சிறுகதை
எம். பிரபு
குண்டு ரமேஸ் என்னிடம் சொன்ன சங்கதியை கேட்டவுடனயே எனக்கு வயிறு கலக்கியது. அவன் சொன்னது எல்லாம் பொய்யாக இருக்கக் கூடாதா என வேண்டிக் கொண்டேன். ஆம், அப்படித்தான் வேண்டிக் கொண்டேன். நான் நினைக்கவே இல்லை, விளையாட்டாக சொன்ன விசயத்தை நிஜமாகவே செய்து விட்டு வருவான் என்று.
முன்பு இதே போன்று செய்திருக்கின்றான். ஆனால் அப்போது அதை வேறு மாதிரியாக எடுத்துக் கொண்டேன். போக போகத்தான் அவனது சுயரூபம் தெரிய வந்தது.
கடைக்கு எப்போதாவது வருவான், நன்றாக பேசுவான்.
லட்சுமி ஸ்டோர்ஸ், அதுதான் எங்கள் கடையின் பெயர். எங்கள் தாத்தா காலத்தில் இருந்து நடத்தி வந்துக் கொண்டிருக்கும் மளிகைக் கடை. இந்த சிறிய பட்டணத்தில் எங்கள் மளிகைக் கடைதான் இந்த ஊர் மக்களுக்கு எல்லாமே.
தாத்தா இந்தக் கடையை நடத்திக் கொண்டிருந்த காலத்தில் நான் மிகவும் சின்னப் பையன். அவருடன் அவ்வளவாக பழகிய ஞாபகம் இல்லை. அவர் முகம் எப்போதும் சிடு சிடுவென இருக்கும். அதனாலேயே அவருடன் அவ்வளவாக வைத்துக் கொள்ளவதில்லை. ஆக, எனக்கு அவரைப் பிடிக்காது.
நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் தாத்தா இறந்தார். பாட்டியையும் நான் பார்த்ததில்லை. அந்தப் பாட்டியின் பெயர்தான் லட்சுமியாம். அதே பெயரை அப்பா, என் அக்காளுக்கும் வைத்து விட்டார். என்னமோ வேறு பெயரே கிடைக்காத மாதிரி.
என்ன செய்வது, லட்சுமிதானே முக்கியம்.
தாத்தா கடை நடத்திய காலத்திலும், அப்பா கடையை நடத்திய காலத்திலும் கடை ஓஹோ என்று ஓடியது. இந்தியர்களின் ராஜ்ஜியம்தான். எங்கள் கடையை விட்டால் வேறு மளிகைக் கடை இல்லை. இங்கு ‘தீகா லீமா’ கடன் வசதியும் உண்டு.
அப்படியே வேறு வேறு கடைகளுக்குப் போவதென்றால் பெரிய பட்டணத்திற்குத்தான் போக வேண்டும். இங்கிருந்து அங்கு மோட்டார் சைக்கிளில் போய்ச் சேர அறை மணி நேரம் பிடிக்கும். எங்களிடம் இல்லாத பொருட்களை அங்கு வாங்கிக் கொள்வார்கள். அங்குச் சீனன் கடையில் மட்டும் எப்படி எல்லோருக்கும் கைக்காசு கொடுத்து வாங்க முடிந்தது என்று புரியவில்லை.
அப்படியும் என் தகப்பனார், எங்கள் கடையில் இல்லாத பொருட்களை பட்டணத்தில் உள்ள கடையில் வாங்கி இங்கு சற்று கூடுதல் விலைக்கு விற்றுவிடுவார். பெரும்பாலும் ‘ஹார்ட் வேர்’ பொருட்களாகத்தான் இருக்கும்.
அப்பா கடையை நடத்திக் கொண்டிருக்கும் போது, நான் அருகில் உள்ள பெரிய பட்டணத்தில் ஒரு மர தொழிற்சாலையில் ‘சூப்பர்வைசராக’ வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா, அவருக்கு ஒத்தாசையாக இருக்கச் சொன்னார், நான் நிராகரித்தேன். கடை வேலையைப் பார்த்தாலே எனக்குப் பயம். அம்மாவும் அக்காவும் உதவுவார்கள். நான் சமயத்தில் ‘கியாஸ்’ தோம்பு அனுப்ப மட்டும் உதவி செய்வேன். கடையில் ஒரு இந்தோநேசிய மாதுவும் வேலை செய்தாள். அவ்வளவு சுறு சுறுப்பு, அவள் வாயும் ஓயாது.
இதையெல்லாம் நான் அசைப்போட்டுக் கொண்டிருக்கும் போதும் குண்டு ரமேஸ் என்னிடம் சொன்ன விசயமமும் என் மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. ஆம், அதுதானே இப்போது என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது.
“அண்ணே ... அதை கொண்டு வரட்டா?”
“எதை?”
“அதான் ... அது.”
“என்ன சொல்லற?” வேண்டுமென்றேதான் மறந்தது போன்று பாசாங்கு செய்தேன்.
“நீங்க சொன்ன மாதிறியே கொண்டாந்துட்டேன்.”
குண்டு ரமேஸ் அதைச் சொன்ன மறுவிநாடியே என் வயிறு கலக்கம் கண்டது.
“நான் சும்மா ஒரு பேச்சிக்குத்தானே சொன்னேன்.”
“என்னாண்ணே நீங்க. உங்க கஷ்டம் எனக்குத் தெரியாதா? அதான் அப்படி செஞ்சேன். பயப்படாதீஙக, எவனும் பார்க்கல.”
“அதான் ‘சிசிடிவி’லாம் இருக்குமே ... எப்படி?”
“அது அப்படித்தான்னே, தொழில் ரகசியம்.” தன் குண்டு உடம்பை குலுக்கியபடி கண் சிமிட்டினான், ரமேஸ்.
அவன் அப்படி சொல்லச் சொல்ல, ஏதோ ஒரு சம்வம் இன்றைக்கோ அல்லது நாளைக்கோ நடப்பது உறுதி. இப்போதுதான் ஏன் அவனிடம் அப்படிக் கேட்டுக் கொண்டேன் என்று தோன்றியது.
என் அப்பாவின் கடைசி காலத்தில் இந்தப் பட்டணம் மேலும் வளர்ச்சிக் கண்டது. மக்கள் குடியிருப்புக்கள் பெருகின. பல ‘மினிமார்ட்கள்’ ‘சூப்பர் மார்க்கெட்டுகளும்’ உருவாகின.
அப்பா மற்றும் அம்மாவின் வயோதிகம், அக்காவின் திருமணம் அதன் பிறகு என் திருமணம். கடைசியில் இந்த லட்சுமி ஸ்டோர்ஸ் என்னிடம் ஒப்படைக்கப் பட்டது.
என்னிடம் ஒப்படைத்த மறு வருடமே அப்பாவும் தவறினார். இந்தோநேசிய மாதுவும் அவள் ஊருக்கே கிளம்பி விட்டாள். அவள் சென்றபின் எங்கள் கடை வியாபாரமும் குறைய ஆரம்பித்தது. கடைக்கு மேலேயே வீடு என்பதால் மனைவியும் ஒத்தாசையாக கடையில் இருப்பாள். ஒரே பையன். நான்காம் ஆண்டு பயிலும் அவுனும் உதவி செய்வான்.
கடையில் வாடிக்கையாளர்கள் குறைவு என்பதால், வேலையும் அவ்வளவாக இல்லை. பேசாமல் மீண்டும் தொழிற்சாலைக்கே சென்று விடலாம் என்ற எண்ணம் தோன்றியது. இருந்தாலும் தன்மானமும் வீராப்பும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. என்ன சிரமப் பட்டாலும், லட்சுமி ஸ்டோர்ஸை கைவிடப் போவதில்லை. என் மனைவியும் என் பக்கம்தான். அதனாலேயே கடையில் வடை, இட்லி, நாசி லெமாக் போன்ற பசியாறல்களை செய்து விற்பாள்.
“இப்போ அதை இறக்கட்டா?” குண்டு ரமேஸ் மீண்டும் கேட்டான்.
“இப்ப வேண்டாம், கடையில் ஆள் இருக்கு, எங்க ‘மேம்’மும் இருக்காங்க.”
“இருந்தா இருந்துட்டுப் போட்டும் அண்ணே. அவங்களுக்கு என்ன தெரியவாப் போகுது?”
“அதுக்கு இல்ல. உன் பின்னாடியே யாராவது மோப்பம் பிடிச்சு வந்திருந்தா?”
“ஏன், இப்படி பயப்படுறீங்கண்ணே? முந்திக் கூடத்தான் ‘நெஸ்காப்பே’ ‘பேக்கெட்’ கொண்டாந்தேன், அப்போ எடுத்துக்கிட்டீங்க.”
“அப்போ நீ எங்கேயோ மலிவா, வாங்கி வந்தேன்னு நினைச்சேன். அதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சிது. இப்போ இது எவ்வளவு சொன்னே?”
“பத்து ‘கார்ட்டன்’ இருக்கு. ஏழு கார்ட்டன் உங்களுக்கு. மூனு எங்க ரெண்டுப் பேத்துக்கு குடிக்கிறதுக்கு.”
“இப்ப வேண்டாம்.”
“இப்ப வேண்டாம்னாக்க, நான் இதை சீனன் கடைக்கு கொடுத்திடுவேன். நீங்க நம்ம தமிழாளாச்சேன்னு, மலிவா கொடுக்கிறேன்.”
குண்டன் அப்படி சொல்லச் சொல்ல, அவன் மீது எனக்கு எரிச்சல் அதிகமாகிக் கொண்டே போனது.
“என்ன இருந்தாலும் இது காசு கொடுத்து வாங்காத பொருள்தானே.” சற்று கடுப்பாக பேசினேன்.
“நல்ல முறையா பேசுங்கண்ணே. எங்க வேலை எவ்வளவு ‘ரிஸ்க்’ தெரியுமா?”
“உன் கூட்டாளி எங்கே?” அவனது பேச்சை திசைத் திருப்பினேன்.
“அவன் காடிலதான் இருக்கான்.”
“இப்போ வேண்டாம். ராத்திரி கடை மூடற சமயத்தில வா. இப்போ என்கிட்ட அவ்வளவு பணமும் இல்லை.”
“என்னண்ணே நீங்க...” என்று கடுப்பாக சொல்லி புறப்பட்டு விட்டான். நாங்கள் குசு குசுவென பேசிக் கொண்டதை கடை முன் இருந்த என் மனைவிக்கு விளங்காமல் இருந்தால், சரி.
ஒரு பெட்டி வெள்ளை பீர், வெளியே RM150 வெள்ளிக்கு மேல் போகுது. கருப்பு பீர் RM180 வெள்ளிக்கு மேல் போகும். குண்டன் எனக்கு எவ்வளவுக்கு கொடுப்பான் என்று சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. என்ன இருந்தாலும் பீர் டின்களை ஐஸ் பெட்டியில் போட்டு விற்றால் கொள்ளை லாபம்தான். ஏஜண்டிடம் வாங்கினால், குண்டு ரமேஸ் எனக்கு கொடுக்கப் போகும் விலைக்கு கிடைக்காது.
அவனிடம் வாங்குவதா வேண்டாமா என்ற சிந்தனை என்னுள் புகுந்து சித்தரவதை செய்தது. ஆனால் எதோ ஒன்று அதை ஏற்றுக் கொள்ளாதே என்றுதான் சொன்னது. என் மனைவிக்குத் தெரிந்ததென்றால், அவள் அப்பா அம்மாவிடம் போட்டுக் கொடுத்துவிடுவாள். பிறகு என்னிடமும் பேச மாட்டாள். குண்டு ரமேஸ் கடைக்கு வந்தாலே அவள் உம்மென்றுதான் இருப்பாள்.
இப்போது கடையின் வியாபாரம் இருக்கும் நிலமைக்கு மலிவாகக் கிடைக்கும் பொருட்களைத்தான் விற்க முடியும். தாத்தா காலத்து ‘தீகா லீமா’ கடன் வழக்கமும் இப்போது நிறுத்தியாகி விட்டது.
மற்ற ‘மினிமார்கேட்டுகள்’ போன்று கடையை வடிவமைக்கவும் கையிருப்பு அப்படி ஒன்றும் இல்லை. கடை சுத்தமாகத்தான் இருந்து என்ன செய்ய, புது வடிமாக இருந்தால்தான் வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
அதைத் தவிர்த்து அவர்களை ஈர்க்க, விலை குறைப்பும் செய்ய இயலாது. நல்ல வேளை, இது எங்கள் சொந்தக் கடை.
இதனால்தான் குண்டு ரமேஸ் போன்ற ‘ஜாம்பவான்’களின் உதவி தேவைப் படுகின்றது. அவனும் உதவி செய்ய முனைந்துள்ளான்.
கடையை மூட எப்படியாது இரவு பத்தாகி விடும். கடை ஷட்டரை இழுக்கும் சமையத்தில்தான் குண்டன் மீண்டும் வந்தான். நான் அவனை உள்ளே வரவிடாமல், அவனது ‘மைவீ’ கார் அருகே சென்றேன்.
“என்னான்ணே, ஏழு பெட்டியயையும் எடுத்துக்குறீங்களா?” கார் கதவை திறந்தவாரே கேட்டான்.
அவனது நண்பன், ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தாவாரு, என்னை பார்த்து தலையை மட்டும் ஆட்டினான். அவன் எப்போதுமே கடைக்குள் வந்ததில்லை. குண்டு ரமேஸ் மட்டுமே மாதத்திற்கு இருமுறை சிகரேட் அல்லது பீர் வாங்க வருவான். அதனால் குண்டனின் நண்பனிடம் அவ்வளவு பழக்கமில்லை.
“ஏழு ‘கார்ட்டன்’ வேண்டாம். கருப்பும், வெள்ளையும் இருக்கா?” மெதுவாகவே அவனிடம் பேசினேன்.
“சீக்கிரம்!” காரில் இருந்தவன் சத்தம் போட்டான்.
“ரெண்டும் இருக்கு. என்னாண்ணே இப்படி சொல்லிட்டீங்க?”
“ரெண்டு கருப்பு, ரெண்டு வெள்ளை போதும்.” என்றேன். அவ்வப்போது கடையின் மேல்த்தலத்தையும் பார்த்துக் கொண்டேன்.
“ஏன்ணே?”
“இது போதும். ஒரு பெட்டி எவ்வளவுக்கு விற்கிறே?”
“நூறு வெள்ளிணே.”
“இன்னும் குறைக்க முடியாதா, குண்டா?”
“என்னாண்ணே நீங்க. இது எவ்வளவு ‘ரிஸ்க்கான’ வேலை தெரியுமா?”
எனக்குத் தெரியும் அவன் அந்த விலைதான் சொல்லுவான் என்று. அதனாலேயே காற்சட்டை ‘பாக்கெட்டில்’ சரியாக நானூறு வெள்ளி வைத்திருந்தேன். எதற்கும் சும்மா கேட்டு வைப்போம் என்றுதான் அப்படிக் கேட்டேன். பணத்தை எடுத்து அவனிடம் நீட்டினேன். குண்டன் அதனை தன் டீ சட்டை பாக்கெட்டில் எண்ணிய பிறகு தினித்தான்.
“அண்ணே, நீங்க இனிமே பீரோட சேர்த்து ‘ஹார்ட் லிக்கர்’ விற்க பாருங்க. அதுவும் நாங்க சப்பளைப் பண்ணப் பார்க்கிறோம். அப்பத்தான் நீங்க காசு பார்க்க முடியும்.”
“சீக்கிரம்!” மீண்டும் அவசரப் படுத்தினான் காரில் இருந்தவன்.
‘மைவீ’ டிக்கியிலிருந்து நான்கு ‘கார்ட்டன்’ பீர் ‘டின்’களை எடுத்துக் கடையின் உள்ளே கொண்டு போக இருந்தான், குண்டன்.
“இங்கேயே வை,” என்றேன்.
கடை வாசலில் ‘பீர்’ ‘கார்ட்டன்’களை வைத்து விட்டு அவர்கள் இருவரும் கிளம்பினர். நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். என் வரிசை கடைகள் எல்லாம் மூடிக் கிடந்தன. அது சற்று இருட்டான பகுதியானதால். யாரும் எங்களைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
நான்கு ‘கார்ட்டன்’களையும் எப்படி ஒரேடியாக கடையினுள் தூக்கிச் சென்றேன் என்று எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. நெஞ்சு படபடத்தது. ‘பீரை’ தூக்கியதாலா அல்லது குண்டு ரமேஸ் எனக்கு செய்த ‘உதவி’யினாலா என்று தெரியவில்லை.
‘ஷட்டரை’ இழுத்து மூடிவிட்டு, விறுவிறுவென்று ‘பீர்’ ‘கார்ட்டன்’களை திறந்து அவசரமாக ‘ஐஸ்’ பெட்டியினுள் அடுக்கினேன். விலை ஏதும் அடிக்கவில்லை. என் மனைவி பார்த்து விட்டால் பிரச்சனைதான்.
ஆனால் பார்த்துவிட்டாள்.
“இப்படித்தான் நாம பணம் சம்பாதிக்கனுமா?”
நான் ‘பீர்’ ‘டின்’களை அடுக்கிக் கொண்டே இருந்தேன். எல்லாத்தையும் பார்த்து விட்டாளோ? நான் எதுவும் பேசவில்லை.
“நான் உங்ககிட்டதான் பேசறேன்!”
அவளைத் திரும்பிப் பார்த்தேன். மனம் படபடத்தது. எனக்கு தெரியும் நான் செய்தது குற்றம் என்று. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது. கெத்து குறைந்துவிடுமே.
“இப்போ என்னா பிரச்சனை? நான் ஒன்னும் தப்பு செய்யலியே. மலிவா கிடைச்சா, யாருதான் வாங்க மாட்டா?” நானும் கொஞ்சம் உரக்கவே பேசினேன்.
“நம்ம கடை இருக்கும் நிலமைக்கு, இப்படித்தான் செஞ்சாகனும். அப்பத்தான் லாபத்த பார்க்க முடியும்.” நானே தொடர்ந்தேன்.
இப்படி என் மனைவியிடம் சொல்லும் போதுதான், எனக்கே குண்டனை மேலும் உபயோகித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. மலிவாக கிடைக்கும் பொருட்களை, சற்று மலிவான விலையிலேயே விற்கலாம். அதன் பிறகு வாடிக்கையாளர்கள் வருகை அதிகமாகும்.
“உங்களுக்கெல்லாம் நல்லது சொன்னா புரியாது. பட்டால்தான் தெரியும். சீக்கிரம் குளிச்சிட்டு, மேல சாப்பிட வாங்க.” அந்தக் கடுப்பிலும் அன்புமழை பொழிந்தாள் என் மனைவி.
மறுநாள், ‘ஐஸ்பெட்டி’யில் நேற்று அடுக்கிய பிர்களுக்கு விலை அடித்தேன், எப்போதும் போடும் விலையை விட 30 காசு குறைத்தே போட்டேன்.
அன்று சாயங்காலமும் இரவும் நிறைய வாடிக்கையாளர்கள் வாங்கினர். மறுநாள் நான்கு கார்ட்டனும் விற்றுத் தீர்ந்தன.
சே! அப்போதே குண்டனிடமிருந்து எல்லா ‘கார்ட்டன்களையும்’ வாங்கியிருக்கலாம். இனி அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம்தான் வருவான்.
ஒரு மாதம், இரண்டு மாதம் பிறகு மூன்று மாதம் ஆனது. ஆனால், குண்டு ரமேஸின் மூக்கைக் கூட பார்க்க முடியவில்லை. கூப்பிட்டாலும் அவன் கைபேசி 'திடாக் டாப்பாட் டிஹுபுங்கி' என்றது.
“என்னா, உங்க கூட்டாளி ஆளையே காணாம்,” என்று விடைத்தாள் என் மனைவி.
ஆமா, குண்டனுக்கு என்ன ஆகியிருக்கும்? ‘ஹார்ட் லிக்கர்’ விற்கும் சிந்தனையோடு வேறு இருந்தேனே!
முற்றும்
(தமிழ் மலர், 15/9/2024)

Comments
Post a Comment