சிறுகதை எம். பிரபு சுட்டெரிக்கும் வெய்யில் என் தலைக்கு மேல். கடந்த ஒரு மாத காலமாக இப்படித்தான் இருக்கிறது. அதுவும் இந்த வெப்பம் ஜூன் மாதம் வரை தொடருமாம். தொடரட்டும்… தொடரட்டும். மனிதன்தான் இதற்கு முழுக் காரணமாக இருக்க முடியும். பணம் சம்பாதிப்பதற்காக காட்டையும் மேட்டையும் அழித்தால் , கடவுள் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பார் ? இந்தக் கடுமையான வெய்யில்தான் அதன் பிரதிபலிப்பு. கடவுள் அவ்வப்போது இயற்கைச் சீற்றத்தை உருவாக்கி மனிதனுக்கு பாடம் புகட்டுவார். இருந்தும் மனிதன் திருந்தியதாகத் தெரியவில்லை. ஒரு காலத்தில் சாதாரண வெய்யிலுக்கே பெண்கள் குடைப் பிடித்தனர். சற்று வயதான ஆண்களும் பிடித்தனர். இப்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது. குடைக்கு அவ்வளவு பயமா ? இல்லை சோம்பேறித்தனமா ? மியான்மார் பையன்கள் எல்லாம் இங்கே சாதாரணமாக வெய்யிலில் குடைப் பிடித்துப் போகின்றனர். நம் நாட்டு மக்களுக்கு குடைப் பிடிப்பதில் கௌரவக் குறைச்சல் போல. மழைக்கு உதவும் குடை , வெய்யிலுக்கும் உதவும் என்று மறந்து விட்டனர். இப்படி மனதில் புலம்பிக் கொண்டிருக்கும் நானும் அந்த வகைதானோ ? இதில் என்ன சந்தேகம்! ஆமாம் , இப்போது இந...