எல்லாமே மாறும்
அனுராதா செல்லையா
முன்பெல்லாம் அம்மா எங்களை எழுப்பிவிடுவார். ஆனால் இப்போது அப்படியெல்லாம் செய்வதில்லை. எப்போது எழுந்திருக்க வேண்டுமோ, அப்போது எழுந்திருக்கலாம். ஆனால், காலை ஏழு மணிக்குள் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும். பக்திப் பாடல் ஒலிக்கத் தொடங்கியதும், ஒவ்வொருவராகப் படுக்கையிலிருந்து எழுந்து, குளியலறைக்குச் செல்லப் போட்டி போடுவோம்.
“ஏய், நான் முதல்ல போறேன்,” என்றாள் அமுதா.
“நான்தான் முதல்ல எழுந்திருச்சேன். என் தலைமுடியில எண்ணெய் தடவியிருப்பத பாரு,” என்று சொன்ன ராஜன், உடனே குளியலறைக்குள் நுழைந்தான்.
நான் வழக்கமாக அம்மாவுக்குச் சமையலறையில் உதவி செய்வதற்காகவே சீக்கிரமாக எழுந்துவிடுவேன். தோசை, இட்லி, கோழிக்கறி, ஆட்டுக்கறி ஆகியவை கட்டாயம் இருக்கும். அம்மா சைவ உணவுகளையும் சமைப்பார். ஏனென்றால், அவர் இறைச்சியும் மீனும் சாப்பிடுவதில்லை.
எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்வதில் ஒரு தனி மகிழச்சி இருக்கிறது. அதிலும், இப்படிப்பட்ட பண்டிகைக் காலம் வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். தாத்தாவும் பாட்டியும் எங்களுடன் இருந்த காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
கடந்த இரண்டு வாரங்களாக வீட்டில் எல்லோரும் மிகவும் பரபரப்பாக இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வேலை இருந்தது. இதைச் செய், அதைச் செய் என்று ஓயாமல் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. ஒரே ஒரு நாள் வருவதற்காக இவ்வளவு வேலைகளைச் செய்ய வேண்டுமா என்று சில நேரங்களில் எனக்குத் தோன்றும். ஆனால், களைப்பாக இருந்தாலும் எல்லோரும் ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். வீட்டைச் சுத்தம் செய்வது, சுவருக்குப் புதிதாக வண்ணம் பூசுவது, பலகாரங்கள் செய்வது, பொருட்கள் வாங்குவது என்று எல்லோரும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
அப்பா பொதுவாக வீட்டைச் சுத்தம் செய்யும் வேலைகளைச் செய்வார். வீட்டை ஒழுங்குபடுத்தி, அழகாக அலங்கரிப்பார். அவர் எப்போதும் வேலை செய்யத் தயாராக இருப்பவர். சோம்பேறித்தனமே இல்லாதவர். அப்பா ஒரு தையல்காரர் மட்டுமல்ல, ஆடைகளை வடிவமைப்பவரும்கூட. பண்டிகைக் காலங்களில் அவருக்குக் கடையில் நிறைய வேலைகள் இருக்கும்.
கிட்டத்தட்ட தினமும் அவர் தாமதமாகத்தான் வீட்டுக்கு வருவார். அவரை நம்பி ஆடைகளைத் தைக்கக் கொடுத்திருக்கும் வாடிக்கையாளர்களின் வேலைகளை முடித்தாக வேண்டும். இருந்தாலும், கணவராகவும் தந்தையாகவும் தனது கடமைகளை அவர் மறப்பதில்லை. வீட்டில் போடுவதற்காகப் புதிய திரைச்சீலைகளை அப்பா தைத்திருந்தார். எனக்கும் அமுதாவுக்கும் தலா இரண்டு பாரம்பரிய உடைகளையும் தைத்துக் கொடுத்திருந்தார்.
அம்மாவுக்குச் சமையலறைதான் மிகவும் பிடித்த இடம். காலையிலிருந்து இரவு வரை அங்கேயே இருப்பார். அவரைப் போன்ற சிறந்த சமையல்காரர் யாருமில்லை என்றே சொல்லலாம். எல்லா வகையான பாரம்பரியப் பலகாரங்களையும் செய்வார்.
குறிப்பாக, முறுக்கு, அச்சு முறுக்கு, அதிரசம், நெய் உருண்டை, கட்டி உருண்டை, கல் உருண்டை, சிப்பி ஆகியவை கட்டாயம் இருக்கும். அதுமட்டுமல்லாமல், எங்கள் மூவருக்கும் பிடித்தமான பிஸ்கட்டுகளையும் அவரே செய்து தருவார்.
பண்டிகை நாள் நெருங்குவதற்கு முன்பே, அம்மா என்னைப் பல பொருட்கள் வாங்கிவரச் சொல்வார். “இதை வாங்க மறந்துவிடாதே, அதை வாங்க மறந்துவிடாதே” என்று தினமும் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். நானும் வேலை முடிந்ததும், அம்மா சொன்ன பொருட்களை வாங்குவதற்காக ராமசாமியின் மளிகைக் கடைக்குச் செல்வேன்.
“தீபாவளி வந்துரிச்சா?” என்று கேட்டாள் துர்கா. அவள் மாமா ராமசாமியின் மகள். அவளும் இந்த நாட்களில் மிகவும் பரபரப்பாக இருந்தாள். அப்பாவுக்குக் கடையில் உதவி செய்துகொண்டிருந்தாள்.
பண்டிகைக்காகத் தயாராகிக்கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து, “தீபாவளி வந்துரிச்சா?” என்று கேட்பது வழக்கம்.
எங்கள் வீட்டுக்கு அருகில் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களையும் பூஜைப் பொருட்களையும் விற்கும் ஒரே கடை ராமசாமியின் மளிகைக் கடைதான். அதனால், அம்மா கேட்ட எல்லாப் பொருட்களையும் அங்கேயே வாங்கிவிடுவது எனக்கு வசதியாக இருந்தது.
“ஆமாம், துர்கா. நீயும் மிகவும் பிஸியாக இருப்பேன்னு நினைக்கிறேன். பலகாரமெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டியா?” என்று நானும் அவளிடம் கேட்டேன்.
“ஆரம்பிச்சிட்டேன் ... க்கா. கொஞ்சம் கொஞ்சமாகச் செஞ்சிக்கிட்டு இருக்கேன். தீபாவளி அன்னிக்கி நிறைய உணவுகளும் பலகாரங்களும் இருக்கும்,” என்றாள் துர்கா.
இந்த ஆண்டு ராஜன் இணையவழி வகுப்புகளில் மும்முரமாக இருந்தாலும், அம்மாவின் வேலைகளுக்கு உதவி செய்தான். அம்மா பலகாரங்கள் செய்யும்போது அவனும் உதவுவான். அதாவது, அம்மா செய்த பலகாரங்களைச் சாப்பிடுவதில் அவன் நன்றாக உதவி செய்வான்!
ராஜனின் முகத்தில் எப்போதும் பெரிய புன்னகை இருக்கும். அதைப் பார்ப்பதற்கு எல்லோருக்கும் பிடிக்கும். அவனுக்கு வயது பதினேழு ஆனாலும், இன்னும் குழந்தையைப் போலவே செல்லமாக இருப்பான். வீட்டில் ஒரே மகனும் கடைசிப் பிள்ளையும் என்பதால் அவனுக்கு எல்லோரும் செல்லம் கொடுப்பார்கள்.
அமுதாவும் சளைத்தவள் அல்ல. வீட்டைப் புதுப்புது யோசனைகளுடன் அலங்கரிப்பதில் அவளுக்கு மிகவும் விருப்பம். வீட்டின் வாசலில் கோலம் போடுவதும், இந்தச் சிறப்பான நாளில் பூஜைக்குப் பயன்படுத்துவதற்காகப் பூமாலை கட்டுவதும் அவளுடைய வேலைகள்.
பூமாலை கட்டும் முறையை அவள் பாட்டியிடமிருந்து கற்றுக்கொண்டாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அமுதாவுக்கு இதுதான் வேலை. வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் மல்லிகைப் பூக்களைப் பறித்து, அவற்றை மாலையாகக் கட்டுவாள்.
நாங்கள் மூவரும் இந்தச் சிறப்பான நாளுக்காக எப்போதும் ஆவலுடன் காத்திருப்போம். எங்களுக்குப் பிடித்த உணவு, புதிய ஆடைகள், அன்பளிப்பாகக் கிடைக்கும் பணம் ஆகியவற்றை நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கும். வயது என்னவாக இருந்தாலும், நாங்கள் மூவரும் அப்பா, அம்மாவுக்கு இன்னும் செல்லப் பிள்ளைகள்தான்.
எல்லோரும் தயாராகி, ஒன்றாகப் பூஜை செய்த பிறகு, அம்மா அப்பாவிடம் ஆசி பெறுவோம். அதன் பிறகு, குடும்பம், சமூகம், நாடு ஆகியவற்றின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்ய அருகிலுள்ள கோவிலுக்குச் செல்வோம்.
ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருப்போம். எல்லோரும் ஒன்றாகச் சாப்பிடுவோம். அமுதா, ராஜன் ஆகியோரின் வகுப்புத் தோழர்கள் வீட்டுக்கு வருவார்கள் என்று காத்திருப்போம்.
அண்டை வீட்டுக்காரர்களும் எங்களைப் பார்க்க வருவார்கள். அப்பாவின் கடையில் வேலை செய்பவர்களும் எங்களுடன் தீபாவளியைக் கொண்டாட வருவார்கள்.
இவை எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நினைவுகள்.
கடந்த ஆண்டு முதல், கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாகப் பண்டிகையின் மகிழ்ச்சி குறைந்துவிட்டது. யாரும் வீட்டுக்கு வந்து செல்லவில்லை. எங்கள் வீட்டில் நாங்கள் ஐந்து பேர் மட்டுமே இருந்தோம். காலையில் எழுந்தோம், பிரார்த்தனை செய்தோம், சாப்பிட்டோம், குடித்தோம். அவ்வளவுதான். முன்பு இருந்த மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் இல்லை.
பரவாயில்லை. எல்லாமே மாறும்.
கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்!
முற்றும்
(23/07/2021 Portal Sastera Kavyanல் ‘Semuanya Akan Berubah’ என்ற தலைப்பில் இடம் பெற்ற சிறுகதை)
அனுராதா செல்லையா சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பந்திங் நகரைச் சேர்ந்தவர். இவர் மலேசியாவின் சக்தி யோகா பள்ளியில் (Sakthi School of Yoga) பயிற்சி பெற்று, அங்கீகாரம் பெற்ற யோகா பயிற்றுநர் ஆவார்.
இவரது படைப்புகள் Busana Bahasa (2019), Landasan Hidup (2020), Peluru Aksara (2020), Lakaran Diri (2022) , Seruling Malam (2024) மற்றும் அண்மைய புத்தகமான Carita (2026) ஆகிய தொகுப்புக்களில் இடம்பெற்றுள்ளன.
இவரது ஆங்கிலக் கவிதை, ALS NaPoWriMo (2025) என்ற தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.
அனுராதாவின் படைப்புகளை Eksentrika, Sastera Kavyan மற்றும் Cukaria ஆகிய இணையத்தளங்களில் வாசிக்கலாம்.


Comments
Post a Comment