சிறுகதை
எம். பிரபு
எனக்கு அழுகை அழுகையா வருது. என் முகமெல்லாம் கண்ணீர். என்னால சாப்பிடக் கூட முடியில. எல்லாம் என் தவறுதான். என் தவறு இல்லனாலும், அது என் தவறுதான். யார் தவறுனும் சரியா புரிய மாட்டேங்கிறது. நல்லவேளை அப்பாவும் அம்மாவும் என்னை ஏசல, அடிக்கல. அவங்க ஏசியிருந்தாலும் அடிச்சியிருந்தாலும், நான் அழுதிருக்க மாட்டேன். நடந்ததை விட அவங்க ஏச்சு எனக்கு பெருசா படாது.
இப்ப அழுதுக்கிட்டு இருக்கேன். என்னால என் அழுகையை நிறுத்தவே முடியில. மனசு ரொம்ப கனமாவும் கஷ்டமாவும் இருக்கு. தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டே இருக்கேன்.
நான் அழுவாம இருக்கனும்னா, அதுக்கு ஒரே வழி மட்டும்தான் இருக்கு. ஆமா, அது நடந்திட்டா நான் அழுகைய நிறுத்திடுவேன். அது நடக்குமா? அதுக்கு சாமி எனக்கு உதவி செய்யுமா? சாமின்னா என்னை மாதிரி சின்னப் பிள்ளைங்களுக்கு உதவி செய்யனும். நான் தினமும் சாமி கும்பிடுறேன். சாமி எனக்கு நிச்சயம் உதவி செய்யும். ஆமா, நிச்சயம் உதவி செய்யும்.
“செல்வி, அழுவாதே,” இது அம்மா.
“ஆமா, செல்வி. நீ அழுதும் ஒன்னும் ஆகப் போவதில்ல. நீ படிக்கிற வேலையைப் பாரு. அதுதான் இப்போ உனக்கு முக்கியம். அடுத்த வாரம் பரீட்சை வேற வருது,” இது அப்பா.
சாமி என் முன்னுக்கு வந்தா, இப்படித்தான் ஆறுதல் சொல்லுமா? இல்ல என் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமா? ஆறுதல் என் கவலைய தீர்க்காது.
***
நான் பொறந்ததிலிருந்து அப்பா, அம்மா, ரெண்டு அண்ணன்கள் அப்பறம் ஒரு தங்கச்சிப் பாப்பா எல்லாம் இந்தக் கம்பத்துலதான் வசிக்கிறோம். எங்கப் பலகை வீடு அவ்வளவு பெரிசா இல்லாட்டியும், நாங்க எல்லாரும் ரொம்ப சந்தோசமாத்தான் வாழறோம்.
எங்க அப்பா மோட்டார் சைக்கிள்ல தினமும் பக்கத்து சீனன் தோட்டத்துல பால்மரம் சீவப் போவார். அம்மாவும் சமயத்துல போவாங்க.
எங்க வீட்டு முன்னுக்கும் பின்னுக்கும் காய்கறித் தோட்டமெல்லாம் இருக்கு. பழ மரங்களும் நிறைய இருக்கு. ஆடு, கோழி, வாத்து எல்லாம் வளர்க்கிறோம். அம்மாவும் அப்பாவும் ரொம்ப விருப்பபட்டு இந்த வேலையெல்லாம் செய்வாங்க. நானும் அண்ணன்களும் தங்கச்சியும், அப்பா அம்மா கூட மாட சேர்ந்து வேலைப் பார்ப்போம்.
அக்கம் பக்கம் உள்ளவங்க வீடு ரொம்பப் பக்கத்திலும் இல்லாம ரொம்ப தூரமாவும் இல்லாமல்தான் இருக்கும். அவங்களும் எங்களைப் போல சின்ன தோட்டம், கோழி, ஆடு, சில பேர் மாடும் வெச்சிருக்காங்க.
எங்க கம்பத்துக்கு பக்கத்திலேயே சின்னப் பட்டணம் இருக்கு. நாங்க மூனு பேரும் அங்குள்ள தமிழ்ப் பள்ளிக்கூடத்திலதான் படிக்கிறோம். ரெண்டு அண்ணன்களுக்கும் அப்பா சைக்கிள் வாங்கிக் குடுத்திருக்காரு. என்னை சைக்கிள்லதான் ரெண்டு பேரும் மாறி மாறி ஏத்திக்கிட்டுப் போவாங்க, வருவாங்க. தங்கச்சிக்கு இப்பதான் நாலு வயசு. அவள் வீட்லதான் இருப்பாள்.
எனக்குப் பள்ளிக்கூடம் விட்டதும், எப்ப வீட்டுக்கு வருவோம்ன்னு இருக்கும். பள்ளிக்கூடத்தில லட்சுமினும் கவிதானும் ரெண்டு கூட்டாளிங்க இருந்தாலும், எனக்கு எங்க வீட்டில இருக்கும் கூட்டாளியைத்தான் ரொம்பப் பிடிக்கும்.
அவன்தான் கருப்பன் என்கிற கருப்பா.
அப்பா, அம்மா கருப்பன் கூட செலவிடற நேரத்தை விட நான்தான் அவனோட ரொம்ப நேரம் செலவிடுவேன். என்னா ஒன்னு, ராத்திரி அவன் கூட தூங்க முடியாது. அப்பாக்கிட்ட ஒரு நாள் அப்படியும் கேட்டுட்டேன். அப்பா ஏசிட்டார்.
எங்கக் கிட்ட நாய், கோழி எல்லாம் இருந்தாலும் எனக்கு ஆடுகள்தான் பிடிக்கும். எங்கக் கிட்ட நாலு ஆடுகள் இருக்குதுங்க. எல்லாம் வேற வேற நிறத்திலதான் இருக்கும். நாலு ஆடுகள்ள, மூனு ஆடுகள் பழுப்பு வெள்ளை கலந்திருக்கும். கருப்பன் ஒருத்தன்தான் தலையிலிருந்து, உடம்பு, கால் முழுவதும் கருப்பா இருப்பான்.
கருப்பன், அவன் அப்பா போல இருக்கிறான்னு அப்பா சொல்லியிருக்கிறார். கருப்பனுடைய அப்பாவை அப்பா, தீபாவளிக்கு யாருக்கோ வித்துட்டாராம். இல்லாட்டி எங்கக் கிட்ட இப்போ ரெண்டு கருப்பன்கள் இருப்பான்கள்.
கருப்பா அவ்வளவு அழகு. அவன் உடம்பே கருப்பு நிறத்தில அப்படி ஜொலிக்கும், மினுக்கும். அவன் தலையில இருக்கும் அந்த கொம்புங்க ரெண்டும் பின்னால் வளைஞ்சி அத்தனை அழகா இருக்கும். சின்ன வயசிலியே கருப்பனுக்கு முச்சந்தில ஒட்டுக் கடை வச்சிருக்கும் உமார் தாத்தாக்கு உள்ளது போல லேசா தாடியும் வளர்ந்திருச்சி. சின்ன வயசிலேயே கருப்பன் கிழவனாயிட்டான் போல.
கருப்பனும் அவன் கூடப் பிறந்தவங்களும் கொஞ்சம் பெரிசானதும், அப்பா அவன் அம்மாவை, ஒரு தீபாவளிக்கு வெட்டி கறியாக்கிவிட்டார். நான் பயந்து பயந்துதான் சாப்பிட்டேன். ஆட்டுக்கறி ருசியா இருந்தாலும், என்னமோ அதைச் சாப்பிடறது நல்ல செயல் இல்லன்னே எனக்குப் பட்டது. ஆனா அதபத்தி அப்பாக்கிட்ட நான் சொல்லல.
கருப்பனுக்கு கருப்பான்னு பேரு வெச்சதும் நான்தான்னு. அம்மா சொல்லுவாங்க. எனக்கு ஆறு வயசு இருக்கும் போது அவன் பொறந்தானாம். என் தங்கச்சிக்கும் அவனுக்கும் ஒரே வயசு.
கருப்பனை, கருப்பன்னும் கூப்பிடுவேன், கருப்பான்னும் கூப்பிடுவேன். நான் எப்படிக் கூப்பிட்டாலும் என் பக்கத்தில ஓடி வந்திடுவான்.
மத்த ஆடுகளுக்கு யாரும் பேரு வைக்கல. மத்ததெல்லாம் ஏறக்குறைய ஒரே நிறத்தில இருப்பதால எப்படி பேரு வைப்பதாம்?
எங்க வீட்டு நாய் பேரு டைகர். அது என் பெரிய அண்ணன் கூடத்தான் ரொம்பக் கூட்டாளி. சின்ன அண்ணனுக்கு எந்த மிருகமும் அவ்வளவு பிடிக்காது. ஆனால் கோழியை வெட்டிக் கறி வெச்சா நல்லா தின்பான். அம்மா கோழி கறி வெச்சா, ரெண்டு தடவை சோறு போட்டுச் சாப்பிடுவான். எங்க வீட்டுல அவன் ஒருத்தன்தான் குண்டு.
கோழிகளுக்கும், வாத்துகளுக்கும் கூண்டு இருக்கிறதப் போல ஆடுகளுக்கும் அப்பா கொட்டாய் கட்டிவெச்சிருந்தார். அதுலதான் கருப்பனும் மத்த ஆடுகளும் தூங்கும். எனக்கு கருப்பன் அதுல தூங்கறதப் பார்த்தா பாவமா இருக்கும். ஒவ்வோரு சனிக்கிழமையும் அப்பா கூண்டுகளையும் கொட்டாய்களையும் கூட்டிக் கழுவி விடுவார்.
அப்பாவும் அம்மாவும் காலையில வேலைக்கு போறதால கோழிகளுக்கும் ஆடுகளுக்கும் சாப்பாடு மத்தியானமோ அல்லது சாயங்காலம் போலத்தான் கிடைக்கும். கோழிக் கூண்டை தொறந்து விட்டால் கோழிகளும் சேவல்களும் ரெக்கையை படபடனு அடிச்சிக்கிட்டு கொக்கரிச்சிக்கிட்டு வெளியே வந்து மண்தரையில் போட்ட தீனியை சாப்பிடும்.
ஆடுகளுக்குச் சாப்பாடு போடத் தேவை இல்லை. அதுகளோடச் சாப்பாடு எங்க கம்பத்துக் காட்டுப் பக்கம் எல்லா இடத்திலேயும் கிடைக்கும். தண்ணீர் மட்டும் வெச்சா போதும்.
எனக்கு கோழிகளுக்குத் தீனி போடவும் பிடிக்கும் அதுகள் சாப்பிடும் அழகை பார்க்கவும் பிடிக்கும். அதுகள் கொத்திச் சாப்பிடும் அழகே தனிதான்.
சாயங்காலம் நாலு மணிக்கு அப்பா ரேடியோவத் திறந்து ரங்காயான் மேரால ஹிந்திப் பாட்டை சத்தமா போட்டாருனா, அது கருப்பனை மேய்ச்சலுக்கு கூட்டிட்டுப் போக மணியாயிருச்சின்னு அர்த்தம்.
கருப்பன் கொட்டாயை விட்டு வெளியே வந்ததும். நான் அவனை கட்டிப் பிடிச்சி அவன் தலையில முத்தம் கொடுப்பேன்.
மத்த ஆடுகள் மேய்ச்சலுக்கு அதுகள் பாட்டுக்கு போயிடும். கருப்பன் ஒருத்தன்தான் நான் அவன் கூட வருவது பிடிக்கும். அவன் எந்தச் சந்து பொந்தெல்லாம் போகிறானோ நானும் அவன் கூடவே போவேன்.
சின்னச் சின்ன புல், செடி கொடிங்க, இலைங்க, சமயத்துல வாழை இலை வாழைப் பழங்களும் சாப்பிடும். நான் ரொட்டி கொடுத்தாலும் சாப்பிடும். ரொட்டி கொடுத்தா அம்மா ஏசுவார். ஆட்டுக்கு ரொட்டில்லாம் ஒத்துக்காதாம்.
நான் கருப்பனை, கருப்பா!ன்னு சத்தம் போட்டுக் கூப்பிட்டா, சாப்பிட்டுக் கொண்டிருந்ததை விட்டுட்டு “மே ...!”ன்னு கத்திக்கிட்டு என் பக்கத்தில வந்துவிடுவான். அவன் குதிச்சி ஓடி வரும் அழகே ஒரு தனி அழகுதான்.
சனிக்கிழமையும் ஞாயித்துக் கிழமையும் காலை எட்டு மணிக்கே கருப்பனை மேய்ச்சலுக்கு கூட்டிக்கிட்டு போயிருவேன். மத்த ஆடுகளைப் பத்தி எனக்கு கவலை இல்லை.
“உன் கருப்பனைப் பார்த்தா ஆடு மாதிரியே தெரியில, நம்ம டைகர் மாதிரிதான் இருக்கு. என்ன, உன் கருப்பன் எப்பவும் புல் திங்குது, என் டைகர் எப்பவாவது சீக்கு வந்தாத்தான் தின்னும்,” பெரிய அண்ணன் இப்படி அடிக்கடி சொல்வான்.
சின்ன அண்ணனுக்கு இதைப் பத்தியெல்லாம் அக்கறை இல்லை. அம்மாவுடன் சேர்ந்து கோழிகளுக்கு நல்லா தீனி போடுவான். அதுகள் குண்டானா நிறைய இறைச்சி கிடைக்கும்னு நம்பினான். அதுவும் கோழிப் பொரியல் அவனுக்கு அப்படிப் பிடிக்கும்.
அந்தச் சனிக்கிழமை காலையும் எப்போதும் போல, நானும் கருப்பனும் மேய்ச்சலுக்கு போனோம்.
“ரொம்பத் தொலைவா போகாதே, செல்வி!” அம்மா எப்போதும் போல எச்சரித்தார். எனக்கு அந்த எச்சரிப்பு அப்போ ஒன்னும் பெரிசா தெரியில. ஏனோ தானோனுதான் கருப்பனைக் கூட்டிக்கிட்டுப் போனேன். இல்ல ... இல்ல, அவன்தான் என்னைக் கூட்டிக்கிட்டுப் போனான்.
கையில பத்து காசு இருக்கு. வரும் போது உமார் தாத்தா கடையில மிட்டாய்க் கிட்டாய் ஏதாவது வாங்கிக்க வேண்டியதுதான்.
எங்கள் வீட்டிலிருந்து வெளியே போகும் பாதையை அப்பா எப்போதும் துப்புரவா வெச்சிருப்பார். தாசாக் கத்தியால லாலானை வெட்டி, மம்பட்டியால் மண்ணைக் கொத்தி, மழை பேஞ்சா சேறு வராம இருக்க நிறைய கல்லெல்லாம் போட்டு, அப்பா அந்தப் பாதையை நல்லா வச்சிருப்பார். பெரிய பாதை இல்லதான் ஆனால் நடக்க வசதியா இருக்கும். அக்கம் பக்கம் உள்ளவங்க யாரும் அப்படிச் செய்யல. ஏன் செய்யலன்னு எனக்குத் தெரியாது.
மத்த மூனு ஆடுகளும் வேற வேற இடத்துக்கு பரவிக்கிடக்கிற அதுகளோட சாப்பாட்டைச் சாப்பிட போயிருச்சுங்க. கருப்பன் மட்டும் என் முன்னால் மெதுவா நடந்து, கொஞ்சம் துள்ளிக் குதித்து “மே! ... மே!”னு கத்தினான். அவன் என்ன சொல்றான்னு எனக்கு புரியாவிட்டாலும், அவன் குரலைக் கேட்க மிகவும் இனிமையா இருக்கும். அவன் அப்படிக் கத்தும் போது கருப்பனுடைய அண்ணன் தங்கச்சிகளும் தூரத்திலிருந்து கத்தும். மத்த பக்கத்து வீட்டுக்காரங்களோட ஆடுகளும் வேற எங்கிருந்தோ கத்தும். சங்கீதம் போல கேட்கும்.
நான் இப்படி கருப்பனுடன் போகும் போது, கையில நீட்டு மரக்குச்சி ஒன்னு எடுத்துக்குவேன். அதைத் தரையில தட்டித்தட்டி நடப்பது ரொம்ப சந்தோசமா இருக்கும். திடீர்ன்னு பாம்பு கீம்பு வந்துச்சுனா பாதுகாப்பாவும் இருக்கும்ல. இதுவரைக்கும் பாம்பை ரொம்பக் கிட்டப் பார்த்ததில்ல.
கருப்பன் அவனுக்கு பிடிச்ச மரத்தில உள்ள இலைகளையெல்லாம் தாவித்தாவி நல்லா கடிச்சி மென்னு சாப்பிட்டான். அந்த இலையில என்னதான் ருசி கண்டானோ தெரியில. நான் கூட ஒரு தடவ அவன் கடிச்ச இலைய மென்னுப் பார்த்திருக்கேன். ஒரே கசப்பு. துப்பிட்டேன். நல்ல வேள நான் ஆடா பொறக்கல.
என் குட்டைப் பாவாடைப் பாக்கெட்டில் உள்ள அந்தப் பத்துக் காசை தொட்டுப் பார்த்தேன். இன்னும் இருக்கு. சமயத்தில் நானும் கருப்பனும் ஓடற ஓட்டத்தில காசு நழுவி கீழே விழுந்திடும். ரொம்பக் கஷ்டப்பட்டுக் கீழே தேடனும். தேடினாலும் கிடைக்காது.
“கருப்பா, வா உமார் தாத்தா கடைக்கு போலாம்!”
“மே...!” வாயை அசை போடடுக்கொண்டே என் முன்னாடி நின்றான்.
“நான் முன்னுக்கு போறேன். நீ என் பின்னாடி வா.”
கருப்பன் எங்கே என் பேச்சை கேட்கிறது. அவன் முன்னாடி மே! மே! ன்னு கத்திக்கிட்டே போனான். உமார் தாத்தா கடைக்கு வந்ததும் கருப்பன் எப்போதும் போல வெளியே நின்றான். நான் கடைக்குள்ளார போனேன்.
எனக்கு பிடிச்ச அந்த லெமன் மிட்டாயை வாங்கினேன். உள்ளுக்கு மாத்திரை மாதிரி சின்ன சின்னதாய் வட்டமா இருக்கும். அதோட ருசி, நாக்குல பட்ட ஒடனே இனிக்கும் அப்புறம் புளிக்கும். அவ்வளவு ருசி. பத்து காசுக்கு ரெண்டு கிடைக்கும். உள்ளுக்கு நிறைய இருக்கும். கருப்பனுக்கு அதனோட ருசி பிடிக்கல. ஒரு சுருள் பாக்கேட் மிட்டாயைத் தொறந்து கொஞ்சம் வாயில் போட்டுக்கிட்டு சப்பினேன். ம்ம்ம் ... மிச்சத்த பாக்கேட்டுல போட்டுக்கிட்டேன்.
ஒரு பத்து நிமிசம் நாங்க திரும்பப் போய்க் கொண்டிருக்கும் போது, திடீர்னு கருப்பன் முன்னுக்கு என்ன பார்த்தானோ தெரியல வேகமா குதிச்சி காட்டுக்குள்ள ஓடிட்டான்.
“கருப்பா! எங்கப் போற?”
“மே ...மே!” ன்னு அவன் குரல் மட்டும் கேட்குது. ஆனால் கருப்பன் எங்கிருந்து கத்தறான்னு தெரியல.
நான் பயந்துக்கிட்டே அந்த புதருக்குள்ள கருப்பனை தேடப்போனேன், ஆனால் என்னால் ரொம்ப உள்ள போக முடியல. எனக்கு பயம் எடுத்துக்கிச்சி. கை காலெல்லாம் உதற மாதிரி ஆகிடுச்சி. கையிலிருந்த குச்சியும் எங்க போட்டேன்னும் தெரியல. என் சட்டையிலும் பாவாடையிலும் ஏதோ செடியோட முள்ளெல்லாம் குத்திருச்சி.
“கருப்பா!”
“கருப்பா!”
“கருப்பா!”
மொதலாச்சும் அது மே ...ன்னு கத்தும் சத்தம் கேட்டுச்சி. ஆனா ...இப்போ கேட்கவே இல்ல. எனக்கு ரொம்ப பயமாயிருச்சி. உடம்பு வேர்த்து கொட்டிச்சு.
அழுதேன்.
அழுதேன்.
அழுதேன்.
வேகமா கத்தி அழுதுக்கிட்டே ஓடி, வீடு போய்ச் சேர்ந்தேன். வீட்டில உள்ளவங்க எல்லாம் பதறிப்போனாங்க. நான் நடந்ததைச் சொன்னேன். அப்பாவும், அவர் கூட்டாளிங்களும் கருப்பனை போய்த் தேடினாங்க, தேடினாங்க, தேடினாங்க. ஆனால் கிடைக்கல. மறுநாளும் ... இப்படி மூனு நாள் தேடினாங்க.
கருப்பன் கிடைக்கவே இல்ல. எங்கப் போனான்னும் தெரியில. அவனுக்கு என்னா ஆனதுன்னும் தெரியில. அப்பா சொன்னார் யாராவது திருடியிருப்பாங்கன்னு. நான் பார்க்கும் போது அங்க யாருமே இல்லையே!
முற்றும்
நல்ல கதை. இளம் பருவம் ந்னைவிற்கு வந்தது.
ReplyDelete