சிறுகதை
எம். பிரபு
தூரத்திலிருந்து பார்த்தபோது, ஒரு புல்டோசர் மெதுவாக நகர்ந்துக் கொண்டிருக்க, மக்கள் கூட்டம் அந்த மலைப் பகுதியை சூழ்ந்துக் கொண்டனர். ஒரே சத்தமும் அமர்க்களமுமாக இருந்தது. கீழிருந்த எனக்கே என் செவிட்டுக் காதுகளுக்கு நன்றாகக் கேட்டது. நானும் இந்தத் தள்ளாத வயதில் கம்பை ஊன்றிக்கொண்டு அந்த மலைப் பகுதிக்கு கால் வலியோடு நடந்துச் சென்றேன்.
பலகையினாலும் செங்கற்களினாலும் செதுக்கப்பட்ட கட்டிடம் பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தது. இந்தப் பழைய கட்டிடம் சற்று நேரத்திற்கெல்லாம் இடிக்கப்பட்டுவிடும். ஆம், இடிக்கப்பட்டுவிடும்.
இங்கு இந்த மலைப் பகுதியில் கட்டிடம் கட்டப்பட்ட இடம் உண்மையில் எங்கள் கம்பத்து மக்களுக்குச் சொந்தமானது அல்ல என்று கட்டிடத்தை இடிக்க வந்தவர்கள் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். எங்களது கம்பத்து மக்களும் விடுவதாக இல்லை. ஆளாளுக்கு கையில் கிடைத்ததை அவர்கள் மீது வீசினர். இடிக்க வந்தவர்களும் அதையே செய்தனர். இடை இடையே கெட்ட கெட்ட வார்த்தைகள் வேறு. நல்ல வேளை, போலிஸ் அனைவரையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பல ஆண்டுகளாக எங்களுக்கு நோட்டீஸுக்கு மேல் நோட்டீஸ் வந்துக் கொண்டே இருந்தன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தின் மலையை நாங்கள் சொந்தம் கொண்டாட உரிமை இல்லையாம். இந்த மலை வேறு யாருக்கோ சொந்தமாகி விட்டதாம். நாங்கள் திருடர்களாம்.
கட்டிடங்கள் எங்கேதான் இல்லை.
இங்கே கட்டிடங்கள் உள்ளன; அங்கே கட்டிடங்கள் உள்ளன. மலையின் உச்சியில் கட்டிடங்கள் உள்ளன; கீழேயும் கட்டிடங்கள் உள்ளன. எல்லா இடங்களிலும் கட்டிடங்களைக் காணலாம்.
காட்டில்.
மேட்டில்.
குடியிருப்புப் பகுதியில்.
கட்டிடம், கட்டிடம், கட்டிடம்.
எங்கும் கட்டிடங்கள்.
சிறியதோ பெரியதோ, எல்லாமே கட்டிடம்தான். அடித்தளத்திலிருந்து எழுப்பி கட்டப்படுவது ஒரு கட்டிடமாகும். மேலும், எல்லா கட்டிடங்களும் வெறும் கட்டிடங்கள் மட்டுமல்ல. அவை அதைவிட மேலானவை.
மனிதர்கள் பிறப்பது போன்று; அதாவது பிறவி எடுக்காத நிலையிலிருந்து பிறவி எடுக்கும் நிலைக்கு உருவாகும் மனிதனைப் போன்று, ஒரு கட்டிடத்தையும் ஒன்றுமில்லாததிலிருந்து இருக்கும் அளவிற்கு உருவாக்கிக் கட்ட முடியும். மனிதனை கடவுள் உருவாக்குகின்றான், கடவுள் படைத்த அதே மனிதன் கட்டிடத்தை உருவாக்குகின்றான்.
ஆச்சர்யம்தானே?
கட்டப்பட்ட கட்டிடம், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் என்றென்றும் நிலைத்திருக்கும்; மனிதன் மறைந்து விடுவான்.
பாழடைந்த கட்டிடங்கள் தகர்க்கப்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் அவற்றை புதுப்பித்து பாதுகாக்கலாம். அவ்வாறு செய்யப்படும்போது, எதிர்காலத்தில் வரவிருக்கும் சந்ததியினரும் அனைத்துக் கட்டிடங்களையும் முடிந்தவரை சிறப்பாகப் பாதுகாப்பார்கள் என நம்பலாம்; அப்போதுதான் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீண்டும் இன்னொரு நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கும். கட்டிடங்களை உருவாக்குவதன் மூலம் மனிதர்கள் பயனடைகிறார்கள். யாவருக்கும் அவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த சரித்திரம் புரியும்.
கட்டிடம், கட்டிடம், கட்டிடம்.
எங்கும் கட்டிடங்கள்.
மனிதர்கள், கட்டிடங்களை மிகவும் நேசிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு நாளும் வாழ்வதற்கு கட்டிடங்கள் தேவைப்படுகின்றன. கட்டிடங்கள் இல்லாமல் மனிதர்களால் நீண்ட காலம் வாழ முடியாது. அவர்களுக்குக் கட்டிடங்களே எல்லாம். ஆம், அவர்களுக்கு எல்லாமே கட்டிடங்கள்தான். மனிதன் பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளமே கட்டிடங்கள்தான்.
சில கட்டிடங்கள் மரங்களைக் கொண்டு கட்டப்படுகின்றன. சில பலகைகளைக் கொண்டு கட்டப்படுகின்றன. செங்கற்களைக் கொண்டும் கட்டப்படுகின்றன. உண்மையில், சிலர் மரத்தையே ஒரு கட்டிடமாகக் கருதுகின்றனர். காலத்திற்கேற்ப அதைச் செம்மைப்படுத்தி, ஒரு பெரிய கட்டிடமாக மாற செங்கற்கள் தேவைப்படும்.
எல்லாக் கட்டிடங்களும் வெறுமனே கட்டுவதற்காக மட்டும் கட்டப்படுவதில்லை. ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு கதை இருக்கும். ஒவ்வொரு மரத்துண்டுக்கும் ஒவ்வொரு செங்கல்லுக்கும் அதன் சொந்தக் கதை உண்டு; ஒரு கட்டிடம் ஏன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டப்பட்டது என்பதற்கான வரலாறு உண்டு. அது வெறுமனே கட்டுவதற்காக மட்டும் கட்டப்படுவதில்லை. கட்டிடங்களாகக் கட்டப்பட வேண்டிய தேவையின் காரணமாகவே கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
கட்டிடம், கட்டிடம், கட்டிடம்.
எங்கும் கட்டிடங்கள்.
மனிதர்களால் கட்டப்பட்ட ஒவ்வொரு கட்டிடத்திற்கும் பின்னால் ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதை வரலாறாக மாறிவிட்டது, மேலும் இப்பூவுலகின் அனைத்து குடிமக்களும் அதனை அறிந்துகொள்ள வேண்டும். நமது முன்னோர்களின் கடின உழைப்பு மற்றும் பிரயத்தனத்தின் கதைகளை அறிவதன் மூலம், அவர்கள் மீது நமக்கு ஒரு மரியாதையுணர்வு உருவாகும்.
நம்மை விட்டுப் பிரிந்தவர்கள் என்றென்றும் போற்றப்பட வேண்டும், ஏனெனில் அவர்கள் இல்லாமல் இந்தக் கட்டிடங்கள் இருந்திருக்காது. அவர்களின் நினைவாக கட்டிடம் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாததாய் ஆகிவிடுகின்றது.
அதுபோலவே, ஒவ்வொரு கட்டிடத்திற்கும் மரியாதை அளிக்கப்படுகிறது. அது எவ்வளவு சிறியதாகவோ, பெரியதாகவோ, அழகற்றதாகவோ இருந்தாலும் சரி. ஒரு கட்டிடம் என்பது கட்டிடம்தான். அது மதிக்கப்பட வேண்டும், முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் புனரமைக்கப்பட வேண்டும். கட்டிடங்கள் மனிதர்களுக்குப் புகலிடமாக விளங்குகின்றன.
மக்கள் எங்குச் சென்றாலும், அங்கே கட்டிடங்கள் இருக்கும். அங்கே ஒரு கட்டிடம், இங்கே ஒரு கட்டிடம், மலை மீது கட்டிடங்கள் உள்ளன, கீழேயும் கட்டிடங்கள் உள்ளன.
கட்டிடம், கட்டிடம், கட்டிடம்.
எங்கும் கட்டிடங்கள்.
மனிதர்களால் என்றென்றும் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார முடியாது. அவர்கள் நகர்வதை விரும்புகிறார்கள். தங்கள் கால்களையும் கைகளையும் அசைப்பது அவர்களுக்குப் பசியை உண்டாக்குகிறது. அவர்களின் வயிறுகளை நிரப்புவதற்கு உணவு தேவை.
வயிற்றை மட்டும் நிரப்பினால் போதுமா? அகமும், புறமும் முறையாக நிரப்பப்பட வேண்டும். முழுமையான நிரப்புதல் இல்லாமல், இந்த உலகில் மனிதர்கள் இல்லை. மனிதர்கள் இல்லாமல், இந்தக் கட்டிடங்கள் இல்லை.
கட்டிடம், கட்டிடம், கட்டிடம்.
எங்கும் கட்டிடங்கள்.
ஒவ்வொரு தாயும் இந்தப் பூமியில் பல புதிய குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றாள். குழந்தைகளுக்கும் உணவும் உடையும் வழங்கப்பட வேண்டும். இந்த இரண்டு விஷயங்கள் இல்லாமல், மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியற்றவர்கள். உணவையும் உடையையும் பெறுவதற்காக, மனிதர்களால் ஓரிடத்தில் சும்மா இருக்க முடியாது. தங்கள் குடும்பங்களை ஆதரித்து வாழ்வாதாரம் ஈட்டுவதற்காக, மனிதர்கள் தொலைதூரங்களுக்கு இடம்பெயரவும் வேண்டியுள்ளது.
பிறந்த இடத்தில் எதுவும் வாக்குறுதியளிக்கப்படுவதில்லை. மற்றவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வெற்று வாக்குறுதிகளை அளித்து, அவர்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இழுத்துச் செல்வது சகஜம். இன்றும் அது தொடர்கின்றது.
மிகுந்த நம்பிக்கையுடன் அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் குடிபெயர்கிறார்கள். ஆனால், அவர்களின் கனவு, கனவாகவே மறைந்து போனது. எதுவும் நினைத்ததைப் போன்று அமையவில்லை.
இடம்பெயர்ந்தவர்கள் காடுகளை அழித்து, சாலைகள் அமைத்து, மரச்செடிகளை நட வேண்டியிருந்தது. அவர்கள் கடுமையாக உழைத்து, வியர்வை சிந்தி, இரத்தமும் சிந்தினர். தங்களையும், பணியிடத்திலும் வீட்டிலும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு மறைவிடம் தேவைப்பட்டது. எனவே, அவர்கள் கட்டிடங்களை உருவாக்கினர்.
கட்டிடம் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், அது அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கின. அவர்களின் மனது கட்டிடங்களால் சிறிதளவாவது நிம்மதி அடைந்தது.
கட்டிடம், கட்டிடம், கட்டிடம்.
எங்கும் கட்டிடங்கள்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்தவர்களின் வரலாறு இது. அவர்களுக்கு முன்பு, மன்னர்கள் பேரரசுகளை உருவாக்கி, பல்வேறு வகையான பெரிய கட்டிடங்களைக் கட்டியிருந்தனர். அவர்கள் பிரம்மாண்டமான மற்றும் அற்புதமான கட்டிடங்களைக் கட்டியதோடு, தங்கள் நம்பிக்கைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தினர். அவற்றில் சில முற்றிலுமாக அழிக்கப்பட்டன, சில பாதியிலேயே நின்றுவிட்டன.
கட்டிடம், கட்டிடம், கட்டிடம்.
எங்கும் கட்டிடங்கள்.
அங்கே, இங்கே, மலையின் மேல் அல்லது மலையின் அடிவாரத்திலும் கட்டிடங்கள் என எங்கு பார்த்தாலும் ஒரு கட்டிடம் இருந்தே ஆக வேண்டும். கட்டிடங்கள் வெறுமனே கட்டிடங்களாக இருப்பதற்காக மட்டும் கட்டப்படுவதில்லை; மாறாக, ஓர் இடத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் மனிதர்களுக்குப் பாதுகாப்பாகவும் அவை கட்டப்படுகின்றன.
ஓர் இடத்தில் நெடுங்காலமாக எழுப்பப்பட்ட ஒரு கட்டிடத்தை யாராவது தன்னிச்சையாக இடிக்க வரும்போது, அவர்கள் உண்மையில் அந்தக் கட்டிடத்தை மட்டும் இடிப்பதில்லை; மாறாக, அது அடைக்கலம் தரும் இடத்தையும் அதன் வரலாற்றையும் இடிக்கிறார்கள். ஆம், அதன் வரலாற்றையும் தான்.
எந்தவொரு கட்டிடத்தையும் இடிப்பது நிச்சயமாக யாருக்கும் கோபத்தை ஏற்படுத்தும்.
இன்று நிலைமை அப்படித்தான் இருந்தது. மழை மற்றும் வெயிலின் போதும்; வறட்சி மற்றும் வெள்ளத்தின் போதும்; திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு விருந்துகளின் போதும், சுற்றியுள்ள மக்களுக்கு நீண்ட காலமாக அடைக்கலம் அளித்து வந்த ஒரு பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை இடிப்பதற்காக, ஒரு புல்டோசருடன் மக்கள் கூட்டமாக மலை உச்சிக்கு வந்தனர். அதைத் தகர்ப்பதற்காக நாங்களும் வந்தோம்.
ஆனால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எவ்வளவு கூச்சல் போட்டு மறித்தும், சண்டைபோட்டும் யாரும் மசியவில்லை. நடப்பது நடந்தேதான் ஆக வேண்டும். எங்களால் நடப்பதை தடுக்க இயலவில்லை. அப்படியே விட்டுவிட்டோம். நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள், மிதிப்பவர்கள் அல்ல. எங்களில் பலரும் அழுதார்கள். என் இதயம் நொறுங்கிப் போனது, ஆனால் நான் மற்றவர்களைப் போல அழவில்லை.
பழைய கட்டிடம் இடிக்கப்படட்டும். அந்தக் கட்டிடத்தின் தோற்றமும், அதன் மூலம் நாம் பெற்ற நன்மைகளும் எங்கள் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இன்னொரு நாள் மீண்டும் அங்கே மற்றொரு புதிய கட்டிடம் கட்டப்படும். அதனால் பயனடைவவர்கள் வேறொரு கூட்டமாக இருக்கக் கூடும். பாவம் பிழைத்துவிட்டுப் போகட்டும்.
மலை மீது கட்டிடத்தை எழுப்பத் தெரிந்த எங்களுக்கு, அதன் மலையை வாங்க சக்தியில்லாதவர்களாகிவிட்டோம்.
எங்கள் கண் முன்னே மலை மீதிருந்த எங்களது கட்டிடம் இடித்து தகர்க்கப்பட்டது. ஒவ்வொரு இடியும் எங்களது மனதையே இடித்து நொறுக்கியது.
கட்டிடம், கட்டிடம், கட்டிடம்.
எங்கும் கட்டிடங்கள்.
முற்றும்


Comments
Post a Comment