அனுபவம்
எம். பிரபு
குடும்பத்துடன் திரைப்படம் பார்க்கும் பழக்கம் தொடர்ந்து இருந்தது. அதுபோலவே நான் தனியாகவும் அடிக்கடி திரைப்படம் பார்த்தேன். சில நேரங்களில் பெற்றோருக்குத் தெரியும், சில நேரங்களில் தெரியாமலும் பார்த்தேன். நான் தனியாக பார்த்த படங்கள் பெரும்பாலும் மலாய், ஆங்கிலம் மற்றும் கென்தோனிஸ் படங்களாக இருந்தன.
என்னனுடைய 11 வயதில் (1979) முதன்முதலில் தனியாக படம் பார்க்கத் தொடங்கினேன். பார்த்த முதல் படம் SUMBER ILHAMKU.
அந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், மலாய் படங்களை அதிகம் விரும்பத் தொடங்கினேன். CERITAKU CERITAMU, ADIK MANJA, JEJAK BERTAPAK, ESOK MASIH ADA, ANAK TUNGGAL, TUAN BADOL போன்ற பல படங்களை 1980 வரை பார்த்தேன். பிறகு இடைநிலைப் பள்ளிக்குச் சென்ற பின் KAMI, MEKANIK, GILA-GILA REMAJA, BUKIT KEPONG, ABANG போன்ற படங்கள் கவர்ந்தன.
பள்ளியில் புறபாட நடவடிக்கைகளில் கலந்துகொள்வதாக கூறிவிட்டு எங்கள் வீட்டிலிருந்து நடந்துச் செல்லும் தூரத்தில் இருந்த லிடோ மற்றும் கெத்தேக்கு சென்று விடுவேன். எனக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லாததால், யாரும் என்னைப் பற்றி வீட்டில் தகவல் சொல்லிவிட வாய்ப்பில்லை.
ஆனால் திரையரங்கில் சிகரெட் புகைதான் என்னுடைய பரம எதிரி. அப்போது மக்கள் சுதந்திரமாக அரங்கில் புகை பிடிக்கலாம். அந்த சிகரெட் வாடை உடுப்பிலும் உடம்பிலும் ஒட்டிக் கொள்ளும்.
வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக குளித்து விடுவேன். இல்லையெனில் வீட்டில் உள்ளவர்கள் நான் புகை பிடித்ததாக நினைத்துவிடுவார்கள் அல்லவா.
டிக்கெட் காசுக்கு தினசரி பள்ளி கான்டீன் செலவுக்கு அம்மா கொடுக்கும் பணத்தில் இருந்து மிச்சப்படுத்தி சேமித்துக் கொள்வேன். இரண்டு வாரத்தில் 65 சென் சேமித்தால் ஒரு படம் முன் வரிசையில் உட்கார்ந்து பார்த்துவிட முடியும்.
நானும் என் சகோதரரும் சில நேரங்களில் வீட்டிலேயே "திரைப்படம்" போடுவோம். லிடோ சினிமாவின் குப்பைத்தொட்டியில் projector-ல் எரிந்து கிழிந்த பிலிம் துண்டுகளை வீசிவிடுவார்கள். நாங்கள் அவற்றை எடுத்து வந்துவிடுவோம். அவற்றை BRYLCREEM டப்பாவில் அடைத்துக் கொள்வோம். காகிதப் பெட்டிக்குள் வெள்ளை காகிதம் ஒட்டிக் கான்வாஸாக மாற்றுவோம். மூன்று துளைகள் போட்டு, ஒன்றில் கைலாம்பு வைத்து பிலிம் காட்டுவோம். நடுவில் பூதக்கண்ணாடி வைத்தால் படம் இன்னும் தெளிவாக தெரியும். அதை இரவில் ஒவ்வோரு சுருளாக வைத்துப் பார்ப்போம். எல்லா மொழி படச் சுருள்களும் எங்களுக்கு கிடைக்கும். அதைப் பார்க்கும் மகிழ்ச்சி சொல்லில் அடங்காது.
ஹாலிவுட் படங்களை நான் 1974 ஆம் ஆண்டிலிருந்தே பார்த்தேன். முதல் படம் The Towering Inferno. பின்னர் Jaws, King Kong போன்ற படங்களையும் பார்த்தோம். சில நேரங்களில் அப்பாவுடன், சில நேரங்களில் அண்ணனுடன் மட்டும் செல்வேன்.
ஹிந்தி படங்கள் மிகக் குறைவாகவே பார்த்தேன். ஹாத்தி மேறே சாத்தி, போபி, சோலே, யாதோன் கி பாராத், ஆக லே லக ஜா, டிஸ்கோ டான்சர் போன்ற சில படங்களே பார்த்தேன். இந்திப் படங்கள் பார்க்கும் ஆர்வம் அவ்வளவாக இல்லை. ஏன் என்றும் தெரியவில்லை. ஒருவேளை தமிழ்ப் படங்கள் போதுமானது என்றே நினைத்திருப்பேன்.
ஹாங்காங் படங்கள் நிறைய பார்த்தேன். JACKIE CHAN, CHOW YUN FATT, ALEX MUN போன்ற நடிகர்களின் படங்கள் பிடித்திருந்தது. ஷா ப்பிரதர்ஸ் படங்களுக்கு நல்ல சப்டைட்டில் இருந்தது. ஆனால் கத்தே படங்களில் சப்டைட்டில் சில நேரங்களில் காணாமல் போய்விடும். அதனால் கதையை புரிந்துகொள்ள சிரமமாக இருக்கும்.
1985 ஆண்டு முதல் பெந்தோங் சினிமாக்களில் தமிழ் படம் காட்டப்படவில்லை. 1989இல் தெமர்லோ சென்றபின் மீண்டும் தமிழ்ப் படங்களைத் தியேட்டரில் பார்த்தேன். கமலஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படம்தான் மெந்தகாப் கிராண்ட்டில் மீண்டும் பெரிய திரையில் கண்ட படம். அதற்கு முன் 1984இல் ரஜினிகாந்தின் தாய் வீடு பெந்தோங் கெத்தேயில் பார்த்த கடைசிப் படமாக அமைந்தது.
பிறகு மீண்டும் 1991 ஆண்டு பெந்தோங் லைசியும் திரையரங்கம் இந்தியர் கைக்கு மாற்றம் கண்டு தமிழ்ப் படங்களாகவே ஓடியது. இங்குதான் தளபதி படம் பார்த்தேன்.
லைசியும்
பெந்தோங்கில் மூன்று திரையரங்குகள் 96ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டன. வீடியோ மற்றும் VCD வந்ததால் ஏற்பட்ட வினை. அரங்குகள் பின்னர் பேரங்காடியாகவும் கிடங்காகவும் மாறின.
அதன் பிறகு நான் குவாலாலம்பூர் போய் படம் பார்த்தேன். சில நேரங்களில் மலிவான DVD வாங்கிப் பார்ப்பேன். Astro Box Office வந்தபின் மாதத்திற்கு 4 படங்களை குறைந்த விலையில் பார்க்க முடிந்தது.
1991இல் வீடியோ பிளேயர் வாங்கியபின், வீடியோ டேப்புகள் வாடகைக்கு எடுத்து பார்த்தேன். வீட்டு பொருளாதாரம் காரணமாக, வீடியோ பிளேயர் வாங்க தாமதமாகிவிட்டது. புதிய படங்கள் பெரும்பாலும் pirated copy தெளிவாக இல்லாததால், பழைய படங்களை வாடகைக்கு எடுப்பதையே விரும்பினேன். நல்ல "clear version" வந்தால் மட்டுமே புதிய படம் பார்ப்பது வழக்கம். ஒரு டேப்பின் வாடகை RM2.50.
இப்போது எல்லாம் மாறிவிட்டது. ஆன்லைனில் டிக்கெட் வாங்கலாம். கவுண்டரில் வரிசை பிடித்து நிற்க வேண்டியதில்லை. யூடியூப் மற்றும் OTT மூலம் படம் எளிதில் கிடைக்கிறது.
ஆனால்...
அந்தக் காலத்தில் திரையரங்கில் கிடைத்த மகிழ்ச்சி இப்போது திரும்பக் கிடைக்காது.
அந்த அனுபவம் தனித்துவமானது.
Comments
Post a Comment