கட்டுரை
எம். பிரபு
மனிதர்களும் மதுவும் பிரிக்க முடியாத ஒன்று போல ஆகிவிட்டது. இந்த உலகில் எத்தனை மதங்கள் இருந்தாலும், மக்கள் மது அருந்துவதைத் தடுக்க முடியவில்லை. கூடுதலாக, இதற்காக யாரும் கவலைப்படுவதும் இல்லை. அவர்கள் மத போதனைகளை கடைபிடிக்கிறவர்களாக இருந்தாலும், அல்லது மதுவால் ஏற்படும் ஆபத்துகளை நன்கு அறிந்தவர்களாக இருந்தாலும், மதுவைத் தொடுவதில் எந்த தயக்கமும் இருந்ததில்லை.
99 Speed Mart போன்ற கடைகளில் நிறைய இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் மதுபானங்களை வாங்குவதைக் காண்கிறேன். அவர்கள் மது இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைபோல் இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவது போன்றே மது வாங்குவது அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது.
மதுபானம் பல வகைகளில் கிடைக்கிறது. ஒயின், விஸ்கி, பிராந்தி, பீர், தோடி, சம்சு, ரம் மற்றும் குறைந்த ஆல்கஹால் சதவீதம் கொண்ட ஷாண்டி போன்றவை இதில் அடங்கும். தற்போது அதிகம் விற்பனையாகும் மதுபானம் பீராகும். பீர் வாங்கும் பலரை கவனித்த போது, அவர்கள் ஒரே ஒரு கேன் வாங்குவதில்லை, பெட்டிக் கணக்கில் வாங்குகிறார்கள். ஒரு பெட்டியில் 24 கேன்கள் இருக்கும். மூன்று பேர் இருந்தாலும் ஒரு பெட்டி தேவைப்படும். ஒருவருக்கு ஒரே நேரத்தில் எட்டு கேன்கள் தேவைப்படும் அளவுக்கு இது பழக்கமாகி விட்டது. பீர் விலை மலிவாக இல்லை – ஒரு கேன் சுமார் RM12 அளவில் விற்கப்படுகின்றது. இத்தனை பணத்தை இவர்கள் எளிதில் செலவிடத் தயாராக இருப்பது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது.
முந்திய காலங்களில் கடின உழைப்பாளிகளே அதிகம் மது அருந்துவார்கள். ஆனால் இப்போது வேலை இல்லாதவர்கள், வீட்டில் இருப்பவர்கள், விடுமுறையில் இருப்பவர்கள் எல்லாம் கட்டுப்பாடில்லாமல் மதுவை அருந்துகிறார்கள். அவர்கள் ஏன் இவ்வளவு குடிக்கிறார்கள்? அதில் என்ன இன்பம்? குடிபோதையில் மயக்க நிலைக்குத் தள்ளப்படுவது எல்லாம் ஓர் இன்பமா?
"ஏன் பீர் குடிக்கிறீர்கள்?" என்று கேட்டால், "நண்பர்களுடன் கூடும் போது, என்ஜாய் பண்ணுறேன்" என்பதே பதில் வரும். அவர்களின் ‘என்ஜாய்’ என்ற சொல்லின் உண்மையான அர்த்தம் என்னவென்று எனக்கு இன்னும் புரியவில்லை.
இன்னும் ஒரு வருத்தமான விசயம் என்னவென்றால், பெரும்பாலான பீர் விற்பனைக் கடைகளில், குறிப்பாக சூப்பர் மார்க்கெட்களில், மலாய் (இஸ்லாமிய) ஊழியர்களே பீர் விற்கின்றனர். அவர்களும் இந்த விற்பனையிலிருந்து சம்பளம் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களின் மதக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது.
இதை அரசு அறியாதா? அல்லது அறிந்தும் தெரியாதது போல நடிக்கிறார்களா? மதுபானம் மற்றும் புகைபிடி பொருட்களிலிருந்து கிடைக்கும் வரி வருவாய் அரசுக்கு வருமானம் ஈட்டித் தருவதால் அவர்கள் மௌனமாக இருக்கிறார்களா?
நான் ஒரு மலேசினாகவும், ஒரு மனிதனாகவும் இந்த நிலைமையில் மிகவும் கவலையடைகின்றேன். மதுவை ஒழிக்க உலகளாவிய அளவில் ஒரு பெரிய விழிப்புணர்வு இயக்கம் ஆரம்பிக்க வேண்டும்.
முற்றிலும் தீமைகளையே விளைவிக்கும் முதுவை ஏன் விற்பானேன் குடிப்பானேன்?
உலகம் அழியும் முன்பு, இதற்கான ஒரு சிறந்த தீர்வு வந்துவிட வேண்டும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


Comments
Post a Comment