அனுபவம்
எம். பிரபு
எப்போது நிழற்படம் 1826ஆம் ஆண்டில் தோன்றி மக்களிடையே பிரசித்திப் பெற்றதோ, அதன் மீது உள்ள அதீத ஆர்வத்தால் படங்களைச் நகரச் செய்து பார்த்துவிட பலர் முயற்சியில் இறங்கினர். அதன் பின் வெவ்வேறு நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளால் நகரும் படங்கள் கருவிகளை உருவாக்கப்பட்டன.
என்னதான் Thomas Alva Edison நகரும் படக்கேமராவைக் உருவாக்கியிருந்தாலும், டிசம்பர் 28, 1895 ஆம் ஆண்டு Auguste மற்றும் Louis Lumiere சகோதரர்கள்தான் பிரான்சில் முதன் முறையாக மக்களின் பார்வைக்கு அரங்கு அமைத்து திரைப் படங்களைத் திரையிட்டு காண்பித்தனர்.
அந்நாளில் அவர்கள் 10 குறும்படஙளைத் தயாரித்துத் திரையிட்டனர். ஒவ்வொன்றும் சுமார் 50 விநாடிகள் ஓடியது.
இவ்வாறு ஆரம்பித்த சினிமா, இன்று எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்று பார்த்தால் மிகவும் மலைப்பாக உள்ளது.
எந்த ஆண்டில், எந்தப் படத்தை நான் முதன் முறையாக ஒரு திரையரங்கில் அமர்ந்து பார்த்தேன் என்று எனக்கு நினைவில்லை. ஆனால் நிச்சயமாக எனது தாயாரின் மடியில் 1969 அல்லது 1970ஆம் ஆண்டுகளில் பெந்தோங் லிடோ அல்லது கெத்தே திரையரங்கில் ஏதாவது ஒரு சிவாஜி அல்லது எம்.ஜி.ஆர் படம் பார்த்திருக்கக் கூடும்.
அதன் பின் எனது நான்காவது அல்லது ஐந்தாவது வயதில் பார்த்தப் படங்கள் பெரும்பாலும் ஞாபகத்தில் உள்ளது. குறிப்பாக தெய்வ மகன், வசந்த மாளிகை, பொன்னூஞ்சல், உலகம் சுற்றும் வாலிபன், ஸ்கூல் மாஸ்டர், அபூர்வ ராகங்கள், மேல் நாட்டு மருமகள், போபி, ஹாத்தி மேரே சாத்தி, ஹரே ராமா ஹரே கிருஷ்னா, ஜாஸ், கிங் காங் போன்ற படங்களின் பட்டியல் நீளும்.
பெரும்பாலான தமிழ்ப் படங்களுக்கு அப்பா எங்களை அழைத்துச் செல்வார். சைக்கிளில், நடந்து அல்லது அவரது அலுவலக காரிலும் குடும்பத்துடன் செல்வோம். மாதத்திற்கு குறைந்தது இரண்டு திரைப்படங்களாவது பார்த்து விடுவோம். படங்கள் பார்ப்பது போன்றதோரு சந்தோசம் அப்போது வேறெதுவும் இருந்ததில்லை. வீட்டிலும் அப்போது தொலைக்காட்சிப் பெட்டி இடம் பெறாததால், வானொலியை அடுத்து, சினிமாவே அன்று எங்களின் இன்பமயமான பொழுது போக்கு சாதனமாகும்.
நான் வசிக்கும் இந்தச் சிறிய பெந்தோங் பட்டணத்தில் தமிழ்ப் படங்கள் ஒரு நாள் மட்டுமே திரையிடப் படும். கெத்தேயில் இரண்டு தமிழ்ப் படங்கள், லிடோவில் இரண்டுப் படங்கள். அதுவும் எல்லா படங்களுக்கும் நாங்கள் போவதும் இல்லை.
இந்தியன் மூவி நியூஸ் இதழை மாதந்தோறும் வாங்குவதால் அதில் வரும் குறுக்கெழுத்து மற்றும் படத்துண்டு புதிர்ப் போட்டிகளில் எங்கள் தகப்பனார் திரு. எஸ். மாதவன் பங்கெடுத்துப் படம் பார்க்க இலவச நுழைவுச் சீட்டுகள் பெறுவார். இந்தச் சலுகையை ஏற்படுத்தித் தந்த ஷா ப்பிரதர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி செலுத்தியே ஆக வேண்டும்.
அப்போதெல்லாம் திரையரங்கில் குளிர்ச்சாதன வசதி இருக்காது. டிக்கெட் விலைகளும் பல விதத்தில் இருக்கும். இருக்கைகளும் பலகைகள் மற்றும் இரும்பிலானதாக இருக்கும். மேல் மாடி அதாவது ரிசர்வில் மட்டும் இருக்கைகள் சற்று வசதியாக அமைந்திருக்கும். டிக்கெட் விலைகள் மெது மெதுவாக ஏறிக் கொண்டே சென்று, இப்போது பல மடங்கு அதிகரித்து விட்டன.
3-ஆம் வகுப்பு (முன் இருக்கைகள்): 65 சென்
2-ஆம் வகுப்பு (நடுத்தர இருக்கைகள்): 1 ரிங்கிட்
1-ஆம் வகுப்பு (பின்புறம்): 1 ரிங்கிட் 55 சென்
சிறப்பு வகுப்பு (மேல் தளம்): 2 ரிங்கிட் 50 சென்
சினிமா அனுபவம்
ஒரு நல்ல படம் பார்க்க, முன்னரே குடும்பத்தில் திட்டமிடுவோம். சில சமயம் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அப்பாவிற்கு நேரம் இருந்தால், நல்ல படங்கள் வந்தால் மட்டுமே எங்களை அழைத்துச் செல்வார்.
திரையரங்கின் முன் பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும். கண்ணாடி பெட்டிகளில் பட காட்சிப் புகைப்படங்கள் வைக்கப்பட்டு TODAY, TOMORROW, COMING SOON, Next Change, Last Day என்று எழுதப்பட்டிருக்கும்.
படம் வெளிவரும் போது வீடுகளுக்கு சிற்றிதழ்கள் கொடுக்கப்படும். ஷா ப்ரதர்ஸ் சிற்றிதழ்கள் பலபலப்பான தாளில் வர்ணத்தில் கொடுக்கப்படும்; கெத்தே சிற்றிதழ்கள் சாதாரணத் தாளில் கருப்பு வெள்ளையில் இருக்கும். அந்தச் சிற்றிதழைப் பார்த்தவுடன் படத்தைப் பார்த்துவிட ஆசையைத் தூண்டும்.
புதியத் தமிழ் படஙகள் வந்தால் வானொலியில் அரை மணி நேர நிகழ்ச்சி படத்தொகுப்பு இடம் பெறும். மேலும் படத்தின் பாடல்களைக் ரங்காயான் மேராவில் கேட்டவுடன் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மேலும் அதிகரிக்கும்.
இந்தியாவில் படம் ரிலீஸ் ஆன உடனேயே மலேசியாவில் இப்போது உள்ளது போல் அன்றே வெளிவராது. சில மாதங்கள் கழித்து, பெரிய நகரங்களில் முதலில் வரும். எங்கள் ஊரில் ஒரு வருடம் அல்லது இரண்டாண்டுகள் கழித்து தான் திரையிடப்படும்.
பண்டிகை மாதிரி அனுபவம்
திரையரங்குக்குச் செல்வது ஒரு பண்டிகை மாதிரி. பள்ளியில் நண்பர்களுடன் பார்த்தப் படங்களைப் பற்றி பேசுவது அல்லது இனிமேல் பார்க்கப் போகும் படத்தைப் பற்றியும் பேசுவது சர்வ சாதாரணமனது. அப்போது எனக்கு எட்டு வயது தான். ஆனாலும் சினிமா பற்றிய ஆர்வம் அதிகம் இருந்தது.
அப்பா Indian Movie News மாத இதழை வாங்குவதால், அதில் தமிழிளும், ஆங்கில மொழியிலும் சினிமா செய்திகள் இடம்பெறும். அதைப் பார்த்தாலே புதிய படங்கள் பற்றி தெரிந்துக் கொள்ள முடியும். என் தமிழை வளர்த்ததில் IMN இதழுக்கும் பங்குண்டு.
ஒரு நாளுக்கு இரண்டு காட்சிகள்தான் தமிழ்ப்படங்களுக்கு. நாங்கள் பெரும்பாலும் இரவு 8 மணி காட்சிகளுக்குத்தான் செல்வோம். திரையரங்கிற்குள் செல்லும்போது மனதில் பெரிய மகிழ்ச்சி! போஸ்டர்கள் பார்க்கும் சுகம், டிக்கெட் வாங்கும் சுகம், மிட்டாய்கள் வாங்குவது, புகைப்படங்கள் பார்ப்பது எல்லாம் ஒரு விழா போல இருக்கும்.
டிக்கெட் கிழிப்பவரைக் கண்டாலே எனக்கு மகிழ்ச்சி உண்டாகும். நான் சிறியவன் என்பதால் முன் இருக்கையில் யாராவது அமர்ந்தால் படம் தெரியாது. அப்போது அம்மா அல்லது அப்பா மடியில் அமர்ந்துதான் திரைப்படத்தைப் பார்ப்பேன், அவர்களும் சிரமத்தோடுதான் பார்த்திருப்பார்கள்.
படம் தொடங்கும் முன், பழைய பாடல்கள் ஒலிக்கும். பின்னர் விளம்பர ஸ்லைடுகள் வரும்—சாதாரணப் பொருட்கள், சிகரெட், மது, வரவிருக்கும் படங்கள் எல்லாம் அதில் காட்டுவார்கள்.
பிறகு படம் ஆரம்பிக்கும். அந்தச் சந்தோஷம் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
கெத்தே திரையரங்கில் நெகாராகூ தேசிய கீதமும் ஆரம்பக் காலங்களில் இடம்பெற்றது. நாங்கள் எழுந்து நிற்போம். அதே திரையரங்கில் தமிழ்ப் படங்களுக்கு இடைவேளை சமயத்தில் 5 நிமிடம் ஓய்வும் கொடுப்பதுண்டு.
படம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் சமயத்தில் அப்பா எங்களுக்கு ஆவி பறக்கும் கச்சான் பாவ் வாங்கிக் கொடுப்பார். வீட்டிற்கு வந்த பிறகு சாப்பிடுவோம். மீதமிருந்தால், காலையில் அம்மா அதை சூடு காட்டி பசியாற கொடுப்பார்.
இன்றும் அவ்வப்போது தலைநகருக்குச் சென்று திரைப்படங்கள் பார்த்தாலும் அப்போதைய சந்தோசம் துளி அளவும் இல்லை.
தூக்கம்தான் வருகின்றது.
பெந்தோங் கெத்தே 1965
தொடரும் ...
Comments
Post a Comment