சிறுகதை எம். பிரபு “ கிருஷ்ணா , கடையை கொஞ்சம் பார்த்துக்கோ. நான் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்!” கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை. “ கிருஷ்ணா , அரிசி ரெண்டு கிலோ கட்டி வை!” கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை. “ கிருஷ்ணா , இந்த பொருட்களோட விலையெல்லாம் கணக்கு செய்து வை!” அப்போதும் கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை. “ கிருஷ்ணா , எனக்கு உடம்புக்கு முடியல. சாமான் எல்லாம் கட்டி வை. ” கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை. தந்தை ஒரு வருடத்தில் இறந்தும் போனார். அப்போதுதான் கிருஷ்ணனுக்கு பயம் வந்தது. எப்படி தன்னையும் , தன் தம்பி தங்கைகளையும் காப்பாற்றி க் கொள்ளப் போகிறோம் என்கிற பயம். அவன் தலை மேல் பெரும் பாரம். கித்தா மரம் வெட்டுவதா ? அது அவனுக்குப் பிடிக்காதே. அதில் பயிற்சியும் இல்லை. தொழிற்சாலையில் வேலை செய்வதா ? தோட்டத்தை விட்டு வெகு தொலைவு போக வேண்டும். இறுதியாக அப்பாவுடைய இந்த மளிகைக் கடையை தொடர்ந்து வழி நடத்துவதுதான் சரியெனப்பட்டது. வேறு வழி இல்லை. அப்பாவுடைய ஒரே சொத்து. சொந்தக்காரர்களை எதிர்ப்பார்க்கலாம் என்றால் , அவர்கள் தன் பெற்றோரை பகைத்துக் கொண்டவர்களாயிற்றே. ஏத...