சிறுகதை
எம். பிரபு
என் கழுத்தில் தாலி என்ற அந்த மஞ்சள் கயிறு அழகாக மெல்ல வந்து அமர்ந்தது. அந்த மஞ்சள் கயிறு என் கழுத்தை அலங்கேறிய தருணம் என் உள்ளம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனந்தக் கண்ணீர் விட்டேன். அவ்வளவு சந்தோசம்.
என் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் நண்பர்கள் எல்லாம் புடைசூழ நின்று வாழ்த்து தெரிவித்து மஞ்சள் அரிசி, மலர்கள் தூவி மனதார வாழ்த்தினர். மொய்யும் இட்டனர். எவ்வளவு மகிழ்ச்சியான நாள் அது. மறக்க முடியாத நாள். ஆனந்த நாள். அற்புத நாள்.
அன்று எல்லா தெய்வங்களும் என்னைச் சுற்றிச் சுற்றி வந்த திருநாளாகும். இருக்காதா பின்னே. திருமண வயதெல்லாம் தாண்டிய எனக்கு, எனது இருபத்து ஒன்பதாவது வயதில்தான் என் கழுத்துக்கு தாலி கயிறு ஏறுகின்றது.
திருமணம் நடக்குமோ நடக்காதோ என்றிருந்த எனக்கு, திருமணம் நடந்தது. வாழ்க்கை முடிந்தப் பின்தான் எல்லோரும் சொர்கத்திற்கு செல்வார்கள். எனக்கு என் திருமணம்தான் சொர்கம்.
இன்று இரவு, எனக்கு - எங்களுக்கு முதல் இரவு. சினிமாப் படங்களில் வருவது போன்று என்னையும் அதே போன்று முதலிரவு நடக்கப் போகும் அறைக்குள் தள்ளினர்.
மங்கிய வெளிச்சம் கொண்ட அறை. கட்டில் அருகே இருந்த சிறிய மேசையில் மட்டும் சிறிய மின் விளக்கு பளிச்சென எரிந்தது. அதில் வாழைப்பழத்தில் இரண்டு ஊதுவத்தி புகைந்து கொண்டிருந்தன.
அவர் கட்டிலில் வேஷ்டி ஜிப்பாவோடு அமர்ந்திருந்தார், நான் பச்சை நிறப் புடவை கட்டியிருந்தேன். கையில் பால் டம்ளர்.
என் தலையிலும் மல்லிகை மனம், அறையினுள்ளும் அதே மனம். அது என் உடல் முழுவதும் ஏதோ ஓரு உணர்ச்சியும் கிளர்ச்சியும் உண்டு பண்ணியது. கட்டில் மலர்களால் அலங்கரிப்பட்டிருந்தன. அப்போதே அதில் தவழ மனம் உந்தியது. கட்டிலுக்கு மேல் மின் விசிறி சுழன்றது, இருந்தும் வெப்பமாகவே இருந்தது.
என் மனம் சந்தோசத்திலும் வெட்கத்திலும் என்னென்னவோ செய்தது. அவரிடம் என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்று ஒன்றும் புரியவில்லை. பயமாகவும் இருந்தது, நன்றியுணர்ச்சியும் மேலெழுந்தது.
அவரே என் பெயரைச் சொல்லி அழைப்பாரா என்று ஏங்கினேன். அல்லது நேரே அவர் அருகில் சென்று அமர்ந்துக் கொள்ளவா? அப்படிச் செய்தால், அவருக்கு கோபம் வந்தால் என்ன செய்வது?
அறைக் கதவை தாழ்பாள் இட்டேன். அவர் படுக்கையில் உட்கார்ந்தவாரு ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.
வலது கையில் பால் டம்ளரை பிடித்தவாரே இடது கையில் என் சேலையையும் ரவிக்கையையும் சரி செய்தேன்.
“வரலாமா?” என்று கேட்டேன்.
“ம்ம்ம்.”
ஏன் அவர் ஒரு மாதரியாகவே இருக்கின்றார். பெண் பார்க்க வந்த போதும் சரி, எங்கள் வீட்டில் பரிசம் நடந்த சமயமும் சரி. என்னிடம் அவர் ஒன்றுமே பேசவில்லை. ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே சிந்தினார். எப்போதுமே இவர் இப்படித்தான் இருப்பாரோ?
ஆள் பார்ப்பதற்கு அப்படியே ஜெமினி கணேசன்தான் ஆனால் என்னைப் பார்த்து ஏன் இப்படி வெட்கப் படுகின்றார்? எனக்கு ஒன்றும் புரியவில்லை.
“இந்தாங்க பால், குடிங்க,” டம்ளரை அவரிடன் நீட்டினேன்.
அதை வாங்கி பாதி குடித்து எனக்கு கொடுப்பார் என்று நினைத்தேன் ஆனால் டம்ளரை அந்தச் சிறிய மேசை மீது வைத்தார்.
“குடிக்கலியாங்க?” இன்னமும் நின்றுக் கொண்டே கேட்டேன். என்னை அவர் அருகில் உட்காரச் சொல்லவே இல்லை. எனக்கோ என்ன பேசுவதென்றும் தெரியவில்லை.
“ம்ம்ம் ... தண்ணீர் கொண்டு வரட்டா?” ஏதோ பத்தாம் பசலித்தானமாக கேட்டுவிட்டேன் போல. என்னை நிமிர்ந்துப் பார்த்தார்.
“வேண்டாம்.” அப்பாடா இப்பவாவது வாயைத் திறந்தாரே. அதுவரைக்கும் சந்தோசம். வேற என்ன பேசுவது. பேசாமல் அறையை விட்டு வெளியேறி விடலாமா என்றும் தோன்றியது.
அவர் கையிலிருந்த புத்தகத்தை மேசை மீது வைத்தார். தமிழ் புத்தகம்தான்.
“உனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா?” நான் அந்தப் புத்தகத்தைப் பார்த்த விதத்தை வைத்து அப்படி அர்த்தப் படுத்திக் கொண்டார் போல.
“இல்லை. படிச்சாலும் எழுத்துக் கூட்டிக் கூட்டித்தான் படிப்பேன். நான் உட்காரட்டா, கால் வலிக்குது.”
“ம்ம்ம்.”
அவர் அருகில் அமர்ந்ததும் அவரிடமிருந்து ஏதோ ஒரு வாசம் வந்தது, அது அவர் தலைமுடிக்கு பயன்படுத்தும் எண்ணையாக இருக்கக்கூடும் என்று யூகித்துக் கொண்டேன். மல்லிகை மனமும் இந்த மனமும் ஒன்றினைந்து வேறு ஒரு வாசம் என் மூக்கினுள் நுழைந்தன. அவரது சுருள் தலைமுடியை நன்றாக அழுத்தி இடது புற ஓரத்தில் கோடு எடுத்து வாரியிருந்தார்.
அப்போதுதான் கவனித்தேன் அந்த அறையில் ஒரு நடுத்தர அலமாரி முழுவதும் புத்தகங்களும் நாளிதழ்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகில் ஒரு நாற்காலியும் மேசையும் இருந்தன. அதன் மேலும் சில புத்தகங்கள், காகிதங்கள். வாத்தியார் உத்தியோகம் செய்யும் பணத்தில் எல்லாம் புத்தகஙக்ளை வாங்கிக் குவித்துவிடுவாரோ?
“எனக்கு ... என்ன பேசறதுனே தெரியலீங்க,” அதுதான் என்னால் சொல்ல முடிந்தது. நான் ஏன் அப்படி சொன்னேன்?
“சரி, பேச வேண்டாம். படுத்துத் தூங்கு. நான் படிக்கனும்,” அவர் மெதுவாகவே பேசினார். முதல் இரவின் போது, சினிமா படத்தில் பாட்டெல்லாம் வரும், ஜெமினி-சாவித்திரி போல ஆடிப் பாடலாம் என்று வந்தால், இவர் என்னை தூஙகச் சொல்றாரே. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
“இல்ல ... தூக்கம் வரல,”
“நீ படுத்துத் தூங்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் நானும் விளக்கை அணைச்சிட்டு படுத்திடுவேன்.”
என்னை அணைச்சிட்டு படுப்பாரென்று பார்த்தால், விளக்கை அணைச்சிட்டு படுப்பேன்கிறாரே. எனக்கு சங்கடமாகியது.
“உனக்கும் களைப்பாக இருக்கும். நாளைக்கு பேசலாம்.” என்று கூறியவாரே மீண்டும் புத்தகத்தை எடுத்தார். சன்னலை லேசாகத் திறந்தார். ஒரு சன்னல் கதவை மட்டும் நன்றாக தள்ளிவிட்டார். அந்த சிறிய மேசை அருகில் இருந்த முக்காலியில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்தபடி படிக்கத் தொடங்கினார்.
இதற்குத்தானா கழுத்தில் தாலி ஏறிய சமயத்தில் ஆனந்தக் கண்ணீர் விட்டேன். கட்டிலில் ஒருக்கலித்து அவரை பார்க்காமல் திரும்பிப் படுத்தேன். கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் வழிந்தன. இது எதனால் வருகின்ற கண்ணீர் என்று தெரியவில்லை.
காலை 6.30 மணிக்கு எழுந்திருத்தேன். அப்போதும் அவர் புத்தகமும் கையுமாகத்தான் அந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார். அறை விளக்கு எரியவில்லை. மேசை விளக்கு மட்டும் அவர் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் மீது படும் அளவிற்கு இருந்தது. நேற்று தூங்கினாரா இல்லையா?
***
“சுந்தரி, நீ படிக்கனும். என்னை மாதிரி மூன்று நாட்களுக்கு ஒரு புத்தகம் படிக்க முடியாவிட்டாலும், கொஞ்ச கொஞ்சமாக படிக்க ஆர்வம் கொள்ள வேண்டும்.”
பசியாறும் போது படிப்பைப் பற்றித்தான் பேசினார்.
“எங்கள் வீட்டில் என் அக்காள் இருவர், நான், என் தங்கை எல்லோரும் படிப்பார்கள். இறந்துப் போன என் அப்பாவுக்கும் எழுதப் படிக்கத் தெரியும். என் அம்மாவுக்கும் எழுதப் படிக்கத் தெரியும். உனக்கும் எழுதப் படிக்கத் தெரிஞ்சிருக்கனும்.”
“ஒரு புத்தகத்தை எழுத்துக் கூட்டி படிக்கிறதுக்குள்ள ஒரு வருசம் ஆகிடுமே!”
என் மாமியார் சுட்ட நெய் தோசையும், தேங்காய் சட்டினியும் மிகவும் சுவையாய் இருந்தன. இவர் சொல்லுவது எதுவும் என் மண்டைக்கு ஏறவில்லை. நான் நினைத்ததைச் சொல்லிவிட்டேன்.
“நீ தினமும் படிச்சா, தானாகவே உன்னை அறியாமலேயே நீ எழுத்துக் கூட்டி படிக்கமாட்டாய். உனக்கு சரளமாய் படிப்பு வந்திடும்.” அவர் தோசையை பிட்டு பிட்டு வாயில் வைக்கும் போதும் மேசையில் புத்தகத்தை படித்துக் கொண்டேதான் இருந்தார். என்ன மனுசனோ.
நேற்று நடக்காத முதலிரவு இன்று இரவு நடக்குமா நடக்காதா என்ற சந்தேகத்துடனும் கவலையுடனும் அன்றைய பொழுதை வீட்டு வேலைகள் செய்துக் கொண்டே கழித்தேன். அவர் என்னிடம் அவ்வளாவாக பேசவில்லை. புத்தகம் படிப்பதும் எழுதுவுதுமாக அறைக்குள்ளாரேயே முடங்கிக் கிடந்தார். அவர் அம்மாவும், தங்கையும் என்னுடன் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தனர்.
எனக்கு அவர் கொடுத்த வேலையை நினைத்தால் மிகவும் பயமாக இருந்தது. பள்ளிக்கூடப் படிப்பையே நான் அவ்வளவாக கண்டுக் கொண்டதில்லை. இப்போது திருமணத்திற்கு பிறகு படிப்பை மீண்டும் தொடரப் போவதை நினைத்தால், குலையே நடுங்கியது. இதுற்குத்தான் இவரை திருமணம் செய்தேனா?
வீட்டில் நான்தான் மூத்தவள். எனக்குப் பிறகு இரண்டு தங்கைகள், மூன்று தம்பிமார்கள். பெந்தோங் எஸ்டேட்தான் நாங்கள் பிறந்த வளர்ந்த ஊர். பெற்றோர் இருவரும் எஸ்டேட் தொழிலாளிகள். நானும் என்னுடைய பத்தாவது வயதில் என் பள்ளிக்கூட படிப்பை முழுக்கு போட்டு விட்டு, பெற்றோருக்கு உதவியாக வேலைக்குப் போனேன், பிறகு தம்பி தங்கைகளைப் பார்த்துக் கொண்டேன். படிப்பில் எனக்கு நாட்டமே இல்லை.
தம்பி தங்கைகளை பார்த்துக் கொள்வதிலேயே என் வாழ்க்கைப் போனதால், என் திருமணம் மிகவும் தாமதமாகத்தான் நடந்தது, என் தங்கை இருவருக்கும் முன்னரே திருமணம் நடந்து விட்டன. என் தங்கைளைப் போன்று எனக்கு அழகும் நிறமும் இல்லை.
என் சந்தோசம் எல்லாம் சினிமாவும், பாட்டும்தான். மாதா மாதம் திடலில் பாய் விரித்துப் போட்டு தம்பி தங்கைகளுடன் படம் பார்ப்பது அவ்வளவு சந்தோசத்தைக் கொடுக்கும். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சரோஜா தேவி எல்லாம் மேலோகத்தில் இருந்து வந்த தேவர் தேவியர்கள் என் கண் முன்னே தோன்றுவது போன்று இருக்கும். அருகில் இருக்கும் பெந்தோங்கில் நான்கு தடவை எங்க சித்தபா, சித்தியுடன் தீபாவளிக்கு படம் பார்க்க போயிருக்கோம்.
எனக்கும் மற்றவர்களைப் போன்று திருமண ஆசை உண்டு. ஆனால் அதை எப்படி வெளிக்காட்டிக் கொள்வது? எனக்கு என் தங்கைகள் போன்று அழகும் இல்லை, அறிவும் இல்லை. என் உடன்பிறப்புக்களைப் பார்த்துக் கொள்ளவே என் பெற்றோர் என்னை நன்றாக பாவித்துக் கொண்டனர். அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. கடவுள் கொடுத்த வரம், தடுக்கவும் முடியாது. பெண் பிள்ளைகள் வீட்டு வேலை செய்யவே கடவுளால் படைக்கப்பட்ட பிறவி.
இப்போது நான் திருமணம் செய்திருக்கும் இவரின் பெயர் கண்ணப்பன். இவர் வேறு யாரும் இல்லை, எனக்கு மாமா முறை வேண்டும். தூரத்து சொந்தம். இங்கு மெந்தகாப் இடைநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார். திருமணமே வேண்டாம் என்று இருந்தாராம். எப்போதும் புத்தகமும் கையுமாக இருந்தால், எங்கே திருமண ஆசை வரும். அவருக்கு முப்பத்து ஐந்து வயது. இரண்டு பேருக்கும் வயது பொருத்தமும் மற்ற பொருத்தமும் ஏறக்குறைய பொருந்தியதால், எங்களுக்கு திருமணம் நடைப்பெற்றது.
***
இரண்டாவது இரவும் அறைக்குள் சென்றேன். இன்று மேசை மீதிருந்த மின் விளக்கு எறியவில்லை. அறை வெளிச்சமாக இருந்தது. இரண்டு குண்டு பல்ப் விளக்கையும் போட்டிருந்தார். கட்டிலில் வெறுமனே படுத்திருந்தார். கொசு வலை பாதியளவு போடப்படிருந்தது. நேற்றைய அலங்காரம் எல்லாம் குறைந்திருந்தன. நான் குளித்து உடுப்பு மாற்ற மட்டும் அறைக்குள் வருவேன். இதையெல்லாம் இவர் எப்போது செய்தாரென்று தெரியவில்லை.
நேற்று எங்களுக்குள் எதுவும் நடக்கவில்லை. இன்று இரவு என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை. இன்று அவர் கைகளில் புத்தகம் இல்லை. மேசை மீதும் புத்தகம் இல்லை. நல்ல சகுனம்தான்.
இன்று அவருடன் நல்லமுறையாக பேசவேண்டும். என்னால் புத்தகமெல்லாம் படிக்கமுடியாது என்று சொல்லிவிட வேண்டும். என்னால் தோட்ட வேலை, சமையல் மற்ற வீட்டு வேலைகள் மட்டும்தான் சரிபட்டு வரும். ஆனால் இதை எப்படி நாசுக்காக சொல்வது?
என்னைப் பார்த்ததும் எழுந்து நின்றார். கதவை தாழ்ப்பாளிட்டேன். இன்றைக்கு மரியாதையெல்லாம் வேறமாதிரி இருக்கு. நேற்று நடக்காதது இன்று நடந்திடுவாரோ? என்னுள் நாணம் உண்டாகியது. அதோடு பயமும் சேர்ந்து தொற்றிக் கொண்டது.
“இங்கே வா,” என்று என் கையைப் பற்றினார். திருமணத்தின் போது பற்றிய கையை இப்போதுதான் மீண்டும் தொடுகின்றார்.
என் கையைப் பிடித்து புத்தக அலமாரி அருகே சென்றார். போச்சுடா!
“இதுவெல்லாம் என் பொக்கிஷங்கள். மு.வரதரசான் என்றால் எனக்கு அவ்வளவு உயிர். இதெல்லாம் அவர் எழுதிய புத்தகங்கள். அவர் புத்தங்களைப் படித்தால் போதும், நீ வாழ்க்கை பாடத்தை படித்தது போன்று ஆகும்.”
அதிலிருந்து ஒரு புத்தகத்தை என்னிடம் நீட்டினார்.
“புத்தகத்தின் தலைப்பை படி.”
என் இருதயம் வேகமாய் துடித்தது. ஆசிரியர் வேலையை பள்ளிக்கூடத்திலியே முடித்துக் கொண்டு, வீட்டுக்கு வரவேண்டியதுதானே. இங்கே நான் அவருக்கு மனைவியா, மாணவியா?
“பெ ... ற் ... ற ... பெற்ற, ம ... ன ... ம் ... மனம்,” சரியாகத்தான் சொல்லியிருப்பேன்.
“சரி. எழுத்தை கூட்டாமல் படி, பார்ப்போம்.” புத்தகத்தை என் முகத்துக்கு நேரே காண்பித்தார். எனக்கு உதறியது.
“பெ ... ற் ... ற ...”
“எழுத்தைக் கூட்டாமால் படி!” அவர் முகம் மாறியது, குரலும் மாறியது.
“பெ ... ற் ...ற ...”
“எழுத்தை மனதில் நிறுத்தி , நேராக புத்தகத்தின் தலைப்பை மட்டும் வாயால் உச்சரி!”
என் வாயிலிருந்து வார்த்தை வருவதற்கு பதிலாக கண்களிருந்து கண்ணீர்தான் வந்தன. தேம்பித் தேம்பி அழுதேன். அவர் முகத்தைப் பார்க்கவே மிகவும் பயமாக இருந்தது.
அவர் கையிலிருந்த புத்தகத்தை என் மீது ஓங்கினார். கைகளால் முகத்தை மூடிக் கொண்டேன். அழுகை நிற்கவில்லை. நல்லவேளை அடிக்கவில்லை. அவர் புத்தகத்திற்கு பாதகம் ஆகிவிடக்கூடாது என்று என்னை அடிக்காமல் விட்டு வைத்தாரோ என்னவோ.
அந்த நிமடமே பஸ் பிடித்து பெந்தோங் எஸ்டேட்டுக்கு போய் விடத் தோன்றியது. இரவு நேரத்தில் எங்கே பஸ் இருக்கும்.
அவர் என் தோள்ப்பட்டை பிடித்து குலுக்கினார். குனிந்த என் முகத்தை நிமிர்த்தி அவர் முகத்தை பார்க்க வைத்தார். நான் அழுதுக் கொண்டே கண் திறந்து அவரைப் பார்த்தேன்.
“இங்க பாரு சுந்தரி. நீ அழுது ஒரு பிரயோஜனமும் இல்லை. எல்லாம் நான் உன் நண்மைக்குத்தான் சொல்கின்றேன். உனக்கு எழுத படிக்கத் தெரிஞ்சாத்தான் ஆசிரியரா, எழுத்தாளாரா இருக்கிற எனக்கு பெருமை, உனக்கும் பெருமை. பத்திரிக்கைகளில் வரும் என் கதைகளை, நீ படித்து உன் கருத்தை சொன்னால் எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கும்.”
என் அழுகை இன்னும் நின்றபாடில்லை. என் மனதில் அப்போது பல வித சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன. அவர் மீது அவ்வளவு வெறுப்பு.
“இங்க உள்ள புத்தஙகங்களைப் பார். கல்கி கிருஷ்னமூர்த்தி, அகிலன், மு.வ, நா. பார்த்தசாரதி இவர்கள் எழுதிய புத்தகங்ககளையெல்லாம் நீ படித்து இன்புற வேண்டும். உனக்கு ஆங்கிலம் படிக்கத் தெரிந்தால், Albert Camus, George Orvell, Mark Twain, T.S. Eliot, Ernest Hemingway எழுதிய புத்தகங்களையும் நீ படித்து புளகாங்கிதம் அடையலாம். நாம் இருவரும் இந்தப் புத்தகங்களைப் பற்றி விவாதிக்கலாம். அது எவ்வளவு சந்தோசத்தைக் கொடுக்கும் என்று, அதை அனுபவித்தால்தான் உனக்குப் புரியும், சுந்தரி.” அவர் கைகளை தூக்கி ஏதோ மேடையில் பேசுவது போன்று பேசினார்.
நான் தமிழ் படிக்கவே திண்டாடுறேன் இவர் ஆங்கிலதிற்கு தாவிவிட்டார். இனி நான் என்ன பாடுபடப் போகின்றேன் என்று யோசிக்க யோசிக்க என்னுள் பயம் அதிகமாகின. நான் இன்னமும் தரையைப் பார்த்து அழுதுக் கொண்டுதான் இருந்தேன். என் வாழ்க்கை அதோகதிதான். என்னென்ன கற்பனைகள் சுமந்துக் கொண்டு இந்த விட்டிற்குள் என் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தேன். எல்லாம் போச்சே!
தீடீரென்று விளக்கு அணைந்தது. நான் கண் விழித்துப் பார்த்தேன். அவர்தான் விளக்கை அணைத்தார். நல்ல வேளை புத்தகத்தை தொடர்ந்து வாசிக்க சொல்லவில்லை. அவருக்கு என் அழுகையைப் பார்த்து தூக்கம் வந்து விட்டதோ?
கட்டிலுக்குச் செல்லாமல், மெதுவாக நடந்து என் அருகில் வந்தார். என் தலை உச்சி முகர்ந்து பிறகு என்னை இறுக அணைத்தார்.
தமிழ், ஆங்கிலம், எழுத்துக்கள், புத்தகங்கள் எல்லாம் மறைந்து போனது.
முற்றும்
Comments
Post a Comment