அனுபவம் எம். பிரபு எனது சிறுபிராயத்திலிருந்தே தீபாவளி கொண்டாட்டத்தின் மீது அவ்வளவாக நாட்டம் இருந்ததில்லை ; வெகு விமர்சையாகக் கொண்டாடியதும் இல்லை. அதாவது , தோட்டப்புறங்களில் உள்ளது போன்று கொண்டாடியதில்லை. தோட்டப்புற தீபாவளி எப்படி இருக்கும் என்றும் தெரியாது ; அதாவது நினைவில் இல்லை. இத்தனைக்கும் எனது இரண்டாவது , மூன்றாவது வயதில் ஜோகூர் லாபிஸ் எஸ்டேட்டில் உள்ள எங்களின் பாட்டி (தாயாரின் அம்மா) வீட்டில்தான் தீபாவளி கொண்டாடுவோம். பாட்டியின் வீடும் மற்ற மற்ற வீடுகளும் அந்தத் தோட்டப்புறத்தில் தூரமாகத்தான் இருக்கும். ஒருவேளை தாத்தாவும் பாட்டியும் ஆசிரியர்கள் என்பதால் அவர்களுக்குத் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் போல் அல்லாமல் வேறு அமைப்பில் வீடு கொடுக்கப்பட்டிருக்கலாம். அதனால் , அக்கம் பக்கம் எவ்வாறு கொண்டாடினார்கள் என்று தெரியவில்லை. மற்றுப்படி தீபாவளியன்று எனது மாமா படம் பிடிப்பார். அவர் பிடித்த புகைப்படங்கள் இப்போதும் ஆல்பத்தில் உள்ளன. ஆனால் , அன்று அவர் படம்...