சிறுகதை
எம். பிரபு
ஒரு நாள், எங்கள் வீட்டில் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. ஆமாம், அப்பா அப்படி செய்வார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. அண்ணனும் அப்பாவோட அந்தச் செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான், ஆச்சர்யப்பட்டான்.
எங்கள் வீட்டின் முன் ஒரு வெள்ளை நிற வோல்கஸ்வேகன் காடி.
***
நேற்று இரவு என் கனவில் அது மறுபடியும் வந்தது. அந்தக் கனவு மிகவும் உண்மையாக இருந்தது. அது எங்கள் பலகை வீட்டு ஹாலில் ஒரு மூலையிலே நிஜமாவே நிற்கின்ற மாதிரி தெரிந்தது. நம்பவே முடியவில்லை, ஆனால் அது நிஜமாக இருந்த மாதிரி தோன்றியது.
கனவில் எப்போது அப்பா அதை வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்தார் என்று தெரியவில்லை. அது புது மாதிரியாகவும் பெரியதாவும் பழுப்பு நிறமாகவும் இருந்தது. அதற்கு நான்கு கால்கள் இருந்தன. அந்தக் கால்கள் எங்கள் வீட்டு குசினியில் இருக்கின்ற வட்ட நாற்காலி கால்களைவிட இன்னும் மெலிதாக இருந்தன. எனக்கு அதை தொட்டுப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அம்மா அப்பா அறையிலிருந்த கடிகாரம் மணியடித்து என்னையும் அண்ணனையும் எழுப்பிவிட்டது.
என் சந்தோசமும் மறைந்தது.
நிஜ வாழ்க்கையில் நடக்கவே முடியாத விஷயம், கனவில் மட்டும் மிகவும் சுலபமாக நடக்கின்றது. அதுதான் ஆச்சர்யம்.
நான் கனவில் அதைப் பார்த்ததற்காக சந்தோஷப்பட முடியவில்லை. அந்தக் கனவு நிஜமில்லை, பொய். அப்படிப்பட்ட கனவு எனக்கு வரவே கூடாது என்று நினைக்கின்றேன். இப்போது எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. நான், அண்ணன் இருவரும் மிகவும் ஆசைப்படுகின்ற அதை, எங்கள் வீட்டின் ஹாலில் நிஜமாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் அது கனவில் மட்டும் தான் வருமா? நிஜத்தில்?
என் கனவை அண்ணனிடம் சொல்லவே இல்லை. சொன்னால் அவன் என்னைக் கிண்டல் செய்தாலும் செய்வான். அது அவன் கனவிலும் வந்திருக்கலாம், ஆனால் அவனும் அமைதியாக இருக்கின்றானோ?
இதே கனவு அப்பாவுக்கும் வந்திருந்தால், எப்படி இருக்கும்? அப்பா அதை வாங்க முயற்சி செய்வாரோ? நாங்கள் மூவரும் ஒரே மாதிரி கனவு காண முடியுமா? நம் தலையில் இருக்கின்ற எண்ணங்கள் அதுக்குள்ளது போன்று இல்லையே, ஒரே மாதிரி கனவு எல்லாருக்கும் ஒரே நேரத்தில் எப்படி வரும்? ஆனால் அதனால் மட்டும்தான் அப்படிச் செய்ய முடியும்.
நேற்று இரவு அந்தத் தொடரைப் போட்டிருப்பார்கள். நாளைக்கு பள்ளியில் என் நண்பர்கள் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.
நான் அதை ‘டிவி’ என்று சொல்லாமல் அதுவென்று சொல்கின்றேன், ஏன் என்றால் அது இன்னும் எங்கள் வீட்டில் இடம் பிடிக்கவில்லை. எப்போது அது எங்கள் வீட்டு ஹாலில் நிஜமாகவே வைக்கப்படுகிறதோ, அப்போதுதான் நான் அதை டிவி என்று சொல்லி அழைக்க முடியும்.
வைராக்கியம்.
என்னுடைய நடவடிக்கை எனக்கே வியப்பாக இருந்தது.
“ராமு, நேத்து The Six Million Dollar Man நல்லா இருந்துச்சு தெரியுமா. லீ மேஜர்ஸ் கையாலே காரை நசுக்கிட்டாரு.”
“ராமு, நீ நேத்து பார்க்கலையா? லீ மேஜர்ஸ் மலை மேல ரொம்ப வேகமா ஓடி, கெட்டவங்களை அடிச்சாரு. ஓ ... உங்க வீட்டுலதான் டிவி இல்லையே.”
என் வகுப்பில் படிக்கின்ற சில மாணவர்களோட வீட்டில் அது இருக்கின்ற மாதிரி எங்கள் வீட்டிலும் அது இருக்கும் என்று நினைத்தார்கள். மூன்று நண்பர்களுக்கு மட்டும்தான் எங்களின் வீட்டின் உண்மையான நிலவரம் தெரியும்.
நண்பர்கள் எல்லாம் அவர்கள் பார்த்த நிகழ்ச்சிகளைப் பற்றி பேசும் போது, நான் ஒதுக்கப்பட்டவன் போன்று ஆகிவிடுவேன். எனக்குத் தெரிந்தவரை, டார்ஜா 2 பேராங்கில் இருகக்கின்ற பெரும்பாலான சீன மாணவர்களின் வீட்டில் அது உள்ளது. சில மாணவர்களின் வீட்டில் மட்டும் அது இல்லாமல் இருக்கலாம்.
உண்மையிலேயே எனக்கு அவர்களுடன் பழக மிகவும் வெட்கமும், சங்கோஜமாக உள்ளது. ஏனென்றால் எங்கள் வீட்டில் அது இல்லை. சில நண்பர்கள் ஏன் எங்கள் வீட்டில் அது இல்லை என்று ஆச்சரியப்படுகின்றனர். அண்ணனின் வகுப்பில் இப்படி கேட்பார்களா என்று எனக்குத் தெரயவில்லை. நாங்கள் வீட்டில் இதைப் பற்றி பேசுவதே இல்லை. அம்மாவுக்கு பிடிக்காது.
இருந்தாலும் அம்மாவிடம் ஒரு நாள் கேட்டு விட்டேன்.
“அம்மா, அப்பா ஏன் அதை வாங்க மாட்டறாரு?”
“உங்க அப்பா சம்பளத்திலே, நாம மத்தவஙகள போல டிவி வாங்க முடியாது. அதோட டிவி பார்க்கிறது நல்லதில்ல. அப்புறம் நீயும் உன் அண்ணனும் ஒழுங்கா படிக்க மாட்டீங்க.”
“ஆனா, குமார் அப்பாவும் J.K.Rல வேலை செய்றவர்தானே, அவர் கூட அத வாங்கிட்டாரே. அவங்களால எப்படி அத வாங்க முடிஞ்சது?”
“அவங்க தவணை முறையில பணம் கட்டறாங்க. அதோட குமாரோட சித்தப்பாவும் அவர் அண்ணன் கூடவே வேலை பார்த்து, அவங்கக் கூடவே இருக்காரு. அவர் கூட பணம் கட்ட கொஞ்சம் உதவி பண்ணிருக்கலாம்.”
“அப்பாக்கிட்ட மாதா மாதம் கட்டுற மாதிரி வாங்க சொல்லுங்கம்மா.”
“நான் உங்களுக்கு நல்ல சத்துள்ள சாப்பாடு கொடுக்கனும்ன்னு நினைக்கிறேன். ஒவ்வொரு மாதமும் டிவி மாதிரி பொருட்களுக்காக தவணையில் பணம் கட்டனும்னா, கடைசில நாம கஞ்சியும், பிஸ்கட்டும் தான் சாப்பிட வேண்டி வரும். இத நீ விரும்புறியா, ராமு?”
“ஐயோ ... வேண்டாம்மா,” என் வாய்தான் அப்படி சொன்னதே தவிர, மனதார சொல்லவில்லை.
The Six Million Dollar Man கதையைப் பற்றி நண்பர்கள் பேசும்போது, அதை நானும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு மேலோங்கும். ஆனால், எப்படிப் பார்ப்பது?
நாங்கள் J.K.R குவார்ட்டர்ஸில் வசிக்கின்றோம். எங்கள் வீட்டு வரிசையில் ஒரு வீட்டில் அது உள்ளது. அண்டை வீட்டுக்குப் போய் அதைப் பார்க்க நினைத்தாலும், அம்மா அனுமதி கொடுக்க மாட்டாங்க. அவர்களே அழைத்தாலும், அம்மா கையில் ரோத்தான்தான் தெரியும். எங்கள் குவார்ட்டர்ஸில் எட்டு வீடுகளில் மட்டுமே அது இருக்கின்றது. வீட்டுக் கூரை மீது கம்பீரமாக பொருத்தியிருக்கும் ஏரியலைப் பார்த்தே கண்டுப் பிடித்து விடலாம்.
அம்மாவுக்கே எங்கள் வீட்டில் அது இல்லையென்று கொஞ்சம் கவலையா கூட இருக்கலாம். ஆனால் காட்டிக் கொண்டதில்லை.
நான் The Six Million Dollar Man தொடரின் தொடக்கப் பகுதியை மட்டும் ஆ காவ் செலவுசாமான் கடையில் ஒரு தடவை பார்த்திருக்கேன்.
லீ மேஜர்ஸோட முகம் எனக்கு புதுசல்ல. ஏன் என்றால் நாங்கள் எப்போதும் ஆ காவ் கடையில் விற்கின்ற சீட்டு மாதிரி விளையாட்டு கார்டுகளை வாங்குவோம். அந்த சின்ன கார்டுகளை உயரமா அடுக்கி வைத்து செருப்பால் எறிந்து விளையாடுவோம். சில சமயம் நான் அண்ணனுடன் சேர்ந்து அந்த கார்டுகளை கைப்பத்தில் வைத்துத் தட்டுவோம். யாருடைய கார்டு தலைகீழா விழுகின்றதோ அவன் தோற்று விட்டான் என்று அர்த்தம்.
லீ மேஜர்ஸ் மிகவும் ஹேண்ட்ஸம். அந்த விளையாட்டு கார்டுகளில் அவர் படம் போடப் பட்டிருக்கும். அவருடை ய உடையும் மிகவும் அழகாக இருக்கும்.
வகுப்பில் இருக்கின்ற மற்ற நண்பர்களைப் பற்றி நான் அவ்வளவாக கவலைப்பட்டதில்லை. நான் குமாருடன்தான் கொஞ்சம் வெட்கப்படுவேன். அவன் டார்ஜா 2 மேராவில் படிக்கின்றான். அவன் வீடு எங்கள் வீட்டுப் பின்னால் மூன்றாவது வரிசையில் உள்ளது.
நான் குமாருடன் நட்பாக இருக்க விரும்பாததற்கு காரணம், அவன் தன்னுடைய அப்பாவின் பெருமைகளையும் அவன் வீட்டில் இருக்கின்ற பொருட்களைப் பற்றி பந்தாவாக பேசிக்கிட்டே இருப்பான்.
“எங்க வீட்டுல ஏற்கனவே சோபா செட் இருக்கு.”
“அடுத்த மாசம் அப்பா எனக்கு சைக்கிள் வாங்கித் தருவாராம். அப்போ எங்க வீட்டுல மூனு சைக்கிள் இருக்கும்.”
“எங்க வீட்டுல காசெட் பிளேயர் இருக்குது.”
“அப்பா டிவி வாங்கிட்டார். உங்க அப்பா எப்போ டிவி வாங்கப் போறார், ராமு?”
குமார் இப்படி அவன் வீட்டின் செல்வச் செழிப்பைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பான். ஆனால் ஒரு தடவை கூட அவன் வீடிற்கு என்னை அழைத்ததில்லை.
எங்கள் வீட்டில் அந்தப் பொருட்கள் எல்லாம் இல்லையென்று வருத்தப்படுகின்றானா அல்லது சும்மா அப்படி வேண்டுமென்றே கேட்கின்றானா என்று எனக்கு தெரியவில்லை. அவன் முகத்தில் வருத்தமோ, பரிதாபமோ எதுவும் தெரியவில்லை.
பேசும்போது அவனின் குண்டான உடம்பை அசைத்துக் கொண்டே இருப்பான். அதனுடன் வாயில் எதையாவது எப்போதும் மென்றுக்கிட்டே பேசுவான். அது எனக்கு எரிச்சலைத் தரும்.
ஒரு நாள், எங்கள் வீட்டில் எதிர்ப்பார்க்காத ஒன்று நடந்தது. ஆமாம், அப்பா அப்படி செய்வார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. அண்ணனும் அப்பாவோட அந்தச் செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான், ஆச்சரியப்பட்டான்.
ஆனால் அம்மாவுக்கு அப்பா செய்த அந்த விசயம் பிடிக்கவில்லை.
அந்த மாலை நேரத்தில் அப்பா ஒரு காடியில் வந்தார். அந்தக் காடி அவரோட நண்பர் அங்கிள் லீயுடையது. அங்கிள் லீ அப்பா வேலை செய்கின்ற J.K.Rல் ஒரு பெரிய அதிகாரி. அப்பாவும் அங்கிள் லீயும் சின்ன வயதில் ஒரே பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்தார்களாம்.
அந்த வெள்ளை வோல்க்ஸ்வேகன் காடி எங்கள் வீட்டுக் குவாட்டர்ஸ் முன் வந்து நின்றது. அங்கிள் லீ எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரமாட்டாங்க. வந்தால் தீபாவளிக்குத்தான் வருவாங்க.
அப்பாவும் அங்கிள் லீயும் காடியிலிருந்து இறங்கினார்கள். நானும் அண்ணனும் வேகமாக வீட்டின் முன் பக்கம் ஓடினோம். அங்கிள் லீ முன்னால் போனெட்டைத் திறந்தார்.
காடியில் ஏதோ பிரச்சினையா? என்று நினைத்தேன். அப்பாவும் அங்கிள் லீயை நோக்கி போனார். அப்பாவுக்கு காடி பிரச்சனைப் பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் பைப் பிரச்சனைகள் எல்லாம் சுலபமாக சரிசெய்து விடுவார்.
அங்கிள் லீ அந்த முன் போனெட்டிலிருந்து இருந்து ஏதோ ஒன்றை எடுத்தார். ஓஹோ, இந்தக் காடி முன்னால் இருக்கும் பகுதியே பொருள் வைக்கின்ற இடமா இருக்கும் போல! மிகவும் விசித்திரமாக இருந்தது. அப்போ போனெட் காடி பின்னால் இருக்குமோ?
அங்கிள் லீ அந்த சிவப்பு நிறப் பொருளை எடுத்து அப்பா கையில் கொடுத்தார். அது என்ன பொருள் என்று நானும் அண்ணனும் முதலில் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை.
அப்பா வீட்டை நோக்கி வந்தார். அங்கிள் லீ எங்களைப் பார்த்து கை அசைத்தார். பிறகு அந்தக் வோல்க்ஸ்வேகன் மெதுவாக எங்கள் குவாட்டர்ஸிலிருந்து வெளியே போனது. அப்பாவின் கைகளில் அது, அதாவது டிவி!
என் கண்களும் அண்ணனின் கண்களும் ஆச்சரியத்தில் பெரிதாகின. பக்கத்து வீட்டுப் பையன்கள் சிலர் அதைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டனர். எனக்குப் பெருமையாக இருந்தது.
“அம்மா! அம்மா! வந்து பாருங்க, அப்பா டிவி வாங்கிட்டாங்க!” என்று அண்ணன் சந்தோஷமாக கத்தினான்.
நான் அப்படியே அதிர்ச்சியில் நின்று விட்டேன். நம்பவே முடியவில்லை.
அப்பா சிரித்துக் கொண்டே சிறிய அளவில இருக்கும் டிவியை வீட்டுக்குள் கொண்டு வந்தார். அதை சாப்பாட்டு மேசை மீது வைத்தார்.
“அத்தான், இதை வாங்குறதுக்கு உஙகளுக்கு ஏது காசு?”
“நான் வாங்கல. லீதான் ஒரு நாளைக்கு இரவல் கொடுத்திருக்கார். இன்னிக்கி ராத்திரி, முகம்மது அலியும் ஜோ பக்னரும் போடும் குத்துச்சண்டை மறுஒளிபரப்பு இருக்கு. அப்புறம் இவங்களும் The Six Million Dollar Man பார்ப்பாங்கள்ல.”
“ஓ! இனிமே இப்படிப் பண்ணாதீங்க. நம்மையே அவமானப்படுத்திக்கிற மாதிரி இருக்கு.”
“சரி, இந்த தடவை மட்டும்தான். இன்னிக்கி ஒரு நாள் மட்டும்,” என்றார் அப்பா.
அப்பா டிவியை வாங்கவில்லை. ஒரு நாள்தான் நாங்கள் பார்க்க முடியும். கவலையாக இருந்தாலும், கொஞ்சம் சந்தோசமாகவும் இருந்தது. நானும் அண்ணனும் டிவியைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தோம். சின்ன டிவிக்கு ரேடியோ போன்று ஏரியல் அதன் மேலேயே பொருத்தப்பட்டிருந்தது. அம்மா, டிவியைத் தொட வேண்டாம் என்று அதட்டினார். ஊரான் வீட்டுப் பொருள் என்றார்.
அந்த நாள் நாங்கள் வழக்கத்தைவிட சீக்கிரமே இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டோம். அந்த டிவியைப் பார்த்துக் கொண்டே இருந்தேன் என் கண்களை ஒரு நிமஷமும் சிமிட்டவில்லை.
முதல் முறையாக The Six Million Dollar Man தொடரைப் பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. லீ மேஜர்ஸ் பல சுவாரஸ்யமான சாகசங்களைச் செய்தார். கதையில் என்ன நடக்கிறதென்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அது எங்களுக்கு முக்கியமில்லை. லீ மேஜர்ஸின் செயல்தான் எங்களுக்கு முக்கியமாகத் தெரிந்தது. அண்ணனுக்கு கதை புரிவது போல தெரிந்தது.
அப்பாவும் முகம்மது அலி மற்றும் ஜோ பக்னர் இடையிலான குத்துச்சண்டை பார்த்ததில் சந்தோஷமாக இருந்தார். அவர்கள் குவாலாலம்பூரில் இருக்கும் மைதானத்தில் குத்துச்சண்டை போட்டார்கள். நாங்களும் முகம்மது அலியின் சாகசங்களைப் பார்த்து ரசித்தோம். முகம்மது அலி உருவம் ஏன் மலாய்க்காரர் மாதிரி இல்லையென்று எனக்கு புரியவில்லை. திங்கட்கிழமை இந்த விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து பேச என்னால் முடியும். நினைத்துப் பார்க்கவே சந்தோசமாக இருந்தது.
ஆனால் ... இந்த டிவி எங்களது இல்லை. நாளைக்கு இது இந்த சாப்பாட்டு மேசை மீது இருக்காது.
அப்போ, எப்போ அப்பா எங்களுக்காக உண்மையிலேயே ஒரு டிவி வாங்கித் தருவார்?
முற்றும்
Comments
Post a Comment