினிய கல்யாணம் செஞ்சிக்கிலன்னு தோணிருக்கும்.
என் நெலம வேற. புடிக்காத ஒருத்தர கல்யாணம் செஞ்ச அப்புறம்தான் கடவுள் எனக்குப் புடிச்ச மாதிரி ஆள கண்ணுல காட்டுறார்.
இந்த அரவிந்தசாமிக் கிட்ட எப்படி பேச்சு கொடுக்கிறதுன்னும் எனக்குத் தெரியல. அதுவும் கோவில்ல எப்படி பேசறது? எல்லாரும் அப்புறம் எங்களையே பார்ப்பாங்க. அதுவும் எனக்கு கல்யாணம் ஆகி மூனு பையன்களுக்கு அம்மான்னு இந்த கோவில் பக்கம் நாங்க சேவாய்க்கு இருக்கிற அடுக்குமாடி வீட்டுக்காரங்களுக்கு எல்லாருக்கும் தெரியும்.
எப்படி இருந்தாலும் இன்னிக்கி ராத்திரி கோவில் வாசல்ல அவருக்காக காத்திருக்கணும். இல்லாட்டி பூசை முடிஞ்சப்பறம் கோவிலுக்கு வெளியே அவர் காரை பார்க்கிங் செஞ்ச இடத்திலியாவது அவரைப் பார்த்துப் பேசிடணும்.
எப்போதும் வெள்ளிக்கிழமை ராத்திரி 7.30க்கு பூசைன்னா, நான் 7.25க்குத்தான் கோவிலுக்கு வீட்டிலிருந்து நடந்து வந்து சேருவேன். அப்படி இப்படின்னு 15 நிமிசம் புடிக்கும்.
இன்னிக்கு நான் 7.00 மணிக்கே கோவிலுக்கு வந்து சேர்ந்துட்டேன். அந்த ஆளு செந்தில் கூட ஏன் இவ்வளவு சீக்கிரம் போறேன்னு கேட்டார். பூசை ஆரம்பிக்கிற முன்னுக்கு தியானம் செய்யணும்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டேன்.
தியானம் கியானம் பத்தியெல்லாம் எனக்கு ஒரு மண்ணும் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் பொங்கச் சோறு, கொண்டைக் கடலை கச்சான் மட்டும்தான். சாமி எனக்கு எப்போதும் நல்லது செய்யணும்னு வேண்டிக்குவேன். அவ்வளவுதான்.
இப்பத்தான் மூனு பிள்ளைங்களுக்கு அப்புறம் முருகன் கண் திறந்திருக்கார் போல.
நான் கோவில் உள்ளுக்குப் போய் கை காலெல்லாம் அலம்பும் போதுதான் அவரும் செருப்பைக் கழட்டி வச்சிட்டு நான் அலம்பி முடிக்கிற வரைக்கும் பார்த்தார். நான் அதுதான் சாக்குன்னு அவரை கீழேருந்து தலை வரைக்கும் நேருக்கு நேராக ரொம்ப கிட்டத்தில பார்த்தேன். என் இதயம் வேக வேகமா துடிச்சிது. அவரு என்னைப் பார்த்து சிரிச்சார். நானும் சிரிச்சி, பைப் தண்ணிய மூடாமலேயே வேக வேகமா கோவிலுக்கு உள்ளே நுழைஞ்சேன்.
பூசையெல்லாம் முடிஞ்சி பொங்கச் சோறு, கச்சான் சாப்பிட எல்லாரும் வரிசையா உட்காரும் போது, இந்தவாட்டி அவரு எல்லாருக்கும் இலை போட்டாரு. நான் அவரையே ரசிச்சிக்கிட்டு இருந்தேன். பொங்கச்சோறை எப்போதும் ஒரு வயசானவர் போடும் ஆள்தான் போட்டாரு. கச்சானை அந்த அரவிந்தசாமிதான் போட்டாரு.
எல்லாரும் சாப்பிட்டு முடிச்சு எழுந்து போய்க்கிட்டிருந்தாங்க. அவரும் கையை அலம்பிட்டு காரை நோக்கிப் போனாரு.
இந்தவாட்டி அவரைப் போகவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
நானும் வெளியே போனேன்.
அவர் காரோட கதவைத் திறக்கிறப்போ,
“சார்...”ன்னு கூப்பிட்டேன்.
அவர் திரும்பிப் பார்த்தார்.
“சொல்லுங்க.”
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.
“நீங்க...”
அதுக்கு மேல வார்த்தை வரல.
அவர் சிரிச்சார்.
“என்னைப் பற்றி ஏதாவது கேட்கணுமா?”
நான் தலையாட்டினேன்.
“ஆமா.”
“கேளுங்க.”
“நீங்க எங்க வேலை செய்றீங்க?”
அவர் கொஞ்சம் சிரிச்சார்.
“ இங்க ...மெந்தகாப்புலதான்.”
“ஜே.கே.ஆர்லயா?”
“இல்ல.”
“அப்போ?”
“நான் இங்க பக்கத்துல இருக்கிற ஒரு பள்ளிக்கூடத்துல வேலை செய்றேன்.”
“வாத்தியாரா?”
“ஆமா.”
அவர் என்னை ஒருமுறை நல்லா பார்த்தார்.
“நீங்க?”
“நானா?”
“நீங்க என்ன பண்றீங்க?”
“வீட்டுலதான்.”
“பிள்ளைங்க?”
ஐயோ ... கண்டுப்பிடிச்சிட்டாரே!
“ம்ம்ம் ... மூணு பையன்கள்.”
அவர் தலையாட்டினார்.
“தெரியும்.”
நான் அதிர்ச்சியா அவரைப் பார்த்தேன்.
“எப்படித் தெரியும்?”
“உங்க பையன்தானே வினோத்?”
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“போன வாரம் நீங்க அவனை பள்ளிக்கூடத்திலிருந்து கூட்டிட்டு போகப் போறப்போ பார்த்தேனே. உங்க பையன் படிப்பு சம்மந்தமா ஏதும் பேசனுமா, அக்கா?”
அக்காவா?
“இல்ல ... ஒன்னும் இல்ல சார்.”
அதுக்கப்பறம் அரவிந்தசாமி காரில் ஏறிப் போயிட்டார்.
நான் மட்டும் கோவில் வாசல்ல நின்னுக்கிட்டிருந்தேன்.
என் ஏக்கம் இப்போ வரைக்கும் தொடருது ...
முற்றும்

Comments
Post a Comment