எம். பிரபு
ஆ வோங்கிற்கு மிகவும் சந்தோசம். வாயெல்லாம் மஞ்சள் நிற பற்களை காண்பித்து சிரித்துக் கொண்டே சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்தான். சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த ஆ மெங், வோங் செய்யும் சேட்டைகளை கண்டு கடுப்படைந்தான்.
“உன்னால சத்தம் போடாம சைக்கிளை ஓட்ட முடியாதா, வோங்?”
“இன்று சைக்கிள் கிடைக்காதென்று நினைத்தேன். நல்ல வேளை ...”
“நடந்தே வந்திருக்கலாம். இதெல்லாம் தேவையில்லாதது. பேசாமால் வாயை மூடிக்கொண்டு சைக்கிளை மிதி!”
“என்னா ஆ மெங், நாம் எப்போதும் காட்டுக்குள் இருந்து பயந்து பயந்து சாகின்றோம். எப்போதாவதுதான் இந்த மாதிரி வாய்ப்பு. இப்போது சந்தோசமா பட்டணத்தை சுற்றிப் பார்த்துவிட்டு போவோமே.”
“சுற்றிப் பார்க்கவா லீடர் நம்மை பட்டணத்துக்கு போகச் சொன்னார்? பொருட்களை வாங்கிவிட்டு உடனே கிளம்பி விடுவோம்.”
“அப்படியே அந்த சாலை ஓரத்தில் இந்தியர் ஒருவர் விற்கின்ற செண்டோலை குடித்துவிட்டுப் போவாம்.”
“உன்னிடம் காசு இருக்கா, வோங்?”
“செலவு சாமான் வாங்கிய மீதமுள்ள பணத்தில் செண்டோலை குடித்திடுவோம். நம்மிடம் பணம் பற்றாவிட்டாலும், ஆ ச்சின் பொருட்களை கொடுத்துத்தானே ஆகனும்.”
“ஒழுங்கா சாலையைப் பார்த்து மிதி வோங். போலிஸ்காரன் கண்களிலும் ஆர்மிகாரன் கண்களிலும் படாம பார்ர்துக்கோ! தூரத்தில் யாராவது தெரிந்தால், சொல். நான் உடனே கிழே இறங்கிக்கிறேன்.”
“எதுக்கு நீ இவ்வளவு பயந்தாங்கொல்லியா இருக்கே? நாம பயந்தா அதுவே நாம யாரென்று காட்டிக் கொடுத்திடும்.”
“சைக்கிளில் இரண்டு பேர் போனால் பிடிச்சிருவான்னு தெரியாதா உனக்கு. நீ இந்த மாதிரி அசட்டுத்தனம் செய்தாலும் நாம யாருன்னு கண்டுப்பிடித்து விடுவார்கள். சரி சரி அதிகம் பேசாம சைக்கிளை மிதி. பட்டணம் நெருங்கிக்கிட்டு இருக்கு.”
ஆ வோங், ஆ மெங் சொல்பேச்சு கேளாமல் வாய்க்கு வந்த சீனப் பாட்டெல்லாம் பாடிக்கொண்டுப் போனான். பட்டணம் போவதே பெரிய விசயம். எப்போதும் அதே ஆள் பட்டணம் போக முடியாது.
பெற்றோர், மற்றும் குடும்பத்தை விட்டு வந்தது கட்டாயப் படுத்தப்பட்டாலும், தங்களின் கட்சி கொள்கைக்காகவும் நாட்டின் விடுதலைக்காகவும் பொருத்துதான் ஆக வேண்டும்.
* * *
சோமு அழுதுக் கொண்டே, தான் பயிலும் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளிக்கு வந்துச் சேர்ந்தான். நடந்த இக்கட்டான நிலமையை வெளியே சொல்ல அவனுக்கு பயமாக இருந்தது.
அப்படியே விட்டிற்கு போயிருக்கலாம்தான். எங்கே சைக்கிள் என்று அப்பா கேட்டாரென்றால் அவ்வளவுதான். என்னதான் நடந்த தவற்றுக்கு அவன் காரணமல்லவென்றாலும், அப்பா நிச்சயம் உதை கொடுப்பார்.
எப்போதும் போலவே அப்பா அவனை நடந்துதான் பள்ளிக்குப் போகச் சொன்னார், சோமுதான், இன்றைக்கு ஒருநாள்தானே, அதுவும் நேற்று மழை பெய்ததால் அவன் அப்பா பக்கத்து கம்பத்தில் மரம் சீவப் போகவில்லை. வீட்டின் அருகே உள்ள கொல்லைப்புறத்திற்கு கிளம்பினார். சைக்கிள் வெறுமனேதானே உள்ளது, தான் எடுத்துக் கொண்டுப் போனால் என்ன என்று கெஞ்சி எடுத்து ஓட்டிக் கொண்டு வந்தான். சோமுவின் தம்பிக்கு மத்தியான வகுப்பு. இன்னும் இரண்டு தங்கைகள், பள்ளிக்குப் போகும் வயது இல்லை.
வரும் வழியில் இப்படி ஆகும் என சோமு எதிர்ப்பார்க்கவே இல்லை. உடல் நடுங்கி வெடவெடத்துப் போனான். அவர்கள் கையில் கத்தி இருந்தும், தன்னை ஒன்றும் செய்யாததே பெரிய விசயம் என்று முருகக்கடவுளுக்கு மனதில் நன்றிப் பாராட்டினான்.
* * *
ஆறாம் வகுப்புக்குள் நுழைந்ததும் மிஸ்டர் மைல்ஸ் (Mr. Miles) வகுப்பறை மேசையில் ஒவ்வொரு மாணவர் மாணவிகளை பார்வையிட்டார். இருபது மாணவர்களில், ஒரு நாற்காலி காலியாக இருந்தது.
என்ன இன்றைக்கு அதிசயமாய் சோமசுந்தரத்தைக் காணவில்லை என்று ஆச்சிரியப்பட்டார். எப்போதும் மற்றவர்களைக் காட்டிலும் அவன்தான் பள்ளிக்கு முதல் ஆளாக வந்து விடுபவன். அவனுடைய வீடு தொலைவில் இருந்தும், விரைந்து பள்ளிக்கு வருவது ஆச்சர்யமே.
ஆங்கிலப் பாடம் நடந்து, பத்து நிமிடத்திற்கு பின்னேதான் உள்ளே வந்தான் சோமு. அவனது முகம் எப்போதும் போல பளிச்சென இல்லை. சோர்ந்து போயிருந்தான். வகுப்புக்குள் நுழைந்தவுடன் மிஸ்டர் மைல்ஸிடம் மன்னிப்புக் கேட்டான். அவர் அவனிடம் கேள்வி கேட்டுத் தொல்லைக் கொடுக்காமல் தொடர்ந்து பாடத்தை நடத்தினார். சோமுவுக்கு ஏதோ பிரச்சனை என்று அவருக்கு புரிந்து விட்டது.
ஆங்கிலப் பாடம் முடிந்தவுடன் அவனிடம், ஓய்வு நேரத்தில் தன்னை தன் அறையில் வந்துப் பார்க்கச் சொன்னார்.
ஓய்வு நேரத்தில், தான் வீட்டிலிருந்து கொண்டு வந்த உப்புமாவை அவசர அவசரமாக சாப்பிட்டு, பைப் தண்ணீரையும் குடித்து, சோமு வயிற்றை நிரப்பினான. நல்லவேளை உப்புமாவை அவர்கள் திருடிச் செல்லவில்லை. அதற்கும் முருகனுக்கு மீண்டும் மனதில் நன்றி கூறினான்.
பிறகு பள்ளி முதல்வர் அறைக்கு விரைந்து, நடந்த சம்பவத்தை மிஸ்டர் மைல்ஸிடம் அவர் முன்னே உட்கார்ந்து, ஒன்று விடாமல் சொன்னான்.
“அவங்க காட்டுக் காரங்கன்னு உனக்கு எப்படித் தெரியும்? சீருடை அனிந்திருந்தார்களா? ஆங்கிலத்தில் அவர்களை கம்மியூனிஸ்ட் அல்லது பெண்டிட்ஸ் (Bandits) என்பார்கள். நீ சொல்வதுபோல் காட்டுக்காரர்கள் என்றே சொல்கிறேன். ஆனால் உனக்கு அவர்கள் காட்டுக்காரர்கள்னு எப்படித் தெரியும். சாதாரணமான ஆட்களா கூட இருக்கலாம் அல்லவா?”
“அவங்க ரெண்டு பேரும் காட்டுப் பக்கமா இருந்துதான் வந்தாங்க. சீருடையில் இல்லை. அவங்க முகத்தைப் பார்த்தாலும் அப்படித்தான் இருக்கு, சார். வீட்டிற்குப் போனால், சைக்கிள் திருடு போச்சுன்னு தெரஞ்சா, அப்பா என்னை அடிப்பார், அதுதான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு, சார். அடுத்த வாரம் தீபாவளி. இந்தச் சமயத்தில் இப்படி நடந்திருச்சி. அதனாலேயே என்னை வெளுவென்று வெளுத்திடுவார்.”
“நீ பயபடத் தேவை இல்லை. இப்போ காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுப்போம். பிறகு நானே உன்னை வீட்டில் போய் விடுகின்றேன்.”
“வேண்டாம் சார், எனக்கு பயமா இருக்கு. நீஙக பரவால சார். அமெரிக்காவிலிருந்து கொஞ்ச நாள் இங்க வேலை செய்திட்டு உங்க சொந்த ஊருக்கே கிளம்பிடுவீங்க. அவர்களைக் காட்டிக் கொடுத்ததற்காக எங்களை கொன்று விடுவார்கள். எங்கள் வீட்டுக்கும் அவங்க இருக்கும் காட்டுக்கும் ரொம்ப தூரம் இல்லை, சார்.”
“நானும் பிரிட்டிஷ் போன்றுதானே உள்ளேன். என்னைக் கண்டாலும் அவர்களுக்குப் பிடிக்காது, மூன்று வருடத்திற்கு முன்பு, பிரசெர் ஹில்ஸ் (Fraser Hills) சாலையில் காரில் போகும் போது ஹென்ரி கெர்னியை (Henry Gurney) சுட்டுக் கொன்றது போன்று என்னைச் சுட்டுத் தள்ளினாலும் ஆச்சிரியப்பட ஒன்றும் இல்லை.”
சோமு அதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவன் நினைவெல்லாம் அவனது அப்பாவின் சைக்கிள் மீதுதான் இருந்தது. மிஸ்டர் மைல்ஸ் மாணவர்களுடன் தோழமையுடன் பழகுவதால் சோமுவால் அவருடன் எந்தவித பயமும் இன்றி தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேச முடிகிறது.
* * *
ஆ மெங்கும் வோங்கும் பொருட்களை வாங்கிக் கொண்டு சைக்கிளில் வந்துக் கொண்டிருந்தனர். சிலருக்கு அவர்கள் இருவரும் யாரென்று தெரிந்திருக்கலாம். அப்படித் தெரிந்தாலும் யாரும் அவர்களைக் காட்டிக் கொடுக்கப் போவதும் இல்லை.
ஆ மெங் அவசரப்படுத்தியதால் வோங்கினால் அன்று செண்டோலை ருசிப்பார்க்க இயலவில்லை.
“இப்போ சைக்கிளை ஓட்டுவதா சாமானை தூக்குவதா? இப்போ என் ரெண்டு கைகளிலும் சாமான்கள். நீ பாட்டுக்கு சைக்கிளை மிதிச்சிக்கிட்டு வர.”
“அதான் கேரியர்ல சாமான் கட்டி இருக்கே. உன்னை எப்படி ஏற்றிக் கொள்வதாம்.” அந்த பேச்சினூடே விசிலடித்துக் கொண்டுதான் சைக்கிளை ஓட்டினான் வோங்.
“வோங், இந்த சைக்கிளை காட்டுக்கு போற வழியிலேயே தூக்கி வீசிடுவோம். காட்டுக்குள் எப்படி சைக்கிளை கொண்டு போவது?”
“இந்த சைக்கிளை நாமே வைத்துக் கொள்வோம், மெங். அடிக்கடி இங்குள்ளவர்களிடம் மிரட்டி வாங்கிக் கொண்டா இருக்க முடியும்?”
காட்டினுள் போகப் போக ஆ வோங்கினால் சைக்கிளை சரியாக செலுத்த முடியவில்லை. தள்ளிக்கொண்டு வந்தபோதிலும், அந்த அடர்ந்த மேடும் பள்ளமும் நிறைந்த பாதையில் சைக்கிளை செலுத்துவதில் சிரமப்படான் வோங். கேரியரில் இருந்த பொருட்களும் கீழே சிதரின.
“நான் அப்பவே சொன்னேன் கேட்டியா! இப்ப பாரு எல்லாம் கீழே கொட்டிருச்சி! பள்ளிக்கூடப் பசங்கள நம்மோட சேர்த்துக்கிட்டா இப்படித்தான்!” மிகுந்த ஆத்திரத்துடன் கத்தினான் ஆ மெங்.
* * *
பள்ளி முடிந்து மிஸ்டர் மைல்ஸ், சோமுவைக் கூட்டிக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு விரைந்தார். சோமுவுக்கு நடந்த சம்பவத்தை விவரித்தார். போலிஸ் அதிகாரி கேட்ட சில கேள்விகளுக்கும் தயக்கமின்றி பதில் அளித்தான் சோமு.
அதன் பிறகு மிஸ்டர் மைல்ஸ் Volks Wagen காரில் சோமுவை அவன் வீடு வரைக்கும் விட்டு, நடந்த சம்பவத்தை அவன் தகப்பனாரிடம் விளக்கினார். அவனை தண்டிக்க வேண்டாம் என்று வேண்டினார்.
அதன் பிறகு பல படைவீரர்களின் டிரக்குகள்களும் போலீஸ் ஜீப்களும் அந்த காட்டுப் பகுதியை புடைச் சூழ்ந்தன. அந்த சிறிய பட்டணத்தில் ஊரடங்கு பிரகணப்ப்டுத்தப பட்டது. ஆங்காங்கு முள் வேலிகள் போடப்பட்டன.
“அவன்கள் கிட்ட சைக்கிளை கொடுத்தோமா வந்தோமா என்றில்லாமல் யாரு உன்னை மிஸ்டர் மைல்ஸிடம் சொல்லச் சொன்னது. ஐயா பெரிய ஆளாகிட்டார். போலிஸ் ஸ்டேசன் வரைக்கும் சென்று புகார் கொடுத்திருக்கார். இப்போ பாரு தினமும் என்னென்மோ சத்தமெல்லாம் கேட்குது. யாருக்கு தீபாவளின்னே தெரியில.”
அப்பா திட்டியது சோமுவிற்கு வலிக்கவில்லை. தன் தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்து விட்டதன் சந்தோசமே அவன் மனதில் நிரம்பியது. என்ன ஒன்று, ஊரடங்குச் சட்டத்தினால் தீபாவளிக்கு பட்டாஸ் ஏதும் வெடிக்க இயலாது.
விடியற்காலை தீபாவளி அன்று.
சோமுவின் வீட்டில் உள்ளவர்கள் எண்ணெய்த் தேய்த்துக் குளித்துக் கொண்டிருக்கும் தருணம் ...
அங்கு ஒரு வெடிச் சத்தம் கேட்டது.
முற்றும்
(தென்றல் தீபாவளி இதழ் 2024)

Comments
Post a Comment