Skip to main content

கொங் ஹீ ஃபட் ச்சோய்

 சிறுகதை






எம். பிரபு

 

 

வாடா போலாம்!”

புத்தாண்டு, சீனப் புத்தாண்டு, அதன் பிறகு தமிழ்ப் புத்தாண்டு. இந்தப் புத்தாண்டுகளெல்லாம் எந்தெந்த மாதங்களில் வரும் என்று தெரியும் – ஆனால் முஹராம் மட்டும் வருடத்திற்கு வருடம் மாறிக்கொண்டே இருக்கும். நோன்புப் பெருநாளும் அப்படியே.

நாளைக்கு மீண்டும் சீனப் புத்தாண்டு.

நானும் பார்த்திபனும் ஒரே புதுமுக வகுப்பில்தான் பயில்கிறோம். இருவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து நெருங்கிய நண்பர்கள். பக்கத்து வீடு வேறு. எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் போவோம், வருவோம். சமயங்களில் சண்டையிட்டுக் கொள்வதுமுண்டு.

அன்றுதான் நாங்கள் இடைநிலைப் பள்ளியில் கால் பதித்த தினம். அப்பா என்னுடன் ஒன்றாம் வகுப்பின் முதல் நாளன்று வந்தது போன்று இங்கேயும் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பஸ் நிலையம் வரை மட்டும் வந்து ஏற்றி விட்டுச் சென்றுவிட்டார். நான் பெரிய பையனாகிவிட்டேனாம்; இன்னும் சின்னப்பாப்பா இல்லையாம்.

பார்த்திபனை அவன் அப்பா சைக்கிளில் கொண்டு வந்து விட்டார்.

எனக்கு கொஞ்சம் பயம். பஸ் முழுவதும் சீன மாணவர்களும் மலாய் மாணவர்களுமாகவே இருந்தனர். மூன்று இந்திய மாணவிகள் மட்டும் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். அதுவும் மதியப் பள்ளி நேரம். உஷ்ணத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். வாழ்க்கையில் முதல் தடவையாக மதியப் பள்ளிக்குச் சென்ற முதல் நாள்.

அப்போதுதான் ஒரு சீனப் பையன் என் பக்கத்தில் வந்து பொதுக்கென்று அமர்ந்தான். என்னைப் போலவே அவனும் வெறும் தோள்ப் பையை கையில் பிடித்திருந்தான். இன்று புத்தகங்கள் கொடுத்ததும் நிரம்பிவிடும். அதை நினைத்தாலே பயம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. படிவம் மூன்று வரைக்கும் இப்படியே புத்தகமும் பையுமாக அலைந்துகொண்டிருக்க வேண்டும். எப்போதுதான் பெரியவனாகி வேலைக்குச் செல்வதோ?

பக்கத்தில் அமர்ந்த சீனப் பையன் சற்றுக் குண்டாக இருந்தான். என் குச்சி உடலுக்குப் பக்கத்தில் அவன் அமர்ந்தது மிகவும் அசௌகரியத்தை கொடுத்தது. அவன் மீது ஏதோ ஒருவித தைல மணமும், தலைக்குப் பூசும் பிரில்கிரீம் மணமும் சேர்ந்தாப்பில் என் மூக்கைத் துளைத்தன. அவனுக்கு வியர்த்துக் கொட்டியதால் அவனது இடது காலில் உள்ள வியர்வைத் துளிகள் என் வலது காலில் ஒட்டிக்கொண்டன. நானோ, என் தலைக்கு எட்டாத சன்னல் ஓரம் ஒட்டிக்கொண்டேன்.

ஏற்கனவே யார் யார் எந்தப் பள்ளியென்று ஆறாம் வகுப்பிலேயே சொல்லி, கடிதமும் கொடுத்து விட்டதால் எனக்கு அவ்வளவு பயம் ஒன்றும் இல்லை. எனக்கு இருக்கும் ஒரே பயம், எப்படி சக மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் தேசிய மொழியில் சரளமாக பேசப்போகிறேன் என்பதுதான்.

தேசியப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்குப் பிரச்சனை இல்லை; நேராக படிவம் ஒன்றுக்குச் சென்றுவிடலாம். தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளிலிருந்து வருபவர்களுக்கு ஒரு வருடம் தண்டனையோ? ஏன் இப்படி என்று கேட்டால், நாங்கள் தேசிய மொழியில் வீக்காம். அதுவும் உண்மைதான்.

பஸ் உள்ளே மிகவும் புழுக்கம். பல மாணவர்கள் நின்றுகொண்டே பயணம் செய்தனர். பஸ் குலுங்கிக் குலுங்கி, பதினைந்து நிமிடங்களில் எங்களை பள்ளி வாசல் கேட் வரையில் கொண்டு வந்து சேர்த்தது.

அந்தக் குண்டுப் பையன் சீக்கிரம் எழுந்திரிப்பான் என்று பார்த்தால், எழுந்திருக்கவே இல்லை. மற்ற மாணவர்கள் எல்லாம் இறங்கிவிட்டனர். அப்போதுதான் அவன் தூங்கிக்கொண்டிருப்பதை கவனித்தேன்.

தூருன்லா! ஃபைதி லொக் லெய்லா! ஃபெய் ச்சாய்!”

ஓட்டுனர் மலாயிலும் சீனத்திலும் சினத்துடன் கத்திய பிறகு குண்டன் எழுந்தான். நல்ல வேளை, எனக்கு அவனை எழுப்பும் வேலை இல்லை. எழுந்திருக்கும் போது என்னைப் பார்த்து ஒரு முறை முறைத்தான். இருந்தும் அவசரமாக கீழே இறங்காமல், நின்று நிதானித்து கால்களை தரையில் தேய்த்துத் தேய்த்துதான் நடந்தான்.

நாங்கள் இறங்கியதும் ஓட்டுனர் மீண்டும் ஏதோ சீனத்தில் எங்களைப் பார்க்காமல் முனகினார். குண்டன் டிரைவரைத் திரும்பிப் பார்த்தான்; பிறகு என்னைப் பார்த்தான். பஸ் ஒரு வித ஆத்திரத் தோணியில் பள்ளியை விட்டுக் கிளம்பியது.

பெர்ஹிம்புனான் எல்லாம் முடிந்த பிறகு நாங்கள் எங்களது வகுப்புக்குச் சென்றோம். நான், பார்த்திபன் மற்றும் அந்தக் குண்டுப் பையன் – மூவரும் ஒரே வகுப்பு Peralihan C. எனக்கு முன்னால் அந்தக் குண்டன் உட்கார்ந்தான்; என் பின்னால் பார்த்திபன் உட்கார்ந்தான்.

அன்றைய தினம் பாடம் தொடங்கப்படாவிட்டாலும் என்னால் பள்ளியில் இருக்கவே பிடிக்கவில்லை. ஆசிரியர்கள் பேசுவது கொஞ்சம் புரிகிறது; நிறைய புரியவில்லை.

வகுப்பில் நான், பார்த்திபன் மற்றும் இரு இந்திய மாணவிகளைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே சீனப் பள்ளியிலிருந்து வந்தவர்களே. அந்த மாணவிகளிடம் ஆரம்பப் பள்ளியிலிருந்தே நான் பேசுவதில்லை. என் தாயாரின் உத்தரவு. ஏன் பேசக் கூடாது என்று கேட்டால், பேசக் கூடாதுன்னா பேசக்கூடாதுன்னு அம்மா திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

ஓர் ஆச்சரியம் என்னவென்றால், அந்தக் குண்டுப் பையன் யாரிடமும் பேசுவதில்லை. நானும் பார்த்திபனும் பேசிக்கொண்டிருந்தால் எங்களையே பார்த்துக்கொண்டிருப்பான். அதுவும் அவனது குண்டு முகமும் சிறிய கண்களும், அவன் எப்போதும் கவலையாக இருப்பது போலவே தோற்றமளித்தன.

மூன்று நாட்கள் ஏறக்குறைய இப்படித்தான் கழிந்தது. குண்டன் பஸ்ஸில் தூங்குவான்; ஓட்டுனர் ஏதோ சீனத்தில் முனகுவார். குண்டன் முறைப்பான்.

குண்டன் ஓட்டுனரைப் பார்த்து முறைப்பதற்குப் பதிலாக என்னைத்தான் பார்த்து முறைப்பான். நான் என்ன பாவம் செய்தேன்? ஆனால் வீட்டிற்குப் புறப்படும் போது அவனுக்குத் தூக்கம் வராது. பஸ்ஸில் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தே வருவான். வேறு யார் பக்கத்திலும் உட்கார மாட்டான். என் பக்கத்தில் மட்டும்தான் உட்காருவான். நின்றுகொண்டு வந்தாலும் என் பக்கத்தில்தான் நிற்பான். பஸ்ஸை விட்டும் சீக்கிரம் இறங்கிவிடுவான். ஓட்டுனரும் பேசாமல் இருப்பார்.

பார்த்திபனோ சொந்தமாக சைக்கிளில் வரத் தொடங்கிவிட்டான். அவன் வீட்டில் இரண்டு சைக்கிள்கள் உள்ளன. எங்கள் வீட்டில் ஒன்றுதான் உள்ளது. எனக்கும் சைக்கிளில் போக ஆசைதான்; ஆனால் எனக்குத்தான் சைக்கிள் ஓட்டத் தெரியாதே.

பார்க்கப் போனால், இப்போதெல்லாம் பார்த்திபனுடன் செலவழிக்கும் நேரத்தை விட குண்டன் சியொங் புக்குடன் செலவழிக்கும் நேரமே அதிகமாகத் தோன்றியது. ஓரிரு வார்த்தைகள்தான் பேசுவான். எனக்குத் தெரிந்த மலாய் கூட அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவன் பேசுவதே பெரிய விஷயம் ஆயிற்றே!

நாங்கள் மூவரும் எப்போதும் போல அன்று கேண்டீனுக்குச் சென்றோம். தினமும் 50 காசுக்கு மீ கறி சாப்பிடுவதே எங்கள் பிழைப்பு. காரணம், மீ கறி அவ்வளவு சுவையாக இருக்கும். அந்தச் சீனக் கிழவன் போடும் மீ கறியின் மணம் பள்ளி முழுவதிலும் வீசும். அதுவும் கேண்டீன் எங்கள் வகுப்புக்கு பக்கத்திலேயே உள்ளதால், இரண்டாவது பாடம் தொடங்கிய உடனேயே பசி எடுத்து விடும்.

சமயத்தில் சியொங் புக் இரண்டு குண்டு மங்கு மீ கறி சாப்பிடுவான். போதவில்லையென்றால் நாசி லெமாக் ஒரு புங்கூஸ் வாங்கிக்கொண்டு திருட்டுத்தனமாக வகுப்பில் சாப்பிடுவான். எப்போ ஆசிரியரிடம் மாட்டப் போகிறான் என்று தெரியாது. நாசி லெமாக் வாசமும் நன்றாகவே இருக்கும்.

பார்த்திபன், சியொங் புக்கினாலே தினமும் அந்த பஸ் டிரைவர் கிட்ட பாட்டு வாங்கிட்டு இருக்கேன்,” மீ கறியில் உள்ள பூச் சோக்கை நன்றாக மென்று கடித்தவாறே சொன்னேன்.

நீ அவனை எழுப்பிவிட வேண்டியதுதானே?” பார்த்திபன் குண்டு மங்கில் இருந்த கறியை உறிஞ்சியவாறே கேட்டான்.

நான் அவனை உலுக்குவேன். அவன் எங்கே எழுந்திரிக்கிறான்? தூங்கிறதே பதினைந்து நிமிஷம்தான். பாவம்… அதான் விட்டுட்றேன்.”

நீ ஏன் அவன் பக்கத்திலே உட்காருறே? பஸ்ஸில் வேற இடமே இல்லையா?”

அவன் நம்ம கூடத்தான் எப்போதும் இருக்கான், அதான்…”

சாப்பிடும் போது தவிர, அவன் வாயே தொறக்கிறது இல்ல. நீங்க ரெண்டு பேரும் என்னாலா கூட்டாளி?”

பேசிக்கொண்டிருக்கும் போது, மீண்டும் அந்த பஸ் ஓட்டுனர் என் நினைவிற்கு வந்தார். அவர் எப்போதும் எங்களைப் பார்த்து முனுமுனுக்கும் அந்த சீனச் சொற்கள் என் நினைவிற்கு வந்தன. சமயங்களில் வகுப்பிலும் சில மாணவர்கள் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதுண்டு. ஆனால் அது என்ன அர்த்தம் என்று மட்டும் புரியவில்லை.

பார்த்திபன், அந்த பஸ் டிரைவர் எப்போதும் எங்களை சீனத்திலேயே திட்டிவிட்டு பிறகு முனகுவார். சியொங் புக்கும் அவரைப் பார்த்து முறைக்கிறதுக்கு பதிலாக என்னைத்தான் பார்த்து முறைப்பான். அந்த டிரைவர் என்னத்த சொல்லி எசுவார்ன்னு புரியில.”

ஏன்? அத புரிஞ்சிக்கிட்டு, நீ அந்த டிரைவர் கூட சண்டை போறப்போகிறியா?”

இல்ல சும்மாத்தான். தெரிஞ்சிக்கிட்டா நல்லதுதானே.”

அது நீ அந்த டிரைவர் கிட்டேயே கேட்க வேண்டியதுதானே. இல்ல சியொங் புக் கிட்ட கேட்க வேண்டியதுதானே.”

இவனுக்கே மலாயே வராது, இதுக்கு மட்டும் எப்படி விளக்கிச் சொல்லுவான்.”

சரி, டிரைவர் சொன்னதை ஞாபகம் வெச்சிருக்கியா?” பார்த்திபன் தன் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து வாயைத் துடைத்தான்.

நான் பஸ் ஓட்டுனர் சொன்னதை சிரமம்பட்டு சொன்னேன். நான் சொன்னவுடன், குண்டு மங்கை மேலே தூக்கியவாரு மீ கறியை முடியும் தருவாயில் சுவைத்துக் கொண்டிருந்த சியொங் புக் எங்களை நோக்கினான்.

ச்சாக்காப் லாகி,” என்றான். அவன் கேட்கும் தோரனையைப் பார்த்தால் என்னை அடிக்க வந்து விடுவான் போல தோன்றியது. அவன் அந்த குண்டு உடம்பை வைத்துக் கொண்டு என் குள்ளமான குச்சி உடம்பை மிதித்தான் என்றால், அதோ கதிதான். நான் பேசாமலேயே இருந்தேன்.

கேட்கிறான்ல, திரும்ப சொல்லுலா!” பார்த்திபன் உசுப்பேற்றி விட்டான்.

இல்ல வேண்டாம்.”

ச்சாக்காப்லா.

அவன்தான் கேட்கிறான்ல. திரும்பச் சொல்லேன்.”

தி .................ய்,”
நானும் அந்த ஐந்து வார்த்தைகள் அடங்கிய வாக்கியத்தை  சீன மொழியில் கஷ்ட்டப்பட்டு உச்சரித்தேன்.

நாங்கள் இருவரும் அறவே நினைக்காத ஒன்றை சியொங் புக் செய்தான்.

ஆம்! விழுந்து விழுந்து சிரித்தான்.

கெனாப்பா ... லூ .... கெத்தாவா?என்று பார்த்திபன் அவனைப் பார்த்துக் கேட்டான்.

சற்று நேரத்தில் சிரிப்பை அடிக்கினான்,
லூ ... ஈக்குட் ச்சாக்காப் இத்தூ டிரைவர்க்கா?என்று கேட்டான்.

யா. அடா சாலாஹ் காஹ்?” என்று வினவினேன்.

டியா ச்சாக்காப் பூசோக்!” என்று ஒரு போடு போட்டான்.

நாங்கள் ஆடியே போயிட்டோம். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துக் கொள்ள, அவன் எங்களின் ஆவலைத் தூண்டிவிட்டான்.

ச்சாக்காப் பூசோக்? அப்பா மீனீங்?பார்த்திபன் கேட்டான்.

தாக் தஹு ச்சாகாப்லா,” என்று அவன் சொல்லியவுடன் மணியும் அடித்து விட்டது.

மறுநாள் தொடர்ந்து, என்னமோ தெரியவில்லை, பஸ்ஸில் அவன் தூங்குவதில்லை. விரைவாகவும் கீழே இறங்கி விடுகின்றான். ஓட்டுனரும் அவனைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். அவரும் எதுவும் பேசுவதில்லை.

பல தடவை அந்த ஓட்டுனர் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை சியொங் புக்கிடம் கேட்டேன். அவன் தெரியாது, சொல்லத் தெரியவில்லை என்றான். பிறகு அதைப் பற்றி கேட்க வேண்டாம் என்று சொல்லி விட்டான். மற்ற சீன மாணவர்களிடம் நான் அவ்வளவாகவும் பேசுவதில்லை. கேட்கவும் வெட்கமாக இருந்தது.

வாடா போலாம்!”

பார்த்திபனும் நானும் நல்ல உடை உடுத்திக் கொண்டோம். என்னமோ எங்களுக்கே பெருநாள் வந்தது போன்று இருந்தது. பார்த்திபன் சைக்கிளை ஓட்டினான். நான் பின்னால் கேரியரில்  சிரமப்பட்டு அமர்ந்து வந்தேன். போலீஸ் எங்களைப் பிடிக்காமல் இருந்தால் சரி.

இதுதான் நான் முதல் தடவையாக சீனர்களின் கம்பத்திற்கு கால் அடி எடுத்து வைக்கின்றேன். வரிசையாக ஒட்டிய பலகை வீடுகள். எங்குப் பார்த்தாலும் பட்டாசு வெடித்த சிதறிய சிகப்பு காகிதங்கள். எல்லா வீடுகளிலும் சிவப்பு சிவப்பாய் அலங்காரங்கள். ஒரே சத்தம் சிரிப்பொலி. ஏதோ கட்டைகளை உருட்டும் சத்தம் கேட்டன.

சியொங் புக் நடு ரோட்டிலேயே எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தான். அவனும் சிவப்பு டீ சட்டை, ஜீன்ஸ் சிலுவார் போட்டு குண்டாக இருந்தாலும் ஜம்மென்று அழகாய் காட்சியளித்தான்.

அவனை நெருங்கியதும், நேற்றே மனப்பாடம் செய்து வைத்திருந்ததை ஒப்புவித்தோம்:
கொங் ஹீ ஃபட் ச்சோய்!என்று உரக்க கூறி, அவன் வீட்டினுள் நுழைந்தோம்.

பிஸ்கட் சாப்பிட்டோம். கச்சான் சாப்பிட்டோம். குவாச்சி, ஆரஞ்சு, இன்னும் சில பெயர் தெரியாத பலகாரங்களைச் சுவைத்தோம்.  பிறகு லைச்சி கோத்தா தண்ணீர் பருகினோம். நல்ல புதிய அனுபவம்.

அவன் வீட்டு குசுனியில் ஆண்களும் பெண்களும் சத்தம் போட்டுக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்து மீண்டும் அதே வார்த்தைகள் கேட்டன. பஸ் ஓட்டுனர் சொன்ன அதே வார்த்தைகள்! ஆனால், கொஞ்சம் சுருக்கமாக கேட்டது.  பெருநாள் அன்றுமா இப்படிப் பேசுவார்கள் என்று எனக்கு தூக்கிவாரிப் போட்டது. பார்த்திபனுக்கு விளங்கியதா என்று எனக்குத் தெரியவில்லை. அவன் கச்சான் சாப்பிடுவதிலும் தொலைக்காட்சி பார்ப்பதிலும் மும்முரமாக இருந்தான்.

பிறகு சியொங் புக்கின் அப்பா எங்களுக்கு அங் பாவ் கொடுத்தார். எங்களின் முதல் அங் பாவ். சிறிய சிவப்பு பையில் உள்ளே ஐம்பது காசு. அந்தக் காசில் என்னென்ன வாங்கலாம் என்று கற்பனை செய்துக் கொண்டிருந்தாலும், சீனப் பெருநாளின் போதும் அவர்கள் வீட்டில் பேசிய வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

அதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?

 




முற்றும்

 

Comments

Popular posts from this blog

சிறுமி நீய்ஹா மதனின் சாதனைகள்

  அனுபவம்      எம்.   பிரபு   நான் தொடக்கப்பள்ளியில் படித்த காலத்திலிருந்தே மணிமேகலை நாயர் அவர்களின் குடும்பத்தை அறிந்திருந்தேன். மணிமேகலையும் அப்போது சிறுமியாக இருந்தார்.    என் தந்தை திரு. எஸ். மாதவன் அவர்கள்   National Union of Plantation Workers ( தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்) அமைப்பில் பொருளாளராகப் பணியாற்றினார். ஒவ்வொரு மாதமும்  அவர் மற்றும் ஓட்டுநர்   திரு. கோவிந்தன் அவர்களுடன் பஹாங்கில் உள்ள பல தோட்டங்களுக்கு Peugeot   404 காரில் சென்று தொழிலாளர்களிடமிருந்து சங்க ச்   சந்தாவை வசூலி ப்பதோடு  தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிவார்கள். அந்த வயதில் அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த மாதச்   சந்தா,  தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும்   நலனுக்காகவும்  மேற்கொள்ளப்பட்டதாக அறிவேன். பொதுவாக தோட்ட பிரதிநிதிகள் மூலம் மாதச் சந்தா சேகரிக்கப்பட்டன. பள்ளி விடுமுறைகளில் நான் மற்றும் என் சகோதரர் ,  தந்தையுடன் அந்தப் பயணங்களின் போது...

PENGECUT

  Cerpen    Oleh: M. Mahendran       “Kita perlu menolong mereka. Mereka dalam kesusahan. Tanpa ditolong, mereka tidak dapat makan.” “Kita tinggal jauh. Biarlah mereka yang tinggal berdekatan menolong.” “Jangan peduli tentang negara yang berdekatan. Mereka di seberang lautan ialah saudara kita. Kita harus menolong mereka.” “Tanpa pertolongan kita, adakah mereka akan mati kebuluran?” “Ya. Jadi hulurkanlah bantuan.” “Bagaimana cara membantu mereka?” “Kita perlu merentasi lautan.” “Tidak bolehkah dengan mengirim wang sahaja?” “Itu tidak cukup. Kita perlu pergi sendiri untuk menghulurkan makanan, pakaian dan bantuan kesihatan. Ini perlu dilakukan sendiri. Barulah kita akan rasa puas dan mereka pun akan gembira.” “Tidak bahayakah merentas lautan?” “Demi menolong saudara kita di situ, apa pun tidak bahaya.” “Jadi, kamu akan ke sana merentas lautan dengan kapal walaupun kamu tidak pernah pergi sebelum ini?” “Kamu boleh ikut kami. Dengan berbuat demikian, kamu akan...

ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ...

  சிறுகதை   எம்.   பிரபு                                       தெரிந்தோ தெரியாமலோ அவன் இந்த க்  கொலையை ச்  செய்து விட்டான். பிணம் நிச்சயம் எழப் போவது இல்லை. நடந்து முடிந்த சம்பவத்தை அவனால் மாற்றி அமைக்க இயலாது. நடந்து விட்டது. அதுதான் உண்மை. அழுதும் பயனில்லை. இந்த ச்   சூழ்நிலையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். காலம் கடந்து விட்டது. இப்போது அவன் செய்ய வேண்டியது ஒன்றுதான். இந்த பி ண த்தை அப்புறப் படுத்துவது. இனியும் தாமதப் படுத்த இயலாது. பிறகு சூழ்நிலை அவன் பக்கம் சார்ந்து இருக்காது . இது அவனுக்கு இரண்டாவது முறை . இதற்கு முன்பு செய்த போது அந்த வீட்டின் பின்னால் பரந்த நிலம் இருந்தது. அங்கு அதை புதைத்தாகி விட்டது. இப்போது நட த்தப்பட்ட  கொலை, அவனுக்கு   கடினமானது. இந்த கொலை தான்  அவன் முன்பு செய்த கொலைகளிலிருந்து மாறுபட்டது.   சங்கடமானதும்  கூட. இந்த வீடமைப்பு ப...