சிறுகதை
எம். பிரபு
எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். எனக்கும் அவர்களைப் பிடிக்காமல் இருக்குமா பின்னே. நான் வாழ்வதே அவர்களுக்காகத்தான். அவர்கள் இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் அவர்கள் இல்லை. வாழ்க்கையை இப்படித்தான் அனுபவிக்கனும் என்று எழுதி வைத்திருந்தால் நான் என்ன செய்வது? எது நடக்க வேண்டுமோ அது நடந்துதானே ஆக வேண்டும். எனக்கு எப்போதுமே அந்த கர்வம் உண்டு. நான் மிகவும் நல்லவன். யாரும் என்னை கெட்டவன் என்று சொன்னதில்லை. சொல்லி இருக்கலாம். அதெல்லாம் பெரிய விசயமே அல்ல. அறவே இல்லை? தெரியாது.
அவர்களை எனக்குப் பிடிக்க காரணம் உண்டு. அவர்களுக்கும் என்னைப் பிடிக்க நிச்சயம் காரணம் இருக்கும். அதுக்காக எனக்கு அவர்களை வெறுமனே பிடிக்கும் என்று அர்த்தமாகி விடாது. அது போன்றுதான் அவர்களும். சும்மாவா அவர்களுக்கு என்னைப் பிடிக்கும்? நான் என்ன சினிமா நடினா? இருந்தாலும் நான் ஒரு தலைச் சிறந்த நடிகனே. அவர்கள் மட்டும் என்னவாம். எல்லோரும் நடித்துக் கொண்டுதான் உள்ளனர். சும்மாவா சொன்னார் ஷேக்ஸ்பியர்.
வாழ்க்கையில் நடிக்கும் நடிகனுக்கு, சினிமாவில் நடிக்கும் நடிகனை பிடிக்கின்றது. சினிமா நடிகன் நடிப்பதைக் காட்டிலும் நிஜத்தில் நடிப்பது மிகவும் சுலபமே. அது இயற்கையாகவே எனக்கு வந்து விடுகின்றது.
என்னைப் பொருத்த வரையில் வாழ்க்கையில் நடிப்பது எளிது. அட ... வாழ்க்கையே ஒரு நடிப்புத்தானே!
“முடியுங்களா டத்தோ? ரொம்ப நாளா நாங்க சொல்லிக்கிட்டுத்தான் இருக்கோம் ஆனால் செய்றோம்ன்னு சொல்றாங்க, ஆனால் எதுவும் செஞ்ச பாட்டைக் காணாம்.”
“நானும் அப்படித்தான்னு நீங்க நெனைக்கிறீங்களா?” எதற்கு இப்படி கேட்டேன்? நடிப்புத்தானே, பரவாயில்லை.
“உங்களைத் தெரியாதுங்களா, டத்தோ. ஆனால் நீங்க இந்த தொகுதி இல்ல. உங்க தொகுதிலே நிறைய காரியம் செஞ்சிருக்கீங்க. ஆனால் இங்க எதிர்க் கட்சி வேட்பாளர் ஜெயிச்சாட்டாரு. அவர், நம்ம ஆளு வேற இல்லை. எங்களுக்கு அப்படி ஒன்னும் அவர் செய்யப் போறதாவும் தெரியிலே. எங்களுக்கு ஒரே குழப்பமா இருக்கு.”
“நம்மவங்களுக்கு நான் உதவி செய்யிலனா எப்படி, நான் மேலிடத்தில உங்கப் பிரச்சனையைப் பத்தி சொல்லி, முட்டி மோதிப் பார்க்கிறேன். நிச்சயம் நல்லது நடக்கும். கவலைப் படாதீங்க.”
இப்படி நான் இவர்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருப்பதும் ஒரு நடிப்புத்தான். அவர்களுக்கு உதவுவேனா, இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது, ஆனால் மிகவும் சுலபமாக வார்த்தைகள் வாயில் இருந்து கொட்டி விடுகின்றன. அது எவ்வாறு நிகழ்கின்றது எனறு எனக்கே புரிய மாட்டேன் என்கிறது. நான் ஒரு பயங்கர நடிகன்தான்.
அன்று எதேச்சையாக ஒரு திருமண நிகழ்வுக்கு அந்த இடத்திற்கு சென்ற போது என்னைச் சூழ்ந்த சில பேர் அப்படிப்பட்ட விண்ணப்பம் வைத்தனர். பாவம் அவர்கள். பல வருடங்களாக அவர்கள் வீட்டிற்கு செல்லும் பாதையில் தார் சாலை கிடையாது. முறையான தண்ணீர் வசதியும் இல்லை. இன்னமும் அருகில் இருக்கும் ஆற்றைத்தான் நம்பி வருகின்றனர். புரம் போக்கு நிலம், என்ன செய்வது. பேருக்குத்தான் நாடு சுதந்திரம் அடைந்து விட்டது. அடையாமல் இருப்பது எவ்வளவோ உள்ளன. நான் இப்படி யோசிப்பது நடிப்பா இல்லையா என்று எனக்குப் புலப்படவில்லை. சமயங்களில் என் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு உண்மையாக யோசிப்பதும் உண்டு.
அவர்கள் தங்களுடைய மனக்கஷ்டடங்களை சொல்லும் போது நான் என்ன நினைப்பேன்? எப்படித்தான் நினைப்பேன்? ஐயோ பாவப்பட்ட ஜனங்கள் என்று துடிதுடித்துப் போவேனா? என் சொந்த தொகுதி மக்கள் பிரச்சனைக்கே நான் உண்மையாய் கவலைப் பட்டதில்லையே, இந்த புறம் போக்கு மக்களுக்கா நான் கண்ணீர் சிந்தப் போகின்றேன்?
நான் அரசியலில் இருப்பதே கத்தி மீது நடப்பது போன்று. முன்பு போல சொகுசாக ஜெயிக்க வாய்ப்பு குறைவு. இப்போ இருக்கும் பதவி இன்னும் ஐந்து வருடத்தில் காணாமல் போனாலும் போய்விடும். தோற்கமாட்டோம் என்ற நம்பிக்கை உண்டு.
அந்த நம்பிக்கை இருந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் பயம் அவ்வப்போது வந்துக் கவ்வும்.
மக்களுக்கு நல்லது செய்கின்ற மாதிரி செய்யனும், சொந்தமாக என்ன சம்பாதிக்க முடியுமோ அதை சம்பாதித்து வைத்து விட வேண்டும் (எந்த வழியிலும்). என்ன என்ன தொழில் இருக்கோ வாய்ப்பு இருக்கும் போதே என் குடும்பத்தாருக்கு செய்து விட வேண்டும். பிறகு ஐந்து வருடத்திற்கு பிறகு இந்த மக்களா நம்மைக் கண்டு கொள்ளப் போகிறார்கள்?
எல்லாம் பதவியில் இருக்கும் வரைதான். அதுக்குப் பிறகு எவனும் என்னை ஏறெடுத்துப் பார்க்கக் கூட மாட்டான். நல்லது செய்ய முடிந்தால் செய்வோம். அதே சமயம் நமக்கு எந்த வழிகளில் லாபம் வருகிறதோ அதையும் என் வருங்காலத் தேவைக்கு இப்போதே நான் செய்து கொண்டால்தான் உண்டு. மக்களுக்காகவும் உழைக்கனும், எனக்காகவும் உழைக்கனும். இந்த விசயங்கள் செய்யும் பொழுது நான் நடிக்காமல் உண்மையாக உழைக்கின்றேன். எனக்கென்று வரும்போது, நடிக்க வாய்ப்பில்லை, மிகவும் ஜாக்கிறதையாக நடந்துக் கொள்ள வேண்டும்.
அந்தக் காலத்து அரசியல்வாதிகளையும் இன்றைய அரசியல்வாதிகளையும் நாம் ஒப்பீடு செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அவர்கள் வாழ்ந்த காலம் வேறு, இப்போ நாம் வாழும் காலம் வேறு. இப்போது சாதாரன வேலை செய்பவர்களின் வீட்டில் குறைந்தது இரண்டு கார்கள் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர் அதுக்கும் மேலே. பிறகு அரசியல்வாதி மட்டும் என்ன இளிச்ச வாயனா?
நாமும் சம்பாதிக்கனும் சொகுசா வாழனும். பிறகு பிறந்ததிற்கு அர்த்தம் இல்லாமலேயே போய்விடும். எவன் ஒருவன் ஏழையாகவே பிறந்து சாகின்றானோ, அவன் குறுக்கு வழி தெரியாத மூடன். எந்த வியாபாரியும் எவ்வளவு லாபம் என்று வாடிக்கையாளர்களிடம் சொல்லிக் கொண்டு வியாபாரம் நடத்த மாட்டான். அப்படி எவன் ஒருவன் இருந்தானென்றால், அவன் ஒரு முட்டால். வியாபாரியும் ஒரு சிறந்த நடிகனே.
மற்றவர்கள் குற்றம் செய்தால் அதை யாரும் பெரிது படுத்துவது இல்லை. அதே ஒரு அரசியல்வாதி செய்தால், மக்கள் சொத்தை கொள்ளையடிச்சிட்டான்னு ஒரு கெட்ட பெயர். அந்த சமயத்தில் நாம் நல்லது செய்தது எல்லாம் கண்ணுக்குத் தெரியாது. அதை அப்படியே மறந்து விடும் இந்த மக்கள்.
இப்படிப்பட்ட மக்களிடம் நாம் நடிக்காமல் என்ன செய்வது? அரசியல் ஒரு வியாபாரம், அதில் என் போன்றவர்கள் வியாபாரி. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள் புரியாதவர்களுக்கு விளக்கங்கள் தேவை இல்லை.
“சார், அன்றைக்கு அந்த புறம்போக்கு மக்களுக்கு ஏதோ செய்யப் போவதாக சொன்னீங்களா?” என் பத்திரிக்கை செயலாளர் காலையிலேயே என் காதில் வந்து கிசு கிசுத்தான். காது கொஞ்சம் கூசியது. நான் எப்ப என்ன சொன்னேன். எனக்கு அப்போது எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை. ஆனால் இலேசாக நடிக்கின்றேன் என்று தெரிகிறது.
“எப்ப சொன்னேன்?” இது எனக்கு ஞாபக மறதி கலந்த நடிப்பு.
“மூனு மாசத்துக்கு முன்.”
“மூனு மாசத்துக்கு முன்னுக்கா? அப்படி ஏதும் இல்லையே. நம்ம தொகுதிலே புறம்போக்கு நிலத்துல அப்படி யாரும் வீடு கட்டிக்கிட்டு இல்லையே?” எனக்கு ஞாபகத்துக்கு வந்து விட்டது, இருந்தாலும் நடிக்கனும் இல்லையா. தொடர்ந்து ஞாபகத்துக்கு வராத மாதிரியே தொடர்ந்தேன்.
“அன்றைக்கு கல்யாணத்துல பார்த்த ஆளுங்க நேரடியா ஆபிசுக்கு மத்தியானம் வந்தாங்க. நீங்க வெளியூர் போய்ட்டதா சொல்லி மழுப்பிட்டேன்.”
“அதுக்கு நீ ஏன் இப்போ ஒரே டென்ஷனா இருக்க?”
“அவங்கள பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு, நாமளும் ஒன்னும் செய்ய முடியாது வேற. முடிஞ்சா டத்தோ அஸ்மி கிட்ட பேசிப் பார்க்கலாமே ...”
“அவரு கிட்ட பேசிட்டா, உடனே செஞ்சு கொடுத்திருவாரா?” இப்போ என் எதிரில் பேசிக் கொண்டிருக்கும் இவன் மீது நிஜமாகவே கடுப்பாகியது.
“எதுக்கும் அவர் காதுல போட்டு வெச்சிட்டா, நல்லதுதாங்க சார்.” என்னை டத்தோன்னு கூப்பிடாம ஏன் சார் ... சார்ன்னு ...
“இப்போ எனக்கே புத்திமதி சொல்லும் அளவுக்கு தைரியம் வந்திருச்சுல்ல,” எனக்கு ஆத்திரம் வந்தால் நேரடியாக கொட்டி விடுவேன். இந்த மாதிரி விசயங்களுக்கு எல்லாம் நல்லவன் போல் நடிக்க முடியாது.
“ஐயோ, அப்படி இல்ல சார், அவங்களும் தமிழாளுங்க, கஷ்டப்படுறாங்கலேன்னு சொன்னேன் சார்.”
“அது எனக்கும் தெரியும். அது தெரியமலா, நம்ம தொகுதி மக்கள் எல்லா இனத்தவங்களையும் நல்லா வச்சிருக்கேன்?” சொல்ல வந்துட்டான் பாரு.
“அதுக்கு?” நான்தான் இது.
“இவங்களுக்கும் ஏதாவது செஞ்சிங்கன்னா, உங்களுக்கும் பேரு கிடைக்கும்.” இவரு பெரிய இவரு. என் பேரப் பற்றி கவலைப் படுகிறான்.
“இப்ப இருக்கிற பேரும் நல்லாதானே இருக்கு?” நான் இப்படி சொன்னதும் என் பத்திரிக்கை செயலாளர் முகத்தைப் பார்க்குனுமே. அசல் இஞ்சி தின்ன குரங்குதான் (இஞ்சி தின்ன குரங்கை இதுவரையில் நான் பார்த்ததில்லை). யுனிவெர்சிட்டியில் படிச்சிட்டு வந்துட்டா போதும், எல்லாமே கரைச்சு குடிச்ச மாதிரி பேசறானுங்க. எவ்வளவு படிச்சாலும் ஏறக்குறைய படிச்ச என் கிட்டதானே வேலை செய்தாகனும்னு தலைவிதி. அதை எப்படி மாத்தறது.
“சரி அடுத்த வாரம் நாம அந்த தொகுதி டத்தோவை பார்த்திடுவோம்.” நடிக்கனும்லே அதான் ஒப்புக்கு சொல்லி வைத்தேன். ஒப்புக்கு சொல்லி வைத்தாலும், அந்த டத்தோவைப் பார்க்காமல் இருந்து விடப் போவதில்லை. நிச்சயம் பார்ப்பேன். மக்களுக்கும் நல்லது நடக்கும் சாக்கில் எனக்கும் நல்லது நடக்கனும். நான் நடிகன். வாழ்க்கையின் நிஜ நடிகன். எனக்கே மிகவும் ஆச்சர்யமாக இருக்கும் எப்படி எனக்கு இதுவெல்லாம் சாத்தியம் ஆகிறதென்று.
மறு வாரம் என் பத்திரிக்கை செயலாளரிடம் சொன்னது போன்று அந்த தொகுதி டத்தோவை சந்தித்து அவர் தொகுதி மக்கள் பிரச்சனையை கூறினேன். அவரும் இப்படிப்பட்ட பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை என்றார். அவரும் நடிக்க வேண்டும் அல்லவா?
நான் முன்கூட்டியே அவரிடம் அந்த தார் சாலை பற்றிய விபரங்களை தொலைபேசி மூலம் சொல்லிவிட்டேன். தார் சாலை கண்ட்டிரெக்ட்டில் எனக்கும் அந்த டத்தோவிற்கும் நண்மை உண்டு. இந்த விசயம் என் பத்திரிகை செயளாலருக்கும் தெரியாது. தெரிந்து என்ன செய்ய முடியும்? ஆனால் நான் முழு மனதுடன் உதவி செய்து விட்டதாக நம்பினான். அது போதும் எனக்கு. பத்திரிக்கைகளில் செய்தி வரும். அது போதும் அடுத்த தேர்தல் வரும் வரைக்கும் காப்பாற்றும். மீண்டும் இன்னொரு ஐந்து வருடத்திற்கு நடிக்கலாம்.
நான் லாபத்தையும் பார்த்து விட்டு மக்களுக்கும் உதவி செய்வதால் யாரும் என்னை எதுவும் சொல்ல முடியாது. நான் அப்பேர்ப்பட்ட ஆள்.
ஆனால் என் உள் மனது பயந்தது போன்று ஒரு நிகழ்வு எனக்கும் நடக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவே இல்லை!
பயம் வரும் போது வெளியில் தைரியமாக இருப்பது போன்று நடிக்கத் தெரிந்த எனக்கு, மனதிற்குள் நடிக்கத் தெரியவில்லை.
எப்போது என்ன நடக்கும், என்ன ஆகும். என் சொத்துக்களின் கதி இனி அதோ கதிதானா என்ற பயம் உள்ளூர என் மனதையும் உடலையும் பிழிந்து எடுக்கின்றது. என் மனதிற்கு தைரியமாக இரு ... தைரியமாக இரு என்று சொல்லிச் சொல்லி பார்க்கின்றேன். தடவித் தடவிக் கொடுக்கின்றேன். முடியவில்லை. இதனால் என் வெளி நடிப்பு, நான் தைரியமாக இருப்பதைப் போன்ற நடிப்பைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்ற பயம் வேறு. இனி என் நடிப்பை எப்படித் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வேன்?
முற்றும்
Comments
Post a Comment