சிறுகதை
எம். பிரபு
“என்னை ஆண்டவன் பார்த்துப்பான். அவனுக்கு மட்டும் நான் யாரென்று தெரிந்தால் போதும். அவன் பார்த்துப்பான்”
எனக்கு என்ன நடக்கிறதென்றே புரிய மாட்டேன் என்கிறது. எனக்கு,எனக்கே என்ன நடக்கிறதென்று புரிய மாட்டேன்கிறது. நான் ஏன் இப்படி இருக்கின்றேன்? நான் ஏன் இப்படி ஆனேன்? எனக்குப் புரியவில்லை. எனக்குப் புரியவே இல்லை. புரியவேயில்லை.
சிறு பிராயத்தில் நான் இப்படி இல்லை. நான் சுட்டித்தனமாகத்தான் இருந்தேன். நன்றாகவும் படித்தேன். யூ. பி. எஸ். ஆர் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன். என் நண்பர்கள் பலர் புதுமுக வகுப்புக்குச் சென்றனர். நான் நேரே படிவம் ஒன்று சென்றேன். அது எனக்குப் பெருமை, அவர்களுக்கு பொறாமை. அது அவர்களின் போதாமை.
எப்போது இடைநிலைப் பள்ளியில் கால் எடுத்து வைத்தேனோ, அப்போதுதான் என் உள், எனக்குள் மாற்றம் தோன்றியது. அப்படித்தான் எனக்குத் தோன்றியது.
படிவம் இரண்டு வரையில் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்த மாதிரி இருந்த எனது வாழ்க்கை, படிவம் மூன்றில் திசைமாறிப் போகத் தொடங்கியது. அதுவே மாறியதா அல்லது நானே மாற்றிக் கொண்டேனா அல்லது நான் மாற்றப்பட்டேனா என்று சரிவரத் தெரியவில்லை. சரியாகத் தெரியவில்லை. தெரியவில்லை.
ஆனால், நான் மாற்றம் அடைந்தேன். அதை நானே உணர்ந்தேன். என்னைச் சுற்றி உள்ளவர்களும் உணர்த்தினர். என்னைச் சூழ்ந்திருந்தவர்கள் என்னை வேறு மாதிரியாக பார்வையிட்டனர். என்னை வெறுப்பேத்தினர்.
படிவம் மூன்று தொடகத்திலேயே நான் மாற்றம் அடைந்தேன். அதன் பிறகு முன்பு போன்று என்னால் படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை. நான் திசை மாறினேனா அல்லது திசை மாற்றப்பட்டேனா அல்லது ஏதோ ஒன்று என்னை அப்படி இயக்குகின்றதா, எனக்கு புரியவில்லை, தெரியவில்லை.
ஆனால், நான் மாறினேன் என்பதுதான் நிஜம்.
அது நடந்திருக்காவிட்டால் நான் மாறியிருக்க மாட்டேனோ? எப்போதும் போலவே படிப்பில் தீவிரம் காட்டியிருப்பேனோ? ஆனால் அது நடந்ததே.
அது நடந்தது. எது எனக்கு நடக்காதோ என்று நினைத்தேனோ, அது எனக்கு நடந்தது. படிப்பில், போட்டி விளையாட்டுக்களில் மட்டுமே தீவிரம் காட்டி வந்த நான், மாறினேன். எப்படி மாறினேன் என்று தெரியாது, ஆனால் மாறினேன்.
ஐயகோ! அன்று மட்டும் நான் சரியாக இருந்திருந்தால், இன்று நான் மிகவும் தெளிவாகவே இருந்திருப்பேன். மிகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் இருந்து இருப்பேன். இருந்திருப்பேன்.
கடவுள் ஏன் என்னை ஒரு விநாடியில் இப்படி மாற்றினார். நானே மாறியதற்கு கடவுளை ஏன் இதில் சம்பந்தப்படுத்துகின்றேன்? எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அவரைத் தவிர வேறு யார் இந்த மாற்றத்தை நிகழ்த்தியிருக்க முடியும்?
அது எனக்கு நிகழ்ந்து இருக்கக் கூடாது. கடவுள் அதை நிகழ்த்தியவர் என்றால், எனக்கு அதை தடுக்கும் சக்தி இல்லையே. அதனாலோ என்னவோ நான் அதை அப்படியே விட்டுவிட்டேன் போல. மீண்டும் நான் கடவுள் மீதே பழி சுமத்துகின்றேன். எனக்குத் தெரியும் அவர் ஏதும் என்னை விசாரிக்க மாட்டார் என்று. எனக்குத் தெரியும் எல்லாம் அவன் செயலே.
ஆனால். இந்த மாற்றமே எனக்குப் பிடித்திருந்தது.
அந்த நாள் எனக்கு இன்றும் ஞாபகம் உள்ளது. ஜனவரி மாதம், முதல் வார திங்கட்கிழமை. தேதி நினைவில் இல்லை. அந்த வெள்ளை நிற புரோட்டோன் வீரா காரிலிருந்து இறங்கினாள். அவள் அம்மா அவளை இறக்கி விட்டுச் சென்றாள். கார் எண்கள் இன்னும் எனக்கு நினைவில் உள்ளது. ஆனால் அதை வெளியிட முடியாது.
மெல்லிய தேகம். கழுத்து வரைக்குமான குட்டை முடி. அவள் சட்டைக் கோலரை சிறிதளவே அந்த உரோமங்கள் பதம் பார்த்தன. மற்ற மாணவிகளைப் போன்று ஹிஜாப் அணியாமல், பள்ளிச் சீருடை - பாஜு கூரோங்கில் அவ்வளவு அழகாய் காட்சித் தந்தாள். அவ்வளவு அழகாய். வர்ணிக்க முடியாத அளவு அவளது கண்கள் காட்சியளித்தன. அவளது மூக்கும் வாயும் அதற்கு ஏற்றார் போல ஈடுகொடுத்தன. என் இதயம் அப்போது வேகமாய் துடித்தது. அதிவேகமாய் துடித்தது.
புதிதாக இந்தப் பள்ளிக்கு எங்கிருந்து வந்திருப்பாள் இந்த அழகி? பேரழகி. அவள் வேறு வகுப்புக்குத்தான் வந்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில், அவள் நேரே நான் பயிலும் வகுப்புக்கே புகுந்தாள். ஆம், புகுந்தாள்.
அவளது நடையே மாணவர்களை கிரங்க வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் கண்கள் அவளையே மொய்த்தன. மாணவிகளும்தான்.
என் பெயர் ஆனந்தன், அவள் பெயர் அனிஷா. என்ன பொருத்தம்.
அன்று தொடக்கம் அனிஷாவை பார்வையிடுவதுதான் என் வேலையே. மற்றது எல்லாம் மறந்து போனது. என் மலாய்க்கார நண்பர்களும் அதையே செய்தனர்.
ஆனால், அனிஷா யாரிடமும் பேச்சுக் கொடுப்பதில்லை. படிப்பில்தான் தன் முழு கவனமும் செலுத்தினாள். அதுதான் எனக்கும் பிடிக்கவில்லை, என் மலாய் நண்பர்களுக்கும் பிடிக்கவில்லை. என் மலாய் நண்பர்களுக்குப் பிடிக்காதது எனக்குப் பிடிக்கவில்லை.
நான் ஏதாவது செய்து என் மலாய் நண்பர்கள் அவளை ஈர்ப்பதற்கு முன், நான் அவளை மடக்கியாக வேண்டும்.
அனிஷாவிற்கு ஆங்கிலப் பாடம் என்னைப் போன்றே மிகவும் பிடித்தமான பாடமாகத் தெரிந்தது. இதுதான் சரியான சந்தர்ப்பம்.
ஒரு நாள், நான் ஆங்கிலத்திலேயே உரையாடலைத் தொடங்கினேன்.
“வாவ்! நான் நினைத்தேன் இந்த வகுப்பில் யாருக்குமே ஆங்கிலம் பேச வராது என்று.”
“அது, எங்க வீட்டில் அடிக்கடி ஆங்கிலம் பேசிக் கொள்வோம்.”
“ஓ, இந்தியர்கள் பெரும்பாலும் அப்படிதானே?”
“எல்லோரும் இல்லை. சில வீடுகளில்தான்.”
இப்படி நான் அனிஷாவிடம் பழகியது மலாய் மாணவர்களுக்குப் பிடிக்கவில்லை, இந்திய மாணவிகளுக்கும் பிடிக்கவில்லை. எனக்குத் தெரியும் என் அழகுக்கு அந்த இந்திய மாணவிகள் தகுதியற்றவர்கள், அனிஷாவே தகுதியானவள்.
ஆனால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு அனிஷாவும் என்னைத் தவிர்க்க ஆரம்பித்தாள். ஆம், என்னைத் தவிர்த்தாள். அதுதான் எனக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
என் காதலை கடிதம் வழி தெரிவித்தேன். அது பள்ளிகூடத்திற்கே தெரிந்து, வீட்டிலும் தெரிந்து விட்டது.
அப்பா சும்மா விடுவாரா. அவரின் வார்ப்பட்டையால் என்னை வெளுத்து விட்டார். வெளுத்ததோடு மட்டுமல்லாமல் என்னை வேறு வகுப்புக்கு மாற்றம் செய்ய தலைமையாசிரியரிடம் கேட்டுக் கொண்டதற்கு இனங்க நானும் வேறு வகுப்புக்கு மாற்றம் கண்டேன். நல்லவேளை வேறு பள்ளிக்கு மாற்றப்படவில்லை.
ஆனால், அனிஷாவை தூரத்தில் இருந்து தினமும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அதிலும் சுகம் கண்டேன்.
பி. எம். ஆர் பரீட்சையில் ஓரளவு தேறினேன். ஏனோ தெரியவில்லை, அனிஷா நான்காம் படிவம் பயில அவள் வேறு பள்ளிக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டாள். என் காதல் கதை அதோகதிதானா?
நான்காம் படிவம் படிக்கும் போது ஒரு நண்பன் வந்து சேர்ந்தான். அவன் பெயர் செல்வராஜன். நான் பெரும்பாலும் யாரிடமும் அவ்வளவாக பழக மாட்டேன். இவன் எப்படியோ என்னிடம் ஒட்டிக் கொண்டான். செல்வராஜன் பேசும் தொனி எனக்குப் பிடித்திருந்தது. ஒரு மாதிரியாக இழுத்து இழுத்து பேசுவான். அவனுக்கும் ஆங்கிலம் என்னைப் போன்று சரளமாக வரும். அதனாலும் இருக்கலாம்.
என்னதான் அவனுடனே சுற்றிக் கொண்டிருந்தாலும், என் நினைவு எல்லாம் அனிஷா மீதே சுற்றி வந்தது. அவள் எந்தப் பள்ளிக்கு மாறிப் போனாள் என்று தெரியவே இல்லை. வெள்ளை நிற வீரா காரை எங்காவது பார்த்தேன் என்றால் அது அவளது அம்மாவின் காராக இருக்கக் கூடாதா என்று ஏங்கினேன்.
அந்தக் கார் என் கண்களில் படவேயில்லை. படவே இல்லை. ஒரு வேளை வேறு பட்டணத்திற்கோ, மாநிலத்திற்கோ மாறிச் சென்று விட்டாளோ?
என் கதையை செல்வராஜனிடம் சொன்ன போது. விழுந்து விழுந்து சிரித்தான்.
“உனக்கு நம்ம பிள்ளைங்கன்னா பிடிக்காதோ? உன்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டேன். நீயே சொல்லிட்டே,” ஒரு பார்வை பார்த்தான்.
“அவளுடைய அழகுக்கு ஈடாக இங்க யாரும் இல்லை.”
“அதுக்குன்னு இப்படியா? ஒழுங்கா படிக்கிற வேலையைப் பார்போம். வேலைக்கு போனதுக்கபுறம் இதல்லாம் பார்த்துக்கலாம்.”
அவன் சொன்னது என் காதில் விழுந்தும் விழாமல் போனது.
அனிஷாவை நான் பார்க்கா விட்டாலும், அவள் என் கனவில் அடிக்கடி வந்துச் சென்றாள். அவளது சிரிப்புதான் முத்தாய்ப்பு. அவளை எப்படியாவது சந்தித்தாக வேண்டும்.
அதற்கு நான் மதம் மாறவும் தயார் நிலையில் இருந்தேன். நான் எதற்கும் தயார் நிலையில் இருந்தேன். தொலைக்காட்சியில் வரும் அவள் மதம் தொடர்பான நிகழ்ச்சிகளை தினமும் பார்ப்பேன். வானொலி ஆறில் ஒலிபரப்பாகும் அதன் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பாடல்களையும் உன்னிப்பாக கேட்பேன்.
இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சனைதான்.
எஸ். பி, எம்மில் மூன்றாவது கிரேட்தான். செல்வராஜன் இரண்டாவது கிரேடில் பாஸ் செய்து ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்தான்.
மறுபடியும் அதே ஐந்தாம் பாரத்தில் பயில பிடிக்கவில்லை. வேலைக்குப் போனேன்.
என்னால் ஓர் இடத்தில் சரியாக வேலை செய்ய இயலவில்லை. எனக்கு வேலை செய்வதே பிடிக்கவில்லை. என் படிப்புக்கு தொழிற்சாலையில் அல்லது கோப்பி கடையில்தான் அல்லது மளிகை கடையில்தான் வேலை கிடைத்தது. வேலை கடினம். யார் அந்த வேலைகளையெல்லாம் செய்வது?
என்றும் அனிஷாவின் நினைவுதான்.
அவளைத் தேடி அருகில் உள்ள பட்டணங்களுக்குச் சென்றேன். அவள் எங்கும் காணப்படவில்லை.
செல்வராஜனும் சில வேலைகளை சிபாரிசு செய்தான். செக்குரிட்டி வேளை அது. மூன்று நாட்கள்தான் செய்தேன். எந்த மடையன் 12 மணி நேரம் ஒரே இடத்தில் நிற்பது. நான் அவர்களைப் போன்று முட்டாள் இல்லை.
எனக்கு என் மண்டையில் அனிஷாவின் நினைவுதான். எப்படியாவது அவளை கண்டுப்பிடித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
அதற்கு நான் மதம் மாறத் தயார். வேலைக்கு போவதற்கு பதிலாக நான் வாரத்தில் மூன்று முறை அந்த மதத்தை பயில அதன் நிலையத்திற்குச் சென்றேன். அதில் மாதம் எனக்கு RM200 கிடைத்தது. என் நடவடிக்கையைப் பார்த்து வீட்டில் உள்ளவர்களும் ஓய்ந்து விட்டனர்.
அந்த மதத்திற்கு மாற்றம் கண்டேன்.
செல்வராஜனுக்கு எங்கள் ஊரிலேயே ஆசிரியர் உத்தியோகம் கிடைத்தது.
எனது புதிய மாற்றத்தைக் கண்டு சினமடைந்தான்.
“நீ எப்போ ஒழுங்கா வேலைக்குப் போகப் போற?”
“எனக்கு அறிவுரை சொல்லாதே, இங்கிருந்து போ!”
“கிடைக்காத ஒருத்திக்காக ஏண்டா நீ இப்படி மாறிட்டே?”
“அது என் விருப்பம். கடவுளின் விருப்பம்.”
“நான் உன் நண்பண்டா. சொல்றத கேளு.”
“போடா இங்கிருந்து!”
“நீ வேலைக்கு போகலனாலும் ஏதாவது வியாபாரம் செய்யலாம்ல?”
“அது என் விருப்பம், நான் இப்படித்தான் இருப்பேன்!”
“இனி இன்னும் எத்தனை காலத்துக்கு இதையே சொல்லிக்கிட்டு இருப்ப?”
“எனக்கு எங்கப்பா அம்மா இருக்காங்க. அவங்க பார்த்துப்பாங்க. நீ ஒன்னும் அறிவுரை சொல்ல வேண்டாம்!”
“அவங்களும் உன்னை எத்தனை காலத்துக்கு தாங்குவாங்கடா?”
“என்னை ஆண்டவன் பார்த்துப்பான். அவனுக்கு மட்டும் நான் யாரென்று தெரிந்தால் போதும். அவன் பார்த்துப்பான்.”
இப்போது எனக்கும் 40 வயதுக்கு மேல் ஆகின்றது. அனிஷாவை இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றேன்!
முற்றும்
வானம்பாடி(1.4.2025)
Comments
Post a Comment