சிறுகதை
எம். பிரபு
இன்று காலையும் எப்போதும் போல புலனத்தில் காலை வணக்கம் தகவல் போட்டப் பிறகு அப்பா பேசினார், நானும் பேசினேன்.
“இந்த மாசம் எப்போ வீட்டுக்கு வர்றே?”
“இன்னும் சரியா தெரியலப்பா.”
“மத்தவங்களுக்கு எல்லாம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுப்பு கொடுக்கிறாங்க; உனக்கு மட்டும் ஏன் விடுப்பு கிடையாது?”
“என் வேலை மத்தவங்க மாதிரி இல்லப்பா.”
“நல்லா சம்பளம் கொடுத்தா மட்டும் போதுமா? விடுப்பெல்லாம் ஒழுங்குமுறையா கொடுக்குறது இல்லையா? நீயும் உன் வேலையும்! சரி, வரப்ப திடுதிப்புன்னு வந்து நிக்காதே. ஒழுங்கா ஒரு வாரத்துக்கு முன்னாலேயே சொல்லிட்டு வா!”
“என் வேலை எப்போ ஆரம்பிக்கும், எப்போ முடியும் என்று தெரியாதுப்பா.”
“நல்லா படிச்சிருந்தும் ஏன்தான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தியோ? மேல் படிப்பு படிக்கச் சொன்னா அதுவும் செய்யல. சரி... சரி, எனக்கு சமைக்கிற வேலை இருக்கு. நான் போனை வெச்சிடுறேன்.”
அப்பாவுக்கு நான் ஆசிரியர் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பது கனவு. என் தாயார் தமிழ்ப் பள்ளி ஆசிரியையாக இருந்ததால் அந்த ஆசை அப்பாவுக்கு ஏற்பட்டிருக்கலாம். அப்பா முன்பு ஒரு நிறுவனத்தில் குமாஸ்தா வேலைதான் பார்த்தார். அரசாங்க உத்தியோகம் அல்லாததால் அவருக்கு ஓய்வூதியம் எதுவும் இல்லை. சேமிப்பும், ஓய்வூதிய நிதியும் உண்டு; அதனால் இப்போது செலவுக்கு பிரச்சனை இல்லை.
நான் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார். அதனால் அப்பாவின் வங்கிக் கணக்கில் மாதா மாதம் ஒரு தொகை போட்டு விடுவேன். பிற்காலத்தில் அது அவரின் மருத்துவச் செலவுக்கு ஆகும்.
அம்மாவுக்கு நான் எந்தத் தொழில் புரிந்தாலும் பிரச்சனையில்லை. நன்றாக சம்பாதித்தால் போதும் என்று இருந்தார்.
அம்மாவுக்கு ஆசிரியர் தொழிலில் உள்ள பிரச்சனைகள் தெரியும் என்பதால் அந்தத் தொழிலில் ஈடுபட என்னை ஊக்குவித்ததில்லை. எனக்கும் அதில் துளியளவும் ஆர்வம் இல்லை.
புனிதமான வேலையாக இருந்தாலும், என்ன வேலை இது? தினந்தோறும் சொல்லிக் கொடுத்ததையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுக்க வேண்டும். எப்படித்தான் அம்மா முப்பது வருடங்களுக்கு மேல் இந்த ஆசிரியர் வேலையைப் பார்த்தாரோ தெரியவில்லை. அதுவும் அத்தனை மாணவர்களையும் எப்படித்தான் மேய்த்தாரோ என்றும் புரியவில்லை.
அதனாலோ என்னவோ நான் ஒருவன் மட்டுமே அவர்களுக்கு வாரிசு. அதுவும் அவர்கள் திருமணம் புரிந்து பத்து வருடம் கழித்துதான் பிறந்தேன்.
நான் மலாய்ப்பள்ளியில் பயின்றதால், அம்மா எப்படிப் படித்துக் கொடுத்திருப்பார் என்று நேரில் பார்த்ததில்லை. ஆனால், வீட்டிலேயே எனக்கு தமிழ்ப் பாடத்தை முறையோடு சொல்லிக் கொடுப்பார். கையெழுத்து அழகாயிராவிட்டால், கைவிரல்களில் ஒரு போடு போடுவார். பயங்கரமாக வலிக்கும். அப்படித்தான் தமிழ்ப் படித்தேன்.
அம்மா அறுபது வயது ஆவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே இனிப்பு நீர் வியாதியால் அவதிப்பட்டு போய்ச் சேர்ந்துவிட்டார்.
ஆரம்பத்தில் சில வேலைகளை எனது எஸ்.பி.எம் தேர்வுக்கு ஏற்ப பார்த்தேன். ஒன்றும் பிடிபடாததால் ஒரு புகைப்பட நிறுவனத்தில் உதவியாளராக சேர்ந்தேன். அப்பா முனகினார்.
அங்கு சேர்ந்து புகைப்படம் எடுப்பது, காணொளி எடுப்பது எல்லாம் கற்றப் பிறகு இப்போது நானே சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனத்தை நடத்தி வருகின்றேன். அதே சமயம் வருடத்திற்கு 5 குறும்படங்கள் எடுத்து விடுவேன். மேலும் 5 ஆவணப்படங்களும் செய்துள்ளேன். இணையத் தளமான யூடியூப் வழியாகத்தான் பதிவேற்றம் செய்வது வழக்கம்.
அண்மையில்தான் கூட்டுமுயற்சியில் திரைப்படம் ஒன்றில் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் உறுமாறி உள்ளேன். அதனால்தான் அப்பாவைப் பார்க்க அடிக்கடி பினாங்கு போக இயலவில்லை.
திரைப்படம் எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல என்பதனை போகப்போகத் தெரிந்துக் கொண்டேன். அகல கால் வைத்தாகிவிட்டது. எடுக்கும் திரைப்படத்தை சிறப்பாக கொண்டு வந்து, ரசிகர்களை திருப்திப்படுத்தி, தயாரிப்பாளரையும் சந்தோஷப்படுத்த வேண்டும்.
இதையெல்லாம் அப்பாவுக்கு விலாவாரியாக விளக்கமாகச் சொல்ல இயலவில்லை. அவரும் என் தொழில் பற்றி எதுவும் கேட்க மாட்டார். நான் ஆசிரியராக பணிபுரிந்திருந்தால் நிச்சயம் கேட்டிருப்பார்.
அப்பா என் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றி எனக்குத் தெரியும். நான் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
இருவரும் எங்களது பாசத்தை பெரிதாக வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அம்மா இருக்கும் போது மிகவும் பாசமாக எங்கள் இருவரிடம் நடந்துக் கொள்வார். எஸ்.பி.எம் பயிலும் வரை மதிய உணவை அம்மா எனக்கு ஊட்டிதான் விடுவார்.
அப்பா தனக்கும் ஊட்டி விட அம்மாவிடம் கெஞ்சுவார். அம்மா கண்டுக் கொள்ளவே மாட்டார். எனக்கு சிரிப்பு சிரிப்பாக வரும். அம்மா ஊட்டினால்தான் சோறே என் தொண்டைக் குழிக்குள் நுழையும். நான் சொந்தமாக சாப்பிட்டால், பக்கத்தில் ஐஸ் தண்ணீர் கட்டாயம் வேண்டும்.
வேலைக்குச் சென்ற பின் சிரமப்பட்டுதான் எல்லாம் சுயமாக செய்ய பழகிக் கொண்டேன். அப்பா அடிக்கடி என்னை “அம்மா புள்ள” என்று சொல்லிக் கிண்டல் செய்வார்.
என்னதான் அப்பா அம்மாவிடம் பாசம் வைத்திருந்தாலும் சமயங்களில் அவரிடம் எரிந்து விழுவதைப் பார்த்திருக்கின்றேன். அம்மாவும் சளைத்தவர் அல்ல.
இருவரும் சண்டையிட்டால், நான் வெளியே கிளம்பி விடுவேன். பெரும்பாலும் அவர்களது சண்டை வீட்டைச் சுற்றி உள்ள செடி கொடிகள் பற்றியதாகவே இருக்கும். அம்மா ஏதாவது நட்டுவைப்பார், அப்பா “புல் வெட்டுகின்றேன்” என்ற பெயரில் அம்மா நட்ட செடி கொடிகளைச் சேர்த்து வெட்டி விடுவார். தெரியாமல் செய்தாரா அல்லது தெரிந்தே செய்தாரா என்பது அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்.
அம்மா இறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு பெண் பார்த்திருந்தார். சுமார் அழகுதான். சம்மதம் தெரிவித்தப் பின் இரண்டு தடவை அவளுடன் கடையில் உணவருந்தியிருக்கின்றேன். பிறகு அடிக்கடி அலைபேசியில் பேசிக் கொள்வோம்.
ஆனால் நான் செய்யும் இந்த விளம்பர மற்றும் சினிமா தொழில் அவளக்குப் பிடிக்கவில்லை. கைநிறைய வருமானம் வருகிறதென்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவள் பிடிவாதமாக இந்தத் தொழிலை மாற்றச் சொன்னாள்.
ஏன் என் தொழிலை பிடிக்கவில்லை என்று கேட்டால், “அங்கு அழகழகான பெண்கள் வந்து போகும் இடமாம்!”
அப்போதே முடிவுக் கட்டிவிட்டேன் — கேமராதான் என் மனைவியென்று.
என் நிலமையை அம்மா புரிந்துக் கொண்ட அளவுக்கு, அப்பா புரிந்துக் கொள்ளவில்லை. என்னை திட்டோ, திட்டோவென்று திட்டிவிட்டார். அதுவும் நிச்சயமாகும் அளவிற்கு வந்த பிறகு என் ஆதங்கத்தை வெளிப்படுத்தி, நிச்சயத்தை நிச்சயமில்லாமல் செய்துவிட்டேன். அவளுடைய அண்ணன்காரன்கள் எகிரிக் குதித்தார்கள். எனக்கு ஒரு கவலையும் இல்லை.
நான் செய்தது தவறு என்று இருந்தாலும், நியாயம் என்று ஒன்று இருக்கிறதல்லவா. இனிமேல் திருமணம் வேண்டாம் என்று கூறிய போது, அப்பா மிகவும் சங்கடப்பட்டார்.
அம்மா பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. “கடவுள் எனக்காக ஒரு பெண்னை விரைவில் அனுப்பிவைப்பார்” என நம்பினார்.
அதன் பின் அம்மாவும் படுத்தப் படுக்கையாகி, காலனும் கொண்டு சென்றுவிட்டான்.
“அம்மாவை நான்தான் என் செயல்களால் கொன்று விட்டேன்” என்று அப்பா புலம்பிக் கொண்டே இருந்தார். இதனால் எனக்கும் அவருக்கும் சமயங்களில் வாக்குவாதம் ஏற்படும். கதவை “படார்” என்று சாத்துவேன். தொலைக்காட்சியின் ஒலியை கூட்டுவேன்.
இருப்பினும் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து பேசிக் கொள்வோம். அப்பாதானே!
இப்போது அம்மாவும் இறந்து பல வருடங்கள் ஆகி விட்டன. அப்பாவுக்கு நான் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதுதான் கவலை. ஆனால், அவர் ஆசையை நிறைவேற்றும் நிலையில் நான் இல்லை.
திருமணம் பற்றி பேசும் போது நேரடியாக பேச மாட்டார். எல்லாம் புலனம் வழியாகச் செய்தி அனுப்பி விடுவார்.
“எனக்குத் தெரிந்த ஒரு பெண் இருக்கு, கல்யாணம் செய்துக்கிறியா?” என்பார்.
நான், “வேண்டாம்பா” என்பேன்.
“உனக்கு இப்போ வயசு 37 ஆகப்போகுது. நீ ஒன்னும் சின்னப் பையன் இல்ல, தெரியுமா?”
“தெரியும்.”
அப்பா எவ்வளவு கெஞ்சினாலும் நான் மசியப்போறதில்லை.
“நீ வேலைப் பார்க்குற இடத்தில கூடவா பொண்ணுங்க இல்ல?”
“அது நான் வேலைப் பார்க்கும் இடம், பா.”
“நீ இந்தக் காலத்து பையனானு எனக்கே சந்தேகமா இருக்கு,” என்பார்.
அப்பாவும் மற்றவர்களைப் போன்றே எனக்கு காலையில் “காலை வணக்கச் செய்தி” புலனத்தில் அனுப்பும் வழக்கம் உள்ளவர். எனக்கோ அது மிகவும் அலர்ஜி. நான் யாருக்கும் அனுப்ப மாட்டேன். யாராவது தினசரி போட்டார்கள் என்றால் நான் தடை செய்து விடுவேன். அதேபோன்று குழுவில் பதிவிட்டால், நான் அந்தக் குழுவிலிருந்து சொல்லாமலேயே வெளியேறி விடுவேன்.
காலை வணக்கச் செய்தி போட்டால்தான் பொழுது விடியுமா? அல்லது அப்படிப் போட்டால்தான் நமக்கு பொழுது விடிந்துவிட்டது என்று தெரியுமா? அதனாலேயே எனது நண்பர்கள் யாரும் எனக்கு காலை வணக்கச் செய்தி அனுப்ப மாட்டார்கள், அப்பாவைத் தவிர.
அப்பாவுக்கும் நான் காலை வணக்கச் செய்தி போட மாட்டேன்; ஆனால் அப்பாவைத் தடை செய்ய முடியாதல்லவா! ஏதாவது விசயம் இருந்தால் நேரடியாக அழைத்துப் பேசுவேன் அல்லது வாட்ஸாப்பில் பேசுவேன். எனக்கு தட்டச்சு செய்து செய்தி அனுப்புவதும் பிடிக்காது; நேரத்தை வீணாக்கும் செயல்.
அன்றும் எப்போதும் போல காலையில் வெளியே கிளம்புவதற்கு முன் புலனத்தை திறந்துப் பார்த்தேன். சில புதிய நண்பர்கள் எனக்கு காலை வணக்கச் செய்தி அனுப்பியிருந்தனர். இவர்களுக்கு விரைவில் இதைப் பற்றி சொல்லி விட வேண்டும்.
எப்போதும் அப்பாவிடமிருந்தும் காலை ஏழு மணிக்கே காலை வணக்கச் செய்தி வந்து விடும். ஆனால் இன்று காலை ஒன்றும் வரவில்லை. ஒரு வேளை இன்னும் எழுந்திருக்கவில்லையோ? அல்லது உடலுக்கு முடியவில்லையோ? உடல் சரியில்லையென்றாலும் காலையிலேயே செய்தி போட்டு விடுவாரே...
பிறகு அதைப் பற்றி மறந்து விட்டு படப்பிடிப்பு இடத்திற்குச் சென்று விட்டேன்.
மதிய உணவு வேளையின் போது கடையில் சாப்பிட்டுக் கொண்டே புலனத்தைத் திறந்துப் பார்த்தேன். அப்பாவுடைய புலனத்தில்— last seen yesterday at 22:35 என்று காலையில் உள்ளது போலவே காட்டியது.
முற்றும்

வணக்கம். கதையை வாசித்து முடித்த பிறகும் வாசகர்க்ளைத் தேடலில் நகர்த்தும் உத்தி நன்று. வாழ்த்துகள்.
ReplyDelete