கட்டுரை
எம். பிரபு
இவ்வுலகத்தில் மனிதர்களாக பிறந்தவர்கள் வாழ்க்கையின் ஒருவேளையில் திருமணம் புரிகின்றனர். ஆனால், ஏன் திருமணம் செய்கிறோம் என்று பெரும்பாலும் புரிந்துகொள்ளாமலே திருமணத்தை மேற்கொள்கின்றனர். தொன்றுதொட்டு வந்த மனித இனம், காமத்தின் ஈர்ப்பால் ஒன்றுசேர்ந்து, அதன் விளைவாக மனிதப் பிறவி எடுத்து, இந்த பூமியில் வாழ்ந்துவருகிறது. ஆச்சர்யம், அதேவேளையில் இது ஓர் அதிசயமும் கூட.
வாழ்க்கை எத்தனை துன்பம் நிறைந்திருந்தாலும், அதை அஞ்சாமல், தங்கள் முன்னோர்கள் செய்ததைப் போலவே தொடர்ந்து செய்கின்றனர். பழைய காலத்தில் ஒரு குடும்பத்தில் 10 அல்லது 14 குழந்தைகள் வரை இருந்தது. ஆனால் இன்று ஒரே ஒரு பிள்ளையை நன்றாக வளர்ப்பதே பெரும் சவாலாக இருக்கிறது. அன்று அது அதிசயம், இன்று இதுவும் அதிசயம்.
திருமணம் செய்துவிட்டால் போதுமா? பிள்ளைகளை பெற்றுவிட்டால் போதுமா? மிருகங்களும்தான் மனிதர்களைப் போன்று (பிள்ளை) குட்டிகளைப் பெறுகின்றன.
மனிதர்களை உருவாக்கத் தெரிந்தவர்களுக்கு, அந்த மனிதர்களை தரமானவர்களாக உருவாக்கும் பொறுப்பும் உண்டு. ஆனால், அதை நிறைவேற்ற மனிதர்கள் பெரும்பாலும் தவறுகின்றனர்.
தரமான மனிதன் என்றால் என்ன?
நேர்மை, பொறுப்பு, பிறரை மதிக்கும் இயல், உதவி மனப்பான்மை, மன்னிப்பு, நல்லொழுக்கம், பேராசையின்மை, விட்டுக் கொடுத்தல் மற்றும் மேலும் பல நல்ல பன்புகள் மனிதனுள் இருக்க வேண்டும். இதுவெல்லாம் இல்லாவிடில் மனிதன் மிருகங்களை விட கேவலமாகின்றான். இதுவும் இன்னொரு அதிசியமாகிவிடுகின்றது.
இவை அனைத்தும் சேர்ந்தால் தான் ஒரு உண்மையான, பொறுப்புள்ள, மனிதாபிமானம் மிக்க "தரமான மனிதன்" உருவாக முடியும். இதனை உருவாக்க, பெற்றோர்களே முதலில் தரமானவர்களாக இருக்க வேண்டும்.
பெரும்பாலானவர்கள் தங்களது மனிதச் சாத்தியங்களை மேம்படுத்தாமலே திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால், அவர்களது பிள்ளைகள் சிறந்த மனிதர்களாக வளர வாய்ப்பு குறைகிறது. அது அவலம்தானே!
வாழ்க்கையில் வெற்றியை நாடும் மனிதன், ஏன் சிறந்த பிள்ளைகளை உருவாக்க திட்டமிட மறுக்கின்றான்? இதற்குப் புத்திசாலித்தனமாக கல்வி இருக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல சிந்தனை இருந்தாலே போதுமானது. கல்வி குறைவான பெற்றோர்கள் கூட சிறந்த பிள்ளைகளை வளர்த்திருக்கிறார்கள் என்பது உண்மை.
மனிதன் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வல்லவன். எது நல்லது, எது கெட்டது என்பதற்கான அறிவு அவனிடம் உள்ளது. ஆனால், தனது இந்த அறிவைப் பயன்படுத்த தவறிவிடுகின்றான். இது இன்னொரு அதிசயம்.
நம் சமுதாயத்தில், பல இளைஞர்களும், வயதானவர்களும் ஒழுக்கம் குறைவாக இருக்கின்றனர். எங்குப் பார்த்தாலும் சண்டை, கெட்ட வார்த்தைகள், பெரியவர்களுக்குப் மரியாதை இல்லாத நடத்தை, மதுக்கடிமை, குண்டர் கும்பல் ஆகியவை அதிகமாக உள்ளன. ஆண்களுக்கு இணையாக பெண்களும் இவை போலவே சில செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக “டிக் டொக்” போன்ற சமூக ஊடகங்களில் பெண்களின் செயல்பாடுகள் பல நேரங்களில் கவலையளிக்கின்றன.
இத்தகைய ஆட்களைப் பற்றி மக்களும் "வளர்ப்பு சரியில்லை" என்று கூறுகிறார்கள். மலாய் மொழியில் "KURANG AJAR" (கூராங் ஆஜார்) என்று சொல்வது இது தான். அதாவது, ஒரு மனிதன் தவறான பாதையில் செல்வது, பெற்றோர் வழங்கிய வளர்ப்பை பிரதிபலிக்கிறது.
இதனை நாம் சாபமாக ஏற்று விட்டுவிடக் கூடாது. இது தொடர்ந்தால், நம் எதிர்கால சந்ததியினர் இந்த நாட்டை விட்டுத் துறத்தப்படும் நிலை ஏற்படலாம். எனவே, இன்று தொடங்கி நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். பிறகு தான் நம் பிள்ளைகளைச் சிறப்பாக வளர்க்க முடியும்.
அதற்கான சில செயல்திட்டங்களை பார்க்கலாம்:
பெற்றோர்களுக்கான செயல்திட்டங்கள்:
திருமணமாகப்போகும் தம்பதியினர், தங்கள் பொருளாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் மதிப்பீடு செய்து, எத்தனை பிள்ளைகளை வளர்க்க முடியும் என்று திட்டமிட வேண்டும். இன்று மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வது சிரமம். இந்தக் காலத்தில் மூன்றே தலைவலிதான்.
பெற்றோர்கள் ஒரு குறிப்பிட்ட நோட்டு புத்தகத்தில் பிள்ளை வளர்ப்பிற்கான திட்டங்களை எழுதி வைத்துக்கொள்ளலாம்.
பின்பற்ற வேண்டிய 10 முக்கிய நடைமுறைகள்:
1. பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் சுகாதாரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ப்பது.
2. ஊட்டச்சத்தான உணவு பழக்கங்களைப் பராமரிப்பது.
3. தினமும் சிறுவர் கதைகளை பல மொழிகளில் கூறி, அவர்களையும் கதை சொல்வதற்கு ஊக்குவிப்பது.
4. உடற்பயிற்சி, விளையாட்டுகளில் பெற்றோர்களுடன் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்வது.
5. பழங்கள் மற்றும் ஆரோக்கிய உணவுகளை விரும்பச் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்குதல். இனிப்பு மற்றும் விரைவுணவுகளை குறைத்தல்.
6. பெரியவர்கள், நண்பர்கள் மற்றும் பிற சமுதாய மக்களிடம் மரியாதையுடன் பழகிக் கொள்வது. நாட்டிலுள்ள அனைத்து கலை கலாச்சாரங்களை அறிந்து வைத்திருப்பது.
7. நல்லொழுக்கம் வளர்த்தல், கடவுள் மற்றும் சமய நம்பிக்கைகளை அளவோடு பின்பற்ற ஊக்குவித்தல்.
8. வீட்டு வேலைகளை சிறு வயதிலிருந்து செய்ய பழக்கப்படுத்துதல். தன்னிச்சையாக கடமைகளை செய்வதற்கு பழக்கமாவதல்.
9. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். கைப்பேசி பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்.
10. பிறர் வேலைக்கு காத்திருக்காமல், சுயமாக தொழில் செய்யும் எண்ணத்தைக் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும்.
இந்த பத்து செயல்களை பெற்றோர்கள் மனதார பின்பற்றி பிள்ளைகளை வளர்த்தால், அவர்கள் நிச்சயம் தரமான மனிதர்களாக மாறுவார்கள்.
இதற்காக, திருமணமாகும் தம்பதியினர் முதலில் தங்களையே சீராக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதுவே கடமையை தவறாத பெற்றோருக்கு சான்றாகும்.
Comments
Post a Comment