கட்டுரை
எம். பிரபு
நாம் இந்தப் பூமியில் வாழும் காலம் மிகவும் குறுகிய காலமே. இந்தக் குறுகிய காலத்தில் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.
நாம், பல பரிமாணங்கள் எடுத்து இப்போதுள்ள மனிதர்களின் நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பலவித பரிமாணங்களில் ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்த நம் முன்னோர்களின் தியாகத்தினால்தான் இன்று பல வசதிகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
இன்பத்தை விட துன்பங்களையே அனுபவவித்தவர்கள் நம் முன்னோர். தங்களின் சந்தோஷத்தைத் தொலைத்து நமக்காக எல்லாவற்றையும் விட்டுச் சென்றுள்ளனர்.
முன்பு அவர்கள் அனுபவித்த துன்பத்தின் சிறு அளவுகூட நாம் அனுபவித்திருக்க மாட்டோம். இருப்பினும், தற்போது 24 மணி நேரமும் நாம் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிரக்கிறோம் என்று அர்த்தம் கொள்ள முடியாது.
ஆதலால், என்னதான் உலகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், மனிதர்கள் யாவரும் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகக் கழித்ததாகச் சரித்திரமே கிடையாது. ஏழையோ, நடுத்தர வர்ககத்தாரோ அல்லது பெரும் பணம் படைத்தவரோ - யாவரும் ஏதாவது ஒரு வகையில் வாழ்க்கையில் சந்தோஷத்தை இழக்கவே செய்கின்றனர்.
சந்தோஷத்துடன் வாழ என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதனை முழுமையாக அறிந்து வைத்திருந்தால் சிக்கல் இல்லை.
மனிதனின் வாழ்க்கையில் துன்பமும் நிகழவேண்டும், அப்போதுதான் இன்பத்தின் அருமையை அவனால் உணர முடியும். மழையின் அருமை வெய்யிலில்தான் தெரியும் என்பதுபோல.
ஆகையால், எவ்வளவுக்கு எவ்வளவு நம்மை நாமே சந்தோஷமாக வைத்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நன்மைதான்.
சிறுபிராயத்திலேயே பிள்ளைகளை பலருடன் பழக விட வேண்டும். இதனால் அவர்களுக்கு பல இன நண்பர்கள் கிடைப்பார்கள். ஒரே இன நண்பர்களுடன் மட்டுமே கூட்டு சேர்ந்தால், சொந்தத் தாய்மண்ணில் தனிமைப்படுத்தி விடுவர்.
நல்ல நண்பர்கள் சூழ்ந்து, சந்தோசமாக, பல வித நிகழ்வுகளில் பங்கெடுப்பதன் மூலம் அவர்களது மனம் விசாலமாகும். அதுவும் இப்போதெல்லாம் பலர் ஒரு பிள்ளை மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். அந்தப் பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்கள் அவசியம் தேவைப்படுவர்.
எல்லோரையும் நண்பர்களாக ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், உடன் பொருந்தும், உண்மையான நண்பர்களையே மனசாட்சிக்கு ஏற்ப தேர்வு செய்துக் கொள்ளலாம். இது, சிறிது கால பழக்கத்திலேயே புரிந்துவிடும்.
இன்பத் துன்பங்களில், சுகத் துக்கங்களில் சமமாக பழகும் நண்பர்களே தூயவர்களாகக் கருதப்படுவர். மற்றவர்கள் வெறும் விருந்தாளிகளே; அவர்களைப் பொருட்படுத்தத் தேவை இல்லை.
நல்ல நண்பர்களோடு நல்ல புத்தகங்களும் அறிவு வளர்ச்சிக்கும், மனதை ஒரு நிலைப்படுத்தவும் மிகவும் முக்கியமானதாக அமைகின்றன. நண்பர்கள் எப்போதும் உடன் இருக்க முடியாதபட்சத்தில் புத்தகங்களே உற்ற நண்பனாகத் துணைபுரியும்.
எவ்வாறு நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதேபோல நல்ல புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்க வேண்டும் . சிறுகதை, நாவல், கட்டுரைத் தொகுப்பு, வரலாறு, சுயசரிதை. தன்முனைப்பு, ஆகமம் போன்ற பலதரப்பட்ட புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தேர்வு நமது கையில் உள்ளது.
ஆரம்பத்தில் சற்று தட்டுத்தடுமாறினாலும், பிறகு புத்தகமே நம் உலகமாகிவிடும். நண்பன் எப்போதும் நம்முடன் இருக்க இயலாது, ஆனால் புத்தகங்கள் அதனைச் செய்யும்.
வெறும் நண்பர்களும் புத்தகங்களும் இருந்துவிட்டால் வாழக்கையை சந்தோஷமாக கழித்து விட முடியுமா? அதுதான் இல்லை.
வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகவும் நல்ல முறையிலும் கழிய, நமது உடலும் உள்ளமும் திடகாத்திரமாக இருக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சியும் ஆரோக்கிய வாழ்க்கை முறையும் அவசியம்.
ஆரோக்கிய வாழ்க்கை முறைதான் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் விட அதிமுக்கியமானதாகும். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியம். இதை நினைவில் வைத்துக்கொண்டே அன்றாட வாழ்க்கையை நகர்த்த வேண்டும்.
காலை எழுவது முதல் படுக்கப் போகும் வரை எல்லாமே ஒழுங்குமுறையாக கடைப்பிடிப்பது அவசியம்.
அதாவது பல் துளக்குவது, குளிப்பது, காலை கடன், பசியாறல், மதிய உணவு, இரவு உணவு, பள்ளிக்குச் செல்வது, வேலைக்குச் செல்வது, உடற்பயிற்சி, அதன் பிறகு நேரத்திற்கு தூங்குவது - எல்லாமே இதில் அடங்கும்.
நமது செயல்பாடுகள் பிறரை கோபத்திற்குள்ளாகாமல் மிதமாகவே இருக்க வேண்டும்.
உடலை பத்திரமாகப் பார்த்துக் கொண்டால் எந்த நோய்த் தொந்தரவுகளுக்கும் ஆட்பட மாட்டோம். இதனால் மனதில் சந்தோஷம் தானாகவே குடிகொண்டு விடும்.
இதற்கெல்லாம் சுயக்கட்டுப்பாடு மிக அவசியம். சந்தோஷத்தை வெளியே தேடாமல். இருந்த இடத்திலிருந்தே அதை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
பிரபலமான ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா மனித வாழ்வின் உண்மையப் பற்றி பல சிறந்த எண்ணங்களை கூறியுள்ளார். அவரின் கருத்துப்படி மகிழ்ச்சி வெளியில் கிடைப்பதல்ல; அது நம்முள் உருவாகும் உணர்வு.
முதலில் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை ஒரு பெரிய நோக்கத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும். பிறருக்குப் பயனாக இருக்கும் ஒரு பணியில் ஈடுபடும்போது தான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும்.
அடுத்ததாக, வாழ்க்கை என்பது தன்னைத் தேடுவது அல்ல, தன்னை உருவாக்குவது என்று அவர் கூறுகிறார். அதாவது நாம் விரும்பும் விதத்தில் நம் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் தன்னிச்சையான சிந்தனை அவசியம். பிறர் கூறுவதற்கேற்ப அல்ல, நம் அறிவு கூறும் வழியில் செயல்பட வேண்டும்.
அவர் மனித உறவுகளையும் மிகுந்த மதிப்புடன் பார்த்தார். அன்பு, குடும்பம், நட்பு போன்றவை வாழ்வின் சுவையை அதிகரிக்கின்றன.
இறுதியாக, பெர்னார்ட் ஷா கூறுவது - மனிதன் தனது சூழ்நிலைகளை குற்றம் சொல்லாமல் உழைப்பால் முன்னேற வேண்டும் என்பதே. முயற்சி மற்றும் உழைப்பு தான் நிலையான மகிழ்ச்சியின் மூல காரணம்.
சுருக்கமாகச் சொல்லப் போனால்: மகிழ்ச்சி என்பது பணத்தில் அல்ல; அது நோக்கம், அன்பு, சுய சிந்தனை, உழைப்பு ஆகியவற்றின் சேர்க்கையில் தான் உள்ளது — எனப் பெர்னார்ட் ஷா நமக்குக் கூறுகிறார்.
நமது உள்ளத்தை தூய்மையாகவும் நல்ல சிந்தனைகளை துளிர் விடுமாறும் வைத்தாலே போதுமானது. எந்தப் பிரச்சனையும் நம்மை அண்டாது. அப்படியே தவிர்க்க முடியாத பிரச்சனை வந்தாலும் மனதில் அதற்கான வலிமை நம்மை அறியாமலேயே உருவாகிவிடும்.
எல்லாம் தினசரி நாம் மேற்கொள்ளும் நல்ல, சிறந்த நடவடிக்கைகள் பயிற்சியாக மேற்கொண்டு வந்தால், எந்தப் பிரச்சனையாகினும் துணிச்சலலுடன் அவற்றை கடந்து விடலாம். அதற்கு நேரமும் காலமும் சிறந்த மருந்தாகும்
ஆக, நம் வாழ்க்கையை சந்தோஷமாகக் கழிப்பது முழுமையாக நம்மைக் கையாளும் முறையில்தான் உள்ளது. பிறரால் நமது வாழ்க்கை கெடுவதில்லை; நம்மை நாம்தான் கெடுத்துக் கொள்கிறோம்.
இந்தப் பூமியில் வாழும் வரை சந்தோஷமாகவே வாழலாம்.

பெர்னாட் ஷா

Comments
Post a Comment