அனுபவம்
எம். பிரபு
படிப்பதும், எழுதுவதும் எனது ஆரம்பப் பள்ளிக் காலக்கட்டத்திலேயே தோன்றியதாகும். மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே எனது முதல் படைப்பை வாசகர்களுக்கு வழங்கிவிட்டேன். அதாவது, பள்ளி ஆண்டு மலருக்கு ஆங்கிலத்தில் ‘My Dog’ என்ற சிறிய கட்டுரையை எழுதினேன். ஆறாம் வகுப்பு வரை ஆங்கிலம், தேசிய மொழி மற்றும் தமிழிலும் எழுதி வந்தேன். இது இடைநிலைப் பள்ளி வரையில் தொடர்ந்தது.
வீட்டில் எங்கள் தகப்பனார் திரு. எஸ். மாதவன் வார இதழ்கள், மாத இதழ்கள் வாங்கிப் போடுவார். அம்மா, திருமதி ஆ. அம்பிகாவும் அவருக்குப் பிடித்த பக்தி சம்பந்தமான புத்தகங்களுடன் குமுதம் மற்றும் எங்களுக்கு அம்புலிமாமா போன்ற புத்தகங்களையும் வாங்கிப் படிக்க வைப்பார்.
தேசியப் பள்ளியில் பயின்றதால், எங்கள் தாயார் அதே பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி, பள்ளியிலும் வீட்டிலும் தமிழ் மொழி போதித்தார். அதனால் எழுத்துக் கூட்டி கூட்டி, மதம், சமயம் தொடர்பான புத்தகங்களைத் தவிர்த்து மற்ற எல்லா புத்தகங்களிலும் உள்ள பிடித்த அம்சங்களை மட்டும் வாசித்து விடுவேன். அதில் Indian Movie News மிகவும் பிடித்த இதழாகும்.
எனது பத்தாவது வயதில், Enid Blytonனின் மலாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுவர் நாவலை முதல் முதலாக வாசித்தேன். அது என் பிறந்தநாளுக்கான அன்பளிப்பாக எனது பெரியப்பா மகள் (அக்காள்) கொடுத்தார்.
எந்த மொழியில் புத்தகங்கள் படித்தாலும், அந்தச் சிறிய வயதில் அவற்றை புரிந்துகொள்ள சிரமமாகவே இருந்தது. நிறைய புதிய சொற்கள் ததும்பி வழிந்தன. இருந்தாலும் படித்தேன். பாடப் புத்தகங்களைக் காட்டிலும் கதைப் புத்தகங்களும், மாத–வார இதழ்களுமே படிக்க ஆர்வத்தைத் தூண்டின.
இடைநிலைப் பள்ளிக்குச் சென்ற பின்பு, நூலகத்தில் கிடைத்த மலாய் மற்றும் ஆங்கில சிறுவர் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்தேன்.
என் தகப்பனார் ஆரம்பக் காலங்களில் Indian Movie News இதழ்களுக்கு கட்டுரைகள் எழுதியவர். என் சித்தி திருமதி சாரதா கண்ணன் வானொலி நாடகங்கள் மற்றும் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தார். அதனூடே என் மூத்த சகோதரர் எம். மகேஸ்வரன் (மெட், செந்தூல்) அந்தக் காலகட்டத்தில் கட்டுரைகள் மற்றும் கேலிச்சித்திரங்கள் வரைந்து தீவிரமாக பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.
அதன் தாக்கம் எனக்கும் ஏற்பட்டதால், 1983 ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்ப் பத்திரிகைகள் மற்றும் மாத இதழ்களுக்கு வாசகர் கடிதங்கள், கேள்வி–பதில்கள் மற்றும் சிறு சிறு துனுக்குகளை வாரா வாரம் எழுதினேன். பத்திரிகைகளில் என் எழுத்துகளுக்குக் கீழ் என் பெயரைப் படிக்கும் போது அளவில்லா சந்தோஷம் ஏற்பட்டது. 1984 மற்றும் 1985 ஆண்டுகள் ஒரு பொற்காலம் எனலாம். எப்போது ஞாயிறு வரும் என்ற காத்திருப்பு மிகவும் இன்பகரமான ஓர் அனுபவமாக இருந்தது. நிறைய எழுதிய காலம் அது.
1984 ஆம் ஆண்டு படிவம் நான்கு பயிலும் போது இலக்கிய வகுப்பு கிடைத்தது. அந்த 16 வயதில்தான் நான் முதல்முறையாக பெரியவர்களுக்கான நாவல்கள் மற்றும் சிறுகதைகளை தேசிய மொழியில் பயின்றேன்.
நாவல்கள் மற்றும் சிறுகதைகள் ஈர்த்தது போன்று கவிதைகள் மீது இரண்டு மொழிகளிலும் பெரிதான ஆர்வம் கொள்ளவில்லை. ஆனால் வைரமுத்து அல்லது ஏ. சமாட் சாயிட் கவிதைகள் வாசிக்கப்படும்போது கேட்பேன். அல்லது அதுபோன்று யாராவது வாசித்தால் கேட்கப் பிடிக்கும்.
1985 தொடங்கி பெந்தோங் பொது நூலகத்தில் நிறைய தேசிய மொழி புத்தகங்கள் இரவல் வாங்கிப் படித்தேன். பிறகு வேலைக்குச் சென்ற பின் 90க்களில் இரண்டு மாதத்திற்கு ஒரு தடவையாவது குவலா லும்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள மனோன்மணி விலாஸுக்குச் சென்று இரண்டு தமிழ் நாவல்களையாவது வாங்கி வந்து விடுவேன்.
நான் புத்தகங்ககளை வீட்டில் படித்ததை விட உணவகத்தில் அல்லது கோப்பி கடைகளில் உட்கார்ந்து படித்ததே அதிகம். பெரும்பாலும் வேலை ஓய்வு நேரத்தின் போதுதான் நான் படிக்கும் நேரமாகும்.
1987 ஆம் ஆண்டு எனது முதல் சிறுகதை ‘ஏழ்மையின் விளையாட்டு’ என்ற தலைப்பில் மயில் வார இதழில் பிரசுரமானது. அந்தக் கதைக்கு ஓவியர் ஜோலி மிகவும் அழகாக ஓவியம் தீட்டியிருந்தார். அதே ஆண்டு DBP–Malayan Banking ஏற்பாடு செய்த மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கான சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு ‘Karupaya’ எனும் கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது.
(தமிழ் நேசன் 24/9/1988)
DBP ஏற்பாடு செய்த தேசிய மொழி சிறுகதைப் போட்டிகளில் மூன்று முறை பரிசு வென்றுள்ளேன். அவை புத்தகமாகவும் டேவான் பஹாசா வெளியிட்டுள்ளது. தமிழில் எந்தக் கதைக்கும் இதுவரை பரிசு கிடைத்ததில்லை. போட்டிகளில் கலந்து கொண்டதும் மிகவும் குறைவு.
முன்பெல்லாம் ஒரு சிறுகதையை எழுதி முடிக்க குறைந்தது இரண்டு வாரம் அல்லது ஒரு மாதம் கூட எடுத்துக் கொள்வேன். தற்போது அதிக ஓய்வு உள்ளதால் ஒரே நாளில் கூட நான் எழுதி முடித்து விடுவதுண்டு.
எனது தேசிய மொழி சிறுகதைகள் Kavyan தயாரித்த எல்லா புத்தகங்களிலும் பிற எழுத்தாளர்களின் படைப்புகளுடன் இடம்பெற்றுள்ளன. Karupaya (2018) சிறுகதைத் தொகுப்பு எனது முதல் நூலாகும். அதன் பிறகு தலைவர் (2021) எனும் நான் எழுதிய தமிழ் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. மறைந்த எழுத்தாளர் மா. இராமையா அவர்களின் சிறுகதைகளை தேசிய மொழியில் நான் மொழிபெயர்த்து Mimpi dan Impian (2013) என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது.
1984 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரையில் எழுதிக் கொண்டிருப்பதற்கான காரணம் ஆர்வம்தான். இருந்தாலும் 1990க்களில் நான் அவ்வளவாக எழுதவில்லை. ஓய்வு இருந்தால் அல்லது எழுத வேண்டும் என்ற ஆசை வந்தால் மட்டுமே எழுதுவேன்.
அதிலும் Kavyan தோற்றுவிப்பாளர் திரு. உதய சங்கர் எஸ் பி அவர்களுக்கு நன்றி செலுத்துவது எனது கடமையாகும். அவர் ஏற்பாடு செய்த பயிற்சிப் பட்டறைகள், கொடுத்த அறிவுரைகள் மற்றும் அவர் அளித்த ஊக்குவிப்புகளாலேயே நான் எழுச்சிப் பெற்று இன்று வரை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
எழுத்துலகில் பெரும் சாதனை புரிய வேண்டும், எழுதுவது ஒரு வேள்வி போன்றதாகும் என்ற வகையறாவைச் சேர்ந்தவன் அல்ல நான். படிப்பதும் எழுதுவதும் எனக்குப் பிடித்திருக்கின்றது; அதனால் நான் எழுதுகின்றேன். என் படைப்பை விரும்பிப் படிக்கின்றவர்கள் நிச்சயம் படிப்பார்கள்.
தேசிய மொழியிலும் எழுதுவதால், நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இந்திய வம்சாவளியினரின் வாழ்க்கை சூழ்நிலை, கலை மற்றும் கலாச்சாரத்தை புரிந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். அதற்கு எனது எழுத்துக்களும் துணை புரிந்துள்ளன. இந்திய எழுத்தாளர்கள் (இளைஞர்கள்) தேசிய மொழியில் ஆர்வதோடும் முழு மூச்சோசோடு எழுத முன் வரவேண்டும்.
நான் படைக்கும் படைப்புகளில் ஏதாவது ஒரு சிறு கருத்தாவது பொதிந்திருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்துகொண்டுதான் இதுநாள் வரையில் எழுதிக் கொண்டிருக்கின்றேன். கதை எழுதும் பாணியிலும் ஒவ்வொரு கதைக்கும் வித்தியாசம் காட்ட சிறிதளவு முயற்சிப்பதுண்டு.
எனது படைப்புகள் தற்போது தென்றல், வானம்பாடி வார இதழ்களில் இடம்பெற்று வருகின்றன. அதோடு Sastera Kavyan, Eksentrika, Cukaria மற்றும் mahendran28.blogspot வலைப்பூவிலும் தொடர்ந்து சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதிக் கொண்டு வருகின்றேன்.
வாரத்திற்கு ஒரு எழுத்துப் படிவம் படைப்பதுதான் தற்போது எனது விருப்பமான செயல். அதன்படியே செயலாற்றி வருகின்றேன்.
(உத்துசான் மலேசியா 24/1/2026)





Comments
Post a Comment