சிறுகதை எம். பிரபு இன்று காலையும் எப்போதும் போல புலனத்தில் காலை வணக்கம் தகவல் போட்டப் பிறகு அப்பா பேசினார், நானும் பேசினேன். “ இந்த மாசம் எப்போ வீட்டுக்கு வர்றே ?” “ இன்னும் சரியா தெரியலப்பா.” “ மத்தவங்களுக்கு எல்லாம் சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை விடுப்பு கொடுக்கிறாங்க ; உனக்கு மட்டும் ஏன் விடுப்பு கிடையாது ?” “ என் வேலை மத்தவங்க மாதிரி இல்லப்பா.” “ நல்லா சம்பளம் கொடுத்தா மட்டும் போதுமா ? விடுப்பெல்லாம் ஒழுங்குமுறையா கொடுக்குறது இல்லையா ? நீயும் உன் வேலையும்! சரி , வரப்ப திடுதிப்புன்னு வந்து நிக்காதே. ஒழுங்கா ஒரு வாரத்துக்கு முன்னாலேயே சொல்லிட்டு வா!” “ என் வேலை எப்போ ஆரம்பிக்கும் , எப்போ முடியும் என்று தெரியாதுப்பா.” “ நல்லா படிச்சிருந்தும் ஏன்தான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தியோ ? மேல் படிப்பு படிக்கச் சொன்னா அதுவும் செய்யல. சரி... சரி , எனக்கு சமைக்கிற வேலை இருக்கு. நான் போனை வெச்சிடுறேன்.” அப்பாவுக்கு நான் ஆசிரியர் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பது கனவு. என் தாயார் தமிழ்ப் பள்ளி ஆசிரியையாக இருந்ததால் அந்த ஆசை அப்பாவுக்கு ஏற்பட்டிருக்கலாம். அப...