கட்டுரை
எம். பிரபு
நாம் இந்த மலேசியத் திருநாட்டில் (இப்படித்தான் கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியுள்ளது) இந்திய வம்சாவழியினர் பல நூறு ஆண்டுகளாக தொன்றுத்தொட்டு வாழ்ந்து வருகின்றோம். இது எல்லோருக்கும் தெரிந்த அறிந்த ஒன்று. அதனால்தான் நாம் இன்னமும் பழைய சாதனைகளை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றோம்.
பழைய வீரத் தீர செயல்களை புரிந்த நமது முன்னோர்களை புகழ்ந்து மேடை பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் மட்டும் அல்லாது கோப்பிக் கடைகளிலும் நமது பழைய புராணத்தைப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம்.
பழைய சரித்திரக் கதைகளை பேசுவதில் தனிச் சுகம் உண்டு என்பதனை நானும் அறிவேன். நம்மால் அவற்றை மறக்கவும் மறுக்கவும் இயலாது. அரசனிலிருந்து கூலிக்காரர்கள் வரை நமது மூதாதையர் இந்நாட்டை ஆண்டு, மாண்டு போயிருக்கின்றனர். தற்போதைய பள்ளிப்பாடங்களில் அவை மறைக்கப்பட்டிருந்தாலும், உண்மை அதுவே. உண்மை பல ரூபங்களில் வெளிப்படவே செய்யும்.
பாருங்கள், ஏதோ எழுத ஆரம்பித்து, நானும் பழைய புராணத்தை புகழ்ந்தே எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஆம், நமது பெருமைகளை நாம்தான் அறிவோம். நாம் எழுதாவிட்டால், யார் எழுதுவது?
சரி, இப்போது விசயத்திற்கு மீண்டும் வருவோம்.
பழங்காலத்தில் அப்படி இருந்தோம், இப்படி இருந்தோம் என்று ஒருபுரம் இருக்க, இப்போது நாம் இந்த நாட்டில் எப்படி வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம் என்பதுதான் கேள்வி.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், அதாவது சீனர்களும் நம்மைப் போன்றுதான் இந்நாட்டிற்கு வந்தனர். அவர்கள் எங்கே உள்ளனர், நாம் எங்கே இருக்கின்றோம்? அவர்களின் அரசர் அரசியினரும்தான் இங்கு வந்து போக இருந்தனர். அவர்களும்தான் ஈயக்குட்டையில் கூலியாக வேலைப் பார்த்தனர். நம் செட்டியார்கள் போன்று அவர்களும் வியாபாரம் மற்றும் ரப்பர் தோட்டதை ஏற்று நடத்தினர்.
ஆனால் நம் முன்னோர்கள், சீனர்களைப் போன்று தொடர்ந்து வியாபாரத்தில் ஆர்வம் செலுத்தவில்லை. சீனர்களிடம் இருக்கும் ஒற்றுமை அப்போதே நம் இனத்தவர்களிடம் இல்லை. ஜாதி பேதத்தை இந்தியாவில் கடைப்பிடித்ததை, பிழைக்க வந்த இடத்திலும் வழக்கமாக்கிக் கொண்டதால் எப்படி ஒற்றுமையாய் வாழ்வதாம்?
இரண்டாம் உலகப் போர் வந்ததும் துண்டைக் காணாம் துணியைக் காணாம் என்று பெரும்பாலோர் திரும்ப இந்தியாவிற்கே சென்றுவிட்டனர். நான் வசிக்கும் இந்த பெந்தோங் பட்டிணத்தில் பல செட்டியார்கள் தங்கள் கடைகளை சீனர்களிடம் விற்று விட்டு, திரும்ப ஊருக்கே சென்று விட்டனர். வட்டித் தொழில் செய்துக் கொண்டிருந்த செட்டியார்கள் மட்டும் இங்கேயே தங்கி, தவனைக் கணக்கில் ஊருக்குப் போய் வந்துக் கொண்டிருந்தனர்.
இதில் இந்தய முஸ்லீம்கள் விதிவிலக்கு. அவர்கள் அப்போதே பினாங்கு, கோலாலும்பூர், ஈப்போ, மலாக்கா, சிங்கப்பூர் போன்ற பெரிய நகரங்களில் அவர்களது துணி வியாபாரம், உணவுக் கடை, ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழிற்துறையில் கோலோச்சினர். அவர்களும் இந்தியாவிற்கு வரப்போக இருந்தபோதும், இன்று அவர்களே மலேசியாவில் வியாபாரத்துறையில் இந்தியர்களை பிரதிபளிக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதைப் பற்றி இங்கு நான் எழுத விரும்பவில்லை.
நம்மவர்களும் அண்மைய காலமாக வியாபராத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டுவருகின்றனர் என்பது பெருமைக்குரிய விசயமே. இருப்பினும் இது போதாது. விகிதாச்சாரப்படி பார்த்தால் நாம் இன்னும் குறைவான எண்ணிக்கையில்தான் இத்துறையில் மிளிர்கின்றோம்.
நம் இந்தியர்கள் சிறந்த உழைப்பாளிகள், இதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் உழைப்பை எல்லாம் பிறருக்காக உழைத்து தேய்ந்து போய்விட்டோம். நமக்கென்று எதுவும் யோசித்து செயல்பட முன்னேற தவறி விடுகின்றோம்.
மீண்டும் விசயத்திற்கு வருவோம்.
இப்போது உள்ள நிலமையில் நமக்கு எதிராக செயல்படுவோர்களிடம், நமது பழைய பெருமைகளை பேசிக்கொண்டிருந்தால் எதுவும் எடுபடப் போவதில்லை. யாரும் அதனை காதில் போட்டுக் கொள்ளப் போவதும் இல்லை. தமிழன் காடு வெட்டினான், மேடு வெட்டினான், ரோடு போட்டான், தண்டவாளம் போட்டான், ரப்பர்த் தோட்டத்தில் ரத்ததை வியர்வையாக சிந்தினான் என்பதெல்லாம் பழைய கதை. பழையகதையை கேட்க நம் பிள்ளைகளே காது கொடுத்து கேட்காத போது, மற்றவர்களா கேட்கப் போகின்றனர்?
அந்தக் கதையெல்லாம் விட்டுவிட்டு, காரியத்தில் மட்டுமே கண்ணாக இருக்க வேண்டும். சீனர்களை எடுத்துக் காட்டாக ஏற்றுக் கொள்ள வேண்டும். சீனர்கள் என்னென்ன செய்வார்கள் என்பதை விட, என்ன செய்ய அவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதனை கருத்தில் கொள்வோம். இப்படிச் சொல்ல வெட்கமாகத்தான் உள்ளது. வேறு என்ன செய்வது? அவர்கள் எல்லோருமே சிறந்தவர்கள் என்று கூறவில்லை. நற்பன்புகளை மட்டுமே எடுத்துக் கொள்வோம்.
சீனர்கள் வீனாக வெட்டிக் கதை பேச விரும்புவதில்லை. தானுண்டு தன் வேலை உண்டுதான் அவர்களின் கொள்கை. அப்படியே அவர்கள் கோப்பி கடையில் பேசினாலும், தத்தம் வேலைகளை முடித்துக் கொண்டுதான் பேசுவர். பெரும்பாலும் அவர்களது பேச்சு, நாட்டு நடப்பு, அரசியல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டதாகவேதான் இருக்கும். வீன் கதைக்கு அங்கு பேச்சே இல்லை.
வேலைக்குப் போகும் சீனர்களோ அல்லது வியாபாரம் செய்யும் சீனர்கள், வேலைக்கு மட்டம் போட மாட்டார்கள். செய்யும் தொழில்தான் அவர்களுக்கு தெய்வம். விருப்பத்திற்கு ஏற்ப கடையை திறப்பது மூடுவது போன்ற கலாச்சாரம் அவர்களிடத்தில் இல்லை. வேலை என்று வந்து விட்டால் அது எப்போதும் அதற்குதான் முதலிடம் கொடுப்பார்கள். சோம்பல் என்பது அவர்கள் குணத்திலியே இல்லை.
சீனர்களும் கடவுளை நம்புகிறவர்கள்தான். கடவுளும் மதமும் ஓர் அளவோடுதான் பின்பற்றுவர். அதனால் அவர்கள் எந்த நேரமும் பூசை புனஸ்காராம், அந்தத் திருவிழா இந்தத் திருவிழாவென்று தங்கள் நேரத்தையும் காலத்தையும் வீனடிப்பதில்லை. வேலைக்கு விடுமுறைப் போட்டு கோவிலுக்கு செல்லும் வழக்கமும் அவர்களிடத்தில் இல்லை. எந்த குருமார்களையும் அவர்கள் பின்பற்றுவதுமில்லை. தாங்களே தங்களுக்கு குரு.
அவர்களுக்கும் சினிமா, இசை எல்லாம் உண்டு ஆனால் யாரும் கலைஞர்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பதில்லை. எந்த நடிகர்களுக்கும் அவர்கள் சங்கம் வைத்ததில்லை. சினிமாவை அவர்களின் மூச்சுக் காற்றாக ஏற்றுக் கொண்டதேயில்லை. பொழுது போக்கிற்காக மட்டுமே அவற்றை உபயோகித்தனர். சினிமாவைப் பற்றி அவர்கள் பேசுவதே இல்லை.
சீனர்களுக்கு கல்வியின் மீது அதீத பிரியம். அதனால், கல்வி கற்க தவறியதில்லை. சாக்குப் போக்கு சொல்லிக்கொண்டு பள்ளிக்கோ அல்லது பிரத்தியேக வகுப்புக்கோ அவர்கள் மட்டம் போடுவது கிடையாது.
நேரம் தவறியதில்லை. சொன்ன நேரத்திற்கு வேலையை முடித்து விடுவர். அதேபோன்று பணம் செலுத்தும் விசயத்திலும். குறிப்பிட்ட தவனையில் பணத்தைச் செலுத்த தவறியதில்லை.
இவை போதும் என்று நினைக்கின்றேன். இன்னும் நிறைய எழுதினால் பட்டியல் நீண்டுக் கொண்டுப் போகும்.
சீனர்கள் பின்பற்றும் கொள்கைகளைப் பின்பற்றினாலேயே நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மென்மேலும் சாதிக்க மிகவும் உதவம். பிறர் நம் மீது குறை கூறுவதை நிறுத்த வேண்டும் என்றால், பிறருக்கு நாம் முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
நம் இனத்தின் மீது பிறர் ஒரு குற்றமும் குறையும் சுமத்தாமல் இருக்க நாம் செய்ய வேண்டிய முக்கிய அம்சங்கள்:
1. ஒழுக்கம் & நேர்மை
2. நேரம் தவறாமை
3. சிறியோர் & பெரியோர் படிப்பின் மீது நாட்டம்
4. இலட்சியப் பிடிப்பு
5. சாதனை
6. சேமிப்பு & சிக்கனம்
7. கடன் வாங்காத வாழ்க்கை
8. விடாமுயற்சி
9. பொழுது போக்கு அம்சங்களை குறைத்தல்
10. உழைப்பு
11. ஆரோக்கியம் (சிகரெட் & குடியை நிறுத்தம் செய்தல் அவசியம்)
இவற்றை முறையாக சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் தத்தம் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்த்தாலே போதுமானது. அவர்களது எதிர்காலம் பிரகாசிக்கும். நமது வாழ்க்கை முறையும் மாறுபடும். பிறர் கண்களில் நம் இந்தியர்கள் மதிக்கப்படுவர்.
அப்போது வேண்டுமானால் பழங்கால பெருமைகளை பேசலாம்.
Comments
Post a Comment