சிறுகதை எம். பிரபு இத்தனை காலமாக நான் வணங்கி வந்த அந்த முருகப் பெருமான் மெல்ல மெல்ல என்னை கை விட்டு விட்டதாக அப்போது உணர்ந்தேன். நான் ஒரு தவறும் செய்யவில்லையே, இருந்தும் அண்மைய காலமாக ஏன் என்னை சோதனை மேல் சோதனை செய்கின்றான் அந்த முருகன். நான் அவனுக்கு என்ன குறை வைத்தேன்? வாரம் தவறாமல் அவன் சன்னிதிக்குச் சென்று, அவன் பெயரிலேயே அர்ச்சனை செய்கின்றேனே. நெய் தீபம் ஏந்தி கோவிலை வலம் வருவேனே. கோவிலுக்குப் போகும் போதெல்லாம் அர்ச்சகருக்கும் கோயில் உண்டியலிலும் என்னால் முடிந்த அளவுக்கு காணிக்கை செலுத்துவேனே. உனக்கு என்ன குறை வைத்தேன் முருகா? சொல் முருகா! சிறு வயதிலிருந்தே என் அப்பன் முருகன் என்னைக் கைவிட்டதே இல்லை. என்ன பிரச்சனை வந்தாலும், அது அப்படியே பனி போன்று மறைந்துப் போகும். எனக்கே அது மிகவும் ஆச்சர்யத்தை கொடுக்கும். எல்லாம் முருகனின் செயல் என்று நான் அறிவேன். இரண்டோ அல்லது மூன்று வயது இருக்கும் போதே எனக்கு முருகன் என்றால் அவ்வளவு பிரியம். கோவிலில் முருகன் சிலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு. “ உனக்கு முருகன் வேஷம் போட்டா அழகா இருக்கும், ...