சிறுகதை
எம். பிரபு
விடியற்காலை மணி 4.45 காட்டியது ஹாலில் மாட்டியிருந்த சுவர்க் கடிகாரம். அவர் கட்டிலை விட்டு எழுந்து நெளிந்தார். அவர் பக்கத்தில் படுத்திருக்கும் தன் அழகிய மனைவியை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. தன் இரு மகன்கள் பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கத்தித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும்
நிமலனருள் கந்தர் சஷ்டி கவசம் தனை
கணேசனின் அப்பா விடியற்காலை 4.45 மணிக்கே எழுந்து, முதல் வேலையாக கந்த சஷ்டிப் பாடல் கேஸட்டைப் போட்டு விடுவார். அந்த கேஸட்டில் கந்த குரு கவசம் பாடலும் அடங்கும். அதற்குப் பின்தான் அவர் காலைக் கடன்களை கவனிக்க செல்வார்.
அந்தப் பாடல் கணேசனின் அறைக்குள் எப்படியும் ஊடுருவி வந்துவிடும். பலகை வீடானதால், ஒவ்வொரு அறையின் மேல் பகுதியில் ஒலியும் ஒளியும் புகும் அளவுக்கு இடவசதி தாராளமாகவே இருக்கும்.
கணேசன் போர்வையை இழுத்துத் தலையில் போர்த்திக் கொண்டான். அவனால் அதற்கு மேல் தூங்க இயலாது. அவனும் அவன் அண்ணன் ரகுராமும் சனி ஞாயிறு தவிர, ஐந்து நாட்கள் காலை ஆறு மணிக்குத்தான் எழுந்திரிப்பார்கள். அவர்களுடைய அம்மா, அப்பா காலைக் கடன்களை முடித்தப்பின் எழுந்திரித்து விடுவார். .
பக்கத்தில் படுத்திருக்கும் அவன் அண்ணன் ரகுராம் எப்படி நன்றாக தூங்குகின்றான் என்று எப்போதுமே கணேசனுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
என்னதான் இந்தப் பாடல்களை ஐந்து வயதிலிருந்து கேட்டிருந்தாலும், இந்த வருடம் பள்ளிக்குச் சென்றதிலிருந்து கணேசனுக்கு அது ஒரு தொந்தரவாகவே தெரிந்தது. சனி ஞாயிறுகளிலும் அப்பா கேஸட்டைப் போட்டு விடுவார்.
அதிகாலையிலேயே பச்சைத் தண்ணீரில் குளிக்க வேண்டும். சாயங்காலம் ஆனதும் ரகுராமுடன் வீட்டின் வரவேற்பறையில் ஒரு பகுதியில் சாமி விளக்கு ஏற்ற வேண்டும். சாமிக்கு எவர்சில்வெர் டம்லரில் தண்ணீர்ப் பிடித்து வைக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அந்த சிறிய முனியாண்டி கோவிலில் விளக்கேற்றி, ஊதுவர்த்தியும் கொளுத்த வேண்டும்.
அந்த முனியாண்டி கோயில் மண் தரையில் வரிசைப்பிடித்துச் செல்லும் எறும்புகளை மிதித்தாலும் மிதிக்காவிட்டாலும், அதன் கடிகளுக்கு கணேசனின் கால்கள் பலியாகிவிடும். அதன் வலியைப் பற்றி சொல்லவே வேண்டாம். ரகுராம் எப்படி எறும்புக் கடிகளைத் தாங்கிக் கொள்கிறான் என்று கணேசனுக்கு ஆச்சர்யமாக இருக்கும். அதைப் பற்றிக் கேட்டாலும் அவன் அண்ணன் ஒன்றும் சொல்ல மாட்டான்.
அதோடு ஓவ்வொரு வெள்ளிக்கிழமையும் சற்றுத் தொலைவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு நடந்துப் போக வேண்டும். அதே கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமையானால் சமய வகுப்புக்கும் போக வேண்டும். கணேசனுக்கு சாமி கும்பிடுவது சிறிதளவே பிடித்திருந்தது. அதை விட அங்குக் கிடைக்கும் பொங்கச் சோறு, சுண்டல் மீதுதான் கொள்ளை ஆசை.
ரகுராமை பார்த்தால் கணேசனுக்கு ஆச்சர்யமாக இருக்கும். எப்படி அவனால் அப்பா அம்மா சொல் பேச்சை மீறாமல் எல்லாவற்றையும் செய்ய முடிகின்றது?
கடைக்குப் போகச் சொன்னால், போவான். கரி அடுப்பை பற்ற வைக்கச் சொன்னால், பற்றவைப்பான். சோறு சமைக்கச் சொன்னால், சோற்றை வடிக்கட்டி விடுவான். சட்டிப் பானை கழுவச் சொன்னால், அதையும் கழுவி வைப்பான். அவ்வளவு வேகம் அவன் அண்ணன்.
கணேசனால் எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்ய முடியாது. ஏனோ தானோ என்றுதான் செய்வான். ரகுராம் தன்னை விட மூன்று வயதுதான் பெரியவன். கணேசனின் சோம்பேறித்தனைக் கண்டு அப்பா தன்னை வாழைப் பழச் சோம்பேறி என்றே அழைப்பார். ரகுராம் பல சமயம் சொல்லாமலேயே எல்லா வேலைகளையும் செய்து விடுவதைப் பார்த்து. கணேசனுக்கு பொறாமையாக இருக்கும். ரகுராம் கணேசனை வேலை வாஙகவும் மாட்டான்.
மறு வருடம் அவர்களுக்கு தம்பி பாப்பா பிறந்தான். அவனையும் அவர்கள் இருவரும் கவனித்தனர்.
சில வருடங்கள் கழித்து அண்ணன் ரகுராம் தன் நான்காம் படிவம் படிப்பை தொடர சொந்த ஊரான சிகாமாட்டிலிருந்து ஜோகூர் பாருவில் உள்ள தங்களின் அப்பாயி வீட்டிற்குச் சென்று விட்டதால், வீட்டு வேலைகள் எல்லாம் கணேசன் தலைமேல் விழுந்தன. ரகுராமோ மாதம் ஒரு முறைதான் சிகாமட் வருவான்.
கணேசனுக்கு அப்போது வயது 13 மட்டுமே. தன் அப்பா எப்போதும் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்று விடுவதால் வார இறுதியில்தான் வீட்டுக்கு வருவார்.
காலையில் பக்திப் பாடல்கள் போடுவதிலிருந்து, சாமி விளக்கு ஏற்றுவது, முனியாண்டி கோவிலுக்குப் போவது, கடைக்கு போவது எல்லாம் அவனே செய்தான்.
அது மட்டுமா, தன் தம்பியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் அம்மா தன்னிடம் ஒப்படைத்துவிட்டு அவர் சமையல், துணித் துவைக்கும் வேலைகளில் மும்முரமாகி விடுவார். இந்த லட்சனத்தில் பள்ளிப் பாடங்கள் செய்து தொலைக்க வேண்டிய இன்னொரு நிர்ப்பந்தம் அவனுக்கு. கணேசனுக்கு முன்பு போல் உல்லாசமாக தினசரியை கழிக்க இயலவில்லை.
சைக்கிளே ஓட்டத் தெரியாத கணேசன், சிரமப்பட்டு தன் அப்பாவின் சைக்கிளை எடுத்து இரும்புக் கம்பிக்குள் காலை விட்டு ஓட்ட பழகிக் கொண்டான். அப்பாவும் அவனுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தார். சைக்கிள் ஓட்டப் பழகியதால் கடைக்குப் போகும் தூரம் குறைந்தது போன்று தோன்றியது.
வீட்டில் சாமி கும்பிடுவதைத் தவிர்த்து, அம்மா தன்னையும் தம்பியையும் வெள்ளிக்கிழமையுடன் சேர்த்து சமயங்களில் மற்ற நாட்களிலும் கோவிலுக்குக் கூட்டிச் சென்று விடுவார். இதனால் தொலைகாட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒலிபரப்பாகும் முக்கிய ஆங்கிலத் தொடர்களை பார்க்க இயலாமல் போய்விடும். அதோடு மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் லீடோ தியேட்டருக்கு சென்று தமிழ்ப் படங்கள் பார்க்கும் பல சந்தர்ப்பங்களும் பறிபோனது.
ரஜினிகாந்தின் நெற்றிக்கண் படம் பார்க்கும் வாய்ப்பை தவறவிட்டதை மிகவும் வருந்தினான். பள்ளியில் நண்பர்கள் கதை கதையாய் ரஜினியின் நடிப்பை புகழ்ந்துத் தள்ளி கணேசனை கடுப்பேத்தினர். எந்த அளவுக்கு ரஜினி நடித்திருப்பார் என்று அவனால் கற்பனை செய்துதான் பார்க்க முடிந்தது.
கணேசனுக்கு வீட்டிலும் சரி, பள்ளிக்கூடத்திலும் சரி, நிம்மதியற்ற நிலைதான். அவனுக்கு கடவுள் மீது கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு துளிர்விட ஆரம்பமாகியது. தான் எவ்வளவு சிரமப்பட்டு வீட்டிலும் முனியாண்டி கோவிலிலும் விளக்கு ஏற்றினாலும், கடவுள் தன் மீது பரிவு காட்டுவதாக தெரியவில்லை. கடவுள் அவனுக்கு மேலும் கஷ்டத்தைதான் கொடுத்துக் கொண்டிருந்தார் என்ற எண்ணம்தான் தோன்றியது அவனுக்கு.
அன்றிலிருந்து அவனுக்கு கடவுளைப் பிடிக்காமல் போனது. கடவுளை வெறுக்க ஆரம்பித்தான்.
மூன்று வருடங்கள் அவன் படாத பாடுபட்டான். முன்பெல்லாம் வீட்டிலோ அல்லது கோவிலில் சாமி கும்பிடும்போது கையெடுத்துக் கும்பிடுவான். இப்போது விளக்கு ஏற்றுவதோடு சரி.
எஸ். ஆர். பி பரிட்சை வந்த சமயத்தில், அதில் அவன் நன்றாக செய்வானா இல்லையா என்று அவனுக்கே தெரியவில்லை. கடவுளிடமும் கணேசன் ஏதும் வேண்டிக் கொள்ளவில்லை.
கணேசனுக்கு யார் மீது கோபம் என்ற குழப்பம் மேலோங்கியது. கடவுளிடமா, பெற்றோரிடமா, தம்பியிடமா அல்லது தன்னை விட்டுச் சென்ற அண்ணனிடமா?
அவனுக்குப் புரியவில்லை.
அதன் பின் அவன் அம்மா சொல் பேச்சும் கேட்பதில்லை. வீட்டில் விளக்கு ஏற்றுவதில்லை, முனியாண்டி கோவிலுக்கும் மாரியம்மன் கோவிலுக்கும் போவதும் இல்லை. கடைக்கு போகச் சொன்னால் மட்டும் போவான். அந்தச் சமயத்தில்தான் விடுதலைப் பெற்று இருப்பதாக உணர்வான்.
கணேசனுடைய மாற்றம் வீட்டில் உள்ளவர்களை ஆச்சர்யமும் ஆத்திரமும் அடையச் செய்தது. அப்பாவிடமும் அம்மாவிடமும் நன்றாக பாட்டு வாங்கினான்.
ஒரு தடவை அவன் அறையில் ஒட்டிவைத்திருந்த சற்று பெரிய அளவிலான மஞ்சல் முழுக் கைச் சட்டை அணிந்திருந்த ரஜினி போஸ்டரை அம்மா கிழித்தெரிந்தார்.
“உனக்கு கடவுளை விட ரஜினிகாந்த் ரொம்ப முக்கியமாக ஆகிவிட்டானா?!” என்று ஏசி அவன் கண்ணங்களில் பளார் பளாரென்று அறைவிட்டார்.
கணேசன் அழுதான். நன்றாக அழுதான். தேம்பித் தேம்பி யாருக்கும் தெரியாமல் அழுதான். கடவுளின் மேல் உள்ள வெறுப்பு பல மடங்கு அதிகமாகியது. உலகத்தில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு ஏன் கடவுள் பொறுபேற்கவில்லை என்ற கேள்வி அப்போதுதான் அவனுள் எழும்பியது.
பள்ளிக்கூடத்தில் சியு யென் ஒருவனிடம் மட்டும் எப்போதும் தன் மன ஆதங்கத்தைக் கொட்டித் தீர்ப்பான்.
“நாம் ஏன் கடவுளைக் கும்பிட வேண்டும்? கடவுள் உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் நன்மை செய்யவில்லையே?”
“நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு புரியவில்லை. எல்லோரும் கும்பிடுறாங்க நாமும் கும்பிடுறோம். எங்க வீட்டில் அம்மாவும் பாட்டியும் கும்பிடுவாங்க. நான் எப்போதாவது கும்பிடுவேன்,” என்றான் சியு யென்
“கடவுள் ஏன் எல்லா மனிதனையும் சிறப்பாக படைக்கவில்லை? ஏன் சில பேர் வசதியா இருக்காங்க, பல பேர் கஷ்டப்படறாங்க? ஏன் ஒரு நாடு பணக்கார நாடாக இருக்கிறது மற்றொரு நாடு மிகுந்த ஏழையாக இருக்கிறது? ஏன் கடவுளால் போர்களை நிறுத்த முடியவில்லை? அங்கு சாகும் மக்களையும் சின்ன குழந்தைகளையும் காப்பாற்றவில்லை? கடவுளுக்கு மனிதர்கள் அடித்துக் கொள்வதுதான் பிடிக்குமோ?”
“முன்பெல்லாம் உன் அப்பா அம்மா சாமி கும்பிட கட்டாயப்படுத்துவது பிடிக்கவில்லை என்பாய். இப்போது என்னவென்றால் நாட்டு நடப்பை கடவுளுடன் சம்பந்தப் படுத்துகின்றாய். எனக்கு ஒன்றும் புரியவில்லை.”
“நீயே பாரு, பல நாடுகள் வெள்ளத்தாலும், வரட்சியாலும், பூகம்பத்தாலும் பிறகு நில நடுக்கத்தாலும், போர்களாலும் பாதிப்படைகின்றன? இத்தனைக்கும் அந்தந்த நாட்டு மக்கள் கடவுளே கதி என நம்பியிருப்பார்கள்தானே? இது துரோகம் இல்லையா?”
கணேசன் இப்படிச் சொல்லச் சொல்ல சியூ யென் கணேசனின் வாயை பார்த்துக் கொண்டிருப்பான்.
கணேசனின் செயலால் அவன் அம்மா தன் கடைசி மகனை தயார்ப் படுத்திக் கொண்டு வந்தார். அவன், அம்மாவுடன் சாமி விளக்கு ஏற்றுவது, முனியாண்டி கோவிலுக்கு போவதெல்லாம் எல்லாம் அவந்தான்.
எஸ். ஆர். பி தேர்வில் கணேசன் அதிர்ஷ்டவசமாக பாஸ் ஆனான். நான்காம் பாரம் போகும் அளவுக்கு மிகவும் குறைந்த தகுதியுடந்தான் பாஸ் ஆனான்.
நான்காம், ஐந்தாம் பாரம் படிக்கும் போதும் கணேசன் அதே பிடிப்புடந்தான் இருந்தான். மாறவே இல்லை.
கடவுள் இல்லை! அப்படியே இருந்தாலும் அவரை பல கேள்விகள் கேட்பேன்!
கடவுளால் மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலவில்லை!
கடவுள் மனிதனின் உருவாக்கமே! கடவுள் ஒரு கற்பனையே!
பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களுக்கு அவன் செயல் மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது. கோவிலுக்குப் போகாமல் எப்படி அவனால் வாழ முடிகின்றது என ஆச்சர்யப்பட்டனர்.
எஸ். பி. எம் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்காததால் கணேசன் மீண்டும் தேர்வெழுத விருப்பப் படாமல், சிகாமட்டில் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றான்.
கணேசனின் அப்பா, அவன் சாமி கும்பிடாததால்தான் தேர்வில் கோட்டைவிட்டு சாதாரன வேலை செய்கின்றான் என்று திட்டினார். அவன் அண்ணன் ரகுராம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்றுக் கொண்டிருந்தான். கணேசனின் தம்பியும் கல்விக் கேள்விகளில் சிறந்தே விளங்கினான். எல்லாம் அவர்கள் கடவுள் மீது வைத்த பக்தி என அவன் அம்மா மிகவும் நம்பிக்கையுடன் கூறினார்.
கணேசன் கூட சில சமயங்களில், அவன் அப்பா அம்மா சொல்வது உண்மைதானோ என்று நினைப்பதுண்டு? அதனால்தான் தான் தோல்வி மேல் தோல்வியை சந்திக்கின்றோமா? ஆனால் கடவுள் இப்படியும் பாரபட்சம் பார்ப்பவராக இருந்தால் பிறகு ஏன் அவரை உச்சத்தில் மனிதர்கள் வைத்துள்ளனர்? அவனுக்கு இது புரியவில்லை.
என்னதான் கணேசன் பள்ளிப் படிப்பில் மந்தமாக இருந்தாலும். வீட்டில் அப்பா வாங்கும் பத்திரிகைகள் மாத இதழ்கள் எல்லாம் படிப்பதுண்டு. மேலும் மாவட்ட நூலகத்திற்குச் சென்று அவ்வப்போது புத்தகங்களை இரவல் வாங்கிப் படிப்பான்.
தான் படித்தவற்றில் அவனுக்கு தெரிந்தது என்னவென்றால், தான் ஒருவன் மட்டுமே கடவுள் மறுப்பாளன் அல்ல. இந்த உலகத்தில் பல்லாண்டுளாகவே தன்னைப் போன்று நிறைய பேர் வாழ்ந்து வந்துள்ளனர். பெரியார் இ. வெ. ராமசாமி மற்றும் கார் மார்க்ஸும் தன்னைப் போன்று சிந்தனையுடையவர்களே எனறு அறிந்த போது பெருமிதம் கொண்டான்.
ஏழு வருடங்கள் தொழிற்சாலையில் பணிப்புரிந்த கணேசனுக்கு படிப்படியாக பதவி உயர்வு கிடைத்தன. சாதாரன தொழிலாளியாக இருந்த அவன், லீடராகி பின் சூப்பர்வைசராகி நல்ல சம்பளமும் கிடைத்தது.
கணேசனுக்கு மிகவும் பெருமை. தன் உடன் பிறந்தவர்களிடம் மார்தட்டிக் கொள்வான். சாமி கும்பிடாமலும் தனக்கு இதெல்லாம் நடப்பது அவனுக்குள் ஒரு கர்வத்தை ஏற்படுத்தியது. எல்லாம் தனது கடின உழைப்பு என்பான்.
“இதிலிருந்து கடவுள் உன்னை ஒருபோதும் மறக்கவில்லை என்று தெரிகிறதா கணேசா? தன்னை நம்பியவனையும் கை விடவில்லை, நம்பாதவனையும் கைவிடவில்லை. பேருதான் கணேசன் ... ம்ம்ம்.” அவன் அம்மா அவன் சொன்னதை மறுத்து சொன்னார்.
கணேசன் அதற்கு பதில் கூறவில்லை. அவனுக்குத் தெரியும் அம்மாவிடம் பேசி ஜெயிக்க முடியாதென்று.
கணேசனின் அண்ணன் ரகுராம் ஆசிரியர் வேலையை ஜொகூர் பாருவில் ஓர் இடைநிலைப் பள்ளியில் பணிபுறிந்து அதன் பின் திருமணம் செய்துக் கொண்டு அங்கேயே தங்கி விட்டான். கணேசனுக்கும் திருமண வயதானது. அவனுக்கும் திருமணம் செய்து கொள்ள ஆசை வந்தது. ஆனால் யாரிடமும் தெரியப்படுத்தவில்லை.
அவன் அப்படி நினைத்த சமயத்தில்தான் ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓர் அழகிய தமிழ்ப் பெண் தான் பணிபுரியும் தொழிற்சாலையில் அலுவலக வேலையில் சேர்ந்தாள்.
இது நடப்பதும் தன் அம்மா சொல்வது போன்று கடவுளின் செயலா என கணேசனை யோசிக்க வைத்தது. இல்லை ... இல்லை இது தற்செயலாக நடக்கின்றது என்று சுதாகரித்துக் கொண்டான்.
அவளது முகம், நீண்ட தலைமுடி, அளவான உயரம் மாநிறமான தோல், எல்லாவற்றையும் விட அவளது மெல்லிய அந்தக் குரல். அண்மையில் பாடகியாக அறிமுகமான சித்ராவின் குரலை விட இனிமையாக கேட்டது.
இன்னொன்று முக்கியமானது, அவளது நெற்றியில் எப்போதும் விபூதி சற்று பெரிதாகவே பூசி நடுவில் சிறிய அளவிலான கருப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு இருக்கும். வாவ்! என்ன அழகு இவள் என்று கணேசன் பிரம்மித்தான்.
ஆனால் அந்த விபூதிதான் அவனுக்கு இடைஞ்சலாக தோன்றியது.
இந்தத் தொழிற்சாலையில் அவ்வப்போது தமிழ்ப் பெண்கள் பொதுவான வேலை செய்ய வருவர். பெரும்பாலும் மூன்று நான்கு மாதங்கள்தான் வேலை செய்வர் பிறகு காணாமல் போய் விடுவர். இங்கு பெரும்பாலும் மலாய்க்காரர்களே பணியில் உள்ளனர்.
கணேசன் வேலைப் பார்த்த இந்த எழு வருடங்களில் அலுவலக வேலைக்கு இதுதான் முதல் தடவை ஓர் தமிழ்ப் பெண் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றார்.
அவள் பெயர்தான் மிகவும் வியப்புக்குரியதாக தென்பட்டது. அந்தப் பெயரே அவனை பயமுறுத்தியது. இந்த மெல்லிய அழகிக்கு இப்படி ஒரு பெயரா?
மஹிசாசுர மர்த்தினி
பெயரைக் கேட்டவுடன் கணேசனுக்கு தலையே சுற்றியது.
அவளை மர்த்தினி என்றே அழைத்தனர்.
அவளை எப்படியாவது தன் மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் பூதாகரமாய் உருவெடுத்தது. நடக்குமா, நடக்காதா, அது வேறு விசயம்.
அவளிடம் தன் விருப்பத்தை வெட்கத்தை விட்டு தெரிவித்த போது ...
“இந்த மூன்று மாத காலம் நான் உங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் நல்லவராகத்தான் என் கண்களுக்கு தெரிகிறீர்கள்.”
கணேசனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. குதிக்கலாமா என்று கூட தோன்றியது.
“ஆனால் ...”
இதுதானே வேண்டாம் என்கிறது. எதற்கு இவள் ஆனால் என்று இழுக்க வேண்டும்?
“நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று கேள்விப்பட்டேன்.”
“அதனால் என்ன?” அவன் இதயம் அதிவேகமாக துடித்தது.
“சிரமம்தான்.”
“என்ன சிரமம்?”
“நமக்குள் அடிக்கடி சண்டை வரும்.”
“அப்படி வராது. நான் உன்னிடம் சண்டையிட மாட்டேன்.
“நான் நம்ப மாட்டேன்.”
“பிறகு எப்படி நான் உன்னை நம்பவைப்பது?”
“நீங்கள் இப்போதிருந்தே திருந்தி, கடவுளை மனதார நம்பி, தினமும் வணங்க வேண்டும். என் மீது அன்பு இருந்தால் இதை செய்வீர்கள் என நம்புகின்றேன். உங்கள் நெற்றியில் விபூதியை தினமும் பார்க்க விரும்புகின்றேன். இதை எனக்காக செய்யக் கூடாது. கடவுள் மீது முழு பக்தியுடன் செய்ய வேண்டும். முடியுமா?”
என்ன இது எடுத்த எடுப்பிலேயே தன் கொள்கை மீது கை வைக்கிறாளே என்று மிகவும் கடுப்பாகினான் கணேசன்.
ஆனால் ...
விடியற்காலை மணி 4.45 காட்டியது ஹாலில் மாட்டியிருந்த சுவர்க் கடிகாரம். அவர் கட்டிலை விட்டு எழுந்து நெளிந்தார். அவர் பக்கத்தில் படுத்திருக்கும் தன் அழகிய மனைவியை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. தன் இரு மகன்கள் பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
கணேசன் ஹாலுக்குச் சென்று சிடி பிளேயரில் கந்த சஷ்டி பாட்டை அந்த மங்கலான வெளிச்சத்தில் போட்டார். மஹிசாசுர மர்த்தினியை திருமணம் செய்ய சில மாதங்களுக்கு முன்பே பய பக்தியுடன் இந்த புனிதமான செயலை கடந்த ஆறு வருடங்களாக செய்து வருகின்றார்.
முற்றும்
வானம்பாடி (01.02.2025)
Comments
Post a Comment