Skip to main content

வெய்யில்

 சிறுகதை




எம். பிரபு

சுட்டெரிக்கும் வெய்யில் என் தலைக்கு மேல். கடந்த ஒரு மாத காலமாக இப்படித்தான் இருக்கிறது. அதுவும் இந்த வெப்பம் ஜூன் மாதம் வரை தொடருமாம். தொடரட்டும்… தொடரட்டும்.

மனிதன்தான் இதற்கு முழுக் காரணமாக இருக்க முடியும். பணம் சம்பாதிப்பதற்காக காட்டையும் மேட்டையும் அழித்தால், கடவுள் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பார்? இந்தக் கடுமையான வெய்யில்தான் அதன் பிரதிபலிப்பு. கடவுள் அவ்வப்போது இயற்கைச் சீற்றத்தை உருவாக்கி மனிதனுக்கு பாடம் புகட்டுவார். இருந்தும் மனிதன் திருந்தியதாகத் தெரியவில்லை.

ஒரு காலத்தில் சாதாரண வெய்யிலுக்கே பெண்கள் குடைப் பிடித்தனர். சற்று வயதான ஆண்களும் பிடித்தனர். இப்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது. குடைக்கு அவ்வளவு பயமா? இல்லை சோம்பேறித்தனமா? மியான்மார் பையன்கள் எல்லாம் இங்கே சாதாரணமாக வெய்யிலில் குடைப் பிடித்துப் போகின்றனர். நம் நாட்டு மக்களுக்கு குடைப் பிடிப்பதில் கௌரவக் குறைச்சல் போல.

மழைக்கு உதவும் குடை, வெய்யிலுக்கும் உதவும் என்று மறந்து விட்டனர்.

இப்படி மனதில் புலம்பிக் கொண்டிருக்கும் நானும் அந்த வகைதானோ? இதில் என்ன சந்தேகம்!

ஆமாம், இப்போது இந்த மொட்டை வெய்யிலில் நான் எங்கே கிளம்பிக் கொண்டிருக்கிறேன்? கண்டதையும் யோசித்துக் கொண்டிருந்து வந்த விஷயத்தை மறந்து விட்டேன். வயது ஏற ஏற இந்த ஞாபக மறதி படாதபாடு படுத்துகிறது. காலையில் பசியாறியது மதியம் ஞாபகத்தில் இல்லை; பிறகு மற்றவை எங்கே ஞாபகத்தில் வரும்? ஆனால் அந்தக் காலத்தில் நடந்த சம்பவங்கள் அப்படியே பசுமையாக நினைவில் உள்ளன. அதுதான் அதிசயம்.

அடுக்கு மாடி வீட்டுப் படிகளில் இருந்து இறங்கிவிட்டேன். என்னிடம் கார் இல்லை; மோட்டார் சைக்கிளும் இல்லை. தேவை என்று கருதவில்லை. அதான் இருக்கிறதே போது போக்குவரத்து.  

ஆம், ஞாபகத்திற்கு வந்துவிட்டது. சிறிது நேரத்தில் என் நண்பன் ராஜா வருவான். அவன் நல்ல வசதிப்பட்டவன். ‘ரேஞ்ச் ரோவர்’ கார் வைத்திருக்கிறான். மேலும் பல கார்கள் அவனிடம் உள்ளன. அவனுக்குத் அவை தேவை. தேவைகள் எல்லாம் நாமகவே உருவாக்கிக் கொள்வதுதானே. 

ராஜா மிகவும் நல்லவன். சொந்த அச்சகம் வைத்திருக்கிறான். மினி மார்க்கெட்டுகள் பல வைத்திருக்கிறான். மூன்று பெரிய வீடுகள், தோட்டம், தொழில் எல்லாம் அவனுக்கு உண்டு. மூன்று பிள்ளைகள். எனக்கு அவன் மீது சில சமயம் பொறாமை ஏற்படும். என்ன செய்வது? அவன் என் நண்பன் ஆயிற்றே. புதுமுக வகுப்பு முதல் மூன்றாம் படிவம் வரை ஒன்றாகத்தான் படித்தோம்.

ஆனால் என் நிலைமை வேறு, அவன் நிலைமை வேறு. முப்பது வயதில் ஆரம்பித்த தொழில், இப்போது பணக்காரனாகி விட்டான். நான் இன்னமும் அப்படியேதான் ... எந்தவித மாற்றமும் இல்லை. 

எனக்கு மர ஆலையில் வேலை வாங்கிக் கொடுத்ததும் அவன்தான். என் திருமணத்திற்கு ஒத்தாசையாக இருந்ததும் அவன்தான்.

ஆனால், என் மனைவி என்னை விவாகரத்து செய்து விட்டாள். நான் குடிக்கிறேனாம். சரியாக வேலைக்குப் போவதில்லையாம். அவள் செய்ததும் சரிதான். அதை இப்போதுதான் உணர்கிறேன். என் இரண்டு பையன்கள் அவளுடனே சென்று விட்டனர். யாரும் என்னை கண்டுக் கொள்வதே இல்லை.

எனக்கு குடி மிகவும் தேவையாகப் பட்டது. எனக்குப் பிடித்தது, என் மனைவிக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் எல்லாவற்றையும் பிடிக்காது. 

நல்ல வேளை இந்த வீட்டை என் தகப்பனார் அப்போதே வாங்கிப் போட்டுவிட்டார். இல்லாவிட்டால் தங்குவதற்குக் கூட எனக்கு வீடு இல்லாமல் போயிருக்கும்.

இங்கே அக்கம் பக்கம் உள்ளவர்கள் யாராவது இரண்டு மூன்று பேர்தான் என்னிடம் பேசுவர். அவர்களுக்கு என்னுடன் பழகப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்தாலும், அவர்களுக்குப் பிடிக்கவில்லை. 

கைப்பேசியில் உள்ள கடிகாரத்தைப் பார்த்தேன். மணி சரியாக ஒன்று. இந்த சுட்டெரிக்கும் வெய்யிலிலும் நண்பன் எனக்காக வருகிறானே! அதுவே நான் செய்த பாக்கியம் அல்லவா? அவன் எப்போதும் சொன்ன நேரத்திற்கே வந்துவிடுவான். மதியம் 1.15 மணிக்குள் கீழே வந்து விடுவேன் என்று தகவல் அனுப்பியிருந்தான்.

எனக்கு இந்த கைப்பேசியை சரியாகப் பயன்படுத்தத் தெரியாது. அதுவும் இப்போது உள்ள கைப்பேசியில் எதைத் தட்டுவது, எதைத் தட்டக் கூடாது என்பதும் தெரியாது. மூன்றாம் படிவம் வரை படித்தும் எனக்கு தமிழோ, மலாயோ, ஆங்கிலமோ சரளமாகப் படிக்க வராது. எழுத்துக் கூட்டித்தான் படிப்பேன். புரிகிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.

என் நண்பன் ராஜா அப்படியில்லை. ஐந்தாம் படிவம் வரை படித்தவன். அவனுக்கு மூன்று மொழிகளிலும் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரியும். படிக்காத முட்டாளான எனக்கு நண்பனாக அவன் இருப்பதே அதிசயம். இந்த கைப்பேசியை வாங்கிக் கொடுத்ததே அவன்தான்.

மணி 1.10. தூரத்தில் இருந்து வெள்ளை நிற ‘ரேஞ்ச் ரோவர்’ வருவது தெரிந்தது. என் மனம் மிகவும் குதூகலமடைந்தது.

***

வாரம் தோறும் சனிக்கிழமை என்றால் சிவாவுடன் மதிய உணவு அருந்துவது வழக்கம். அவனைப் பார்க்கத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். என் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வாரம் தவறாமல் அவனைச் சந்திக்கிறேன் என்றால், நான் அவன் மீது அதிக பாசம் வைத்திருக்கிறேன் என்று அர்த்தமில்லை. அது காலத்தின் கட்டாயம்.

ஆமாம், அது அப்படித்தான். என் தகுதிக்கேற்ப நிறைய நண்பர்கள் எனக்குண்டு. அவர்களுடன் எப்போது வேண்டுமானாலும் சந்திப்பேன். அவர்களும் என் வீட்டிற்கு வருவது வழக்கம்.

ஆனால் ஒரு தடவை கூட சிவாவை என் வீட்டிற்கு அழைத்ததில்லை. அவனுக்கும் அது பெரிதாகத் தோன்றியிருக்காது. அவனுடன் நட்பு பாராட்டுவது எனக்கு சிரமமாகவே உள்ளது. என்ன செய்வது? சிறு வயது பழக்கத்தினால்தான் இன்னமும் அவனுடன் பழகி வருகிறேன். அவனுக்கு நிறைய உதவிகளும் செய்துள்ளேன்.

என் பணக்கார நண்பர்களோடு பழகுவது போல சிவாவுடன் பழகுகிறேனா என்றால், அது கேள்விக்குறிதான். அவனுடன் இந்த அளவுக்கு பழகுவதே பெரிய விஷயம். அவனுடன் ஏன் நட்புப் பாராட்டிக் கொண்டிருக்கின்றேன் என்று எனக்கே புரியவில்லை. 

வெளியில் வெய்யில் கொளுத்துகிறது. பேசாமல் இன்று சந்திப்பு வேண்டாம் என்று சொல்லிவிடலாமா? ஆனால் காலையிலேயே சந்திப்போம் என்று பழக்கத் தோசத்தில் கூறிவிட்டேன். இப்போது மறுப்பது சிரமம். அவன் பசியுடன் காத்திருக்கலாம். நான் அவ்வளவு கொடுமையானவன் அல்ல.

இனி அவனுடனான சந்திப்பை மெதுவாகக் குறைத்துக் கொள்வதே நல்லது. என் மனைவி முன்பிருந்தே இதைச் சொல்லி வந்தாள். நான்தான் “பிறகு பார்க்கலாம்” என்று இத்தனை ஆண்டுகள் கழித்துவிட்டேன். இனிமேல் அப்படி நடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த சுட்டெரிக்கும் வெய்யிலிலும் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அவனது பழைய அடுக்கு மாடி வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறேன்.

அதோ, இந்த வெய்யிலிலும் எனக்காக காத்திருக்கிறான்.

***

நண்பன் வந்துவிட்டான். காரின் கதவைத் திறந்து ஏறினேன், குளிர்ச்சியாக இருந்தது. முன் இருக்கையில் அமர்ந்தேன். என் ஆருயிர் நண்பனைப் பார்த்து புன்னகைத்தேன். அவனும் புன்னகைத்தான்.

***

அவன் என் பக்கத்தில் அமர்ந்தான். எப்போதும் போல அவன் மீது மது கலந்த வியர்வை வாடை வீசியது. சிவாவிற்கு காலையில் குளிக்கும் பழக்கம் இல்லை. இத்தனை வயதாகியும் அவன் தன்னை மாற்றிக் கொள்ளாதது ஆச்சரியமாக உள்ளது. என்ன செய்வது? நான் பொறுத்துக் கொள்ள வேண்டியது தான். இன்று இதுவே கடைசி சந்திப்பாக இருக்கட்டும்.

***

ஆஹா… என்ன நறுமணம்! காரின் வாசனையும் ராஜா பூசிய வாசனைத் திரவியத்தின் மணமும் சேர்ந்து என்னை வேறு உலகிற்கு கொண்டு சென்றது. நமக்குத்தான் இதேல்லாம் ஒத்து வராதே.

***

இன்னிக்கு எந்தக் கடைக்குப் போலாம், சிவா?” என்று கேட்டேன்.

உன் விருப்பம்,” என்றான்.

இந்தியர் கடைக்குப் போவோமா? இல்லை சீனர் கடைக்குப் போவோமா?”

இந்தியர் கடைக்கே போவோம்,” என்றான்.
எனக்குத் தெரியும், சிவாவிற்கு இந்தியர் கடைக்குச் செல்லவே விருப்பம்.

***

இன்னிக்கு ‘இந்தியா கேட்ஸ்க்கு’ போவோமா?” என்று கேட்டார் ராஜா.

அங்கே ரொம்ப விலையா இருக்கும்.”

வெளியில் விலையைப் பற்றி பயந்தவர் போல காட்டிக் கொண்டாலும், மனதிற்குள் படு குஷியடைந்தார் சிவா.

நீ ஏன் விலையைப் பற்றி யோசிக்கிறே? எது வேண்டுமானாலும் கேட்டு வாங்கிச் சாப்பிடு,” என்று கூறியவாறே கடைக்குள் வந்ததும் ‘மெனு கார்டை’ எடுத்து சிவாவிடம் நீட்டினார்.

சிவா மெனு கார்டைப் பார்த்து அசந்து போனார்.

நீயே ஆர்டர் சொல்லு, ராஜா. இவ்வளவு நிறையா ஐட்டங்கள் இருக்கு. என்னத்தை ஆர்டர் செய்யறதுன்னே தெரியல.”

அதான் படம்லாம் போட்டிருக்குல எதையாவது பார்த்து ஆர்டர் செய்ய வேண்டியதுதானே?”

நீயே ஆர்டர் செஞ்சிடு,” என்று கூறிவிட்டு அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் கடையினுள் சுற்றுமுற்றும் பார்வையிட்டார் சிவா.

சிவாவின் விருப்பப்படி வேண்டியதை ஆர்டர் செய்தார் ராஜா. உணவு வந்தது. ராஜா மெதுவாக ஒன்றொன்றாக ருசித்துச் சாப்பிட்டார். ஆனால் சிவாவோ ஒரு வாரம் முழுவதும் சாப்பிடாதது போன்று சாப்பிட்டார். ஒன்று சாப்பிட்டு முழுங்குவதற்குள் இன்னொரு கைப்பிடி சோற்றை அள்ளி வாயில் தினித்தார். சாப்பிடும் போது அவர் வாயிலிருந்து ச்சவுக்குச் ச்சவுக்கென்று சத்தம் வேறு வந்தது.

சிவா சாப்பிடும் முறை ராஜாவிற்கு சுத்தமாகப் பிடிக்காவிட்டாலும், இதுநாள் வரை காட்டிக் கொண்டதே இல்லை. ஆனால் இனியும் பேசாமல் இருப்பது சரியாகாது. அதுவும் இனிமேல் சிவாவை சந்திக்கப் போவதில்லை என்ற விஷயத்தையும் அவரிடம் எப்படியாவது கூறி விட வேண்டும். இல்லாவிட்டால் தன் மனைவியின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் தினமும் ஆளாக வேண்டி வரும்.

சிறிது நேரத்திலேயே தனக்கான உணவை முடித்து விட்டார் சிவா. ராஜா மெதுவாக மென்றுக் கொண்டிருந்தார்.

உனக்கு வேற ஏதாவது வேணும்ன்னா சொல்லு, சிவா.”

ராஜா பேசும் தொனியே சற்று வேண்டா வெறுப்பாக இருந்தது. ஆனால் சிவா அதைக் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை. தன் நண்பனை மனதார மனதிற்குள்ளே பாராட்டினார்.

போதும் ராஜா. இதுக்கு மேல எங்கே சாப்பிடறது.”

சிவா நாற்காலியில் நன்றாக சாய்ந்துக் கொண்டார். தூக்கம் கண்களை ஆட்கொண்டது. இருப்பினும் அக்கம் பக்கம் நிறைய பேர் சாப்பிட்டுக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தபடியால் தன்னை சுதாரித்துக் கொண்டார்.

உணவை முடித்தும் முடிக்காமலும் இருந்த ராஜா, இதுதான் சரியான தருணம் என தீர்மானித்தார்.

சிவா ...”

என்னா? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”

இல்ல ... வந்து ...”

ராஜா, தான் கூற வந்த விஷயத்தை பட்டென்று சொல்லி விடலாம் என்று நினைத்தார். ஏனோ தெரியவில்லை, நாக்கு தளுதளுத்தது. மனமும் படபடத்தது.

சொல்லிடலாமா... வேண்டாமா? சொல்லிடலாமா... வேண்டாமா?” என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் தவித்தார் ராஜா.

சிவா, அடுத்த மாதத்திலிருந்து நான் வர மாட்டேன். எனக்கு வெளிநாட்டில் வேலை இருக்கு.”

அப்படின்னா? அதுக்கு அடுத்த மாதம் வருவியா?”

இல்ல சிவா. நான் வெளிநாட்டில் பிஸ்னஸ் தொடங்கப் போறேன். அதனால அப்போ திரும்ப வருவேன். அது பத்தி எல்லாம் இப்போ நான் சொல்லறதுக்கில்லை.”

ஓஹ் ...” என்று மட்டும் கூறினார் சிவா. அதற்கு மேல் அவர் ஒன்றும் பேசவில்லை.

திரும்ப அடுக்கு மாடி வீட்டிற்கு வரும் வரைக்கும் இருவரும் வாயே திறக்கவில்லை.

கார் கதவை தெம்பில்லாமல் திறந்தார் .  கார் அங்கிருந்து மறையும் வரை கையசைத்தார்.

படிக்கட்டுகளுக்குச் செல்லும் முன் மேலே பார்த்தார்; வெய்யில் சுல்லென்று எப்போதும் போல  அடித்துக் கொண்டுதான் இருந்தது.


                                                                      முற்றும்

 

 

Comments

Popular posts from this blog

சிறுமி நீய்ஹா மதனின் சாதனைகள்

  அனுபவம்      எம்.   பிரபு   நான் தொடக்கப்பள்ளியில் படித்த காலத்திலிருந்தே மணிமேகலை நாயர் அவர்களின் குடும்பத்தை அறிந்திருந்தேன். மணிமேகலையும் அப்போது சிறுமியாக இருந்தார்.    என் தந்தை திரு. எஸ். மாதவன் அவர்கள்   National Union of Plantation Workers ( தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்) அமைப்பில் பொருளாளராகப் பணியாற்றினார். ஒவ்வொரு மாதமும்  அவர் மற்றும் ஓட்டுநர்   திரு. கோவிந்தன் அவர்களுடன் பஹாங்கில் உள்ள பல தோட்டங்களுக்கு Peugeot   404 காரில் சென்று தொழிலாளர்களிடமிருந்து சங்க ச்   சந்தாவை வசூலி ப்பதோடு  தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிவார்கள். அந்த வயதில் அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த மாதச்   சந்தா,  தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும்   நலனுக்காகவும்  மேற்கொள்ளப்பட்டதாக அறிவேன். பொதுவாக தோட்ட பிரதிநிதிகள் மூலம் மாதச் சந்தா சேகரிக்கப்பட்டன. பள்ளி விடுமுறைகளில் நான் மற்றும் என் சகோதரர் ,  தந்தையுடன் அந்தப் பயணங்களின் போது...

PENGECUT

  Cerpen    Oleh: M. Mahendran       “Kita perlu menolong mereka. Mereka dalam kesusahan. Tanpa ditolong, mereka tidak dapat makan.” “Kita tinggal jauh. Biarlah mereka yang tinggal berdekatan menolong.” “Jangan peduli tentang negara yang berdekatan. Mereka di seberang lautan ialah saudara kita. Kita harus menolong mereka.” “Tanpa pertolongan kita, adakah mereka akan mati kebuluran?” “Ya. Jadi hulurkanlah bantuan.” “Bagaimana cara membantu mereka?” “Kita perlu merentasi lautan.” “Tidak bolehkah dengan mengirim wang sahaja?” “Itu tidak cukup. Kita perlu pergi sendiri untuk menghulurkan makanan, pakaian dan bantuan kesihatan. Ini perlu dilakukan sendiri. Barulah kita akan rasa puas dan mereka pun akan gembira.” “Tidak bahayakah merentas lautan?” “Demi menolong saudara kita di situ, apa pun tidak bahaya.” “Jadi, kamu akan ke sana merentas lautan dengan kapal walaupun kamu tidak pernah pergi sebelum ini?” “Kamu boleh ikut kami. Dengan berbuat demikian, kamu akan...

ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ...

  சிறுகதை   எம்.   பிரபு                                       தெரிந்தோ தெரியாமலோ அவன் இந்த க்  கொலையை ச்  செய்து விட்டான். பிணம் நிச்சயம் எழப் போவது இல்லை. நடந்து முடிந்த சம்பவத்தை அவனால் மாற்றி அமைக்க இயலாது. நடந்து விட்டது. அதுதான் உண்மை. அழுதும் பயனில்லை. இந்த ச்   சூழ்நிலையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். காலம் கடந்து விட்டது. இப்போது அவன் செய்ய வேண்டியது ஒன்றுதான். இந்த பி ண த்தை அப்புறப் படுத்துவது. இனியும் தாமதப் படுத்த இயலாது. பிறகு சூழ்நிலை அவன் பக்கம் சார்ந்து இருக்காது . இது அவனுக்கு இரண்டாவது முறை . இதற்கு முன்பு செய்த போது அந்த வீட்டின் பின்னால் பரந்த நிலம் இருந்தது. அங்கு அதை புதைத்தாகி விட்டது. இப்போது நட த்தப்பட்ட  கொலை, அவனுக்கு   கடினமானது. இந்த கொலை தான்  அவன் முன்பு செய்த கொலைகளிலிருந்து மாறுபட்டது.   சங்கடமானதும்  கூட. இந்த வீடமைப்பு ப...