குறுங்கதை
எம். பிரபு
வித்வான் அறையின் கதவை மெதுவாகத் திறந்தேன். இந்தச் செயலுக்கு என்னைத் தூண்டும் காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. வித்வான் பெரும்பாலும் நீண்ட நேரம் குளியலறையில் இருப்பார். இதுதான் சரியான சந்தர்ப்பம். அவர் அறையில் எதையாவது கண்டுபிடிப்பேன் என்று நம்பினேன்.
தினமும் ஏங்கித் தவிக்கத் தேவையில்லை.
அறையில் அவருடையப் பொருட்கள் அதிகமில்லை. ஒரு பயணப்பை, நாதஸ்வரம், மேசையில் சில புத்தகங்கள், பேனாக்கள் மற்றும் பென்சில்கள் இருந்தன. கதவின் பின்புறம் வண்ணமையமான உடைகள் தொங்கியிருந்தன. நான் அவருடைய பணப்பையை எடுத்தேன். ஏதாவது புகைப்படம் இருக்குமோ என்று பார்க்கத்தான். அந்தப் பணப்பையை முற்றிலும் பரிசோதித்தேன். வெறும் இந்திய, மலேசிய ரொக்கம் மற்றும் சில ரசிதுகள் மட்டுமே காணப்பட்டன.
பிறகு மேசையின் இழுவையைப் பார்த்தேன்..
ரம்பா, ஊர்வசி, மேனகா. அது தான் எங்கள் பெயர்கள், நாங்கள் மூன்று சகோதரிகள். பெயர்கள் விசித்திரமாக இருக்கிறதல்லவா? எங்களின் தந்தை
ஏன் இப்படிப்பட்ட பெயர்களை எங்களுக்கு வைத்தார் என்று சிறுவயதில் புரியவில்லை. நாங்கள் 1985 ஆண்டு முதற்கொண்டு ஒவ்வொரு
ஆண்டும் ஒரு குழந்தையாக பிறந்ததால், சற்று நவீனமாக
பெயர் வைத்திருக்கலாம்.
ஆனால் அப்பா அப்படிச் செய்யவில்லை.
எங்களது பதின்ம வயதில், தாயார் எங்களது பெயர்கள் குறித்து விளக்கமளித்தார். அதைக் கேட்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். அவை யாவும் தேவலோகத்து அப்ஸராக்கலின் பெயர்களாம். அவர்கள் எல்லாம் அழகிகளாம், கலை மற்றும் நடனத்தில் ஈடுபட்டு, தேவலோகத்தில் தேவவர்களை மகிழ்விப்பார்களாம். இது அறியாமல், எங்கள் தந்தையார் நடிகைகளின் பெயர்களை வைத்திருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.
எங்கள் மூவருடைய அழகு, எங்களின் தாயாரிடமிருந்து வந்தது. எங்களது உயரம், கம்பீரம் தந்தையிடமிருந்து வந்தது.
நாங்கள் மூவரும் சிறுவயதில் இருந்தே பரதநாட்டியத்தை கற்றுக் கொண்டோம். அதுவும் எங்களது தாயாரிடமிருந்துதான் கற்றுக் கொண்டது. தாயார் பரதம் கற்றுக் கொடுப்பதன் மூலம்தான் வருமானம் ஈட்டினார்.
எங்களுக்கு சகோதரர்கள் யாரும் இல்லை. இருந்திருந்தால் மிருதங்க வித்வான் ஆகி, அவனும் தந்தை போல கலைநயத்தோடு மிருந்தங்கம் வாசித்துக் கொண்டிருந்திருப்பான்.
நான்தான் மூத்தவள். எனது பெயர்தான் ரம்பா, ரம்பை என்று அழைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். எனது தங்கை மேனகாவிற்கும் மேனகை என்று அழைக்கவே விரும்புவாள். அந்த ஏக்கம் இப்போதுதான் எங்களுக்கு தோன்றிற்று. ஊர்வசிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
நான்தான் அழகில் சிறந்தவள். ஊர்வசியும் மேனகாவும் இதே உணர்வு கொண்டிருக்கலாம், ஆனால் யாரும் வெளிப்படுத்தியதில்லை. எப்படிப் பார்த்தாலும் நான்தான் அழகிலும் அழகு. நல்ல அழகி. இதை நானே எனக்கே சொல்லிக் கொல்லும் வாசகம். அதில் எனக்குப் பெருமையும், கர்வமும் உண்டு.
நாங்கள் மூவரும் சிறு வயது முதற்கொண்டே மிகவும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்துள்ளோம். எந்தப் பொருளுக்கும் சண்டையிட்டது இல்லை ...
இந்த வித்வான வரும் வரையில்..
மிருதங்க வித்வானாகிய எங்களது தந்தை, திருமணங்கள் மற்றும் கோவில் விழாக்களில் வயதான நாதஸ்வர வித்வானை அழைத்துச் செல்வது வழக்கம். ஊரில் குடும்பப் பிரச்சனைகளால் அவர் மீண்டும் ஊருக்கே திரும்பிவிட்டார்.
மிருதங்கத்தை மட்டுமே இசைத்தால் கேட்கும் செவிகளுக்கு இனிமை கிடைக்குமா? கிடைக்காதல்லவா? மிருதங்கத்தோடு நாதஸ்வரமும் சேர்ந்தாப்பில் இசைத்தால் மட்டுமே கேட்கும் செவிகளுக்கு இன்பம் கிட்டும்.
அதனால், அடுத்த சில வாரங்களில் ஓர் இளம், அழகான, கவர்ச்சிகரமான நாதஸ்வர வித்வான் வந்து சேர்ந்தார். அவர் எங்கள் மூவரையும் ஒரு நொடியிலேயே கவர்ந்து விட்டார். எங்கள் மூவரின் மனதையும் அவரிடத்தில் பறிகொடுத்து விட்டோம். ஆம், பறிகொடுத்து விட்டோம்!
அழகிய புதிய நாதஸ்வர வித்வானும், எங்கள் வீட்டில் வயதான வித்வான் தங்கிய அறையிலேயே தங்கினார்.
நாங்கள் மூவரும் அவரை, அவருக்குத் தெரியாமலேயே விரும்பினோம். இது எங்களிடையே பொறாமையையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. எங்களது பெற்றோருக்கு இதுப் பற்றி எதுவும் தெரியாது பார்த்துக் கொண்டோம்.
நாங்கள் மூவரும் முன்பு போல் உரையாடுதல்களை தீவரப்படுத்துவதில்லை. வித்துவான் சில நேரங்களில் எனது சகோதரிகளைப் பார்த்து பேசினால் எனக்குள் பொறாமை ஆட்கொண்டுவிடும். அப்போது எனக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று தோன்றும். ஆனால், என்ன செய்வதென்று தெரியாது.
காதல் மிகவும் அபாயகரமானதா?
அந்த இளம் வித்வான் பெரும்பாலும் தனித்து தனது அறையில் இருக்கவே விரும்புவார். சில நேரங்களில் அவர் பாடும் குரலோசை நாங்கள் வரவேற்பறையில் இருக்கும் போது நன்றாகவே கேட்கும். அவர் இந்திய பாரம்பரிய பாடல்களை அழகாக நயமாகப் பாடுவார். சினிமா பாடல்களும் அவ்வப்போது பாடுவார். அதுவும் அவரின் குரல் ஹரிஹரன் குரல் போன்று இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அவரிடம் எப்படி என் காதலை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. ஊர்வசி, மேனகா கூட இதே போன்று அவரிடம் சொல்ல துடித்துக் கொண்டிருப்பார்களா? யாராவது முந்திக் கொண்டால் என் நிலமை என்ன ஆவது?
நான் என் உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்தவதற்கு முன், அவருக்கு ஊரில் ஏற்கனவே காதலி யாரேனும் இருக்கின்றனரா என்று அறிய விரும்பினேன்.
அவருடைய பணப்பையில் எதுவும் இல்லை. அதாவது பெண்கள் படம் எதுவும் இல்லை. எனக்கு நிம்மதி பிறந்தது.
மேசையில் பல வகை பென்சில்கள் இருந்தன. நான் புத்தகங்களை ஆராய்ந்தேன். பெரும்பாலானவை இந்திய எழுத்தாளர்களின் நாவல்களாக காணப்பட்டன.
மேசையின் இழுவையைத் திறந்தேன். அதில் ஒரு வரைவு புத்தகம் இருந்தது. நான் ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்தேன். பெரும்பாலும் பறவைகள், கோவில் படங்களை மிகவும் தத்ரூபமாக அழகிய ஓவியமாய் பென்சிலில் தீட்டியிருந்தார். ஒவ்வொரு ஓவியமும் கண்களில் ஒத்திக் கொள்ளலாம்.
அடுத்த பக்கம் திறந்த போது ...
நாதஸ்வர வித்வான் எங்கள் தாயாரின் உருவத்தை வரைந்திருக்கிறார்!
முற்றும்

Comments
Post a Comment