சிறுகதை
எம். பிரபு
தெரிந்தோ தெரியாமலோ அவன் இந்தக் கொலையைச் செய்து விட்டான். பிணம் நிச்சயம் எழப் போவது இல்லை. நடந்து முடிந்த சம்பவத்தை அவனால் மாற்றி அமைக்க இயலாது. நடந்து விட்டது. அதுதான் உண்மை. அழுதும் பயனில்லை.
இந்தச் சூழ்நிலையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். காலம் கடந்து விட்டது. இப்போது அவன் செய்ய வேண்டியது ஒன்றுதான். இந்த பிணத்தை அப்புறப் படுத்துவது. இனியும் தாமதப் படுத்த இயலாது. பிறகு சூழ்நிலை அவன் பக்கம் சார்ந்து இருக்காது.
இது அவனுக்கு இரண்டாவது முறை. இதற்கு முன்பு செய்த போது அந்த வீட்டின் பின்னால் பரந்த நிலம் இருந்தது. அங்கு அதை புதைத்தாகி விட்டது.
இப்போது நடத்தப்பட்ட கொலை, அவனுக்கு கடினமானது. இந்த கொலைதான் அவன் முன்பு செய்த கொலைகளிலிருந்து மாறுபட்டது.
சங்கடமானதும் கூட.
இந்த வீடமைப்பு பகுதியில் எங்கும் புதைக்கும் அளவிற்கு நிலம் இருப்பதாக அவனுக்குப் படவில்லை.
கடினம்.
வருத்தம்.
இப்போது அவன் வருத்தப் படுகின்றான். அவனால் அவனையே கட்டுப் படுத்த இயலவில்லை. அவனுக்கும் கார் வசதியில்லை. மோட்டார் சைக்கிளில் கொண்டு போவதா, அல்லது இங்கேயே விட்டுச் சென்று விடலாமா? அப்படி செய்ய மனசு வரவில்லை. அப்படி செய்ய அவனால் முடியாது.
முடியாது!
யோசிக்கின்றான். யோசிக்கின்றான்.
* * *
கொலை செய்வது அவனுக்கு கை வந்தக் கலை. அதற்கு அவனுள் தனித் திறமையே உண்டு என நம்புகிறவன் அவன். எல்லோராலும் ஒரு கொலையைச் சர்வ சாதாரணமாக செய்து விட முடியாது. தன் தனித் திறமையை சிறு பிராயத்தில் இருந்தே நன்கு வளர்த்துக் கொண்டான்.
அது அவனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. என்ன ஒன்று, தன் தனித் திறமையை எங்கும் வெளிக்காட்டிக் கொள்ள இயலாது. மேலும், தனது திறமையை இனி வருபவர்களுக்குச் சொல்லி கொடுக்கவும் இயலாது. அது அவ்வளவு சுலபமானது அல்ல. எல்லோரும் அவனைப் போன்று திறமைசாலியும் இல்லை.
ஒரு மனிதப் பிறவியை கொல்வதற்கு முன்னாள் அவன் நிறைய பயிற்சி செய்ய வேண்டி இருந்தது. அது தன் அம்மா வளர்த்த கோழிக் குஞ்சுகளிலிருந்து ஆரம்பமானது. அப்போது அவனுக்கு வயது ஐந்துதான். அதுகளை அவன் கற்களால் அடித்தான். ரத்தம் கொட்டின, மயங்கின. இறுதியில் செத்தே பொயின. அவன் அந்த ஐந்து வயதில் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தான். அவனுள் என்ன ஆனந்தம், சந்தோசம். அப்போது எதற்கு அடித்துக் கொன்றான் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், சந்தோசப் பட்டான்.
சந்தோசப்பட்டான்.
அவனுக்கு எங்கே தெரிந்த்திருக்கப் போகுது அந்த குஞ்சுகள் வலியால் எவ்வளவு துடித்திருக்கும் என்று. அவனுக்கு எங்கே தெரிந்திருக்கும் தாய்க் கோழி எவ்வளவு துயரத்திற்கு ஆளாகியிருக்கும் என்று.
அவனுடைய குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். தான் துன்புறுத்திய ஜீவன்கள் சாக வேண்டும்.
சாக வேண்டும்!
அதுதான். அதனால் அவனுக்கு ஏற்படும் சந்தோசம், அலாதிதான்.
அம்மா பெரிதாக கண்டு கடிந்துக் கொள்ளவில்லை. அடிக்கவுமில்லை. இது அவனுக்கு சாதகமானது.
கோழிக் குஞ்சுகளைத் தவிர்து எறும்பு, பாச்சை, கொசு, வெட்டுக்கிளி, தட்டான், பல்லி, பறவை, எலி, மண்புழு, தவளை மற்றும் பல அவன் கண்களிலிருந்து தப்பவே முடியாது.
சிறிய உயிரினங்களைக் கொன்று சலித்த பிறகு, சற்று பெரிய மிருகங்களைக் கொல்ல ஆரம்பித்தான்.
ஒன்பது வயதிருக்கும் போது பக்கத்து வீட்டுப் பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த பூனை அவன் கண்ணத்தை அதன் நகங்களால் பதம் பார்த்தது. ரத்தம் வந்தது. சொல்லவா வேண்டும். ஆத்திரம் மண்டைக்கு மேல் தாண்டவமாடியது. யோசிக்க அவகாசம் கொடுக்காமல், சமயல் அறை பின்னால் இருந்த சுத்தியலை எடுத்தான். இரு கால்களால் அந்தப் பூனையை இறுகிக் கொண்டு ஆறு தடவை அதன் மண்டையிலேயே போட்டான்.
அலறித் துடித்தப் பூனை பின் அமைதியானது. செத்துப் போன பூனையைப் பார்த்து மிகவும் சந்தோசப் பட்டான். மிகவும் சந்தோசம். அவ்வளவு சந்தோசம்.
அவனது இந்த செயலைக் கண்டு அவனது பெற்றோர் மீண்டும் கண்டிக்கவே இல்லை. அவன் கொன்ற பூனை, அவனது பெற்றோரின் எதிரி வீட்டுப் பூனை. பின் கேட்கவா வேண்டும். போதாக் குறைக்கு அவனது தந்தை அவனை வெகுவாக பாராட்டினார். முடிந்தால் அவர்கள் வளர்க்கும் எதையும் விட்டு வைக்க வேண்டாம் என்றார்.
வயது பத்திலிருந்து பன்னிரண்டு வரையில் மூன்று பாம்புகள் மற்றும் பல உடும்புகளை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தான். உடும்பு அவர்களின் வீட்டுச் சமையலுக்கு உதவின. வீட்டுச் செலவு இதனால் கொஞ்சம் குறைந்தன. பையன் துடுக்காக இருந்தாலும் இந்தச் சின்ன வயசிலேயே வீட்டிற்கு இவ்வாறு உதவி செய்வது பெற்றோருக்கு மகிழ்ச்சியளித்தன. அவர்களுடைய பாராட்டு, மேலும் அவனை தூண்டியது. அதன் பிறகு அந்த கிராமத்தில் வசிப்பவர்களின் கோழி மற்றும் ஆடுகள் மாயமாய் மறைந்தன.
எத்தனை நாளைக்குத்தான் இந்தத் திருட்டு நீடிக்கும். கிராமத்து மக்கள் அவன் குடும்பத்தையே அடித்து துரத்தினர். அங்கு பிடித்த ஓட்டம் ...
பால் மரம் சீவிக் கொண்டிருந்த அவன் அப்பாவிற்கு பட்டணத்தில், கிராமம் போன்று இலகுவான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவில்லை.
புதிய இடத்தில் எதையும் சாகடிக்காமல் அவனது வாழ்க்கை கடினமாக நகர்ந்தது. வெறும் கொசுக்களை மட்டும் கொன்று எப்படி வாழ்க்கையை ஓட்டுவது என்று கவலைப் பட்டான். சிறிதுகாலம் விரதம் பூண்டான்.
இடைநிலைப் பள்ளிக்குச் சென்றான். இரண்டாம் படிவம் பயிலும் போது ஒரு அழகிய மாணவி அவன் கண்களில் அகப்பட்டாள். அவள் படிப்பில் சிறந்த மாணவி. அவள் மீது இவன் மையல் கொண்டான். அவனது காதலை அவள் ஏற்க மறுத்தாள். அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
பேனா கத்தி அந்த மாணவியின் கையை கீறிப் பார்த்தது. நல்ல வேளை காயம் ஆழமாக இல்லை. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவனது கை, சக மனிதனை பதம் பார்த்தது. ஆனாலும் அவள் மேல் உள்ள காதல் நீங்க மறுத்தது.
மூன்றாம் படிவத்திற்கு பிறகு, அவன் படிப்பை தொடர விரும்பவில்லை. உல்லாசமாய் சுதந்திரமாக இருக்க விரும்பினான். அவனது பெற்றோர் வருந்தினர். தாயார் அழுதார். கண் கெட்ட பிறகு என்ன செய்ய முடியும்.
கட்டுக்கடங்காத நண்பர்கள் பட்டாளம். பட்டணத்தின் வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தான். எந்த வேலையிலும் அவன் நிரந்தரமாக இருந்ததில்லை. ஒரு வேலையைச் செய்தான் என்றால், மூன்று மாதத்திற்கு மேல் தாக்கு பிடிக்காது.
நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு குடிப்பது, புகைப்பது கொள்ளையடிப்பது, மற்ற கும்பலுடன் சேர்ந்து சண்டையிடுவதில் உற்சாகமடைந்தான். இதையெல்லாம் அவன் செய்து வந்தாலும், கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதை அரித்துக் கொண்டே இருக்கும். அதைச் செயலாற்றும் தருணம் இன்னும் அமையவில்லை. அதுவும் அதை தனியாக செய்ய வேண்டும்.
தனியாக.
அவனது இருபத்தி இரண்டாவது வயதில் மீண்டும் அவளை சந்தித்தான். திருமணமான பின் கணவனுடன் வேறு மாநிலம் சென்றவள் மீண்டும் இதே ஊருக்கு மாற்றலாகி வந்தாள். அவள் முன்பை விட இப்போது மேலும் அழகுடந்தான் இருந்தாள். அவளை அடைய அவன் மனம் காமம் கொண்டது. போதும் ஒரு தடவை தோற்றது.
மீண்டும் ஒரு முறை...
அவன் நினைத்தபடி அது எளிதாகவில்லை. தன் விருப்பத்தை தெரிவித்தான். அவள் முகம் கொடுத்து பேசவில்லை. நன்றாக சத்தம் போட்டுத் திட்டினாள். அவன் சோர்வடைந்தான், ஆத்திரம் கொண்டான். மனதில் அடக்கி வைத்திருந்த ஆதங்கம், வெடித்து விடும் போல.
வெடித்து விடும்.
அவன், அவளது கணவனை ஒரு வித தந்திரத்தோடு சந்தித்தான். அவனது மனைவியின் படுக்கை அறைப் படங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி தன் நண்பனின் வீடிற்கு வரவழைத்தான்.
படம் ஏதும் இல்லை. உன்னைக் கொல்லத்தான் வரவழைத்தேன், என்றான்.
அதுதான் அவன் செய்த முதல் மனிதக் கொலை.
அந்த கொலையை செய்யும் போது அவனது நண்பர்களை உடன் இருக்க விடவில்லை. தனியாகவே அந்த அழகியின் கணவனை கத்தியால் பல தடவை குத்தித் தீர்த்துக் கட்டினான். அந்த பிணத்தை புதர்கள் நிறைந்த நண்பன் வீட்டின் பின்னால் புதைத்தான். நிம்மதி. ஆனால் முழுமையடையாத நிம்மதி.
செயல்பட மீதம் இருக்கிறது.
இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டப் பின் விடுவிக்கப் பட்டான். சரியான சாட்சியமும் பிணமும் கிடைக்காததால் அவனுக்கு இந்த விடுப்பு. சிறையில் உதை வாங்கியது வேறு விசயம்.
சிறைவாசம் ஒருவனை நல்வழிப் படுத்தியிருக்க வேண்டும், ஆனால் இவனை பொருத்த வரை அது பலனளிக்கவில்லை. பழி வாங்கும் உணர்ச்சியே மேலோங்கியது.
மீசையும் தாடியும் புதர் போல் அவன் முகத்தை அலங்கரித்து மேலும் கொடூரமாக்கின.
கொடூரம்.
சிறையை விட்டு வெளியே வந்த முதல் வேலையாய் அவன் தன் நண்பர்களை தேடாமல், அவளைத்தான் தேடினான். அவனது நண்பர்களும் சிறையில் இருக்கும் பொழுது அவனைச் சட்டை செய்யவே இல்லை. அவர்களுக்கு பிறகு இருக்கிறது ஆப்பு.
அவள் வீடிற்குச் சென்றான். அவள் முன்பு போல பொலிவாக இல்லை. ஒல்லியாகவும் முகத்தில் அழகுணர்ச்சி இழந்து காணப்பட்டாள். அவனை அவள் வீட்டினுள் அனுமதிக்கவில்லை. கூச்சல் போட்டாள். அங்கிருந்து கிளம்பினான்.
அவன் அவளை அப்படியே விட்டு விடுவானா என்ன. மறுநாள் இரவு மீண்டும் சென்றான். இந்தத் தடவை வீட்டின் பின் கட்டு வழியே கதவை உடைத்து புகுந்தான். அவள் தனியே உட்கார்ந்து தொலைக்காட்சியில் ‘கத்தி' படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
லாவகமாக அவள் வாயில் கைகுட்டையைத் தினித்து ஜன்னல் திரைச்சீலையை இழுத்து அவள் கைகளையும் கால்களையும் கட்டி கீழே தள்ளினான். வீட்டின் முன் வாசற் கதவை சரியாக பூட்டிய பின் தான் உடைத்து உற்புகுந்த கதவை நேராக நிமிர்த்தி சாப்பாட்டு மேசையை வேகமாய் இழுத்துக் கதவு அருகே ஒட்டி அதையும் நிமிர்த்தினான்.
அவன் நெஞ்சு படபடத்தது. சமையலறையிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துக் கொண்டு அவள் அருகில் நெருங்கினான். அவள் கத்த முயன்றாள். சத்தம் குறைவாகவே வந்தது. எழுந்து நிற்க முயன்றாள். அவளால் ஒன்றும் சாதிக்க முடியவில்லை.
கத்தியை அவள் கழுத்தின் அருகே கொண்டு செல்கையில் அவன் கை நடுங்கியது. அவனுக்கே புரியவில்லை ஏன் என்று. என்ன இருந்தாலும் அவளை காதலித்தவன்தானே.
கொஞ்சம் பரிதாபம் எற்பட்டு கத்தி கீழே விழுந்தது. இவளை கொல்லலாமா வேண்டாமா? கொல்லலாமா வேண்டாமா? … கொல்லலாமா வேண்டாமா? என்று யோசித்தவாரே அவளை அனணத்து கண்ணத்தில், உதடுகளில் ஆவேசமாய் பல தடவை முத்தமிட்டான். அவளால் கத்துவதை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. அவளது குரல் சன்னமாகவே ஒலித்தது.
காதலியை கத்தியால் குத்த அவனுக்கு மனம் வரவில்லை.
அவளுடைய ரத்தத்தை எப்படிப் பார்ப்பது?
ரத்தம் வேண்டாம்.
இன்னொரு திரைச்சீலையை கத்தியால் கிழித்து எடுத்து, சற்றும் யோசிக்காமல் அதனால் அவள் கழுத்தை இறுக நெறித்தான். அவளால் கத்த முடியவில்லை. பத்து நிமிடதிற்குப் பிறகுதான் அவளை விடுவித்தான். அவள் தலை பொதுக்கென்று தரையில் சாய்ந்தது. மூச்சும் நின்று போனது ஒரேடியாக, பரிதாபமாக.
பரிதாபமாக
அவன் எழுந்து ‘சோபா'வில் உட்கார்த்ந்தான். வருத்தம். தான் தவறு செய்து விட்டோமா என்ற பயம். கவலை. இப்போது இதைப் பற்றி கவலைப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. சடலமான இவளை எப்படி அப்புறப் படுத்துவது?
பின் அவள் அருகே தரையில் எழுந்து உட்கார்ந்தான். அவள் வாயில் அடைக்கப் பட்டிருந்த கைக்குட்டையை அகற்றினான். அவள் முகத்தை தடவினான். அவள் கண்களையும் வாயையும் மூடினான்.
அப்போது, இரண்டு அறைகளில், ஓர் அறையிலிருந்து அழுகுரல் கேட்டது. அதுவும் குழந்தையின் அழுகுரல். அவனது இதயம் மிக வேகமாய் துடித்தது. அழுகுரல் வந்த திசையை நோக்கி விரைந்தான்.
முற்றும்
(தென்றல் தீபாவளி மலர் 2018)




Comments
Post a Comment