கட்டுரை
எம். பிரபு
11 மற்றும் 12 ஜனவரி 2026 தொடங்கி எல்லா மாணவர்களும் மீண்டும் பள்ளிக்குச் சென்றிருப்பார்கள். அடுத்த ஆண்டில் பழையபடி ஜனவரி முதல் வாரத்திலேயே பள்ளிகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. முன்பெல்லாம் நவம்பர் மாத நடுவிலேயே பள்ளி விடுமுறை விடப்பட்டு, டிசம்பர் இறுதி வரை அது தொடர்ந்தது. ஆனால் தற்போது பெருநாள் காலங்களில் அதிகப்படியான விடுமுறை வழங்கப்படுவதால், இறுதி தவணை விடுமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஆகவே, பெருநாள் கால விடுமுறைகளை குறைப்பது மிகவும் அவசியமாகிறது. முன்பெல்லாம் தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டது. ஹரி ராயா மற்றும் சீனப் பெருநாட்களுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை இருந்தது. இந்த நடைமுறை மீண்டும் அமலுக்கு வர வேண்டும்.
இந்த ஆண்டிலிருந்து நம் மாணவர்கள் 100% உருமாற்றம் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கடந்த காலச் சம்பவங்கள் பலவும் கசப்பான அனுபவங்களாக இருந்தன. அவை இனி தொடராமல் இருக்க பலவிதமான முன்முயற்சிகள் அவசியம். மாணவர்கள் முழு மனதோடு விரும்பிப் பள்ளிக்குச் செல்ல, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்ல அரசாங்கமும் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.
ஏனோ பள்ளிக்குச் சென்றோம், பாடம் படித்தோம், நண்பர்களைப் பார்த்தோம், வீடு திரும்பினோம் என்ற நிலை மட்டுமே இருந்தால் அதில் எந்தப் பயனும் இல்லை. பள்ளிகள் முழுமையான வசதிகளுடன் இயங்க வேண்டும். தூய்மையும் முழு பாதுகாப்பும் 100% அவசியமானவை. இது 2026 ஆம் ஆண்டு. இருந்தும் இன்னமும் சில பள்ளிகள் 1960களில் இருந்ததுபோலவே செயல்படுவது வருத்தமளிக்கிறது.
குறிப்பாக பல தமிழ்ப்பள்ளிகளில் சிற்றுண்டிச்சாலைகள் இல்லாத நிலை காணப்படுகிறது. அதற்கு நான் வாழ்ந்து கொண்டிருக்கும் பெந்தோங் நகரத் தமிழ்ப்பள்ளியே ஓர் உதாரணம். கடந்த ஓர் ஆண்டாக இங்கு சிற்றுண்டிச்சாலை நடத்தப்படவில்லை. அதைச் சரிசெய்ய என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதும் தெரியவில்லை. மாணவர்கள் தினமும் வீட்டிலிருந்து ரொட்டி அல்லது பிஸ்கட் போன்றவற்றைக் கொண்டு வந்து உண்பதாகக் கேள்வி. அக்கறை கொண்ட தாய்மார்கள் விடியற்காலையிலேயே சிற்றுண்டிகளைத் தயாரித்து கொடுத்து விடுவதும் வழக்கமாக உள்ளது. இந்த 2026 ஆண்டில் மாற்றம் கண்டால் நல்லது.
RMT திட்டத்தில் உள்ள மாணவர்கள் ஓரளவு பயன் பெறுகிறார்கள். முடிந்தால் எல்லா மாணவர்களுக்கும் எந்தப் பாரபட்சமும் இன்றி இலவச உணவு வழங்கப்பட வேண்டும். அது ஆரோக்கியமான உணவாக இருப்பது மிகவும் அவசியம்.
பாடம் சொல்லிக் கொடுக்கும் பொறுப்புகளை முழுவதுமாக ஆசிரியர்களின் தோள்களில் மட்டும் சுமத்தாமல், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் முழுப் பங்கு வகிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு மணி நேரம் குழந்தைகளுடன் அமர்ந்து பாடங்களைப் பார்ப்பது அவசியம். அவர்களுக்கு தேவையான பயிற்சிப் புத்தகங்களும் கதைப் புத்தகங்களும் வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும்.
இது இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் பொருந்தும். தேவையானால் பள்ளிக்குப் பிறகு துணை வகுப்புகளுக்கு அனுப்புவதும் பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அன்புடன் கூர்ந்து கவனிப்பது அவசியம். தவறு செய்தால் தண்டனையும் அளிக்க வேண்டும். அதற்கான உரிமை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
தினசரி உணவு அருந்தும் வேளைகளில் நண்பர்கள் போன்று குழந்தைகளுடன் உரையாடுவது மிகவும் அவசியம். அன்புடன் கலந்த அறிவுரைகள் தினமும் வழங்கப்பட வேண்டும். பல இன நண்பர்களுடன் பழக அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில் சமய விஷயங்களை மிதமாக போதிப்பதோடு, பிற இனங்களின் சமயங்களையும் மதிக்க பெற்றோர்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும். இது நாட்டிலுள்ள அனைத்து இனப் பெற்றோர்களுக்கும் பொருந்தும்.
தீயவர்களுடன் நட்பு பாராட்ட வேண்டாம் என்று அவ்வப்போது வலியுறுத்துவது மிக முக்கியமான கடமையாகும். இது அவர்களை குண்டர் கும்பல்களிடமிருந்து தூரமாக வைத்திருக்க உதவும். நல்லவற்றை தினமும் போதித்தாலே நம் மாணவர்களை நாட்டின் சிறந்த குடிமக்களாக உருவாக்க முடியும்.
நம் நாட்டில் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைத்தால் கவலைக்கிடமாக உள்ளது. இன, மத உணர்வுகளை முதன்மைப்படுத்தாமல் எல்லோருக்கும் சம உரிமை வழங்கி நாட்டை முன்னேற்ற வேண்டும்.
இன வாரியான கல்வித் திட்டங்களை அகற்றி, நாட்டின் முக்கிய மொழிகளை எல்லா இன மாணவர்களுக்கும் கட்டாயப் பாடமாக்கி தேர்வும் எழுத வைக்க வேண்டும். பிறர் கலை கலாச்சாரங்களயும் யாவரும் அறிந்து வைத்த்திருக்க வேண்டியது அவசியம்.
புதுமையான மலேசியர்களை உருவாக்கம் பெற இதுவே சிறந்த திட்டம்.
ஆரம்பப் பள்ளி முதல் இடைநிலை வரை விவசாயம், கைத்தொழில், ஆராய்ச்சி மற்றும் வியாபாரம் தொடர்பான கல்வி கற்பிக்கப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். சமயக் கல்வியை பள்ளிகளில் போதிப்பது அவசியமற்றது; அவற்றை சனி, ஞாயிறு நாட்களில் வெளியே கற்றாலே சிறந்தது.
ஏற்கனவே இருந்த தேர்வுகளை மீண்டும் புது விதத்தில் கொண்டு வர உத்தேசிக்க வேண்டும்.
புத்திசாலி மாணவர்களை அடையாளம் கண்டு, எல்லோரையும் உயர்கல்வி பயில ஊக்குவிக்க வேண்டும். எந்த நிலையிலும் பாரபட்சம் இருக்கக் கூடாது. இவற்றை ஏற்காதவர்களுக்கு தக்க தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.
மது, மற்றும் புகைக்கு முழுத் தடை விதிக்க வேண்டும்.
இவை அனைத்தும் சாத்தியமாக வேண்டுமெனில், மாணவர்களும் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் மலேசியாவை முன்னுதாரணமாகக் கொண்டு பிற நாடுகள் கல்வி, இன ஒற்றுமை மற்றும் சமூக வளர்ச்சி ஆகிய துறைகளில் முன்னேறும் சூழல் உருவாக வேண்டும். மாணவர்களை மையமாகக் கொண்ட திட்டங்களே நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையும்.


Comments
Post a Comment