குறுங்கதை
எம். பிரபு
இன்று இரவு அவன் கதையை முடிப்பதே சரி. நண்பனாக இருந்தவன் இப்போது துரோகியாக மாறி விட்டான். அவனுக்கெவ்வளவு செய்திருப்பேன். எதையுமே நினைத்துப் பார்க்காமல் என்கிட்டேயே தன் வேலையை காட்டி விட்டான். இதற்குத்தான் எவனையும் நம்பக்கூடாது.
நயவஞ்சகன்!
“நிஜமாவா நீ இன்னிக்கி ராத்திரி அவனைப் போடப் போற?” கதிருக்கு என் செயல் மிகுந்த ஆச்சர்யத்தையும் பயத்தையும் கொடுத்தது. அவன் முகமே மாறியது.
“மெதுவா பேசு. இது வீடில்ல ... கடை. ஆமா, இன்னிக்கி ராத்திரி.”
“அவன் நம்ம கூட்டாளியாச்சே. நீ எப்படி அவனை சந்தேகப்படலாம்?” கதிர் இப்போது என்னைப் போன்று மெதுவாகவே பேசினான்
“எனக்குத் தெரியும் அது அவனேதான். வேற யாரும் இதை செஞ்சிருக்க முடியாது.”
“என்னால நம்பவே முடியில, சிவா.”
“நீ நம்பித்தான் ஆகனும்.”
“இதுக்கு வேற வழியே இல்லையா?”
கதிருக்கு முரளி மீது அவ்வளவு பிரியம். எனக்கு முன்பே அவர்கள் இருவரும் நண்பர்கள். அதனால்தான் அவன் என்னைத் தடுக்கின்றான்.
“நீயே யோசிச்சிப் பார், கதிர். எனக்கு நடந்தது மாதிரி உனக்கும் நடந்திருந்தா நீ என்ன செய்வே? இத்தனைக்கும் அவன் உன் உற்ற நண்பனா இருந்து இப்படி செய்தா, நீ சும்மா விட்டுவிடுவியா?”
கதிர் என் முன்னாள் அமர்ந்து தேநீரை சுவைத்துக் கொண்டிருந்தவன், கிளாஸை அப்படியே மேசையில் வைத்தான். நிச்சயம் யோசித்துப் பார்த்து, நான் எடுத்த முடிவு சரிதான் என்பான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
“எனக்கு நடந்தது மாதிரி உனக்கும் நடந்திருந்தா, நீ அவனை என்ன செய்வ?” என்று மீண்டும் கேட்டேன்.
கதிர் அதற்கு பதில் ஒன்றும் கூறாமல் என் முகத்தையே பார்த்தான். அவன் மனதிலும் அந்த பயம் வந்திருக்கக் கூடும்.
“அவனுக்கு அறிவுரை சொல்லியிருக்கலாமே.ரெண்டு பேரிடமும் விசாரிச்சிட்டியா? ”
கதிர் இப்படிக் கேட்டதும் எனக்கு கடுப்பாகியது, முரளி அவன் நெருங்கிய நண்பனானதால் விட்டுக் கொடுக்க மாட்டான்.
“நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்டா!”
அதற்கு அவன் ஒன்றும் சொல்லவில்லை. தேநீரை குடித்து முடித்தான்.
“எனக்கு என்னமோ இது சரின்னு படல, சிவா,” அப்போதும் கதிர் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இவனுக்கும் நான் எவ்வளவு செய்திருப்பேன்!
“அப்படினா நீ அவனை மட்டும் முடிக்கிறது சரியாகாதே. ரெண்டு பேர்த்தையும் சேர்த்துல அப்பவே முடிச்சிருக்கனும்,” தன் சந்தேகத்தை கேட்டான்.
“நான் ஒரேடியா ரெண்டுப்பேரையும் கொன்றுட்டா, போலீஸ் மத்தவங்க மேல சந்தேகப்படாம என்னைச் சின்னாங்கா மாமனார் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிருப்பானுங்க.”
கதிர் புன்னகைத்தான். அதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. இவனிடம் சொல்லாமலேயே காரியத்தில் இறங்கியிருக்க வேண்டும்.
“நான் எதையும் ஒரு தடவைக்கு, பத்து தடவை யோசிச்சுத்தான் முடிவெடுப்பேன், கதிர்”
“முரளியை கொல்வதையும் பத்து தடவை யோசிச்சுதான் முடிவெடுத்தியா?’
“ஆமாண்டா ...”
“நாம துப்பாக்கியை, கொள்ளையடிக்கும் போது சும்மா மிறட்டறதுக்குத்தான் பாவிப்போம். ஒரு தடவை ஒரு சீனக் கிழவன் காலை சுட்டோம். இல்ல ... அவனை நீதான் சுட்ட. எனக்குத் துப்பாக்கி பாவிக்கவே பயம். எனக்கு கத்திதான் சின்னாங்.” கதிர் தன் கையாலாகாத தன்மையைச் சொன்னான்.
“நான் ஒன்னும் உன்னைச் சுடச் சொல்லலையே. எல்லாம் நானே பார்த்துக்குவேன். நீ உதவி செஞ்சா போதும்.”
“இதை எப்படி செய்யப் போற?”
“உன் கிட்ட இதை சொன்னதே பெரிய விசயம். மொத்த காரியத்தையும் சொல்லி, உன் கூட்டாளிக்கிட்ட போட்டுக் கொடுத்திட்டேனா, அவன் உஷாராகிடுவானே!”
“எனக்கு நீங்க ரெண்டு பேரும் நெருங்கிய கூட்டாளிங்க. நாம ஒன்னா சேர்ந்து வேலைப் பார்த்திருக்கோம். ஒன்னா ஒரே வீட்டில் அண்ணன் தம்பியா பழகியிருக்கோம். ஒன்னா ஆளுங்க வீட்டுல புகுந்து கொள்ளையடிச்சிருக்கோம். முரளியை விட்டுப் பிரியறது மனசுக்கு ரொம்ப கவலையா இருக்கு, சிவா.”
கதிர் இப்படி கெஞ்சினால் முரளியை கொல்லாமல் விட்டுவிடுவேனா, என்ன! கதிரிடம் முரளியைக் கொல்லப்போகும் விசயத்தை சொல்லியிருக்கக் கூடாது. ஆனால் இதை அவனிடம் சொல்லியதால் அவனும் என்னிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பான் அல்லவா.
“இன்னிக்கி ராத்திரி எட்டு மணிக்கு எப்போதும் போல அந்தச் சீனன் கடைக்கு போவோம்.”
“நான் எதுக்கு?”
“நாம எப்போதும் தண்ணி போடற கடைக்குத்தானே போறோம். நீ ஒருத்தன் வரலைன்னா நல்லா இருக்காது.”
“எனக்கு என்னமோ பயமா இருக்கு. யாராவது பார்த்துட்டாங்கன்னா?”
“நான் என்ன அவனை கடையில வெச்சு செய்யவா போறேன்? எனக்கு வேற பிளான் இருக்கு. என்னா சரிதானே, கதிர்?”
கதிர் வாயே திறக்கவில்லை.
“நீ பேசாமல் வா. பயப்படாதே.”.
நான், முரளி, கதிர் மூவரும் கொள்ளையடிப்பதை முழு நேரத் தொழிலாக வைத்திருக்கவில்லை. கதிர் லாரி ஓட்டுகின்றான், முரளி புல் வெட்டும் தொழில் செய்கின்றான். நான் கிராப் கார் ஓட்டுகின்றேன். பொழுது போக்கிற்காகவும் கைச்செலவுக்காகவும் கொள்ளையடிப்போம். வாரத்திற்கு இருமுறைதான் கொள்ளையடிப்போம். ஒரு சிறிய குண்டர் கும்பலிலும் உறுப்பினராக உள்ளோம். அதில் தலைவன் என்று எவனுமே இல்லை.
இரவு எட்டு மணிக்கு நாங்கள் மூவரும் என் காரில் பயணித்து, சீனன் கடைக்குள் நுழைந்தோம். நன்றாக சாப்பிட்டோம். கறுப்பு, வெள்ளை எல்லாம் குடித்தோம். நல்ல வேளை கதிர், முரளியிடம் எதுவும் சொல்லவில்லை. இல்லாவிட்டால் முரளி வந்திருக்க மாட்டானே.
நான் அவர்கள் இருவர் போன்று அதிகமாக குடிக்கவில்லை. என் காலுறைக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை அவ்வப்போது தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.
முரளியும் கதிரும் நன்றாகவே குடித்திருந்தனர். தள்ளாடினர். ஒரளவுக்குப் பிறகு கிளம்ப ஆயத்தமானோம். அன்றைக்கு எனனுடைய பிளாஞ்சா.
முரளிக்கு இது என்னுடைய கடைசி பிளாஞ்சா!
கதிரை கார் பின்னால் உட்கார வைத்தேன். முரளியை முன்னால் உட்காரச் சொன்னேன். முரளி மிகவும் சந்தோசமாக இருந்தான். ஏதேதோ பேசினான். கதிர் அவன் அளவிற்கு பேசவில்லை. போதையில் அவனுக்குத் தூக்கம் வந்தது.
செல்லும் வழியில் எங்காவது ஒரு காட்டுப் பகுதியில் முரளியைப் போட்டுத் தள்ளிவிட வேண்டியதுதான் என்னுடைய திட்டம். சில மாதங்களுக்குப் பிறகு அவளையும் பரலோகத்திற்கு அனுப்பிவிட்டால் என் வாழ்க்கை நிம்மதியாகக் கழியும். ச்சே! பேருக்குத்தான் அவள் பெண்டாட்டி.
“எனக்கு ஒன்னுக்குப் வருது,” என்று ஏற்கனவே தேர்ந்தெடுத்த இருண்ட காட்டுப் பகுதி அருகே காரை செலுத்தினேன். முரளி தூங்கினான்.
காரை நிறுத்தினேன். காரை விட்டு கீழே இறங்க முற்பட்ட போது ... தீடீரென்று என் முதுகில் கூர்மையான ஆயுதம் பல தடவை பாய்ந்தது. பயங்கர வலி. ரத்தம் என் முதுகெங்கிலும் பரவி வழிந்தது. பின்னால் திரும்பிப் பார்க்கக்கூட முடியவில்லை. என் உடல் ஹாரன் மீது சாய்ந்தது. பார்வை மங்கியது. மூச்சுத் திணறியது.
மங்கியது ... மூச்சு நிற்க, இருள் மட்டுமே என் கண்களில் நிரம்பியது.
முற்றும்


Comments
Post a Comment