கட்டுரை தகப்பனார் திரு. எஸ். மாதவனின் பள்ளி வகுப்புப் படம் , சிகாமட் ஜொகூர் 1940க்களில் எம். பிரபு சிறுபிராயத்தில் இருந்தே எனக்கு பழைய நிழற்படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் மிகுதி. எங்கள் வீட்டில் எங்கள் தகப்பனார் திரு. எஸ். மாதவன் அவர்களின் ஆல்பங்களை அப்போதிலிருந்தே பார்த்துக் கொண்டு வருவதால் , இந்த ஆர்வம் பிறந்தது எனலாம். அதுவும் கறுப்பு வெள்ளைப் நிழற்படங்கள் என்றால் அலாதி ஆர்வம். வீட்டில் உள்ள ஆல்பங்களின் படங்கள் , 1940 -ஆம் ஆண்டுகளின் மத்தியில் முதற்கொண்டு எடுத்தப் படங்களாக இருக்கும். அந்தப் படங்களை எடுத்தவர் என் தகப்பனாரின் உறவுக்காரர் என்று மட்டும் தெரியும் ஆனால் அவர் யார் என்று இதுவரையில் எனக்குத் தெரியாது. இதைத் தவிர்த்து 1950-ஆம் 1960-ஆம் ஆண்டுகளில் எங்கள் உறவினர்கள் ஸ்டூடியோவில் பிடித்த நிழற்படங்களும் எங்கள் வீட்டு ஆல்பங்களை நிரம்பியிருக்கும். பெரும்பாலான கருப்பு வெள்ளைப் படங்கள் பல வித அளவு கொண்ட பிரிண்ட்டுகளில் போடப்பட்டிருக்கும் . ஒரு முழு ஆல்பம் அளவு முதற்கொண்டு , சுண்டு விரல் அளவு வரைக்கும் படங்...