Skip to main content

தடம்

 சிறுகதை



நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தை முறையாக பேணிக் காக்கப்படா விட்டால் ...

      



எம். பிரபு

 

 

இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் மிகவும் முக்கியமானதாகும். கவின் வெறுமனே நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அவர் யாருடனும் சமரசமாகப் போகப்போவதும் இல்லை. அதற்குத்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அவர் செத்தாலும் சரி, தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என உறுதியுடன் இருந்தார்.

கருப்பு சூட் அணிந்துகொண்டு தங்கும் விடுதி அறையை விட்டு படிக்கட்டின் வழியே லோபிக்கு இறங்கினார். கையில் ப்ரீஃப்கேஸ். மின் தூக்கியை உபயோகிக்க விரும்பவில்லை. அதுதான் பாதுகாப்பானது என எண்ணினார். எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது அவரது வழக்கம். அவரது உயிர் அவர் குடும்பத்திற்கு மட்டும் உரித்தானது அல்ல; மாறாக, அவர் பிறந்த நாட்டிற்கும் மக்களுக்கும் உரித்தானதாகும்.

இவ்வளவு காலமாகத் தொலைத்ததை மீட்டெடுக்கும் பணி கவின் கையில்தான் உள்ளது. அவரையே தொலைத்துவிட்டால், பிறகு யார் அவரது இலட்சியத்தைத் தொடர்ந்து ஏற்று நடத்துவது? அவரது எல்லாத் திட்டங்களும் வீணாகிவிடும்.

லோபியில் யாரும் இல்லாததால் அங்கு சாந்தம் நிலவியது. வரவேற்புப் பகுதியில் மட்டும் விடுதிப் பணியாளர்கள் பேசுவது லேசாகக் கேட்டது. அங்குள்ள சுவர்க் கடிகாரம் காலை மணி 9 என்று காண்பித்தது. கவினின் கைக்கடிகாரத்திலோ 9.02 என்று காண்பித்தது. அங்கிருந்த கண்ணாடி மேசை மீது ப்ரீஃப்கேஸை வைத்து சோபாவில் அமர்ந்தார்.

உட்கார்ந்தவாறே கண்ணாடிச் சுவர் வழியே வெளியே நடந்து போவோர், வருவோரைப் பார்த்துக்கொண்டிருந்தார். வெளியே வெயில் பிரகாசமாகச் சுடர்விட்டுக்கொண்டிருந்தது. லோபியில் உள்ள குளிரூட்டி இதமளித்தாலும், அவரின் எண்ண ஓட்டமும் மனநிலையும் எதையும் ரசிக்க இடம் கொடுக்கவில்லை.

ஷெய்க்கிற்கு நேரத்தின் அருமை தெரியவில்லை. இன்னமும் முன்பு மாதிரிதான். நேரம் தவறுபவர்களைக் கண்டாலே கவினுக்குப் பிடிக்காது. காலை 9.10க்கு இருவரும் சந்தித்துக்கொள்வதாக முன்பே நாளையும் நேரத்தையும் உறுதி செய்தாகிவிட்டது.

9.19 மணிக்குத்தான் வெளுத்த, திடகாத்திரமான ஓர் உருவம், அரபிய உடையில் திறந்த தானியங்கிக் கண்ணாடிக் கதவைத் தாண்டி உள்ளே வருவது தெரிந்தது. கவின் எழுந்து அந்த ஆளுக்குக் கை கொடுத்தார். இருவரும் சோபாவில் அமர்ந்தனர்.

நீ வந்து ரொம்ப நேரமாகிவிட்டதா?”

ஆமாம். பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, மிஸ்டர்  ஷெய்க்,” கவினின் குரலில் கடுமை தெரிந்தது.

என்னை மன்னித்துவிடு. இங்கு நாங்கள் எல்லோரும் இப்படித்தான். உனக்குத் தெரியாததல்ல, கவின்,” குற்ற உணர்வு எதுவும் இல்லாதது போன்று சொன்னார் ‌‌‌‌‌ஷெய்க்.

நாம் இப்போது நேராக விஷயத்திற்கு வருவோம். நேரம் கடத்தாமல் இன்றே இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்பட வேண்டும்,” கவினின் முகம் கடுகடுவென இருந்தது.

கவின், மேசை மீதிருந்த ப்ரீஃப்கேஸைத் திறந்து, அதனுள் இருந்த ஒரு கோப்பை எடுத்து ‌‌‌‌‌‌‌‌‌ஷெய்க்கிடம் நீட்டினார்.

இது எங்களுடைய விண்ணப்பமும் திட்ட அறிக்கையும் ஆகும். நான் ஏற்கனவே உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ளேன். ஆனால் அதைத் திறந்துப் பார்க்கக்கூட உங்களுக்கு நேரம் இல்லை போல.”

ஷெய்க் அந்த நீண்ட விண்ணப்பங்களையும் அறிக்கைகளின் பக்கங்களையும் திறந்து படித்தார். பிறகு யோசித்தார். கவின் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. அவர் இன்னும் பசியாறக்கூட இல்லை. உணவு அவருக்குப் பெரிதாகப் படவில்லை.

அதைவிட முக்கியமானதாகும் இது.

நான் இந்த விண்ணப்பத்தை ஏற்க முடியாது. நீ இன்னமும் முன்பு போல்தான் இருக்கின்றாய், மிஸ்டர் கவின். நீ எப்போது மாறப் போகின்றாய்?” என்று கேட்டுவிட்டு, ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.

ஏன் முடியாது?”

எப்படிப் பார்த்தாலும் முடியாதுதான். உன்னுடைய திட்டங்கள் இந்தக் காலத்திற்கு அறவே பொருந்தாது,” என்று கூறிய ‌‌‌‌‌ஷெய்க் முகம் சுளித்தார்.

உங்களுடைய பிரதிநிதி எங்கள் நாட்டிற்கு வந்தபோது எங்களுக்கு நம்பிக்கையூட்டிவிட்டுத்தான் சென்றார்,” குரலை உயர்த்திப் பேசினார் கவின்.

“200 வருடங்களுக்கு முன்பு எப்படி உங்கள் நாட்டின் பல இனங்களின் மொழிகளும் எழுத்துக்களும் இருந்ததோ, அதேபோன்று மீண்டும் பிரகடனப்படுத்துவது எல்லாம் சாத்தியமாகாது, மிஸ்டர் கவின்,” கவினின் முகத்தை நேராகப் பார்க்காமல், வேறு எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னார் ஷெய்க்.

அவைதான் எங்கள் நாட்டில் பேசப்பட்ட மொழிகள். நாங்கள் தலைமுறை தலைமுறையாக அங்கேயே வாழ்ந்து வந்தோம். பல்வேறு நாடுகள் எங்கள் நாட்டை ஆட்சி செய்ததால், இறுதியில் அந்த மொழிகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. துரதிர்ஷ்டவசமாக, அந்தக் காலத்தில் வாழ்ந்த எங்கள் முன்னோர்களின் சந்ததியினர் தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவில்லை. அரசியலமைப்பும் பலமுறை உருவாக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டதால், அனைத்துமே மாறிவிட்டன,” என்று மிகுந்த வருத்தத்துடன் கூறினார் கவின்.

அது உங்கள் சந்ததியினரின் தவறு. இப்போது உங்கள் நாடு எங்களுடையது. உங்களின் கடந்த கால அரசாங்கங்கள்தான் உங்கள் நாட்டை பின்னடையச் செய்தன. எனவே, உங்கள் நாட்டை மீண்டும் முன்னேற்றியது எங்கள் நாட்டின் அரசாங்கம்தான். உங்களுக்கு வரலாறு தெரியாதா, மிஸ்டர் கவின்?” என்று ஷெய்க் கேட்டார். அவரது குரலில் கவினின் தகுதியையும் அதிகாரத்தையும் கேலி செய்யும் தொனி வெளிப்பட்டது.

அப்படியென்றால், எங்கள் நாட்டில் என்றென்றும் உங்கள் நாட்டின் எழுத்தையும் மொழியையும்தான் நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நாங்கள் எங்களின் தாய் மொழிகளை ஓரளவுக்குப் பேசத் தெரிந்திருந்தாலும், அது மட்டும் போதாது. எங்கள் நாட்டிலுள்ள பள்ளிகள் அனைத்தும் 1900-களிலும் 2000-களிலும் இருந்ததைப் போல முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று கூறிய கவின், நாற்காலியிலிருந்து எழுந்து ‌‌‌‌‌‌ஷெய்க்கை நோக்கி நடந்தார்.

கவின் தன்னை நோக்கி வருவதைக் கண்ட ஷெய்க் எச்சரிக்கையடைந்து, உடனடியாகத் தனது கையை உயர்த்தினார். எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியாமல், திடீரென ஆயுதம் ஏந்திய எட்டு பேர் அங்கு தோன்றி, கவினைச் சுற்றி வளைத்துக்கொண்டனர்.

என்னை விடுங்கள். நான் சும்மா எழுந்து நிற்கத்தான் விரும்பினேன். நான் எழுந்து நின்றதற்கே நீங்கள் பயந்துவிட்டீர்களா, மிஸ்டர்  ‌‌‌‌ஷெய்க்?” என்று கவின் சிரித்துக்கொண்டே கேட்டார்.

கவினின் உடல் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அவர்களுக்குச் சந்தேகப்படும்படியாக எதுவும் கிடைக்கவில்லை. ‌‌‌‌ஷெய்க் கையசைத்து அவர்களை வெளியேறும்படி உத்தரவிட்டார். கவின் மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்தார்.

நீ உங்கள் நாட்டில் ஒரு செயற்பாட்டாளர் மட்டுமே. அதாவது, உங்கள் நாடாக இருந்த அந்த நாடு இப்போது எங்களுடையது. நீ முன்பு இங்கே கல்வி கற்று, பணியாற்றியவர் என்பதால் உன்னை நான் மதிக்கிறேன்,” என்று கூறிய ‌‌‌‌ஷெய்க், தனது பேச்சுத் தொனியை மாற்றிக்கொண்டார். இப்போது அவர் மிகவும் இயல்பாகவும் நிதானமாகவும் பேசினார்.

நாமிருவரும் முன்பு ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்பதாலும், நீங்கள் இப்போது கல்வி அமைச்சில் உயர் பதவியில் இருப்பதாலும், எங்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையிலும்தான் உங்களைச் சந்திக்க வந்தேன். ஆனால், நீங்கள் ஆணவத்துடன், நியாயமற்ற ஒன்றை நியாயப்படுத்துவதிலேயே இன்னும் பிடிவாதமாக இருக்கின்றீர்கள்,” என்று கூறிய கவின், ஷெய்க்கை  கூர்ந்து நோக்கினார்.

அப்படியானால், உங்கள் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் மீண்டும் தாய்மொழிப் பள்ளிகளை உருவாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களா? அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கடந்துவிட்டன, மிஸ்டர் கவின்,” என்று ஷெய்க் இன்னும் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க மறுத்தார்.

முன்பு இருந்ததைப் போல தாய்மொழிப் பள்ளிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று நான் உங்களை வற்புறுத்தவில்லை. ஆனால், எங்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்மொழியும் அனைத்து நிலைப் பள்ளிகளிலும் கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். எங்கள் அனைத்து மொழிகளும் கற்றுக்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் எங்கள் தலைமுறைகளின் வரலாறும் பாரம்பரியமும் காலத்தின் போக்கில் அழிந்துபோகாமல் இருக்கும், மிஸ்டர் ‌‌‌‌ஷெய்க். ஒரு காலத்தில் எங்கள் நாட்டுக்குச் சொந்தமான அனைத்து மொழிகளையும் உங்கள் நாட்டின் மொழி மூழ்கடித்துவிட்டது. கடந்த காலத்தில் செய்த தவறு மீண்டும் நிகழ்வதை நான் விரும்பவில்லை,” என்று கூறிய கவின், மென்மையான சோபாவில் சாய்ந்து அமர்ந்தார்.

உங்களுடைய நாட்டில் உள்ள எங்கள் தலைவர்கள், உன் அனைத்து கோரிக்கைகளையும் வேண்டுகோள்களையும் முற்றிலும் பொருட்படுத்தாமல் இருக்கும்போது, நான் உனக்கு நிச்சயம் உதவ முடியும் என்று ஏன் இவ்வளவு நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றாய்?” என்று ஷெய்க் கேட்டார். அவர் இன்னும் தனது அரசாங்கத்தின் அதிகாரத்துவக் கொள்கையிலிருந்து விலகாமல் இருந்தார்.

ஏனென்றால், நீங்கள் என் நண்பர். ஆனால், நான் தவறாக நினைத்துவிட்டேன். நீங்களும் இங்கிருந்து வந்த மற்ற மனிதர்களைப் போலத்தான் இருக்கிறீர்கள் என்பது இப்போதுதான் புரிகிறது. நீங்களும் அவர்களும் இந்த நாட்டின் மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். எங்கள் நாட்டின் பூர்வீக மொழிகளும் இனங்களும் புதைந்துபோனாலும் பரவாயில்லை என்பதுபோல் நடந்துகொள்கிறீர்கள். உங்கள் அரசாங்கத்திற்கு கொஞ்சம்கூட இரக்கம் இல்லை. அப்படித்தானே, மிஸ்டர் ஷெய்க்?” என்று கவினின் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் பட்டாசு வெடிப்பதைப் போலச் சரமாரியாக வெடித்தன.

ஷெய்க் அமைதியாகிவிட்டார். அதன் பிறகு கவினுக்கும் பேசுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. அவர் கிட்டத்தட்ட நம்பிக்கையை இழந்துவிட்டதைப் போலத் தோன்றினார். தான் கனவு கண்டது என்றென்றைக்கும் நிறைவேறாமல் போய்விடுமோ என்று அவர் கவலைப்படத் தொடங்கினார்.

எங்கள் நாட்டு அரசாங்கத்தைக் குறை சொல்லாதே, மிஸ்டர் கவின். அதற்கு உங்கள் நாட்டில் இருந்த முந்தைய அரசாங்கங்களும் அமைச்சர்களும்தான் காரணம். அவர்கள் கல்வி முறையையும் மற்ற அனைத்து அமைப்புகளையும் புறக்கணித்து அழித்துவிட்டார்கள். அதனால் அனைத்தும் காலத்தின் ஓட்டத்தில் மறைந்துபோயின. இதையெல்லாம் நீ ஒப்புக்கொள்ள விரும்பவில்லையா, மிஸ்டர் கவின்?” என்று ‌‌‌‌ஷெய்க் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

கவின் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. தனது செயற்பாட்டாளர் நண்பர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை அவர் நினைவுகூர்ந்தார். கடந்த காலத்தில் இருந்த ஊழல் நிறைந்த பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவரது நாட்டின் கல்வி மற்றும் பொருளாதார அமைப்புகளைச் சீரழித்திருந்தனர். ‌‌‌‌ஷெய்க் கூறியதில் உண்மை இருந்தது. ஆனால், அதற்காக அவர்கள் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு அடிமைகளாகவும், அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுபவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

அப்படியானால், மிஸ்டர்  ‌‌‌‌ஷெய்க் நீங்கள் எங்களுக்கு உதவப் போவதில்லையா?”

ஆம். தற்போதைய சூழ்நிலை அதற்கு இடமளிக்கவில்லை.”

நம்முடைய நட்பையே நீங்கள் கேலி செய்கிறீர்கள், மிஸ்டர்  ‌‌‌‌ஷெய்க்.”

அது உங்கள் எண்ணம். அதை நான் மறுக்க முடியாது.”

சரி, மிஸ்டர் ‌‌‌‌ஷெய்க். நீங்களும் இந்த நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தைக்கு வர விரும்பவில்லை. பல ஆண்டுகளாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தும், நாங்கள் விரும்பியபடி எந்த முடிவும் எட்டப்படவில்லை.”

மன்னிக்கவும், மிஸ்டர் கவின். என்னால் எதுவும் செய்ய முடியாது. நீ திரும்பிச் சென்று, அங்கே மற்ற சாதாரண மனிதர்களைப் போல உங்கள் பேராசிரியர் பணியைச் செய்யுங்கள்,” என்று ஷெய்க் புன்னகையுடன் கூறினார்.

கவினும் ‌‌‌ஷெய்க்கும் எழுந்து நின்று கைகுலுக்கிக்கொண்டனர்.

ஆம், நான் திரும்பிச் சென்று என் பணியை வழக்கம்போல் செய்வேன். ஆனால், நானும் எங்கள் செயற்பாட்டாளர்களும் அமைதியாக இருந்துவிடுவோம் என்று நினைக்காதீர்கள். நாங்கள் வேறு வழியில் செயல்படுவோம். நீங்கள் காத்திருந்து பாருங்கள்!”

கவின் அவசரமாக அங்கிருந்து வெளியேறி, படிக்கட்டுகளில் ஏறி தனது அறையை நோக்கிச் சென்றதை ஷெய்க் பார்த்துக்கொண்டே இருந்தார்.

 

 

முற்றும்



Comments

Popular posts from this blog

சிறுமி நீய்ஹா மதனின் சாதனைகள்

  அனுபவம்      எம்.   பிரபு   நான் தொடக்கப்பள்ளியில் படித்த காலத்திலிருந்தே மணிமேகலை நாயர் அவர்களின் குடும்பத்தை அறிந்திருந்தேன். மணிமேகலையும் அப்போது சிறுமியாக இருந்தார்.    என் தந்தை திரு. எஸ். மாதவன் அவர்கள்   National Union of Plantation Workers ( தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்) அமைப்பில் பொருளாளராகப் பணியாற்றினார். ஒவ்வொரு மாதமும்  அவர் மற்றும் ஓட்டுநர்   திரு. கோவிந்தன் அவர்களுடன் பஹாங்கில் உள்ள பல தோட்டங்களுக்கு Peugeot   404 காரில் சென்று தொழிலாளர்களிடமிருந்து சங்க ச்   சந்தாவை வசூலி ப்பதோடு  தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிவார்கள். அந்த வயதில் அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த மாதச்   சந்தா,  தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும்   நலனுக்காகவும்  மேற்கொள்ளப்பட்டதாக அறிவேன். பொதுவாக தோட்ட பிரதிநிதிகள் மூலம் மாதச் சந்தா சேகரிக்கப்பட்டன. பள்ளி விடுமுறைகளில் நான் மற்றும் என் சகோதரர் ,  தந்தையுடன் அந்தப் பயணங்களின் போது...

PENGECUT

  Cerpen    Oleh: M. Mahendran       “Kita perlu menolong mereka. Mereka dalam kesusahan. Tanpa ditolong, mereka tidak dapat makan.” “Kita tinggal jauh. Biarlah mereka yang tinggal berdekatan menolong.” “Jangan peduli tentang negara yang berdekatan. Mereka di seberang lautan ialah saudara kita. Kita harus menolong mereka.” “Tanpa pertolongan kita, adakah mereka akan mati kebuluran?” “Ya. Jadi hulurkanlah bantuan.” “Bagaimana cara membantu mereka?” “Kita perlu merentasi lautan.” “Tidak bolehkah dengan mengirim wang sahaja?” “Itu tidak cukup. Kita perlu pergi sendiri untuk menghulurkan makanan, pakaian dan bantuan kesihatan. Ini perlu dilakukan sendiri. Barulah kita akan rasa puas dan mereka pun akan gembira.” “Tidak bahayakah merentas lautan?” “Demi menolong saudara kita di situ, apa pun tidak bahaya.” “Jadi, kamu akan ke sana merentas lautan dengan kapal walaupun kamu tidak pernah pergi sebelum ini?” “Kamu boleh ikut kami. Dengan berbuat demikian, kamu akan...

ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ...

  சிறுகதை   எம்.   பிரபு                                       தெரிந்தோ தெரியாமலோ அவன் இந்த க்  கொலையை ச்  செய்து விட்டான். பிணம் நிச்சயம் எழப் போவது இல்லை. நடந்து முடிந்த சம்பவத்தை அவனால் மாற்றி அமைக்க இயலாது. நடந்து விட்டது. அதுதான் உண்மை. அழுதும் பயனில்லை. இந்த ச்   சூழ்நிலையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். காலம் கடந்து விட்டது. இப்போது அவன் செய்ய வேண்டியது ஒன்றுதான். இந்த பி ண த்தை அப்புறப் படுத்துவது. இனியும் தாமதப் படுத்த இயலாது. பிறகு சூழ்நிலை அவன் பக்கம் சார்ந்து இருக்காது . இது அவனுக்கு இரண்டாவது முறை . இதற்கு முன்பு செய்த போது அந்த வீட்டின் பின்னால் பரந்த நிலம் இருந்தது. அங்கு அதை புதைத்தாகி விட்டது. இப்போது நட த்தப்பட்ட  கொலை, அவனுக்கு   கடினமானது. இந்த கொலை தான்  அவன் முன்பு செய்த கொலைகளிலிருந்து மாறுபட்டது.   சங்கடமானதும்  கூட. இந்த வீடமைப்பு ப...