சிறுகதை
எம். பிரபு
“இதை உங்கம்மாகிட்ட சொல்லாதே.”
“நாம இப்படி செய்யறது தப்பில்லையா?”
கவிநயாவிற்கு தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி உண்டாகியது. யாரும் இதைப் பார்க்காமல் இருந்தால் நல்லது. அவர்கள் இருவரும் செய்ததை யாராவது பார்த்து, அதை தமிழ்ச்செல்வியின் அப்பாவிடம் போட்டுக் கொடுத்தால், இதனால் அவர் அவளை அடித்தாரென்றால் அதற்கு முழு பொறுப்பு தான்தான் என்பதையும் எண்ணி பயந்தாள். பிறகு அவர்கள் இருவரும் தொடர்ந்து நண்பர்களாக இருக்கும் வாய்ப்பு பறிபோய்விடும்.
“அவங்களுக்கு எப்படித் தெரியும்? அதான் யாரும் பார்க்கலயே?”
தமிழ்ச்செல்வியிடம் உள்ள அசட்டுத்தனமான அந்தத் தைரியத்தைக் கண்டு ஆச்சிரியமடைந்தாள் கவிநயா. இதைச் செய்ததினால் கடவுள் கோபித்துக் கொள்ளமாட்டாரா என்கிற கேள்வியும் கவிநயாவிற்கு எழுந்தது.
“அப்படி யாராவது பார்த்திருந்தாங்கன்னா?”
கவிநயா ஆரம்பத்திலிருந்தே அந்த மாரியம்மன் கோவில் சுவருக்குப் பின்னால் சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தினாள். சற்று தூரத்திலிருது மோட்டார் சைக்கிள்களும் காடிகளும் வருவதும் போவுதுமாக இருந்தன. அவர்கள் எல்லாம் கோவில் பக்கம் பார்வையை செலுத்த வாய்ப்பில்லைதான். கோவிலைச் சுற்றிலும் தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்கள் பரவியிருந்தன. சமய வகுப்புக்கு வந்த மாணவர்களும் வீட்டிற்குச் சென்று விட்டனர்.
அவர்கள் இருவரது வேலையையும் அவசர அவசரமாக முடித்தப் பிறகு, அவற்றை கோவில் சுவற்றுக்குப் பின்னால் உள்ள கால்வாயில் தூக்கி எறிந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் தமிழ்ச்செல்வியின் அம்மா அவளை அழைத்துச் செல்ல காடியில் வந்து விடுவார். கவிநயாவின் வீடு அருகிலேயே உள்ளதால் நடந்தே சென்று விடுவாள்.
“நன்றி கவிநயா. இது எனக்கும் சாமிக்கும் உள்ள விசயம் தெரியுமா. நீ பயப்பட வேண்டா. சாமிக்குப் புரிஞ்சிருக்கும். சாமி யாரையும் கட்டாயப் படுத்தலதானே?” தமிழ்ச்செல்வி மிகுந்த சந்தோசத்துடனும் தெளிவுடனும் சொன்னாள்.
“உனக்கு எப்படித் தெரியும் சாமி உம் மேல கோபப் பட மாட்டாங்கன்னு?”
“சாமிக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும்ன்னு சாமிக்குத் தெரியும் ...ஹி ..ஹி”
தமிழ்ச்செல்வியின் நடவடிக்கைகளைப் பார்த்தால், கவிநயாவிற்கு மிகுந்த ஆச்சிரியத்தைக் கொடுத்தது. பெரியவர்கள் தோற்றுப் போகிற அளவிற்கு நடந்துக் கொள்கின்றாள்.
“எனக்கு ஒன்னும் புரியில.”
***
தமிழ்ச்செல்வி நினைத்தே பார்க்கவில்லை தன் வீட்டில் இப்படி ஒரு மாறுதல் ஏற்படும் என்று. நிம்மதியாய் போய்க் கொண்டிருந்த தங்களின் குடும்ப வாழ்க்கையில் இப்போது மாற்றம் காண வேண்டிய அவசியம் என்ன? இந்த மாற்றத்தினால் என்ன நன்மை உண்டாகும்?
எல்லா மாற்றங்களும் ஒன்றின் பின் ஒன்றாய் அவள் கண்கள் முன் நிகழ்ந்தன. அது அவளுக்கு மிகுந்த தலைவலியான மாற்றங்களாகத் தோன்றின. அவள் விருப்பத்திற்கு மாறாக நிகழ்ந்த மாற்றம். அவள் அந்த மாற்றத்தை ஏற்கும் மனப் பக்குவத்திற்கு இன்னும் தயார் நிலையில் இல்லை. அப்படித் தயார் செய்யத் தேவையும் இல்லை என்ற முடிவிலேயே இருந்தாள்.
நான்கு வருடத்திற்கு முன்பு தன் பாலர் பள்ளித் தோழி கவிநயாவுடன் முதலாம் ஆண்டு தமிழ்ப் பள்ளியில் பயிலும் ஆசை நிராகரிக்கப்பட்டது, என்னதான் அவள் தாயார் தடுத்தும், அவள் அப்பா வலுக்கட்டாயமாக தமிழ்ச்செல்வியை சீனப் பள்ளியில் சேர்த்தார். வலுக்கட்டாயமாக!
ஞாயிற்றுக்கிழமை தோறும் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடக்கும் சமய வகுப்புக்கு தமிழ்ச்செல்வி செல்வது வழக்கம். அங்குதான் அவளால் கவிநயாவை சந்திக்க முடியும்.
அங்கு அவர்கள் இருவரும் சந்தித்து கதை பேசுவதோடு மட்டுமல்லாமல், தேவாரம், திருப்புகழ், திருவிசைப்பா, திருவாசகம் மற்றும் பல அறிய சமய விசயங்களை தெரிந்துக் கொள்ள வாய்ப்பளித்தது. அந்தப் பாடல்களின் அர்த்தம் ஒன்றும் புரியாவிட்டாலும், கவிநயா அவள் அருகிலேயே இருப்பதால், அந்த சமய வகுப்பு தமிழ்ச்செல்விக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கேதான் அவள் ஆனந்தமடைந்தாள்.
இப்போது வீட்டில் நடக்கும் இந்த மாற்றத்தினால் சமய வகுப்புக்கும் தடை வந்து விடுமோ என்று பயந்தாள் தமிழ்ச்செல்வி.
தமிழ்ச்செல்வி தன் அம்மாவிடம் அந்த புதிய மாற்றத்தைப் பற்றிக் கேட்ட போது, அப்பாவின் சொல் பேச்சை மீற முடியாது என்று மட்டும் அம்மா கூறிவிட்டார். அதிலும் தமிழ்ச்செல்வியின் அத்தை, மாமாவின் கட்டளையை மீறவே முடியாதாம். மாற்றம் செய்தே ஆக வேண்டுமாம். அதை செய்யா விட்டால், குற்றமாகிப் போய்விடுமாம். வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டுமென்றால் அவர்கள் சொல்லும் வழியை பின்பற்றுவதுதான் முறையாம். அப்படிச் செய்தால்தான் நண்மை உண்டாகுமாம்.
வாழ்க்கையே அந்த மஹாகுருவின் கையில்தான் உள்ளதாம்.
ஆம், அந்த மஹாகுருவின் பார்வை படவேண்டுமாம்!
மஹாகுரு பாபு ஸ்ரீ.
தமிழ்ச்செல்வி மிகவும் குழப்பமடைந்தாள். சிறு வயதிலிருந்தே சாமி, கடவுள், கோவில் என்றே கதியாக இருந்த பெற்றோர் திடுதிப்பென இந்த மஹாகுருவை கடவுளாய் வழிபடுவது ஏன்?
இந்த மஹாகுரு என்ன சாமியா? அல்லது அவதாரமென்று சொல்வார்களே, அப்படியாகப்பட்டவரா? இதையெல்லாம் தன் அப்பாவிடம் கேட்க தனக்கு தைரியம் இல்லை. தன் அம்மாவும் எதேதோ சொல்லி மழுப்பி விடுகின்றார்.
இந்த அதீத புது மாதிரியான பக்தியால், தமிழ்ச்செல்வியின் வீட்டில் பல செயல்கள் மாற்றமடைந்தன. தினந்தோரும் பூஜை. மஹாகுருவைப் போற்றிப் பாடுதல். பல பேர் வீட்டிற்கு வருவர். இவர்களும் பல பேர் வீடுகளுக்குச் சென்று பூஜையில் கலந்துக் கொள்ள வேண்டுமாம்.
இதை எல்லாவற்றையும் விட, அந்த ஒரு விசயத்தில் வீட்டில் மாறுதல் செய்ததுதான் பெரும் கொடுமை. அதை தமிழ்ச்செல்வியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அறவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எல்லோரும் தன் அம்மாவின் மனதை மாற்றி விட்டனர். எந்த விசயத்திலும் விடாப் பிடியாக இருந்த அம்மா எப்படி இவ்வளவு எளிதில் மாற்றம் கண்டார் என்று தமிழ்ச்செல்விக்குப் புரியவில்லை.
இந்த மஹாகுருவின் போதனைகள், வாழ்க்கைத் தத்துவங்கள் இந்து மதத்திலிருந்து புதிய பரிணாமத்தில் வந்ததாம். அதுவும் இக்காலக்கட்டத்திற்கு ஏற்ப அவர் மக்களுக்கு புதிய வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கின்றாராம். அந்த வழிமுறைகளைப் பின் பற்றினால் வாழ்க்கையில் நிம்மதியும் அமைதியும் கிட்டுமாம். சொர்கத்திற்கும் எளிதில் கால் பதிக்கலாமாம்.
மஹாகுரு பாபு ஸ்ரீக்கு இப்போது வயது ஐம்பதுதான் ஆகின்றது. இந்தியாவிலிருந்துக் கொண்டு ஆங்காங்கு மேடைகளில் சொற்பொழிவு ஆற்றுகின்றார். அதை எடுத்து அப்படியே யூடியுபிலும் போடுகிறார்கள். அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் செல்வார். கூடிய சீக்கிரம் மலேசியா வருவாராம். வரட்டும்!
தமிழ்ச்செல்விக்கு இதுவெல்லாம் அறவே பிடிக்கவில்லை, புரியவுமில்லை. அவளுக்கு சாமியை கையெடுத்துக் கும்பிட்டு நெற்றியில் விபூதி பூசிக் கொண்டால் போதுமானது. சாமிக்கு அவளைத் தெரியும், அவளுக்கு சாமியைத் தெரியும். இதிலென்ன புதிதாய் கண்ட கண்ட மஹாகுருவெல்லாம் வந்து பாடம் நடத்துவது?
இதெல்லாம் மாதா மாதம் வீட்டிற்கு வரும் தமிழ்ச்செல்வியின் அத்தையினால் வந்த விணை.
தமிழ்ச்செல்விக்கு அந்த அத்தை மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
அந்த அத்தைதான் தங்கள் குடும்பத்திற்கு பெரும் பாரத்தை போட்டு விட்டு போயிருக்கின்றாள். ஏன்தான் அப்பாவும் அம்மாவும் அவள் பேச்சைக் கேட்க வேண்டும்? ஏன் இவ்வளவு சுலபமாக இருவரும் அவள் பேச்சையும் அந்த பாபு ஸ்ரீ மஹாகுருவின் போதனைகளையும் பின்பற்றி, அதன் பின் தன்னை கட்டாயப் படுத்த வேண்டும்?
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இப்போது தமிழ்ச்செல்வியும் அந்தக் குழுவில் விருப்பமில்லாமல் இணைக்கப்பட்டு விட்டாள், பாபு ஸ்ரீ மஹாகுருவிற்கு அடிமையாக.
“அம்மா, எனக்கு இப்போ பதினொரு வயசாகப் போது. நான் எப்படி எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு என்னை மாத்திக்க முடியும்?”
“அப்பாவும் நானும் மாறிட்டோம், உனக்கு ஏன் முடியில?”
“அம்மா, என்னால முடியில. ரொம்பக் கஷ்டமா இருக்குமா. பழசெல்லாம் விட்டிட்டு எப்படி இந்தப் புதுச ஏத்துக்கிறது?”
“நீ கொஞ்ச கொஞ்சமா உன்னை நீயே மாத்திக்கனும்.”
“முடியாது! சின்ன வயசிலிருந்தே எனக்கு நீங்களே கோழி, மீன், ஆட்டுக் கறியெல்லாம் ருசியா சமைச்சிப் போட்டு ஊட்டிவிட்டு, இப்போ வெறும் காய்கறி கீரை மட்டும் சாப்பிடச் சொன்னா, நான் எப்படி சாப்பிடறது? முட்டை கூட இப்போ இந்த ஒரு மாசமா சாப்பிடல! நெத்திலிக் கூட சாப்பிட முடியில. நான் ஏன் என்னை மாத்திக்கனும் மா?”
“இப்போ நாம மஹாகுரு பாபு ஸ்ரீ சொன்ன வழிகளைத்தான் பின்பற்றனும் செல்வி. அதை நீ புரிஞ்சிக்கனும். எல்லாம் நம் நன்மைக்குத்தான் செல்வி.”
தமிழ்ச்செல்வி அழுதாள். தமிழ்ப் பள்ளியில் கவிநயாவோடு தொடர்ந்து பயில முன்பு எப்படி தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டபோது அழுதாளோ அதே போன்று தேம்பித் தேம்பி அழுதாள்.
எப்போது தமிழ்ச்செல்வியின் குடும்பம் அந்த பாபு ஸ்ரீ மஹாகுருவை பின்பற்றினரோ அன்றிலிருந்து கடந்த ஒரு மாதமாக அவள் அம்மா, வெறும் ரசம், சாம்பார், கோபீஸ், தவ்வு, பயிற்றம்முளை, உருளைக்கிழங்கு மற்றும் பல வகை கீரைகளை மட்டுமே சமைத்தார், அதுவும் அதில் வெங்காயம், பூண்டு, நெத்திலி கித்திலி எதுவும் போடாமலேயே சமைத்தார்.
அந்தச் சமையலின் சுவையே மாறுபட்டு தமிழ்ச்செல்வியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எப்படித்தான் அவள் பெற்றோரும் அந்த வீனாய்ப் போன பாபு ஸ்ரீ போன்ற மஹாகுருக்களும் தினசரி சாப்பிடுகின்றார்களோ?
அதுவும் இனிமேல் அவளுக்குப் பிடித்த கோழி கறி, வஞ்சரை மீன் பொறியல், நாசி லெமாக், பன்றி இறைச்சி போட்ட வந்தான் மீ, கெ.எப்.சி, முட்டை போட்ட பிரட்டா ரொட்டி, கேக் எல்லாம் சாப்பிடாமல் தன் வாழ்நாள் முழுவதும் எப்படி வாழப் போகிறோம் என்ற பயம் அந்த பிஞ்சு மனதில் பூதாகரமாக எழுந்தது.
தமிழ்ச்செல்வியின் அப்பாவும் கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு ரெஸ்டாரண்டிற்கும் கூட்டிக் கொண்டு போவதை நிறுத்தி விட்டார். நிறுத்தியே விட்டார்.
பள்ளிக்கு போகும் போதும் தமிழ்ச்செல்வியின் அம்மா தினமும் சைவ உணவை சமைத்தே கொடுத்து அனுப்புகின்றார். மற்ற சீன மாணவர்கள் கேண்டினில் அசைவம் சாப்பிடுவதை பார்க்கும் போது அவளுக்கு வாயில் எச்சில் ஊறும். அவர்களிடம் கேட்டு வாங்கிச் சாப்பிடவும் அவள் தயங்கினாள். பிறரிடம் வாங்கிச் சாப்பிடுவதை அவளின் பெற்றோர் எப்போதுமே அனுமதித்ததில்லை.
ஞாயிற்றுக்கிழமையானதும் சமய வகுப்பில் தன் உற்றத் தோழி கவிநயாவிடம் தன் மன ஆதங்கத்தை கொட்டித் தீர்ப்பாள்.
“நீ கவலைப்படாதே, செல்வி. என்னால உனக்கு உதவி செய்ய முடியும்.”
“என்ன சொல்லப் போறங்கறது எனக்குப் புரிஞ்சிரிச்சி, கவி. முடியுமா?”
“முடியும். ஆனா உனக்கு பயமா இல்ல?”
“நான் பயப்படல கவி. எனக்கு எதைப் பத்தியும் கவலை இல்ல. அந்த சாமியோ, இல்ல அந்த வீனாய்ப் போன மஹாகுருவோ கோவிச்சிக்கிட்டா கூட எனக்கு கவலை இல்ல.”
கவிநயா தன் வீட்டின் அருகே மாக்சிக்கிடமிருந்து இரண்டு பொட்டலம் முட்டை மற்றும் பொறித்த கோழித் துண்டுப் போட்ட நாசி லெமாக்கை சமய வகுப்பிற்கு செல்லும் வழியில் வாங்கிச் சென்றாள். அதை தன் சிறிய தோள்ப் பைக்குள் மறைத்துக் கொண்டு வந்தாள்.
முற்றும்
Comments
Post a Comment