சிறுகதை எம். பிரபு “ வாடா போலாம்!” புத்தாண்டு , சீனப் புத்தாண்டு , அதன் பிறகு தமிழ்ப் புத்தாண்டு. இந்தப் புத்தாண்டுகளெல்லாம் எந்தெந்த மாதங்களில் வரும் என்று தெரியும் – ஆனால் முஹராம் மட்டும் வருடத்திற்கு வருடம் மாறிக்கொண்டே இருக்கும். நோன்புப் பெருநாளும் அப்படியே. நாளைக்கு மீண்டும் சீனப் புத்தாண்டு. நானும் பார்த்திபனும் ஒரே புதுமுக வகுப்பில்தான் பயில்கிறோம். இருவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து நெருங்கிய நண்பர்கள். பக்கத்து வீடு வேறு. எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் போவோம் , வருவோம். சமயங்களில் சண்டையிட்டுக் கொள்வதுமுண்டு. அன்றுதான் நாங்கள் இடைநிலைப் பள்ளியில் கால் பதித்த தினம். அப்பா என்னுடன் ஒன்றாம் வகுப்பின் முதல் நாளன்று வந்தது போன்று இங்கேயும் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பஸ் நிலையம் வரை மட்டும் வந்து ஏற்றி விட்டுச் சென்றுவிட்டார். நான் பெரிய பையனாகிவிட்டேனாம் ; இன்னும் சின்னப்பாப்பா இல்லையாம். பார்த்திபனை அவன் அப்பா சைக்கிளில் கொண்டு வந்து விட்டார். எனக்கு கொஞ்சம் பயம். பஸ் முழுவதும் சீன மாணவர்களும் மலாய் மாணவர்களுமாகவே இருந்தனர். மூன்று இந்திய மாணவிகள் மட்டும...