கட்டுரை
எம். பிரபு
கடந்த சில ஆண்டுகளாக, நம் நாட்டில் புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கான காரணங்களை நாமும் நன்றாகவே அறிவோம்.
தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் கூறியதன்படி, மலேசிய தேசிய நூலகம் நடத்திய ஆய்வில் 57.7% மலேசியர்கள் வாசிப்பை விரும்புகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுளது. ஆனால் அவர்கள் உண்மையிலேயே புத்தகங்களைப் படிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
எனது பார்வையில், நம்மிடம் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் ஒன்றும் பெரிதாக இல்லை. சிறியவயதிலிருந்து எழுத்துக்களை கற்றுக்கொள்கின்றோம், ஆனால் வயது ஆக ஆக கற்றுக் கொண்டதை புறக்கணிக்கின்றோம். தண்டத்திற்குத்தானே பள்ளியில் அத்தனை வருடங்கள் பள்ளியில் பயின்றோம்?
மாற்றம் தேவை!
மலேசியர்கள் வாசிப்பில் தொடர்ந்து ஆர்வம் காட்ட வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு குடிமகனும், குழந்தை பருவத்திலிருந்தே புத்தகங்களை நேசிக்க வேண்டும். ஆனால் உண்மையில், நம் நாட்டில் வாசிப்புக்கு ஊக்கம் தரும் சூழ்நிலை முறையானதாய் அமையவில்லை.
பல வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகள் பாடப்புத்தகங்களை மட்டும் படிக்கவேண்டும், தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பார்கள். இது ஒரு பெரிய குறை. உணவு உட்கொள்வது போலவே, வாழ்க்கையிலும் பாடப்புத்தகங்களோடு சுய வாசிப்பும் தேவை.
பெற்றோர்களின் பங்கு.
பெற்றோர்களே புத்தகம் வாசிப்பதில்லை என்றால், அவர்களது பிள்ளைகளிடத்தில் வாசிப்புப் பழக்கம் எப்படி உருவாகும்? வாசிப்பு ஒரு பழக்கம் மட்டுமல்ல, அது ஒரு பாரம்பரியமாகவும் இருக்க வேண்டும்.
நம் முன்னோர்கள் எழுத படிக்கத் தெரியாத காலம் வேறு, இப்போது பலரும் கல்வியறிவு பெற்றுள்ளனர். எனவே, இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
தடைகள் மற்றும் தீர்வுகள்
நான் வாராந்திர வாசிப்பு மற்றும் எழுத்து வகுப்பு நடத்தும் போது, பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாசிப்பதற்கான புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பதில்லை என்பது தெரிய வருகின்றது. பள்ளி நூலகத்திலும் மாணவர்கள் புத்தகம் வாங்கி வாசிப்பது மிகவும் குறைவாகவே உள்ளது.
இதைப் பற்றி மாணவர்களிடத்தில் கலந்தாலோசித்தப் போது பல கருத்துக்கள் பரிமாறிக் கொண்டோம்.
1. பள்ளியில் மாதந்தோறும் வாசிப்பு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அதிகமாக வாசித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கலாம். படிக்கத் தவறிய மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கலாம்.
2. பெற்றோர்களுக்கு வாசிப்பின் நன்மைகள் குறித்து பள்ளியில் விளக்கங்கள் வழங்க வேண்டும்.
3. மாவட்ட நூலகங்களில் பெரியவர்கள் பங்கேற்கும் வாசிப்பு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்.
4. பெற்றோர்கள், பிள்ளைகளுக்காக புத்தகங்களை வாங்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். அவர்களும் வாங்கிக் கொள்ளலாம், தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் குடும்பமாக சேர்ந்து வாசிப்பதற்கான சூழ்நிலை உருவாக்க வேண்டும்.
5. ஒவ்வொரு நகரிலும் ‘ரஹ்மாட் புத்தகக் கடைகள்’ அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
6. எல்லா வீடுகளிலும் புத்தகங்கள், சஞ்சிகைகள், செய்தித்தாள்கள் இருக்க வேண்டும் என அரசு உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்யத் தவறினால் தண்டனை வழங்க வேண்டியது அவசியமாகும்.
7. உள்ளூர் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இணைந்து பல மொழிகளில் புத்தகங்களை உருவாக்குதல்.
8. எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்திக்கும் நிகழ்வுகள் பள்ளிகளில், நூலகங்களில், புத்தகக் கடைகளிலும் பெரிதளவில் நடத்தப்பட வேண்டும்.
9. புத்தக தொழிற்துறை உருவாக்கம் பெற அரசாங்கம் ஆதரவு அளிக்க வேண்டும். புத்தகக் கடைகள் உணவகங்களை விட ஆங்காங்கு சிறப்பாக இயங்க வேண்டும்.
10. முக்கியாமாக சமூக ஊடகப் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும். வாசிப்புக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த யோசனைகள் அனைத்தும் ஒரு நாள் நிச்சயமாக நடைமுறையில் வரும் என நம்புவோம். இது வற்புறுத்தலாக இருந்தாலும் சரி, நல்லதிற்காக நாம் செய்வது நன்மைதானே?
வாசிப்போம்! வளர்வோம்!
Jom baca buku!
Comments
Post a Comment