சிறுகதை
எம்.பிரபு
இதுவும் ஒரு சாதாரணக் கதைதான். உலகத்தில் எல்லா பாகங்களிலும் நடந்த கதைதான். காலம் காலமாக நடந்த, நடந்துக் கொண்டிருக்கும், இனி நடக்கப் போகும் கதை.
புதுமை ஏதும் இல்லாத கதை.
கதையில் முடிவும் இல்லாத கதை.
ஆனால், இதுவும் ஒரு கதைதான்.
***
“உங்களுக்கு ஒன்றும் புரியாது, சார்! இது எங்கள் பிரச்சனை!”
திரு மயில்வாகனம் தன் இரு கைகளையும் கட்டிக் கொண்டு, இருக்கையில் உட்காராமல், மிஸ்டர் மைல்ஸ் முன் நின்றுக் கொண்டிருந்தார். தலைக்கு மேல் காற்றாடி சுழன்றுக் கொண்டிருந்தாலும் அவரது பருத்த உடலை அது ஒன்றும் சீண்டவில்லை. படி ஏறி வந்ததில் மூச்சு வேறு வாங்கியது.
“உட்காருங்க மிஸ்டர் மயில்,” மிஸ்டர் மைல்ஸ் எவ்வளவு வற்புறுத்தியும், திரு மயில்வாகனம் நாற்காலியில் அமரவே இல்லை.
பத்து நிமிடங்களாக நின்றுக் கொண்டுதான் இருந்தார். அவரது சட்டையும் உடலும், வியர்வையால் நனைந்திருந்தன. வியர்த்திருந்த நெற்றியை கைக்குட்டையால் அடிக்கடி துடைத்துக் கொண்டார்.
“பரவாயில்லை, உட்காருங்க. உட்காருங்க மிஸ்டர் மயில். எனக்கு இந்த அளவுக்கு நீங்க மரியாதை செலுத்த வேண்டாம்.”
அவர் மேசை மீது பல அலுவல்கள் காத்துக் கொண்டிருந்தாலும், திரு மயில்வாகனம் அவர்களின் பார்ச்சூன் தீர்க்க முன் வந்தார், மிஸ்டர் மைல்ஸ். திரு மயில்வாகனம் அப்படி நிற்பதைப் பார்க்க மிஸ்டர் மைல்ஸ்க்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
“நான் ஒன்றும் மரியாதைக்காக நிற்கவில்லை. நான் எப்போதும் இப்படித்தான். என் இஷ்டம்.” அவரது மாநிற மீசையில்லாத குண்டு முகத்தில் கொஞ்சம் திமிர் தெரிந்தது.
அதற்கு மேல் மிஸ்டர் மைல்ஸ்க்கு திரு மயில்வாகனத்தை வற்புறுத்த விரும்பவில்லை. அவர் தன் இருக்கையிலிருந்து எழுந்தார். மூன்றில் சுழன்றுக் கொண்டிருந்த காற்றாடியை ஐந்துக்கு திருகினார். அவர் அறையின் வாசற்கதவு வரை நடந்து எதிர்புற பள்ளிக் கட்டிடத்தைப் பார்வையிட்டார்
திரு மயில்வாகனம் தன் தலைக்கு மேல் சுழன்றுக் கொண்டிருக்கும் காற்றாடியைப் பார்த்தார். அது சுழலும் வேகத்திற்கு எங்கே தன் தலை மேல் விழுந்து விடுமோ என்று பயந்தார். மிஸ்டர் மைல்ஸ் அவரைப் பார்த்து புன்னகைத்தார்.
“சரி, மீண்டும் விசயத்திற்கு வருவோம், மிஸ்டர் மயில்.”
“என்னோட முடிவில் மாற்றம் இல்லை, மிஸ்டர் மைல்ஸ்.” விடாப்பிடியாகவே இருந்தார் திரு மயில்வாகனம்.
“உங்க மகள் பார்வதி நன்கு படிக்கக் கூடிய மாணவி. போட்டி விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கக்கூடியவள்.”
“அதற்கு நான் என்ன செய்வது?” அலட்சியமாக கேட்டார் திரு மயில்வாகனம். முகத்தில் அதே திமிர். வியர்வைத் துளிகள் மேலும் துளிர் விட்டன.
“பார்வதி தொடர்ந்து இங்கு பயில வேண்டும். நீங்களும் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்துக் கொண்டு இப்படி பேசுவது சரி ஆகாது. எனக்கு ஆச்சர்யமாக உள்ளது, மிஸ்டர் மயில்.”
“இப்படி ஆகும்ன்னு தெரிந்திருந்தா, பார்வதியை தொடர்ந்து அரசாங்கப் பள்ளியிலிலேயே படிக்க வைத்திருப்பேன்.”
திரு மயில்வாகனம் அப்படிச் சொன்னது மிஸ்டர் மைல்ஸ்க்கு ஆத்திரம் உண்டாக்கியது. ஆனால் கட்டுப் படுத்திக் கொண்டார். நின்றுக் கொண்டிருந்தவர் திரும்பத் தன் மேசைக்கு வந்து அமர்ந்தார். திரு மயில்வாகனம் சொன்னதற்கு ஏதும் பதில் கூறாமல், மேசை மீது இருந்த தன் அலுவலைப் பார்க்கத் தொடங்கினார். ஆனால் அவர் மனம் அதில் ஒப்புவிக்க முடியவில்லை.
“என் மகள் படிப்பை விட எங்கள் குடும்ப மானம் தான் மிகவும் முக்கியம், மிஸ்டர் மைல்ஸ்.”
மிஸ்டர் மைல்ஸ், திரு மயில்வாகனத்தின் திருவுருவத்தை கூர்ந்துப் பார்த்தார்.
“மிஸ்டர் மயில், நான்தான் இதற்கு முன்பே சொல்லி விட்டேனே, இனிமேல் ஒரு பிரச்சனையும் வராது. அந்தப் பையனுடைய அப்பாவை கூப்பிட்டு பேசிவிட்டேன். அவரும் அந்தப் பையனை கண்டித்து விட்டார். இனிமேல் இந்த மாதிரி பிரச்சனை பார்வதிக்கு வராதென்று அந்தப் பையனும் உறுதி கூறி எனக்கு கடிதம் எழுதி கொடுத்துவிட்டான். உங்கள் மகளும் பார்க்கப் போனால் கடிதம் எழுதி கொடுத்திருக்க வேண்டும். நான்தான் பெண் பிள்ளை என்பதால், வற்புறுத்தவில்லை.”
“அவன் இங்கேயேதான் படிப்பான், என் மகளும் இந்தப் பள்ளியிலேயே தொடர்ந்து படித்தால், அவள் இந்த ஆண்டு சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் பாஸ் ஆன மாதிரிதான்.”
மிஸ்டர் மைல்ஸ் இந்த மெதடிஸ்ட் தனியார் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று இந்த ஆண்டோடு இரண்டு வருடங்களாகின்றன. அவருக்கு வயது 26 வயதுதான் ஆகின்றது. மெல்லிய தேகம். சாதாரண உயரம்தான். ஆனால் தோற்றத்தில் வயதுக்கு முந்திய முதிர்ச்சி.
முந்தைய தலைமையாசிரியர் ஓர் இந்தியர். அவர் சரிவர இந்தப் பள்ளியை நிர்வகிக்கத் தவறியதால், ஆங்கிலம், தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் இதர பாடங்கள் கற்றுக் கொடுக்கும் மிஸ்டர் மைல்ஸ், கோலாலும்புருலிருந்து இங்கு வரவால பட்டார். இத்தனைக்கும் அவர் அமெரிக்காவிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் மலாயா வந்தார். இங்கு பள்ளி அலுவல் பணிகளுக்கு நடுவே அதே பாடங்களை இங்கேயும் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
“எனக்குப் புரிகிறது மிஸ்டர் மயில். இந்தியப் பெண்கள், மேல் படிப்பு படிப்பதே குறைவு. உங்கள் இந்தியர்களின் வருங்கால சந்ததியரை முன்னேற்றம் அடையச் செய்ய, அது உங்களைப் போன்ற பெற்றோர்களின் கடமையாகும்.”
“உங்கள் பள்ளியிலேயே இரண்டு பேரும் காதல் செய்திருக்கிறார்கள். நீங்கள் என்னவென்றால் அவர்கள் வருங்காலத்தைப் பற்றி பேசுகிறீர்கள். ஆச்சர்யமாக இருக்கு, மிஸ்டர் மைல்ஸ்.” பேசிக்கொண்டிருக்கும் போதே திரு மயில்வாகனம் தும்மினார்.
“உட்காருங்க மிஸ்டர் மயில்.”
“பரவாயில்லை.”
“இங்கப் பாருங்க மிஸ்டர் மயில். இந்த வயதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் வருவது இயல்பு. பிறகு அவர்கள் நல்ல வேலையில் சேர்ந்தப் பின் திருமணம் செய்து கொள்ளலாம். நானும் அவர்களை முதலில் படிப்பில்தான் கவனம் செலுத்த சொன்னேன். நல்ல உத்தியோகத்தில் சேர்ந்தப் பின் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றேன். உட்காருங்க மிஸ்டர் மயில்.”
நீண்ட நேரம் கால்கடுக்க நின்றதால், வேறு வழியின்றி திரு மயில்வாகனம் அந்தப் பலகையிலான நாற்காலியில் அமர்ந்தார், ஆனால் மிஸ்டர் மைல்ஸ் மீதுள்ள வெறுப்பு அப்பட்ட்டமாக முகத்தில் தெரிந்தது. மிஸ்டர் மைல்ஸ் அதனை தெளிவாகவே உணர்ந்தார்.
“இங்கப் பாருங்க மிஸ்டர் மைல்ஸ், உங்க கலாச்சாரம் வேற, எங்க கலாச்சாரம் வேற. நீங்க இங்க எங்களை அடிமைப் படுத்த வந்தவர்கள்.”
“நான் அமெரிக்கன், பிரிட்டிஷ் கிடையாது.”
“நீங்க வெள்ளைக்காரன்தானே?”
“என்னுடைய தொழில், பாடம் போதிப்பது. புரிந்துக் கொள்லுங்கள் மிஸ்டர் மயில்.”
“ஆமாம், பாடம் போதிப்பது பிறகு அதனுடன் உங்கள் மதத்தையும் சேர்த்து பரப்புவது. அதுதான் தெரிந்த விசயமாச்சே!”
“இந்தப் பள்ளியின் போதனை முறை தெரிந்துதானே நீங்கள் உங்கள் மகளை இங்கே சேர்த்தீர்கள்? இன்னொன்று, மதத்தை பரப்ப இந்தப் பள்ளி தொடங்கப்படவில்லை. நாங்கள் யாரையும் கட்டாயப் படுத்துவதும் இல்லை.” மிஸ்டர் மைல்ஸின் முகம் சிவந்தது
“மிஸ்டர் மைல்ஸ், நாளையிலிருந்து பார்வதி இந்தப் பள்ளிக்கு வரமாட்டாள். எப்போது இந்த நாடு உங்களிடமிருந்து இந்தியா போன்று சுதந்திரம் அடைகிறதோ, அப்போதுதான் எங்களுக்கு வெளிச்சம்!” திரு மயில்வாகனம் வெடுக்கென்று நாற்காலியை விட்டு எழுந்தார். அந்த தடித்த உடலை வைத்துக் கொண்டு அப்படி எழுந்ததில் நாற்காலி கிரீச்சென்றது.
மிஸடர் மைல்ஸ் 15 மாணவர்களுடன் ஹாஸ்டலில் தங்கி இங்கு இந்த மெதடிஸ்ட் பள்ளியில் பணிபுரிவதால் பல இன மாணவர்களுடன் நண்பர் போன்றே பழகுவார். பள்ளியில் அவர் அதற்கு எதிர்மரைதான். ஆனால், அதற்கென்று அவர் ஹிட்லர் போன்று யாரிடமும் நடந்துக் கொண்டதில்லை.
ஆனால், திரு மயில்வாகனம் மிஸ்டர் மைல்ஸின் பொறுமையை சோதித்தவண்ணமே நடந்துக் கொள்கின்றார். அது போன்றுதான் திரு மயில்வாகனத்திற்கும் பட்டது.
“உட்காருங்க மிஸ்டர் மயில். நாம் இந்தப் பிரச்சனையை சுமூகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். உட்காருங்க மிஸ்டர் மயில்.”
“மிஸ்டர் மைல்ஸ், நான் சொல்றதை நீங்க கேட்கப் போறதில்லை, பிறகு எப்படி சுமூகமாக தீர்க்கிறதாம். சொல்லுங்க.” கிளம்பும் அவசரத்தில் நின்றுக் கொண்டே சொன்னார், திரு மயில்வாகனம்.
“சரி, அவர்களது காதல் விவகாரம் கிடக்கட்டும். நான் இந்த வருடம் அவர்கள் பரீட்சை எழுதும் வரை அவர்கள் இருவரும் நெருங்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். உட்காருங்க மிஸ்டர் மயில். உஙகளுக்கு கால் வலிக்கும்.”
“நான் உங்களை நம்பத் தயாராய் இல்லை!”
“கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள். நான் சார்ல்ஸை இங்கே கூட்டி வருகின்றேன். அவனிடமே நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம்.” மிஸ்டர் மைல்ஸ் இருக்கையை விட்டு எழுந்தார்.
“நான் அவனைப் பார்க்க விரும்பல. அவனும் அவன் மூஞ்சியும். எப்படித்தான் என் மகள் அந்த முகரக்கட்டையை விரும்பு என்று தெரியல!”
சிறிது நேரத்தில் ஒரு பையனைக் தன் அலுவலத்திற்குள் அழைத்து வந்தார் மிஸ்டர் மைல்ஸ். அவந்தான் சார்ல்ஸ், பார்வதியின் காதலன். அவளையே திருமணம் செய்துக் கொண்டால் திரு மயில்வாகனம் அவனுக்கு மாமனார் ஆகி விடுவார்.
மிஸ்டர் மைல்ஸ் அவனை திரு மயில்வாகனம் அமர்ந்திருந்த பக்கத்து நாற்காலியில் அமரச் சொன்னார்.
“வேண்டாம் சார், நான் நிற்கிறேன்.”
சார்ல்ஸ் முகத்தில் பயம் படர்ந்திருந்தது. திரு மயில்வாகனம் அவனை கண்டும் காணாதது போன்று உட்கார்ந்திருந்தார், அவர் முகத்தில் ஏற்கனவே தென்பட்ட வெறுப்பும் கோபமும் பல மடங்கு அதிகமாகியது. முடிந்தால், சார்லஸை அடிக்கும் தொரனையில்தான் அவர் இருந்தார். ஆனால் ஏதோ ஒன்று அவரை கட்டுப் படுத்தியது. அவருக்கே அது ஏன் என்று புரியவில்லை.
“சார்ல்ஸ், நீ ஏதும் மிஸ்டர் மயிலிடம் சொல்ல விரும்புகின்றாயா?”
சார்ல்ஸ் ஏதும் பேசாமல் தரையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“மிஸ்டர் மயில், நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்களா?”
“அதான் ஏற்கனவே சொல்லிட்டேன்ல, திரும்ப திரும்ப நீங்கள் கேட்டாலும் என் பதில் ஒன்னுதான், என் மகள் இனிமேல் இங்க படிக்க மாட்டாள். இவனுக்கும் அவளுக்கும் ஒரு மன்னாங்கட்டியும் நடக்காது!”
“சார்ல்ஸ் படிப்பில் சிறந்த மாணவன். அவனுடய எதிர்காலம் சிறப்பாக அமையும்.”
“I don’t care Mr. Miles. I just don’t care!”
ஒரு வெள்ளைக்காரன் தனக்கு அறிவுரை கூறுவதை முற்றாக வெறுத்தார் திரு மயில்வாகனம். இத்தனை நேரம் அவர் முன் சாந்தமாக இருந்தது அந்த தலைமையாசிரியர் என்ற பதவிக்கு மட்டுமே என்று உறுதியாக இருந்தார்.
“So, sorry Charles. I have done my best on behalf both of you. Mr. Mayil seems won’t change his mind. You may go to your class, now.”
சார்ல்ஸ் தன் வகுப்புக்கு தன் தலையை தொங்கப் போட்டவாரு சென்றான்.
திரு மயில்வாகனமும் நாற்காலியை விட்டு எழுந்தார்.
“நான், புறப்படுகின்றேன், மிஸ்டர் மைல்ஸ். நாளைக்கு பார்வதி வர மாட்டாள்!” அவரின் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து விறுவிறுவென்று கிளம்பினார் திரு மயில்வாகனம். மிஸ்டர் மைல்ஸும் அவரை நிறுத்தவில்லை.
தன்னால் இரு ஜீவன்களை சேர்த்து வைக்க முடியாவிட்டாலும், இந்த சம்பவத்தினால் மிஸ்டர் மைலஸ் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டு விட்டதை எண்ணி சந்தோசப்பட்டார்.
மறுநாள் சார்லசும் பள்ளிக்கு வரவில்லை.
முற்றும்
Comments
Post a Comment