சிறுகதை
எம். பிரபு
தமிழ்ச்செல்விக்கு பிடிக்கவில்லை, எனக்கும் பிடிக்கவில்லை. பல மாதங்களாக போராடி வந்த நான், தோற்று விட்டேன். தோற்றுப் போனது அவர்கள் முன்னால் நானாக இருக்கலாம், ஆனால் என் உள்ளம் தோற்கவில்லை. என் உள்ளம் இன்னமும் போராடிக் கொண்டுதான் உள்ளது. அதற்கான சரியான தருணம் இதுவரையில் அமையவில்லை. இனியும் அமையுமா என்று எனக்கும் தெரியவில்லை. அமைந்தால் நல்லதே.
“நீங்க போங்க, நான் வரல,” நேற்றிலிருந்து நான் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.
“நான் மட்டும் எப்படி போவது? எல்லாரும் உன்னை விசாரிப்பாங்களே?” அவர் நல்ல உடை உடுத்திக் கிளம்ப ஆயுத்தமாகிக் கொண்டிருந்தார்.
“உங்களுக்கு பிடிக்கும்னா போயிட்டு வாங்க, ஏன் என்னை கூப்பிடுறீங்க?” நான் குசினியில் கூட்டிக்கொண்டே கூறினேன்.
“நம்மல கூப்பிட்டது வெளியாள் இல்லை, உன் மாமா வீட்டுக் குடும்பம்.” அவர் வாசனை திரவியம் அடித்துக் கொண்டே குசினிக்கு வந்து விட்டார்.
“சொந்தக்காரங்க கூப்பிட்டாக்க போயிதான் ஆகனும்னு கட்டாயமா?” குப்பை ஒன்றும் பெரிதாக இல்லை, இருப்பினும் என் கரங்கள் தானே கூட்டிக் கொண்டிருந்தன, அதுதான் ஆச்சர்யம்.
“நீ ஏன் எல்லா விசயத்துக்கும் இப்படி விடாப்பிடியாக இருக்கே?” மீண்டும் அறைக்குச் சென்றார். திரும்ப இங்கேதான் வருவார் எனத் தெரியும்.
“நான் ஏன் பயப்படனும். எனக்கு என்ன விசயதுக்கு கூப்பிட்டாங்கறத பொருத்தது. எனக்கு பிடித்த விசயத்துக்கு கூப்பிட்டாக்க நான் கண்டிப்பா வருவேன்.” என் மண்டைக்கு சுர்ரென்று ஏறியது.
“நீ இப்ப வரலன்னா அவங்க என்ன நினைச்சுக்குவாங்க. நம்ம பத்தி அப்புறம் தப்பா பேசுவாங்க.” தலை முடியை வாரிக்கொண்டே என் அருகில் வந்தார். விட்டால் அடித்து விடுவார் போல. இதுவரைக்கும் அவர் என்னை அடித்ததில்லை. கை மட்டும் ஓங்கட்டும், இருக்கு அவருக்கு.
“பேசினா பேசிட்டுப் போகட்டும். எனக்கு ஒன்னும் ஆகப் போறது இல்லங்க.” நான் அவர் முகத்தைப் பார்க்கவில்லை.
“நீ வரலன்னா கேள்வி மேல கேள்வி கேட்பாங்களே?” இவர்தான் இப்போ கேள்வி மேல் கேள்விக் கேட்டு சின்னப் பையன் மாதிரி நடந்து கொள்கின்றார்.
“எனக்கு அவர்கள் செய்யும் காரியத்துல உடன்பாடு இல்லன்னு பட்டுன்னு சொல்லிட வேண்டியதுதானே. இதுக்கு என்ன இவ்வளவு யோசிக்கிறீங்க?” இவர் ஏன் இப்படி விடாப்பிடியாக அங்கு போக வேண்டும் என்று துள்ளுகின்றார் என்று எனக்குப் புரியவில்லை. என் சொந்த மாமா கூப்பிட்டு நானே போகல.
“நீ சுலபமா சொல்லிட்ட. நான்தானே உன் மாமாவிடம் வாங்கிக் கட்டிக்கனும். சரி என்ன செய்யறது. நான் தமிழ்ச்செல்வியை கூட்டிக்கிட்டு போயிட்டு வரேன்.” முன் கூடத்திற்குச் சென்று தமிழ்ச்செல்வியை தேடினார்.
“வேண்டாம்!”
எல்லோருக்கும் எல்லாவற்றையும் பிடிக்க வேண்டும் என்ற சட்டம் எங்கும் இல்லை. அப்படி ஒரு சட்டம் இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை. அது அப்படித்தான். எல்லா பெண்களும் என் போன்றுதான் இருப்பார்கள் என நம்புகின்றேன், ஆனால், பெரும்பாலும் யாரும் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. எங்கே அவர்களின் விருப்பத்தையோ, கருத்தையோ வெளியில் சொன்னால், பிறர் கோபித்துக் கொண்டு தங்களை தண்டித்து விடுவார்களோ அல்லது ஒதுக்கி விடுவார்களோ என்று பயப்படுகின்றனர். ஊரோடு ஒத்துப் போகின்றனர்.
இதில் என்ன பயப்பட வேண்டிக் கிடக்கு? எது ஒன்று தனக்கு உண்மையாகப் பட்டதோ அதை பயப்படாமல் சொல்லி விட வேண்டும். அது தான் உத்தமம். மற்றவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது என்ற வகையில் நாம் வாழ்ந்து வந்தால், நாம் நம் சுதந்திரத்தை இழந்து விடுகின்றோம்.
மாமா இங்கு வரப் போக இருக்கிறப்ப எல்லாம் அதைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டார். எப்போதும் அவரது அந்தப் புராணம்தான்.
குரு இதைச் சொன்னார், அதைச் சொன்னார். மனிதர்கள் இப்படித்தான் வாழ வேண்டும், அப்படித்தான் வாழ வேண்டும். மஹாகுரு மிகவும் மகிமையானவர். அவரை வணங்கினால் நம் காரியம் எல்லாம் ஜெயம்தான். மஹாகுருவைப் பார்த்தாலே நமக்கு நிம்மதி உண்டாகும், என்பார்.
நான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுவது வழக்கம், அவர் மாமாவாச்சே என்று “ம்” மட்டும் கொட்டுவேன். என் அத்தையும் சளைத்தவர் அல்ல. அவரும் அந்த குரு சம்பந்தமான வீடியோவெல்லாம் அனுப்பி வைப்பார். வீடியோவை அனுப்பி வைப்பதோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. நான் என்ன உணர்கின்றேன் என்றும் கேட்டுத் தொலைப்பார்.
ஆரம்பத்தில் அந்த குரு என்ன பேசுகின்றார் என்று கேட்டு வைப்பேன். அவர் பேசும் கருத்துக்கள் உண்மைதான். இருந்தாலும் எல்லாம் ஏற்கனவே என் சொந்த புத்திக்கு தெரிந்தவற்றைதான் பேசுகின்றார். அதுவும் அந்த மஹாகுரு பேசும் வீடியோக்களில் சொன்ன விசயத்தைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றார். புதிய விசயங்கள் எதுவுமே இல்லை.
அதன் பிறகு அத்தை அனுப்பும் வீடியோக்களை நான் பார்ப்பது இல்லை. நமக்கு ஆயிரத்து எட்டு வேலை இருக்கின்றது அதையெல்லாம் விட்டு விட்டு இந்த மஹாகுரு சொல்லும் புளித்துப் போன விசயத்தையா கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.
“நீங்க ஒன்னும் அவளை கூட்டிக்கிட்டுப் போக வேண்டாம்.” நான் நேரே முன் கூடத்திற்கு வந்து விட்டேன்.
“அவள் வரட்டுமே. அதில் என்ன தவறு?”
தமிழ்ச்செல்வி தன் அப்பாவை கடுப்பாக பார்த்தாள்.
“அவள் ஏற்கனவே சமயப் பாடத்துக்கு போயிட்டு இருக்கா. தமிழ்ப் பள்ளிக்கு அவளை அனுப்பச் சொன்னதுக்கு, சீனப் பள்ளியில் போட்டீங்க. நம் இந்து மத்தத்தை பத்தி இப்ப தெரிஞ்சி தேவாரமெல்லாம் பாடிக்கிட்டு இருக்காள். அது போதும். அவளை நீங்க அங்க கூட்டிகிட்டு போயி நீங்களும் குழம்பி அவளையும் குழப்பி விடப்போறாங்க.”
“இந்த மஹாகுரு ஒன்னும் வேற மதக்காரர் இல்லேயே,” தமிழ்ச் செல்வியை அவர் முறைத்துப் பார்த்தார்.
“அது தெரியும், இருந்தாலும் அவர் பாதை வேற. நம்மை முழுமையாக மாற்றி விடுவார்கள்.”
“குருமார்கள் எல்லாம் நல்லதுக்குத்தான் சொல்வார்கள், இவள் என்னாடானா ...” என முனகிக்கொண்டே வெளியே சென்று AXIA கார் கதவை திறந்து, வேகமாக சாத்தினார். மாமா வீடு காராக்கில் உள்ளது. இங்கிருந்து அங்கு சென்று சேர அறை மணி நேரம் பிடிக்கும்.
நல்ல வேளை தமிழ்ச்செல்வி, தானும் அங்கு செல்ல வேண்டி அடம் பிடிக்கவில்லை. அவளுக்கு எந்த விசயத்திலும் என் போன்றே மிதமாக இருக்கத்தான் பிடிக்கும். அவள் அப்பா போன்று எல்லாவற்றையும் தலையில் போட்டுக் கொண்டு அவதிப் பட பிடிக்காது. எப்போது அவளை சீனப் பள்ளியில் சேர்த்தாரோ அதிலிருந்து தமிழ்ச்செல்வி அவள் அப்பாவுடன் அவ்வளவாக பேசுவதில்லை. நான்கு ஆண்டுகளாகி விட்டன.
என் மாமா குடும்பம் வணங்கும் அந்த மஹாகுரு, இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன, இருப்பினும் அவரது போதனைகள் தொன்றுத் தொட்டு காலம் காலமாக அவரது சீடர்களின் துணை கொண்டு மேலும் பரவலாக உலகத்தில் பரவி வருகின்றன.
உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் மாற்றம் காண வேண்டும் என்பதுதான் அந்த மஹாகுருவின் அவா. அவர் சொல்வது எல்லாம் சரியாக இருந்தாலும், அதைப் பின்பற்ற கட்டாயப் படுத்துவது எனக்குப் பிடிக்காத ஒன்று. என் சுய அறிவுக்கு அவரது போதனைகள் தேவைப்படவில்லை.
இன்று அந்த மஹாகுருவுக்குத்தான் அவர்களது நிலையத்தில் பூஜை. பிறகு, அவரது சொற்பொழிவுகளை அகன்ற திரையில் காண்பித்து, அதன் பின் உணவு வழங்குவார்கள்.
காராக்கிற்கு சென்ற சில நிமிடங்களில் வாட்ஸாப்பில் அவர் மேசெஜ் அனுப்பினார்.
‘நான் உன் மாமா வீடு வந்து சேர்ந்திட்டேன். உன் அத்தையும் மாமாவும் உன்னை மிகவும் கடிந்துக் கொண்டனர். உனக்கு பெரியவர்களிடத்தில் இன்னமும் மரியாதை கொடுக்கத் தெரியவில்லையாம். நீ இப்படியே உன்னை மாற்றிக்கொள்ளவில்லையென்றால் உன் வாழ்கையும் தமிச்செல்வியின் வாழ்கையும் பாழாய்ப் போய்விடுமாம். அதுக்குத்தான் உன்னை கிளம்பி வரச் சொன்னேன். இப்போ நான்தான் பாட்டு வாங்கிக்கிட்டு இருக்கேன்!’
அவர் போட்ட மெசெஜுக்கு நான் ‘சரி’ என்று மட்டுமே பதில் அளித்தேன்.
அவர் அங்கு போய் சேர்ந்து ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை அதற்குள் என் குற்றம் குறைகளை கண்டு என் கணவரிடமே குறைசொல்கின்றனர். என்னை ஏன் அவர்கள் வழிக்கு கட்டாயப் படுத்துகின்றனர்? அங்கு வந்தவர்களுக்கெல்லாம் என் விசயம் தெரிந்திருக்கும். தெரிந்தால் தெரிந்து விட்டுப் போகட்டும். எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை.
மூன்று மணிநேரம் கழித்து இரவு பத்து மணிக்கு அவர் வந்தார். கையில் இரண்டு டப்பாக்கள் கொண்டு வந்தார். ஒரு டப்பாவில் மீ ஹூனும் இன்னொரு டப்பாவில் புளியோதரையும் இருந்தது.
“இந்தா!” என்றார். அவர் முகம் ‘உம்' மென்று இருந்தது. அந்த டப்பாக்களை வாங்கி சாப்பாட்டு மேசையில் வைத்தேன்.
“நான் சாப்டேன். நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க.”
நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர் குளிக்கச் சென்றபின், தமிழ்ச்செல்வி முன் கூடத்திலிருந்து சாப்பாட்டு மேசைக்கு வந்தாள்.
“என்னாமா இது?”
“புளியோதரையும் மீஹூனும். சாப்பிடு.”
“நாமதான் அங்க போகலியேமா, இதைச் சாப்பிடலாமா? அந்த மஹாகுரு கோவிச்சிக்க மாட்டாரா ... மா?” நானே இந்த மாதிரி யோசிக்கவில்லை, என் மகள் யோசித்துப் பேசுகின்றாள்.
“அப்படியெல்லாம் இருக்காது, செல்வி. அந்த மஹாகுரு இறந்து எத்தனையோ வருடங்களாயிருச்சி. இது கடவுள் கொடுத்த உணவுன்னு சாப்பிட்டா, ஒரு பிரச்சனையும் இல்லை.”
மீஹூன் டப்பாவைத் திறந்துப் பார்த்த தமிழ்ச்செல்வி,”என்னம்மா மீஹூன் கோசமா இருக்கு? உள்ளுக்கு, முட்டை, நெத்திலி கித்திலி, வெங்காயம், பூண்டு ஒன்னுமே காணாம்? கடுகு கீரையும், தவ்வுதான் இருக்கு.”
“அவங்க அப்படித்தான் சமைப்பாங்க. ருசியா இல்லனா சில்லி சோஸ் போட்டு சாப்பிட்டுக்கோ.”
“வேண்டாம்மா, நான் புளியோதரையே சாப்பிடுறேன்.”
பிறகு நான்தான் மீஹூனை சிறிதளவு சாப்பிட்டேன். வெறும் மீஹூன் சாப்பிட்டு எனக்கும் பழக்கம் இல்லாததால் மீதத்தை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தேன். பரவாயில்லையே மனுசன், இந்த மாதிரி சாப்பாடெல்லாம் இப்போது சாப்பிடுகின்றார். எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
இரண்டு மாதங்கள் அந்த நிலையத்திற்குச் சென்று வந்த அவர் சுத்த சைவமாகவே மாறிவிட்டார். வெங்காயம் பூண்டெல்லாம் போடாமல் சமைக்கச் சொல்வார். நான் அந்த மாதிரியெல்லாம் சமைக்க முடியாது என்றேன். அவருக்கு மட்டும் சைவமாக சமைத்தேன். சிரமமாகத்தான் இருந்தது, என்ன செய்வது.
என் அத்தை அடிக்கடி அவர்களது நிலையத்துக்கு என்னையும் தமிழ்ச்செல்வியையும் கட்டாயப்படுத்தி போன் செய்து அழைத்துக் கொண்டிருப்பார். நான் வரமாட்டேன் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்டபாடில்லை.
பிறகு மாமாவும் அத்தையும் நேரடியாக வந்தனர்.
“மஹா குரு சொல்றபடி கேட்டு நடந்தா எல்லாம் நன்மையும் கிடைக்கும்.”
“நான் கடவுளை நம்புறேன், அது போதும் அத்தை. எதுக்கு குருமார்கள் எல்லாம்,” என்றேன். என் அத்தைக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“கடவுள் நேரில் வருவாரா? இல்லைதானே? அதனால்தான் கடவுள் நமக்கு குருமார்களை அனுப்பி வைத்துள்ளார். குருமார்களின் வழி நம் வாழ்க்கையை செம்மை படுத்த கடவுள் அவர்களை நமக்காகவே அனுப்பி வைத்துள்ளார்.”
“எனக்குத் தேவை இல்லை அத்தை. எனக்கு கடவுளைத் தெரியும், கடவுளுக்கு என்னைத் தெரியும். அது போதும்.”
“என்னா நீ மஹாகுருவை மதிக்கவே மாட்டேன்கிற!”
உடனே அத்தை அவரிடம், எனக்கு புத்திமதி கூறி என்னையும் தமிழ்ச்செல்வியையும் அந்த மஹாகுருவை வழிபட கட்டாயம் அவர்களின் நிலையத்திற்கு அழைத்து வர உத்தரவு பிறப்பித்தார். மஹாகுரு வழிநடத்தும் முறைகளை பின்பற்றி வாழ்க்கையில் நடந்துக் கொள்ள வேண்டும் என ஆணையிட்டார். பிறகு அவருக்கான பூஜைகளையும் எங்கள் வீட்டிலேயே நடத்த வேண்டும் என்றார்.
எனக்கு மயக்கமே வருவது போன்று இருந்தது.
அதன் பிறகு அவரும் தினசரி நச்சரித்ததால் நானும் அவர்கள் போன்றே மாற வேண்டியதாயிற்று. நான் அந்த மஹாகுரு சொற்படி நடந்திராவிட்டால் நான் என் கணவர் சொற்பேச்சு கேட்காதவள் என்றாகி விடுவேனாம்.
தமிழ்ச்செல்விக்கு பிடிக்கவில்லை, எனக்கும் பிடிக்கவில்லை. பல மாதங்களாக போராடி வந்த நான், தோற்று விட்டேன். தோற்றுப் போனது அவர்கள் முன்னால் நானாக இருக்கலாம், ஆனால் என் உள்ளம் தோற்கவில்லை. என் உள்ளம் இன்னமும் போராடிக் கொண்டுதான் உள்ளது. அதற்கான சரியான தருணம் இதுவரையில் அமையவில்லை. இனியும் அமையுமா என்று எனக்கும் தெரியவில்லை. அமைந்தால் நல்லதே.
முற்றும்
Comments
Post a Comment