கட்டுரை
எம். பிரபு
மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே ஆரம்பக் கல்விக்கூடங்கள், பல மொழிப் பிரிவுகளில் நாடு தழுவிய நிலையில் தொடங்கப்பட்டிருந்தன. ஆங்கிலம், மலாய், தமிழ், சீனப்பள்ளிகள் அந்தந்த இடங்களில் இனவாரியாக மக்கட்தொகையை அடிப்படையாகக் கொண்டுத் தொடங்கப்பட்டதாகும்.
எப்போது எங்கு என்று ஆராய்ந்து இதைப் பற்றி எழுதினால், கட்டுரை நீண்டுக் கொண்டே போகும். இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்பவே எழுத முயற்சிக்கின்றேன்.
எது எப்படியோ இந்தியர்கள் அந்தக்காலத்திலியே தமிழ்ப் பள்ளி, ஆங்கிலப் பள்ளி பிறகு மலாய்ப்பள்ளி (தேசியப் பள்ளி) அதனைத் தொடர்ந்து அண்மையக் காலமாக சீனப் பள்ளிகளிலும் அதிக எண்ணிக்கையில் பயின்று வருகின்றனர்.
தமிழ், ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளைக் காட்டிலும் மெண்டரின் மொழிப் பயின்றவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில், இந்தியர்கள் சீனப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை பதிந்து வருகின்றனர்.
அதற்கு இன்னொரு முக்கியக் காரணம், தேசிய தொடக்கப் பள்ளிகள் முன்பு போல் அல்லாமல், அங்கு எங்கும் எதிலும் ஒரு மதம் சார்ந்த விசயத்திற்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதுவும் ஒரு நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் விகிதாச்சாரம் மேலும் குறைந்திருக்க வாய்ப்புண்டு.
ஆங்கிலப்பள்ளிகள் 1970ல் தொடங்கி, மலாய் மொழி (தேசிய)ப் பள்ளிகளாக மாற்றம் கண்ட போதும், அவற்றை ஆங்கிலப் பள்ளி என்று சொல்லிக் கொண்டே இந்தியர்கள் தத்தம் பிள்ளைகளை அங்கு சேர்த்து வந்துள்ளனர். சீன மாணவர்களும் அக்காலக்கட்டத்தில் கணிசமான அளவு தேசிய தொடக்கப் பள்ளிகளில் பயின்று வந்தனர்.
தோட்டப்புரத்தில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் தமிழ்ப்பள்ளிகளிலே தங்கள் கல்வியைத் தொடங்கினர். பட்டணம் அல்லது அதன் அருகில் வசித்து வந்தவர்களே பல மொழிப் பள்ளித் தேர்வுகள் இருந்த காரணத்தினால் எல்லாப் பள்ளிகளிலும் பதிந்துக் கொண்டனர். அதாவது, அவரவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகிலியே தேசியப் பள்ளி அல்லது சீனப்பள்ளி இருப்பதனாலும், தங்கள் வசதிக்கேற்ப அங்கு பயின்றனர். போக்குவரத்து வசதி இல்லாததும் இன்னொரு முக்கிய காரணம். தமிழ்ப் பற்றுப் பற்றியெல்லாம் யாரும் அவ்வளவு கவலைப் படாத காலம். இப்போதும்தான்.
ஆங்கிலப்பள்ளி, பிறகு தேசியப்பள்ளி பின்னர் சீனப்பள்ளி; இங்குப் பயின்றவர்கள் அனைவருக்கும் தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதா என்றால் அதுவும் இல்லை.
ஆங்கிலப் பள்ளிகளிலும் அதன் பிறகு வந்த தேசியப் பள்ளிகளிலும் மூன்றாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் மெண்டரின் மொழி போதனைகள் நடத்துகின்றனர். மாணவர்கள் குறைவாக இருந்தால் நடத்தபடாது. சீனப் பள்ளிகளில் பயின்ற, பயின்றுக் கொண்டிருக்கின்ற இந்திய மாணவர்களுக்கு இந்த வசதி ஏற்படுத்தித் தரப்படவில்லை.
தேசிய ஆரம்பப் பள்ளிகளில் தாய்மொழியைக் கற்றவர்கள், இடைநிலைப்பள்ளிக்குச் சென்றவுடன் பெரும்பாலும் அங்கு நடத்தப்படும் தாய் மொழி வகுப்பில் கலந்துக் கொள்வதில்லை. சில தமிழ்ப் பள்ளியிலிருந்து வந்த மாணவர்களே இப்படிச் செய்வதுண்டு.
தேசிய ஆரம்பக் கல்விக்கூடங்களில் தாய் மொழி வகுப்பு நடந்த போதிலும் அதில் பயின்ற பயிலும் மாணவர்கள் முழு ஆர்வம் எடுத்துப் படிப்பதில்லை. மெண்டரின் மொழி வகுப்புக்கும் இதே கதிதான். தாய் மொழிக் கல்வியை தேசியப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கியிருந்தால் இந்தப் பிரச்சனை எழுந்திருக்காது.
பிற மொழிப்பள்ளியில் பயின்ற இந்திய மாணவர்கள் எல்லோருக்கும் முறையாகத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதா என்றால் அதுவும் இல்லை. பலர் சரளமாகவே எழுதுகின்றனர் படிக்கின்றனர்; பாண்டித்தியமும் பெற்றுள்ளனர். அந்த வகையில் நாடளாவிய புகழ்ப்பெற்ற வழக்குரைஞரும் சமய பேச்சாளருமான திரு. பாண்டித்துரை அவர்கள், நாடக நடிகரும் எழுத்தாளருமான திரு. கே. எஸ். மணியம் அவர்கள். இன்னொருவர் மலேசியா கினி தமிழ்க் கட்டுரையாளரும் எழுத்தாளருமான திரு. இராகவன் கருப்பையா, எழுத்தாளர் முனைவர் திரு. மாரி சச்சிதானந்தம் அவர்களெல்லாம் தமிழ்ப் பள்ளியில் பயிலாதவர்களே. சுய முயற்சியால் தமிழைக் கற்றவர்கள். மேலும் நிறைய பேர் மறைமுகமாக இருந்த போதிலும், இதற்கு இந்த நால்வருமே சான்று.
அதற்காக, மற்ற மொழிப் பள்ளிக்கு அனுப்பினாலும் தமிழ் அழியாது என்று சொல்ல வரவில்லை. தமிழ்ப் பள்ளிகளுக்கு கட்டாயத்தின் பேரில் செல்லாதவர்கள் எவ்வாறு தமிழை வளர்த்துக் கொள்ளலாம் என்று பார்ப்போம். குறை கண்டுப் பிடிப்பதில் ஒரு பயனும் ஏதும் இல்லை. ஏனென்றால் பள்ளியை தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்களிடத்தில் எப்போதுமே இருந்ததில்லை.
மற்ற மொழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தமிழ்க் கல்வியை வளர்க்க என்ன செய்ய வேண்டும்?
பெற்றோருக்கு தமிழ்த் தெரிந்திருந்தால், வீட்டிலேயே சொல்லிக் கொடுக்கலாம். தினசரி, வார, மாத இதழ்களை வாங்கி ஊக்கம் கொடுக்கலாம். புத்தகம் வாங்கிக் கொடுக்கலாம்.
அப்படி, அப்பா அம்மா இருவருக்குமே தமிழ் எழுதப் படிக்க தெரியாவிட்டால். பிரத்தியேக தமிழ் வகுப்புக்கு அனுப்பலாம். யாரும் அப்படி நடத்தா விட்டாலும், பணம் கொடுத்து யாரையாவது தமிழ் வகுப்பைத் தொடங்கச் சொல்லி ஊக்கம் கொடுக்கலாம். பிறகு தமிழ்ப் பள்ளியில் பயிலும் மாணவர்களும் அங்கு வந்து பயில வாய்ப்புண்டு. இது போன்ற வகுப்பில் பெற்றோரும் பிள்ளைகளுடன் சேர்ந்து பயிலலாம்.
இதற்கு முழு ஒத்துழைப்பு பெற்றோர்களிடத்திலிருந்துதான் வர வேண்டும். அவர்கள் எப்போதும் போல ஏனோ தானோ என்று இருந்துவிட்டால், அதோகதிதான். தமிழ்ப் பள்ளிக்குத்தான் அனுப்பவில்லை. இந்த மாதிரி நடத்தப்படும் தமிழ் வகுப்புக்களுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம்.
எல்லாவற்றுக்கும் முயற்சி, முயற்சி, முயற்சிதான் தேவை. தமிழ் மீது ஆர்வம் வரவேண்டும்.
நானும் என் சகோதரர் கார்ட்டூனிஸ்ட் மெட் அவர்களும் தேசியப் பள்ளியில்தான் பயின்றோம். ஒன்றாம் வகுப்புக்குச் செல்லும் முன்னமே எங்கள் தாயார் திருமதி அம்பிகா ஆறுமுகம், வீட்டில் எங்களுக்குத் தமிழ் போதித்தார். அப்பாவும் தமிழ் நாளிதழ், மாத இதழ்கள் வாங்கி எங்களையும் படிக்க ஆர்வம் ஊட்டுவார். அவரும் பத்திரிகைகளுக்கு எஸ். மாதவன், பெந்தோங் என்ற பெயரில் அப்போது எழுதுவார். பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் நாங்கள் பள்ளி வருடாந்திர இதழக்கு சிறு சிறு கட்டுரைகள், ஆங்கிலம், மலாய் மற்றும் தமிழில் படைத்துள்ளோம். ஞாயிறு தோறும் சமய வகுப்புக்கும் செல்வோம்.
தமிழில் அதீத பாண்டித்துவம் பெறாவிட்டாலும், என்னால் முடிந்த அளவு இன்றளவும் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கின்றேன்.
ஆகவே, மாணவர்களோ அல்லது பெற்றோர்களோ தமிழ்ப் பள்ளிக்குச் செல்லவில்லையே என்று வருத்தப் படுவதை விட்டுவிட்டு அதனை பயில என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ எடுக்க வேண்டும்.
காலத்தையும் நேரத்தையும் தேவையில்லாத விசயங்களுக்கு செலவிடுவதை விட, தமிழுக்கு ஏதாவது செய்ய முற்படுங்கள். தமிழ் ஆர்வலர்கள், தமிழ் கற்காத இந்தியர்களை தேடிப்பிடித்து வகுப்பு நடத்தலாம். சீன மற்றும் மலாய் பிள்ளைகளுக்கும் தயக்கமில்லாமல் சொல்லிக் கொடுக்கலாம்.
தமிழ் என்றும் நிலைத்திருக்கும்.
Comments
Post a Comment