Skip to main content

தேங்காய்ப்பூ ரொட்டி

 சிறுகதை

 



 

எம். பிரபு

 

 “மனோ, உனக்கு எத்தனை தடவை சொல்லிட்டேன் இந்த மாதிரி முட்டாள்த்தனமான காரியம்ல்லாம் செய்யாதேன்னு! உன் அண்ணனப் பாரு, அவன் எங்கேயாச்சும் உம்மாதிரி நடந்துக்கறானா?” என்னை ஏசி முடித்து ஒரு நொடியிலேயே என் இடது கண்ணத்தில் பலாரென்று இரண்டு அறைகள்  விழுந்த.

என் கண்ணம் வலித்தது, என் மனதும் அதைவிட வலித்தது. என்னைக் கேட்காமலேயே கண்களிலிருந்து கண்ணீர் வழிந்த. எவ்வளவு முயன்றும் என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. வீட்டை விட்டு பின் வாசல் வழி கொல்லைப் புறத்துக்குச் சென்றேன். சத்தம் போட்டு அழவேண்டும் போல் தோன்றியது. ஆனால் அப்படிச் செய்தால், அம்மா இன்னும் தீவிரமாகி, ரோத்தானால் என்னை அடித்துத் தீர்த்துவிடுவார். அதற்கு அறைவாங்கியதே தேவலம்.

அம்மா சொன்னதற்கு நான் பதில் ஏதும் கூறவில்லை. அம்மா எப்போதும் அப்படித்தான். நான் எது செய்தாலும் குற்றம்தான். ஆனால், அண்ணன் என்ன செய்தாலும் சரி. அது ஏன் என்று எனக்குப் புரிந்தும் புரியாத மாதிரி அழுதுக் கொண்டிருந்தேன்.

என்னைப் பற்றி எனக்குத் தெரியும் அதற்கு மேல் அம்மாவுக்கும் நன்றாகவே தெரியும்.

ஆமாம், நான் முட்டாள்தான், சோம்பேறிதான். அண்ணன் மிகவும் கெட்டிக்காரன். ஆனால் அதற்காக அம்மா என்னை நடத்தும் விதம் எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. நானும் அவர்களின் பையன்தானே? ஊரான் விட்டுப் பையன் இல்லையே?

அம்மா அண்ணனை நடத்தும் விதத்தைப் பார்த்து எனக்கு பொறாமை ஒன்றும் இல்லை. ஆனால், அதற்காக என்னை ஏசுவதும் ரோத்தானால் அடிப்பதும்தான் எனக்குப் பிடிக்கவில்லை. அண்ணனையும்தான் அம்மா அடிப்பார், ஆனால் நான் வாங்கிய அடிகளைக் காட்டிலும் குறைவுதான். எனக்குத் தெரியாமலா அண்ணன் வேறு அடிகள் வாங்கியிருப்பான்?

என் தலையில் இரட்டை சுழியாம் அதனால்தான் நான் மிகவும் ராங்கிச்  செய்கின்றேனாம். அண்ணன் தலையில் ஒரே ஒரு சுழி மட்டும்தானாம் அதான் அவன் நல்லப் பிள்ளையாக நடந்துக் கொள்கின்றானாம். இதை எங்கே போய் அம்மா கற்றுக் கொண்டு வந்தார் என்று தெரியவில்லை.

என்ன ஆச்சர்யம் என்றால், அம்மா மட்டும்தான் ஏசுவார், ரோத்தானால் அடிப்பார். அப்பா எங்களை அப்படி ஒன்றும் செய்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் அம்மாவைப் பார்த்து அப்பாவும் பயந்தார்.

அப்பா அம்மாவின் கணவர். அவர் ஏன் அம்மாவைப் பார்த்து பயப்பட வேண்டும்? அப்பா தன் அம்மாவைப் பார்த்தல்லவா பயப்பட வேண்டும்? ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? நான் பெரியவனானதும் அம்மா போன்று பயமுறுத்தும் பெண்ணை கல்யாணம் செய்துக் கொள்ளப் போவதில்லை.

அம்மா இன்று என்னை முட்டாள் என்று ஏசுவதற்கு அளவு நான் ஒன்றும் பெரிய தவறு ஒன்றும் செய்து விடவில்லை. இந்தச் சின்ன விசயதிற்கு ஏன் என்னை அறைந்தார் என்று புரியவில்லை. இதை நான் அம்மாவிடம் கேட்கவா முடியும்? பிறகு அதற்கு வேறு தனியாக அடி வாங்க வேண்டும்.

எல்லாம் எங்கள் பக்கத்து வீட்டு சாந்தியால் வந்த வினை. சாந்தி என்னுடன் ஒரே பள்ளிக்கூடத்தில், ஒரே வகுப்பில் படித்திராவிட்டால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது. இன்னும் ஒரு வருசத்தில் நான் படிவம் ஒன்று சென்று விடுவேன். அப்போது அவள் என்னுடன் ஒரே பள்ளியில் படிக்காமல் இருக்க அந்த கடவுள்தான் காப்பாத்தனும்.

அம்மா சொன்ன அந்த “முட்டாள்’ என்ற வார்த்தை இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே உள்ளது. எனக்குத் தெரிந்த வரையில், எனது மூன்றாவது வயதிலிருந்தே அம்மா என்னை “முட்டாள்” என்றே ஏசுவார். அந்தச் சொல் என்னை மிகவும் புண்படுத்தும். சின்னப்பையனான நானும் பெரியவர்கள் போன்று மனிதன்தானே. எனக்கும் விருப்பு, வெறுப்பு, சந்தோசம், பயம் எல்லாம்தானே இருக்கும்.

அந்தச் சம்பவம் வெறும் ஒரு ரொட்டித் துண்டினால்த்தான் ஆரம்பமானது. எனக்கு அது வெறும் ஒரு ரொட்டிதான். ஆனால் அம்மாவுக்கோ அது  தன்மானப் பிரச்சனையாம்.

அன்று காலை பள்ளி ஓய்வு நேரத்தில், ரமேஷ் தேங்காய்ப்பூ ரொட்டி இரண்டு கொண்டு வந்தான். நான் வீட்டிலிருந்து கொண்டு வந்த உப்புமாவை சாப்பிட்டுக் கொண்டே அவனை கொஞ்சம் எடுத்துகச் சொன்னேன். அவனுக்கு வயிறு நிறைந்து விட்டதாகவும் உப்புமா பிடிக்காது என்றான். எனக்கு மட்டும் உப்புமா சாப்பிடப் பிடிக்குமா என்ன?  அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த தேங்காய்ப்பூ ரொட்டியைப் பார்த்து என் நாக்கில் எச்சில் ஊறியது. எப்போதும் அவன் பிஸ்கட் அல்லது பிளாந்தா போட்ட ரொட்டிதான் கொண்டு வருவான். போதவில்லையென்றால் கேண்டீனில் நாசி லெமாக் வாங்கிச் சாப்பிடுவான்.

நான் அவனிடம் தேங்காய்ப்பூ ரொட்டி கொடு என்று கேட்கவில்லை. கேட்டால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும்.

“இந்தா, சாப்பிடு,”

 அவனே என்னிடம்  தேங்காய்ப் பூ ரொட்டியை பிலாஸ்திக்கோடு நீட்டினான்.

“அது உன்னோட,” நான் வேண்டாமென்று நடித்தேன்.

“நான்தான் ரெண்டு கொண்டு வந்திருக்கென்ல,” நான் கட்டாயம் அதைச் சாப்பிட வேண்டும் போல ஊக்கப்படுத்தினான்.

“அப்புறம் உனக்கு பசிக்குமே. நீயோ குண்டா இருக்க. உனக்கு ஒரு ரொட்டி பத்தாது. நான்தான் உப்புமா சாப்டேன்ல,” என்று பொய்ச் சொன்னேன். என் வயிற்றில் இன்னுமும் நிறைய இடம் இருந்தது.

கேண்டீனை சுற்றும் முற்றும் பார்த்தேன். நல்ல வேளை அண்ணன் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று விட்டான். ஆனால் எனக்குச் சாந்தியை நினைத்தால்தான் பயமாக இருந்தது. அப்போது அவளை அங்கு காணவில்லை.

“கொஞ்சம் போதும்,” என்றேன்.

“பயப்பட வேண்டா. யாரும் பார்க்கல, சாப்பிடு.

உடனடியாக ரமேஷ் நீட்டின ரொட்டியை கையில் வாங்கி ஒரு கடி கடித்தேன். அதனுள் இருக்கும் அந்தத் தேங்காய்ப் பூ,ழுப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் நிறையவே தெரிந்தன.அவசர அவசரமாய்  ரொட்டியை கடித்து வாயில் தினித்தேன். 

ஆஹா ... என்ன இனிப்பு ... என்ன ருசி!

சொர்கமே என் வாய்க்குள் புகுந்தது மாதிரி தோன்றியது. 

மீண்டும் கேண்டீனை சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்கள் மேசைக்குப் பின்னால் சாந்தி தன் தோழிகளுடன் நாசி லெமாக்கை விழுங்கிக் கொண்டிருந்தாள். என் நெஞ்சு படபடத்தது. நான் தேங்காய்ப்பூ ரொட்டியை வாயில் போட்டதை சாந்தி பார்த்தாளா இல்லையா என்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நான் ஒன்றும் கண்டுக்காது மாதிரி அப்படி இப்படி என்று விழுங்கி விட்டேன். அவளைப் பார்த்தவுடன் தேங்காய்பூ ருசியே மாயமாய் மறைந்து போனது.

ஆனால், கடவுள் என்னவோ இந்த முறையும் சாந்திப் பக்கமே சாய்ந்திருந்தார்.

அன்று சாயங்காலம் நான் தேநீரும் தாவா ரொட்டியும் சாப்பிட்டுக் கொண்டே  ஸ்கூபி டூபி டூ கார்ட்டூன் பார்க்க தொலைகாட்சி பொத்தானை திருகிக் கொண்டிருக்கும் போது சாந்தியின் அம்மா திடுதிடுப்பென எங்கள் வீட்டு வாசலில் காட்சியளித்தார். என்னைப் பார்த்தார். நான் அவரைப் பார்த்து சிரமப்பட்டு புன்னகைத்தேன். என் முகம் அந்தச் சமயத்தில் பார்க்க எப்படி இருக்கும் என்று எனக்கே தெரிந்தது. அவர் முகமோ சிடுசிடுவென இருந்தது.

சாந்தியின் அம்மா தன் சொந்த வீடு போன்று குசுனிக்குள் நுழைந்தார். தொலைகாட்சிப் பெட்டி ஒலியை சற்றுக் குறைத்தேன். அப்படியும் அவர் பேசுவது சரியாக விளங்கவில்லை. ஆனால் அம்மா என் பெயரை உச்சரித்தது நன்றாகக் கேட்டது. பத்து நிமிடங்கள் ஆகியும் உள்ளேதான் இருந்தார் சாந்தியின் அம்மா.

நான் தேநீர் குடித்த குவளையை வாஷ் பேசினில் போடும் சாக்கில் குசினிப் பக்கம் சென்றேன். அண்ணன் முதலிலிருந்து சாப்பாட்டு மேசையில் வீட்டுப் பாடம் செய்துக் கொண்டிருந்தான். சாந்தியின் அம்மாவோ தாவா பிஸ்கட்டை பாதி உடைத்து தேநீரில் தொட்டுத் தொட்டு விழுங்கிக் கொண்டிருந்தார். எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

அம்மா என்னை ஏதும் கண்டுக் கொள்ளாதவர் போன்று சாந்தியின் அம்மாவுடன் வேறு ஏதோ ஊர் கதையடித்துக் கொண்டிருந்தார். நான் விறுவிறுவென்று ஹாலுகுச் சென்று ஸ்கூபி டூபிடூ வைத் தொடர்ந்துப் பார்த்தேன், ஆனால் என் எண்ணமெல்லாம் குசினியில்தான் இருந்தது.

சாந்தியின் அம்மா சென்றவுடன், அம்மா விருட்டென்று ஹாலுக்கு வந்து டிவியை அடைத்தார்.

போச்சுடா!

அம்மாவின் முகம் சிவப்பாகியது.

“மனோ, எழுந்திரி! ஸ்கூல் கேண்டீன்ல என்னா செஞ்சே? சொல்லு!” என்னை ஏசியதோடு அல்லாமல் கண்களை அகலத் திறந்தார்.

தரையை விட்டு எழுந்தேன். அம்மாவின் கை என் அழகிய கண்ணத்தை ஓங்கி இரண்டு அறைகள்  செமத்தியாக விட்டன.

“நான் எத்தனை தடவை உன் கிட்ட சொல்லிட்டேன் அந்த குண்டு பயல் ரமேஷ் கூட சேர வேண்டாம்ன்னு! அவன் கொண்டு வந்த ரொட்டியை சாப்பிட உனக்கு வெட்கமா இல்ல? நான் குடுத்தனுப்பின உப்புமா பத்தலையா? மத்தவங்க குடுக்கிற பொருளை சாப்பிடக் கூடாதுன்னு உன்கிட்ட சொல்லிருக்கனா இல்லயா? நாளிக்கி நீ அவன் கூட கேண்டீனுக்கு போறதா கேள்விப்பட்டேன் உன் தோல உரிச்சுபுடுவேன்!”

அம்மா சொன்னது புரிந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி ரமேஷுடன் சேர விட மாட்டேன் என்கிறார் என்று கேள்வி கேட்கவும் எனக்குத் தைரியம் இல்லை. அப்பாவுக்கே அம்மாவிடம் எதுவானாலும் கேட்க பயம், பிறகு எனக்கு எங்கே தைரியம் வரும்.

எப்போது சாந்தி என் வகுப்புக்கு வந்தாளோ அன்றிலிருந்து என் நிம்மதியை இழந்தேன். ஒன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு வரை அவள் வேறு வகுப்பில் பயின்றாள். இந்த ஐந்தாம் வகுப்பில்தான் எங்கள் வகுப்புக்கு மாற்றம் கண்டு வந்தாள். சென்ற ஆண்டு கடைசி தவணைப் பரீட்சையில் அவளுக்கு குறைவான புள்ளிகள் கிடைத்திருக்கலாம். நல்லா வேணும்!

நான் வீட்டுப் பாடம் செய்யா விட்டால், டென்னீஸ் பந்தைக்  கொண்டு  ச்சோப்பிங்  விளையாடினால், நண்பர்களுடன் சினிமாப் பற்றியும்  நடிகைகளைப் பற்றியும் பேசினால் அவள் தன் அம்மாவிடம் கோள் மூட்டி-சாந்தியோட அம்மாவும் சும்மா இருக்க முடியாமல், நேராக எங்கம்மாவிடம் வந்து பற்றவைத்து விடுவார்.

சாந்தியினால் எனக்கு அறை விழும், ரோத்தான் அடி விழும், காது திறுகப்படும், வயிறு கிள்ளப்படும். பிறகு அம்மாவுக்கு உதவியாக வீட்டை கூட்டுவது, மோப் செய்வது, அப்பாவுடன் சேர்ந்து கொல்லையில் மரவள்ளி, சக்கிரவள்ளிக் கிழங்கைப் பிடுங்குவது போன்ற வேலைகலெல்லாம் தண்டனையாக கிடைக்கும். அண்ணனும் எனக்கு கூட மாட உதவி செய்வான்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க நான் ஏதாவது செய்தாக வேண்டும்.

அதாவது சாந்தி என்னைப் பார்த்து பயப்பட ஏதாவது செய்தே ஆக வேண்டும்.

 அவள் என்னைப் பற்றி கோள் மூட்டாமல் இருக்க அவளுக்கு நான் பாடம் கற்பித்தே ஆக வேண்டும்.

பள்ளியில் குண்டு ரமேஷிடம் இதற்கு ஐடியா கேட்டேன். அவனும் ஒரு ஐடியா கொடுத்தான். கேட்க அந்த ஐடியா நன்றாகத்தான் இருந்தது போன்று இருந்தது. ஆனால், அதனால் சாந்தி தன் வாயை மூடுவாளா அல்லது இன்னும் பயங்கரமாக நடந்துக் கொல்வாளா என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு பயமாகவும் இருந்தது. எதற்கும் முயற்சி செய்து பார்ப்போம்.

ரமேஷ் கொடுத்த ஐடியாவை உபயோகித்ததால், நான் சந்தேகப்பட்டது மாதிரி நிஜத்தில் அப்படியே நடந்தது. 

என்னை ஏசாத அப்பா-என்னை அடிக்காத அப்பா, அன்று மிகவும் ஆத்திரமடைந்தார். என் மண்டையில் கொட்டோ கொட்டோவென்று கொட்டினார். நான் அதிர்ந்தே போனேன். அம்மாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். ரோத்தானால் வெலுவெலுவென வெலுத்தார். வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு அழுதுக் கொண்டே எங்கள் கம்பத்தைச் சுற்றி வலம் வந்தேன். அம்மாவும் ஓடி ஓடி களைத்துப் போனார்.

கம்பத்து மக்கள் எல்லோரும் என்னை வேடிக்கைப் பார்த்தனர். எனக்கு மிகவும் வெட்கமாகிப் போனது. பள்ளிக்கூடத்தில்  நானும் ரமேஷும் கட்டொழுங்கு ஆசியரிடமும் பெரிய வாத்தியாரிடமும் அடி வாங்கியதோடு அல்லாமல், இப்போது வீட்டில் வேறு அடிவாங்க வேண்டியுள்ளது.

தூரத்திலிருந்து அந்தத் தாங்க முடியாத வலியிலும் சாந்தியும் அவளது உடன்பிறப்புக்களும் என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பதைக் கண்டேன். நான் வலியால் துடித்து அழுகின்றேன்-அவர்கள் சிரிக்கின்றனர்.  என் கை கால்களில் வரி வரியாக கோடுகள் கொடூரமாக காட்சியளித்தன.

எல்லாம் ரமேஷால் வந்த வினை. அவன் வீட்டிலும் இப்படி அடி வாங்கியிருந்தால்த்தான் எனக்கு சந்தோசமும் நிம்மதியும்.

இந்தச் சம்பவம் நடந்து 45 வருடங்கள் ஆகிவிட்டன. எனது ஒரு பேரப்பிள்ளையும் நான் படித்த அதே பள்ளியில்தான் படிக்கின்றாள். என் இரு பையன்களும் அங்குதான் பயின்றனர். நானும் அங்குதான் ஆசிரியராக ஐந்து வருடங்கள் பணிபுரிந்தேன். அண்ணன் கல்வி இலாக்காவில் உயர் அதிகாரியாக பணிபுரிகின்றார்.

நானும் சாந்தியும் பழைய சம்பவங்களைப் பற்றி அவ்வப்போது நினைத்துப் பார்த்து, பேசி, சிரித்து மகிழ்ந்து போவோம். அதுவே எங்களது பையன்களுக்கும் பேரப் பிள்ளைக்கும் கேளிக்கை சம்பவமாகவும், சரித்திரம் வாய்ந்த நிகழ்வாகவும் போற்றப்பட்டன. 

அம்மாவும் அப்பாவும் கூட பழைய சம்பவங்களைப் பற்றிப் பேசி சிரித்துக் கொள்வார்கள்.

யார் நினைத்தது, பழிவாங்குவதற்காக சாந்தி கண்ணத்தில் நான் கொடுத்த அந்தச் சிறிய முத்தம், கிட்டத்திட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு உண்மையான காதலை மலரச் செய்யுமென்று.

 

முற்றும்

Comments

Popular posts from this blog

சிறுமி நீய்ஹா மதனின் சாதனைகள்

  அனுபவம்      எம்.   பிரபு   நான் தொடக்கப்பள்ளியில் படித்த காலத்திலிருந்தே மணிமேகலை நாயர் அவர்களின் குடும்பத்தை அறிந்திருந்தேன். மணிமேகலையும் அப்போது சிறுமியாக இருந்தார்.    என் தந்தை திரு. எஸ். மாதவன் அவர்கள்   National Union of Plantation Workers ( தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்) அமைப்பில் பொருளாளராகப் பணியாற்றினார். ஒவ்வொரு மாதமும்  அவர் மற்றும் ஓட்டுநர்   திரு. கோவிந்தன் அவர்களுடன் பஹாங்கில் உள்ள பல தோட்டங்களுக்கு Peugeot   404 காரில் சென்று தொழிலாளர்களிடமிருந்து சங்க ச்   சந்தாவை வசூலி ப்பதோடு  தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிவார்கள். அந்த வயதில் அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த மாதச்   சந்தா,  தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும்   நலனுக்காகவும்  மேற்கொள்ளப்பட்டதாக அறிவேன். பொதுவாக தோட்ட பிரதிநிதிகள் மூலம் மாதச் சந்தா சேகரிக்கப்பட்டன. பள்ளி விடுமுறைகளில் நான் மற்றும் என் சகோதரர் ,  தந்தையுடன் அந்தப் பயணங்களின் போது...

PENGECUT

  Cerpen    Oleh: M. Mahendran       “Kita perlu menolong mereka. Mereka dalam kesusahan. Tanpa ditolong, mereka tidak dapat makan.” “Kita tinggal jauh. Biarlah mereka yang tinggal berdekatan menolong.” “Jangan peduli tentang negara yang berdekatan. Mereka di seberang lautan ialah saudara kita. Kita harus menolong mereka.” “Tanpa pertolongan kita, adakah mereka akan mati kebuluran?” “Ya. Jadi hulurkanlah bantuan.” “Bagaimana cara membantu mereka?” “Kita perlu merentasi lautan.” “Tidak bolehkah dengan mengirim wang sahaja?” “Itu tidak cukup. Kita perlu pergi sendiri untuk menghulurkan makanan, pakaian dan bantuan kesihatan. Ini perlu dilakukan sendiri. Barulah kita akan rasa puas dan mereka pun akan gembira.” “Tidak bahayakah merentas lautan?” “Demi menolong saudara kita di situ, apa pun tidak bahaya.” “Jadi, kamu akan ke sana merentas lautan dengan kapal walaupun kamu tidak pernah pergi sebelum ini?” “Kamu boleh ikut kami. Dengan berbuat demikian, kamu akan...

ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ...

  சிறுகதை   எம்.   பிரபு                                       தெரிந்தோ தெரியாமலோ அவன் இந்த க்  கொலையை ச்  செய்து விட்டான். பிணம் நிச்சயம் எழப் போவது இல்லை. நடந்து முடிந்த சம்பவத்தை அவனால் மாற்றி அமைக்க இயலாது. நடந்து விட்டது. அதுதான் உண்மை. அழுதும் பயனில்லை. இந்த ச்   சூழ்நிலையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். காலம் கடந்து விட்டது. இப்போது அவன் செய்ய வேண்டியது ஒன்றுதான். இந்த பி ண த்தை அப்புறப் படுத்துவது. இனியும் தாமதப் படுத்த இயலாது. பிறகு சூழ்நிலை அவன் பக்கம் சார்ந்து இருக்காது . இது அவனுக்கு இரண்டாவது முறை . இதற்கு முன்பு செய்த போது அந்த வீட்டின் பின்னால் பரந்த நிலம் இருந்தது. அங்கு அதை புதைத்தாகி விட்டது. இப்போது நட த்தப்பட்ட  கொலை, அவனுக்கு   கடினமானது. இந்த கொலை தான்  அவன் முன்பு செய்த கொலைகளிலிருந்து மாறுபட்டது.   சங்கடமானதும்  கூட. இந்த வீடமைப்பு ப...