கட்டுரை
எம். பிரபு
வெளியிடங்களுக்குச் சென்றால், நம்மில் பெரும்பாலோர் குப்பைகளைக் குப்பைத் தொட்டியைத் தவிர்த்துக் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளைப் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம். பொது இடமும் நம் சொந்த வீடும் ஒன்று என்ற மனம் ஏற்றுக் கொள்ளாததால் வந்த வினை இது.
சிறு துண்டு காகிதமானாலும் அதைக் கீழே வீசினால், அது குப்பையே!
இதுகூட புரியாதவர்களாக இன்னமும் மனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்து வருவது மிகவும் அதிசயமே. அதுவும் நம் நாட்டு மக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எங்கே DILARANG MEMBUANG SAMPAH DI SINI! என்று எழுதி ஒட்டியிருக்குமோ, அங்குதான் குப்பைகளைக் கொட்டி விட்டு மறு வேலைப் பார்ப்பார்கள்.
இந்த வருடம் ‘மலேசியாவிற்கு வருகை தாருங்கள்’ ஆண்டாகும். அதனால்தான் இந்த 2026ம் வருடம் மலேசியாவில் பல புதிய சட்டங்கள் அமலாக்கப் பட்டுள்ளன. பெரும்பாலான சட்டத்திட்டங்கள் நாட்டு மக்களை சிரமப்படுத்துவது போன்றுத் தோற்றமளித்தாலும், சற்றுக் கூர்ந்துக் கவனித்தால், எல்லாம் நன்மைக்கே என்று புரியவரும்.
அந்த வகையில், பொது இடங்களில் குப்பைப் போடுபவர்களுக்கு 12 மணி நேரம் பொது இடத்தில் தனிச் சீருடை அணிவித்து பிறர் பார்க்கும்படி துப்புரவுப் பணி மேற்கொள்ளும் தண்டனையை வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அரசாங்க அமைச்சு வழங்கவுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் RM2000 லிருந்து RM10,000 வரையில் அபராதம் விதிக்கப்படும். அது எந்த விதத்திலான குப்பை, எந்த இடம் போன்று வகைபடுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தண்டனை மலேசியாவிற்குள் சுற்றுப்பயணிகளாக வரும் வெளிநாட்டினர்களுக்கும், இங்கு வேலைப் பார்க்கும் வெளிநாட்டவர்க்கும் பொருந்தும்.
இந்தச் செயல்த்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்த அதன் அமைச்சர் திரு. ஙா கோர் மிங் (Nga Kor Ming) அவர்களை வெகுவாக பாராட்டியே ஆக வேண்டும்.
மிகவும் தாமதமாக நம் நாட்டில் இது போன்றதொரு சட்டம் அமலாக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டுத் தொடக்கம், இனி வரும் காலங்களில் நம் நாடு தூய்மையான ஒரு நாடாக உருவாக்கம் பெரும் என்று கிஞ்சிற்றும் ஐயமில்லை.
ஜப்பான் நாட்டு மக்கள் போன்று ஏன் நம் நாட்டு மக்கள் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை? இது நம்முடன் தொன்றுத் தொட்டு வந்த வியாதியாக கருத வேண்டியதாக உள்ளது.
வீட்டைச் சுத்தமாகவும் அதில் உள்ள குப்பைகளை அகற்றத் தெரிந்த நமக்கு, ஏன் பொது இடங்களில் அத்தகைய கடமையணர்ச்சிக் குன்றியவர்களாக மாறி விடுகின்றோம்? அதுதான் மிகவும் ஆச்சர்யம் அளிக்கின்றது.
தூய்மை, சுகாதாரம் பற்றிய ஒழுக்கத்தை பிள்ளைகளிடத்தில், அவர்கள் பாலர்களாக இருக்கும் பிராயத்திலேயே கற்றுக் கொடுத்திட வேண்டும். வீட்டில் மட்டும் அல்லாது, பள்ளிக்கூடங்களிலும் வகுப்பறை, கழிப்பறை, திடல், சிற்றுண்டிச்சாலைகளைத் தூய்மையாக வைத்திருக்க ஆசிரியர்களும் மாணவர்களுடன் சேர்ந்து தினசரி களத்தில் இறங்க வேண்டும்.
குடும்பத்தோடு வெளியே செல்லும் போது தனியே குப்பைப் பையை எங்குச் சென்றாலும் எடுத்துச் செல்லவேண்டும். காரில் பயணிக்கும் போது குப்பைகளை வெளியே வீசாமல், பைக்குள் போட்டு விடலாம். எங்கு குப்பைத்தொட்டி தென்படுகின்றதோ பிறகு அவற்றை அங்கு போட்டு விடலாம்.
பெரும்பாலன நல்ல, தீய விசயங்களை எல்லா பிள்ளைகளும் பெற்றோர்களிடமிருந்துதான் கற்றுக் கொள்கின்றனர். பெற்றோர்கள் சரியாக நடந்துக் கொண்டால், பிள்ளைகளும் அதன்படியே பின்பற்றுவர்.
ஆக, தண்டனையிலிருந்து தப்பிக்க குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடுவதைக் காட்டிலும், நம் நாட்டை நம் வீடு போன்று பாதுகாக்கும் எண்ணம் எல்லா மலேசியக் குடிமகனுக்குள்ளும் உருவாக வேண்டும்.
இந்த அமலாக்கம் ஓரிரு மாதங்கள் மட்டுமே சூடுப் பிடித்துப் பின் பொசுங்கி விடாமல், அதன் அதிகாரிகள் தீவிரமாக களத்தில் இறங்கி வேலைப் பார்ப்பது மிகவும் அவசியம்.
தண்டிக்கப் பட்டவர்களும் வீண் விதண்டாவிவாதம் செய்யாமல், கொடுத்த தண்டனையை ஏற்றுக் கொண்டு மற்றவர்களுக்குப் பாடமாக இருந்து அவர்களும் அதன் பிறகு திருந்தி தூய்மையான மலேசியாவை உருவாக்க ஆவனச் செய்ய வேண்டும்.
ஆக ...
JANGAN BUANG SAMPAH MERATA-RATA!
பின்னிருக்கையில் இருப்போரும் பாதுகாப்பு வார்பட்டையை அணிவது கட்டாயமாக்கப்படும் என்ற சட்டத்தைப்போல் நீர்த்துப் போகாமல் இருந்தால் சரி. ஜப்பான் வரையெல்லாம் போகவேண்டாம். அண்டை நாடான சிங்கப்பூர் போனால்கூட போதும். 🤦
ReplyDelete