கட்டுரை
எம். பிரபு
நமது தேசிய மொழியான மலாய் மொழி தென்கிழக்கு ஆசியாவில் பேசப்படும் ஒரு ஆஸ்ட்ரோனேசிய மொழியாகும். இது குறிப்பாக மலேசியா, இந்தோனேசியா, புருனை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முக்கியமான மொழியாக விளங்குகின்றது.
தற்போது மலாய் மொழி 300 மில்லியன் மக்களால் பேசப்படுகின்ற ஒரு முக்கிய மொழியாகும். இதன் மொழி வளர்ச்சி தொடர்ந்து நடந்துக் கொண்டு வருகின்றது - தொழில்நுட்பம், கல்வி, ஊடகம், இலக்கியம், இணையம் ஆகியவற்றின் வழியாக.
இந்தியர்களும் சீனர்களும் எப்போது இந்த மலேசிய திருநாட்டிற்கு வந்தனரோ, அப்போதிலிருந்து அவர்கள் இவ்வழகிய மொழியை தேவை கருதி ஏற்றுக் கொண்டனர். மலாய்க்காரர்கள் அளவு பேசாவிட்டாலும், தினசரி உபயோகிக்கும் முக்கியமான வார்த்தைகள், கோர்வையாக பேச, புரிந்துக்கொள்ள கற்றுக் கொண்டனர்.
இந்த 2025 ஆண்டு வரையில் நம்மவர்கள் நிறைய பேர் தேசிய மொழியில் பாண்டியத்துவம் பெற்றுள்ளனர். இருப்பினும், இன்றளவும் இந்தியர்களும் சீனர்களும் 100% முழுமையாக இம்மொழியை தன்வசம் வைத்துக் கொள்ளவில்லையென்றே கூறலாம். இன்னமும் பல பேர் அதை அன்னிய மொழி என்றே கருதி வருகின்றனர்.
தற்போதைய காலக்கட்டத்திலும் நம் இந்திய மாணவர்களும் சீன மாணவர்களும் பெரும்பான்மையினர் தேசிய மொழியான மலாய் மொழியைக் கற்பதிலும் சரளமாக பேசுவதிலும் சிரமம் அடைகின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதனைக் கண்டுப் பிடித்து சரி செய்வது நமது பெரும் கடமையாகும்.
தேசிய மொழிப் பள்ளியில் பயிலும் நம் மாணவர்கள் மலாய் மாணவர்களுடன் பழகுவதால், ஓரளவிற்கு மலாய் பொழி பேசுவதில் சேர்ச்சிப் பெற்றுவிடுகின்றனர். இருப்பினும் வாசிப்பிலும் சொற்களை புரிந்து கொள்வதிலும் சற்று தொய்வு இருக்கவே செய்கின்றது. தேசிய மொழி தேர்வுகளிலும் மிதமான புள்ளிகளே எடுக்கின்றனர். இதில் சில மாணவர்கள் விதிவிலக்கு.
நமக்கு எவ்வாறு தமிழ் மொழி அதிமுக்கியமோ அதே போன்றுதான் தேசிய மொழியும் ஆங்கிலமும். இதில் எந்த வித பாகுபாடும் காட்டுவதற்கு இல்லை. மெண்டரின் மொழி பயில்வதும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மிகவும் தேவையாக கருதப்படுகின்றது. மெண்டரின் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட பலர் தேசிய மொழிக்கு கொடுப்பதில்லை, அதுதான் ஆச்சர்யம்.
பலர் தேசிய மொழியை மலாய்க்காரர்களின் மொழி என்று எண்ணம் கொண்டுள்ளனர். இது மிகவும் அபத்தமாகும். நாடு சுந்தந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகப் போகின்றது, நாம் இன்னமும் மாற்றம் காணாமலேயே உள்ளோம்.
மலாய் மொழியை எல்லா இனமும் அவர்களின் சொந்த மொழி என்று கருதப்படவே தேசிய மொழி (Bahasa Kebangsaan) என்றும் மலேசிய மொழி (Bahasa Malaysia) என்று முன்பு பிரகடனப்பட்டது. ஆனால் சில அறிவு ஜீவிகள் அதை மீண்டும் மலாய் மொழி (Bahasa Melayu) என்று மாற்றி அமைத்துக் கொண்டனர். அதனாலோ என்னவோ நாம் அதை ஓர் இனத்தவர்களின் மொழி என்ற எண்ணம் உண்டாகியதோ என்றும் தெரியவில்லை.
இப்போது நாம் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் நம் மாணவர்களின் பிரச்சனைக்கு வருவோம்.
தமிழ்ப் பள்ளிகளில் தேசிய மொழி பாட நேரத்தில் மட்டுமே பயில்வதால், அந்த மொழியை வெறும் ஒரு பாடமாகவும், தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியக் கட்டாயத்தின் பேரில்தான் பயிற்றுவிக்கப்படுகின்றது.
தேசிய மொழி தாய் மொழியைப் போன்றே பேணிக் காக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்பையினர் நினைப்பதில்லை. பல ஆசிரியர்கள் உட்பட அதை ஏதோ ஒரு இன்னொரு மொழி என்று கருதிவிடுகின்றனர். அதுதான் மிகுந்த ஆச்சர்யமான ஒன்று.
என்னிடம் தேசிய மொழி பயில வரும் மாணவர்களிடம் உரையாடும் போது, நான் சொல்லும் பல இயல்பான மலாய் வார்த்தைகள் அவர்களுக்கு மிகவும் புதுமையாக உள்ளன. தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அதன் விளக்கதை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
தமிழ்ப் பள்ளிகளில் எல்லோரும் ஒரே இனமாக உள்ளதால் தேசிய மொழி பேசும் சந்தர்ப்பமும் இழந்து விடுகின்றனர். இதனால் அவர்களால் தேசிய மொழியில் சரளமாக உரையாட முடிவதில்லை. இது ஐந்தாம் படிவம் செல்லும் வரைக்கும் தொடர்கின்றது. ஏன் என்றால், இடைநிலைப் பள்ளியிலும் நம் மாணவர்களும் சரி மற்ற இன மாணவர்களும் சரி, தங்கள் சொந்த இனங்களுக்கிடையே மட்டும் நட்பு வட்டாரத்தை வளர்த்துக் கொள்கின்றனர். இது மிகவும் ஓர் ஆபத்தான இடத்திற்கு இட்டுச் செல்லும்.
பிறந்த நாட்டின் தாய் மொழியை நம் மாணவர்களிடையே வளர்ச்சியடைய என்ன செய்யலாம்?
1. மழலை பருவத்திலேயே வீட்டில் உள்ளவர்கள் அவர்களிடம் தாய் மொழியினூடே தேசிய மொழியிலும் ஆங்கில மொழியிலும் பேசவேண்டும். கதைப் புத்தகங்களும் பல மொழிகளில் குழந்தைகளிடம் படித்துக் காட்டலாம்.
2. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து எல்லா மொழி புத்தகங்கள், நாளிதழ்கள், சஞ்சிகைகள் வாசிப்பது அவசியம்.
3. சிறிய வயதிலேயே மற்ற மொழி பேசும் அண்டை விட்டார்களிடம் நட்பு பாராட்டி தேசிய மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்.
4. தாய் மொழிப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் ஆசிரியர்களும் தேசிய மொழியில் தினசரி உரையாட வேண்டும்.
5. ஆசிரியர்கள் தன் வகுப்பு மாணவர்களை அவ்வப்போது அருகில் உள்ள நூல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பல மொழி புத்தகங்களை வாசிக்க பரிந்துரைக்கலாம்.
6. மாதந்தோரும் பள்ளியில் எல்லா மொழிகளிலும் கட்டுரை எழுதும் போட்டி நடத்தி, புத்தகங்களை பரிசாக வழங்கலாம்.
7. தேசிய மொழி பேசத் தெரியாதவர்களுக்கு குறைந்தப்பட்சத் தண்டனை வழங்கப் படவேண்டியது அவசியம்.
8. தேசிய மொழியில் அல்லது பிற மொழிகளில் தேர்ச்சி பெறாத பெரியவர்களுக்கு மாலை அல்லது இரவுகளில் கட்டாய வகுப்பு நடத்தப்பட வேண்டும்.
9. வாசிக்கும் பழக்கத்தை கட்டாயாப்படுத்தி, வாசிக்காதவர்களை சட்டத்திற்கு புறம்பானவர்களாக கருதப்பட வேண்டும்.
10. தேசிய மொழியின் வழியாகவும் மற்ற மொழிகளின் வழியின் வாயிலாகவும் இனங்களுக்கிடையே நல்லினக்கம் காண வேண்டும் என்றால், எல்லா பள்ளிகளையும் தேசிய பள்ளிகளாக மாற்றம் கண்டு தேசிய மொழி, ஆங்கிலம், தமிழ் மற்றும் சீன மொழிகளை மூவின மாணவர்களிடத்திலும் கட்டாயப் பாடமாக பயிற்றுவிக்க வேண்டும், தேர்வுகளிலும் எல்லா மொழிகளிலும் நல்ல தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். சபா, சராவாக் போன்ற மாநிலங்களில் அங்குள்ள பெரும்பான்மையினரின் மொழிகளை கட்டாயப் பாடமாக்கலாம்.
தேசிய மொழியைப் பயன்படுத்துவதில் ஏனோ தானோ போக்கை கடைப்பிடித்தால் அது நாட்டிற்கு செய்யும் துரோகம் ஆகும். எங்கிருந்தோ இங்கு வந்து பணம் சம்பாதிக்கும் அயல்நாட்டினர் மிக விரைவில் நமது தேசிய மொழியை கற்றுக் கொள்கின்றனர். நாம் பல நூறு அண்டுகளாக இங்கேயே வாழ்ந்துக் கொண்டு அந்த மொழியை எழுதப் படிக்கத் தெரியாவிட்டால் அதை விட வெட்கட்கேடு வேறு எதுவும் இல்லை.
Comments
Post a Comment