Skip to main content

நினைவுகள்

 அனுபவம்

                                                      


                                                     

பெந்தோங் சுப்பிரமணிய ஆலயம் 1962



எம். பிரபு


 

இன்னும் சில மாதங்களில் நாம் 2027ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கப் போகின்றோம். 2026ஆம் ஆண்டு இப்போதுதான் தொடங்கியது போலத் தோன்றுகிறது. ஆனால் இன்று அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் ராக்கெட் வேகத்தில் பறந்து செல்கிறது.

பல உறவினர்களும் நண்பர்களும் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள். அதே நேரத்தில் தினமும் புதிய குழந்தைகள் பிறக்கின்றன. இப்படித்தான் வாழ்க்கையின் சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நம்மை விட்டு சென்றவர்களை நினைத்து வருந்துகிறோம். புதிதாக பிறந்தவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

இந்த உலகத்தில் வாழும் காலத்தில் பல மாற்றங்களை நாம் சந்திக்கின்றோம். அவற்றை நம் அன்றாட வாழ்க்கையில் இயல்பாக ஏற்றுக்கொள்கிறோம். வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்தாலும், நமக்குத் தேவையானவற்றை மட்டும் ஏற்றுக் கொண்டு. தேவையில்லாதவற்றை விட்டுவிடுகிறோம்.

புதியவற்றை ஏற்றுக்கொண்டாலும், பழையவற்றை நாம் மறந்துவிடுவதில்லை. வாழ்க்கையில் கடந்துபோன ஒவ்வொரு அனுபவமும் நம் மனதில் நிலையான நினைவாக வாழ்கிறது. அது நல்லதாக இருந்தாலும் சரி, கசப்பானதாக இருந்தாலும் சரி, வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்கும்.

எனக்கு மூன்று அல்லது நான்கு வயதிலிருந்தே நடந்த பல சம்பவங்கள் இன்னும் நினைவில் உள்ளன. அவை என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் போல இருக்கின்றன. சில நேரங்களில் அந்தக் காட்சிகள் வண்ணத்தில் தோன்றும். சில நேரங்களில் கருப்பு-வெள்ளையாகத் தோன்றும். உண்மையிலேயே இது ஓர் ஆச்சர்யமான நிகழ்வுதான்.

ன்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்கள், அந்தக் காலத்தின் நினைவுகளை இன்னும் தெளிவாக நினைவுகூற உதவுகின்றன. அவை என் வாழ்க்கையையும், என் குடும்பத்தினரின் வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளன. பழைய படங்களை என்றுமே நான் பொக்கிஷமாக கருதுகின்றேன்.

1950களில் என் அப்பாவின் புகைப்பட ஆல்பத்தில் உள்ள பெரும்பாலான படங்கள், அவர் பிறந்த ஜொகூர் மாநிலத்தின் செகாமாட் பகுதியில் எடுக்கப்பட்டவை. அதுபோல, என் அம்மாவின் புகைப்படங்கள் பெரும்பாலும் ஜொகூர் லாபிஸ் தோட்டத்தில் எடுக்கப்பட்டவை.

என் பெற்றோரின் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணப் புகைப்படங்களைப் பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியின் நடுவில் நானும் நின்றிருப்பது போல உணர்கிறேன். நான் உட்கார்ந்த இடத்திலிருந்தே காலத்தைத் தாண்டிச் சென்றுவிடுகிறேன். என்னால் காலப்பயண இயந்திரம் இல்லாமலேயே அந்தக் காலத்திற்கு செல்ல முடிகிறது. பலராலும் இது இயலும்.

                                           செகாமட்

புகைப்படங்களைப் பார்த்து நினைவுகூர்வதோடு மட்டுமல்லாமல், என் பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் அவர்களுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி நிறையக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். சில சமயங்களில் அவர்கள் தாமாகவே பழைய சம்பவங்களைச் சொல்வார்கள். சில கதைகள் சிரிக்க வைக்கும். சில கதைகள் மனதை உருக்கிவிடும்.

என் அப்பாவின் மூத்த அண்ணன் (பெரியப்பா), தீபாவளி அன்று தனது மிதிவண்டியை கொடுக்க மறுத்ததால் கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை நான் அறிந்தேன். அந்தச் சம்பவத்தை தலைவர் என்ற எனது சிறுகதைத் தொகுப்பில்  சைக்கிள் என்ற தலைப்பில் சிறுகதையாக எழுதியுள்ளேன். அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்திராவிட்டாலும், நேரடியாக பார்த்தது போன்று இன்னும் என் மனதில் அடிக்கடி தோன்றுகிறது.

எனக்கு இரண்டு வயதிருக்கும் போதே, ஜொகூர் லாபிஸ் தோட்டத்தில் இருந்த எனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி போய் வருவது வழக்கம். அங்கேதான் திறந்த வெளியில் திரையிடப்பட்ட சினிமாவை (வோயாங் பாச்சாக்) முதலும் கடைசியுமாக பார்த்தேன்.

                                  லாபிஸ் எஸ்டேட் 1973


அப்போது அந்தத் தோட்டத்தில் மின்சார வசதி  இல்லை. இரண்டு மாடி பலகை வீடு முழுவதும் காஸ்லின் விளக்கின் ஒளியில்தான்  இரவில் வெளிச்சம் கிடைத்தது. அந்த விளக்கின் மணம் அவ்வளவு நன்றாக இருக்கும்.

1980ஆம் ஆண்டுக்கு முன்பு, பகாங் மாநிலத்தின் பெந்தோங் நகரில் இருந்த பெரும்பாலான வீடுகளில் வீட்டுக்குள் கழிப்பறை இல்லை. வெளியே சென்று கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அப்போது தண்ணீர் பம்பும் இல்லை. ஒவ்வொரு அதிகாலையும் ஒரு சீன முதியவர் வந்து வாளிகளில் கழிவுகளை எடுத்துச் செல்வார். அவற்றை தனது காய்கறித் தோட்டத்திற்கு உரமாகப் பயன்படுத்துவார். அந்தக் காட்சியும் இன்னமும் என் நினைவில் தெளிவாக இருக்கிறது.

என்னால் ஒருபோதும் மறக்க முடியாத இன்னொரு விஷயம் பள்ளி வாழ்க்கை. அப்போது அது சுமையாகத் தோன்றியது. ஆனால் இன்று அது இனிமையான நினைவாக மாறிவிட்டது. இன்றைய மாணவர்கள் பள்ளிக்குச் நடந்து செல்வது மிகவும் குறைந்துவிட்டது என்பதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நண்பர்களுடன் கூட்டமாக நடந்துசென்ற அந்த நாட்கள் உண்மையிலேயே அழகான அனுபவம்.

முன்பு பெந்தோங் நகரில் மக்களை மகிழ்வித்த மூன்று திரையரங்குகள் இருந்தன. அவை Cathay, Lido, Lyceum அப்போது ஒரு திரைப்பட டிக்கெட் வெறும் 65 சென் மட்டுமே. இன்று அந்த மூன்று திரையரங்குகளும் வணிக வளாகங்களாக மாறிவிட்டன. வருத்தமாக இருக்கிறது. ஆனால் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

ஒரு காலத்தில் புதுமையாக இருந்த பல பொருட்கள் இன்று பழமையானவை ஆகிவிட்டன. வீட்டு தொலைபேசி, மிதிவண்டி, தீப்பெட்டி, டைப் மெஷின், கேசெட், சிடி, ரேடியோ போன்ற பல பொருட்கள் இன்று அருங்காட்சியகத்தில் வைக்கத் தகுதியானவையாகி விட்டன. இருந்தாலும் அவை நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்ததால் அவற்றை நாம் மதித்தே ஆக வேண்டும்.

ஒருநாள் காலப்பயண இயந்திரம் கண்டுபிடிக்கப்படும் என்று நான் அடிக்கடி கனவு காண்பதுண்டு அப்படி ஒரு இயந்திரம் இருந்தால், நான் கடந்த காலத்திற்குச் சென்று செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள முடியும். அது நடக்க முடியாத ஒன்று என்றாலும், அப்படிக் கற்பனை செய்வதில் தவறில்லைதானே?

 

 

                                           லாபிஸ் எஸ்டேட் 1962

Comments

Popular posts from this blog

சிறுமி நீய்ஹா மதனின் சாதனைகள்

  அனுபவம்      எம்.   பிரபு   நான் தொடக்கப்பள்ளியில் படித்த காலத்திலிருந்தே மணிமேகலை நாயர் அவர்களின் குடும்பத்தை அறிந்திருந்தேன். மணிமேகலையும் அப்போது சிறுமியாக இருந்தார்.    என் தந்தை திரு. எஸ். மாதவன் அவர்கள்   National Union of Plantation Workers ( தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்) அமைப்பில் பொருளாளராகப் பணியாற்றினார். ஒவ்வொரு மாதமும்  அவர் மற்றும் ஓட்டுநர்   திரு. கோவிந்தன் அவர்களுடன் பஹாங்கில் உள்ள பல தோட்டங்களுக்கு Peugeot   404 காரில் சென்று தொழிலாளர்களிடமிருந்து சங்க ச்   சந்தாவை வசூலி ப்பதோடு  தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிவார்கள். அந்த வயதில் அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த மாதச்   சந்தா,  தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும்   நலனுக்காகவும்  மேற்கொள்ளப்பட்டதாக அறிவேன். பொதுவாக தோட்ட பிரதிநிதிகள் மூலம் மாதச் சந்தா சேகரிக்கப்பட்டன. பள்ளி விடுமுறைகளில் நான் மற்றும் என் சகோதரர் ,  தந்தையுடன் அந்தப் பயணங்களின் போது...

PENGECUT

  Cerpen    Oleh: M. Mahendran       “Kita perlu menolong mereka. Mereka dalam kesusahan. Tanpa ditolong, mereka tidak dapat makan.” “Kita tinggal jauh. Biarlah mereka yang tinggal berdekatan menolong.” “Jangan peduli tentang negara yang berdekatan. Mereka di seberang lautan ialah saudara kita. Kita harus menolong mereka.” “Tanpa pertolongan kita, adakah mereka akan mati kebuluran?” “Ya. Jadi hulurkanlah bantuan.” “Bagaimana cara membantu mereka?” “Kita perlu merentasi lautan.” “Tidak bolehkah dengan mengirim wang sahaja?” “Itu tidak cukup. Kita perlu pergi sendiri untuk menghulurkan makanan, pakaian dan bantuan kesihatan. Ini perlu dilakukan sendiri. Barulah kita akan rasa puas dan mereka pun akan gembira.” “Tidak bahayakah merentas lautan?” “Demi menolong saudara kita di situ, apa pun tidak bahaya.” “Jadi, kamu akan ke sana merentas lautan dengan kapal walaupun kamu tidak pernah pergi sebelum ini?” “Kamu boleh ikut kami. Dengan berbuat demikian, kamu akan...

ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ...

  சிறுகதை   எம்.   பிரபு                                       தெரிந்தோ தெரியாமலோ அவன் இந்த க்  கொலையை ச்  செய்து விட்டான். பிணம் நிச்சயம் எழப் போவது இல்லை. நடந்து முடிந்த சம்பவத்தை அவனால் மாற்றி அமைக்க இயலாது. நடந்து விட்டது. அதுதான் உண்மை. அழுதும் பயனில்லை. இந்த ச்   சூழ்நிலையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். காலம் கடந்து விட்டது. இப்போது அவன் செய்ய வேண்டியது ஒன்றுதான். இந்த பி ண த்தை அப்புறப் படுத்துவது. இனியும் தாமதப் படுத்த இயலாது. பிறகு சூழ்நிலை அவன் பக்கம் சார்ந்து இருக்காது . இது அவனுக்கு இரண்டாவது முறை . இதற்கு முன்பு செய்த போது அந்த வீட்டின் பின்னால் பரந்த நிலம் இருந்தது. அங்கு அதை புதைத்தாகி விட்டது. இப்போது நட த்தப்பட்ட  கொலை, அவனுக்கு   கடினமானது. இந்த கொலை தான்  அவன் முன்பு செய்த கொலைகளிலிருந்து மாறுபட்டது.   சங்கடமானதும்  கூட. இந்த வீடமைப்பு ப...