சிறுகதை
எம். பிரபு
எனக்கு பயமா இருக்கு. எனக்கு இங்கிருந்து போறதே பிடிக்கல. அப்பா ஏன் எங்களை பிரிக்கனும்? இந்த ரெண்டு வருசம் எவ்வளவு சந்தோசமா இருந்தேன். அம்மாவாவது அப்பாக்கிட்ட எடுத்துச் சொல்லியிருக்கலாம். அம்மா அன்னிக்கி ஒன்னும் சொல்லலே. பேசாமல்தான் இருந்தாங்க. ஏன்னு தெரியிலே. அம்மா ஏதாவது அப்பாவிடம் சொல்லியிருக்கலாம்.
நேற்றிலிருந்து தமிழ்ச்செல்வியின் மனதில் அமைதியில்லை. அதை தன் பாலர் வகுப்பு தோழியான கவிநயாவிடம் விவரித்த போது ...
“நிஜமாவா சொல்ற, தமிழ்?” கவிநயா தன் பெரிய கண்களை விரித்துக் கொண்டுக் கேட்டாள்.
கவிநயாவிற்கு ஒன்றும் சரியாகப் புரியவில்லை. ஏன் தமிழின் அப்பா அப்படிச் சொல்ல வேண்டும்?
மேசை மீதிருந்த நாசி லெமாக் தட்டை கரண்டியால் கிளறிக் கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி. அவளால் தொடர்ந்து சாப்பிட முடியவில்லை. தொண்டை அடைப்பது போன்று இருந்தது.
“ஏன், உன் அப்பா அப்படி சொன்னாரு?” கவிநயா நாசி லெமாக்கை சுவைத்து மென்றுக் கொண்டே கேட்டாள். அவ்வப்போது. கோத்தாவில் உள்ள மைலோவையும் உரிஞ்சினாள். அவளுக்கு சரியான பசி. பாட நேரங்களை விட, இந்த ஓய்வு நேரத்தின் மீதுதான் அலாதி பிரியம்.
“அதான் தெரியில. எனக்கு பயமா இருக்கு, கவி.”
“அப்படி நீ அடுத்த வருசம் வேற ஸ்கூல் மாத்தி போனா, நானும் உங்கூட வந்திறட்டா?” கவிநயா மிகவும் ஆர்வத்துடன் கேட்டாள்.
“ஹை, நல்லாருக்குமே! ஆனா உன் அப்பாவும் அம்மாவும் விடுவாங்களா?” தமிழ்ச்செல்வி சந்தேகத்துடன் கவிநயாவைப் பார்த்துக் கேட்டாள்.
“அது எனக்கு தெரியிலியே! என் அப்பாக்கிட்ட கேட்டுப் பார்க்கிறேன்.”
“நீ மட்டும் என் கூட வந்தா, எப்படி? மத்த கூட்டாளிங்கல்லாம்?” தமிழ்ச்செல்விக்கு மேலும் கவலையாகியது.
“நானும் மத்த கூட்டாளிங்களும் உன் கூடவே, நீ போற ஸ்கூலுக்கே மாத்தி வந்திடுறோம்!” கவிநயா சந்தோசத்துடன் உரக்க பேசினாள்.
கவிநயாவின் உற்சாக பதில் இதம் அளித்தாலும், அது சாத்தியமா என்ற சந்தேகம் தமிழ்ச்செல்வியின் மனதில் எழாமல் இல்லை.
அந்தக் கேண்டீனில் எல்லா மாணவர்களும் அவரவர் உணவுப் பதார்த்தங்களை சுவைத்து உண்டனர். ஆனால் தமிழ்ச்செல்விக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்சனை அவர்களை பீடித்திருக்கவில்லை.
“நான் இன்னிக்கி என் அப்பாக்கிட்ட கேட்டுப் பார்க்குறேன்.” ஏதோ அசட்டுத் தைரியம் தமிழ்ச்செல்வியின் மனதில் எழுந்தது. கவிநயாவும் அதற்கு தலையை ஆட்டினாள்.
அன்று பள்ளியில் தமிழ்ச்செல்வி முழு மனதோடு தன்னை ஈடுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. அடுத்த வருடம் இந்தப் பள்ளியிலேயே முதலாம் வகுப்பில் பயிலாவிட்டால், தன் நிலமை என்னவாகும் என்ற கலக்கமே அவளை ஆட்கொண்டிருந்தது. இன்று, நாள் முழுவதும் கவிநயா அவளை சீண்டினாலும், தமிழ்ச்செல்விக்கு சிரிப்பு வரவில்லை.
பள்ளி நேரம் முடிந்ததும் தமிழ்ச்செல்வியின் அம்மா தன் AXIA காரில் அவளை ஏற்றிக் கொண்டார். முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு தன் அம்மாவின் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.
“என்ன தமிழ், இன்னிக்கி யாரு கிட்ட வம்பிழுத்தே? சத்தமே காணாம்?” தன் மகளையும், சாலையையும் மாற்றி மாற்றிப் பார்த்தவாரே காரை செலுத்தினார்.
“அம்மா ... அம்மா...” என்று இழுத்தாள் தமிழ்ச்செல்வி.
“என்னடி, அம்மா அம்மாண்ட்டு இழுக்கிறே?”
“அப்போ எப்படி கூப்பிடறதாம்?”
“சொல்ல வேண்டிய விசயத்தை சட்டுப்புட்டுன்னு, சொல்ல வேண்டியதுதானே.”
“நேத்து அப்பா சொன்னது ...”
“உங்கப்பாதான் தினமும் பேசிக்கிட்டேதானே இருக்கார். அவர் பேசாத இருந்தாத்தான் ஆச்சர்யம்.”
“அதான் நான் அடுத்த வருசம் ஒன்றாம் வகுப்புக்கு வேற ஸ்கூல்ல போடப் போறதா சொன்னாறே.”
“ஏன், உனக்கு பிடிக்கிலயா?”
“எனக்கு புடிக்கில. கவிநயாவ விட்டுட்டு எப்படி நான் வேற ஸ்கூல் போறது?” தமிழ்ச் செல்வியின் முகத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்குப் போகும் அறவே உற்சாகம் இல்லை.
“அதை ஏன் நேத்து அப்பாக்கிட்ட சொல்லலே?”
“அப்பாதான் ஏசுவாரே.”
“ஹம்ம். உங்கப்பா எதை செய்தாலும் அது உன் நன்மைக்குத்தான் செய்வார். எனக்கும், நீ வேற பள்ளிக்கூடம் போறது பிடிக்கலதான்.”
“இன்னிக்கி அப்பா வேல முடிஞ்சி வந்ததும் நான் கேட்கப் போறேன்.”
“உங்கப்பாக்கு கோபம் வரும் அளவுக்கு பேசாதே, தெரியுமா.”
“சரிம்மா.”
வீடு வந்ததும் குளித்து சாப்பிட்டு விட்டு சோபாவிலேயே கையில் புத்தகத்தோடு தமிழ்ச்செல்வி உறங்கி விட்டாள். ஆசிரியை கொடுத்த வீட்டுப் பாடங்கள் எதுவும் அவள் செய்யவில்லை. அவள் அம்மாவும் அதைப் பற்றி கேட்கவில்லை.
சாயங்காலம் குளித்து விட்டு மீண்டும் சோபாவில் அமர்ந்து விட்டாள்.
மாலை ஆறு மணிக்குத்தான் அவள் அப்பா வந்தார், தமிழ்ச்செல்வி சோபாவில் சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு இருப்பதைப் பார்த்தார்.
“என்னமா ஒரே சோகமா இருக்கே?”
அவள் அப்பா சட்டையை கழற்றி, சாப்பிட உட்காரும் நாற்காலி மீது வைத்தார், பின், மூன்றில் ஓடிக்கொண்டிருந்த காற்றாடியை ஐந்தில் வைத்து விட்டு தமிழ்ச்செல்வி அருகில் அமர்ந்தார்.
“உங்க மகள், நேத்து அவள் கிட்ட நீங்க சொன்ன விசயத்தை பத்தி பேசனுமாம்.” அவர்கள் இருவர் அமர்ந்திருக்கும் முன் சோபாவில் துணிகளை மடித்தபடி தமிழ்ச்செல்வியின் அம்மா சொன்னார்.
“என்னம்மா பேசனும்?”
“நான் அடுத்த வருசம் சீன ஸ்கூலுக்கு மாத்தி போக மாட்டேன்.” தமிழ்ச்செல்வி அவள் அப்பாவின் முகத்தை நேரே பார்க்காமல் கைளைக் கட்டிக் கொண்டு தரையை பார்த்துக் கொண்டே பேசினாள்.
“நான் உன் நல்லதுக்குதான்மா சொன்னேன்.”
“என்ன நல்லதுக்குன்னு விளங்ற மாதிறி சொன்னாத்தானே அவளுக்கு புரியும். எனக்கும் இதில் உடன்பாடு இல்லை.” தமிழ்ச்செல்வியின் அம்மா இப்படிச் சொன்னதும் அவளுக்கு தெம்பு வந்தது போன்றிருந்தது.
“நான் என் கூட்டாளி கவிநயாகூட இப்ப தடிக்கா படிக்கிற ஸ்க்கூல்லேயே படிக்கப் போறேன். சீன ஸ்கூல்லு வேண்டா. எனக்கு பயமா இருக்கு,” தமிழ்ச்செல்வி கைகளைக் கட்டிக் கொண்டு தரையைப் பார்த்துக் கொண்டே சினுங்கினாள்.
“தமிழ், அழுவாதே. இங்க அப்பாவ பாரு.” அவள் அப்பா அவளது தோளை அன்பாகத் தட்டினார்.
தமிழ்ச்செல்வி அப்போதும் அவரை நேரே பார்க்கவில்லை.
“இங்க பாருமா தமிழ். அப்பா உன்னை வேணுமுன்னே சீனப் பள்ளிக்கு மாத்தல. நீ அங்கப் போனா இன்னும் கெட்டிக்காரியா படிக்கலாம். நீயும் கெட்டிக்காரியாகிடுவ.”
“அப்பா, என்னால் தமிழ் ஸ்கூள்லேயும் கெட்டிக்காரியா படிக்க முடியும். நான் எப்படி சீன ஸ்க்கூல படிக்கிறது? எனக்குத்தான் சீன மொழி தெரியாதே.” மேலும் சினுங்கினாள்.
“இங்க இந்தத் தமிழ் பள்ளியில் நீ எப்படி தமிழும், மலாயும், ஆங்கிலமும் கத்துக்கிட்டேயோ, அதே போலத்தான் அங்கப் போய் நீ சீன மொழியை கத்துக்கலாம்.” அவள் அப்பா அவளை வாஞ்சையோடு அணைத்துக் கொண்டார்.
“அப்புறம் கவிநயாவ நான் பார்க்க முடியாதே. கவிநயாவும் அந்த சீன ஸ்கூலுக்கு வந்தாத்தான் நானும் வருவேன்.” தமிழ்செல்வி பிடிகொடுக்காமல் பேசினாள்.
“அது எப்படிமா முடியும்? கவிநயாவைத்தான் வாரா வாரம் ஞாயித்துக்கிழமை சமய வகுப்பில் சந்திச்சிக்கலாமே!”
“எனக்கு தினமும் அவளைப் பார்க்கனும் ... ப்பா,” அவளின் சினுங்கல் மேலும் அதிகமாகின.
“நீ, சீன பள்ளிக்கூடம் போனா, உன் வருங்காலம் சிறப்பா இருக்கும், தமிழ். வர்த்தக துறையில் அப்புறம் வேலை வாய்ப்பெல்லாம் உனக்கு சுலபமா கிடைக்கும்.” அவளின் அப்பாவும் பிடிவாதமாக இருந்தார்.
“எனக்கு அது பத்தியெல்லாம் தெரியாதுப்பா. நான் தமிழ் ஸ்கூலேயே படிக்கனும். அங்கதான் எனக்கு பிடிச்ச கூட்டாளிங்களும், டீச்சர்லாம் இருக்காங்க. எனக்கு சீன ஸ்கூல் வேணாம்!!!” தமிழ்ச்செல்வி கத்தி அழ ஆரம்பித்தாள். அவள் தன் அப்பாவிடமிருந்து விடுவித்து தள்ளிச் சென்று உட்கார்ந்தாள்.
“என்னங்க நீங்க, அவள் இப்படி அடம் பிடிக்கிறா, இன்னும் சீன பள்ளிக்கூடத்தப் பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க. நம்ம தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்கு என்ன குறைச்சல். ரெண்டு வருசம் பாலர் பள்ளில படிச்சவ, அங்கேயே முதலாம் வகுப்பும் தொடரட்டுமே. பள்ளிக்கூடமும் பக்கத்தில் இருக்கு. தமிழ்ச் செல்வின்னு பேரு வச்சிட்டு, இவளை சீனப் பள்ளிக்கூடத்ததுக்கு அனுப்பப் போறீங்களா?”
தமிழ்ச்செல்வியின் அம்மா அவ்வாறு சொன்னதும், அவள் அம்மா பக்கம் திரும்பிப் பார்த்தாள். அழுகை சற்று குறைந்திருந்தது.
“நீ என்ன பேசற? நிலமை தெரிஞ்சிதான் பேசறியா?!”
தமிழ்ச்செல்வியின் அப்பா சற்று பொறுமை இழந்தவராக அவர் மனைவியைப் பார்த்து கத்தினார்.
“நீங்களும் நானும் தமிழ்ப் பள்ளியில்தானே படிச்சோம். நீங்களும் இப்ப நல்ல வேலையில் தானே இருக்கீங்க? அப்புறம் ஏன் நம்ம பிள்ளையை வேற பள்ளிக்கு மாத்தறதுக்கு இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க?” தமிழ்ச் செல்வியின் அம்மா தன் பக்கம் நியாயமாக பேசுவதால், சற்று சந்தோசம் அடைந்த அவள் ஓடிச் சென்று அவர் பக்கத்தில் அமர்ந்தாள்.
“என்னமா, நான் உன் கிட்டதான பேசிக்கிட்டு இருக்கேன், உங்கம்மா பக்கதுல போய் உட்கார்ந்த்திட்டே?” கடுப்பானார் அப்பா.
“நம்ம தமிழ் பள்ளிக்கு என்ன குறைச்சல்? கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கறாங்க. வெளிநாடுகளுக்கு நம் மாணவர்கள் சென்று பரிசு வாங்கின விசயம் எல்லாம் பத்திரிகைல வந்த செய்தியெல்லாம் மறந்துடீங்களா?”
“அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு. இருந்தாலும் தமிழ்ச்செல்வி சீன மொழி படிச்சிக்கிட்டா, அவளுக்குத்தானே நன்மை.” தமிழ்ச்செல்வியின் அப்பா சற்று காட்டமாக பேசி பிறகு சுதாகரித்துக் கொண்டார்.
“அவதான் இப்படி கெஞ்சறாள. இத்தனைக்கும் அந்த சீன பள்ளிக்கூடம் இங்கிருந்து எவ்வளவு தொளவு இருக்கு. இப்பவே நம்ம நாட்டுல தமிழ்ப் பள்ளி குறைஞ்சிக்கிட்டே வருது, போகப் போக அதுவும் இல்லாம போயிடும் போல.”
தமிழ்ச்செல்வி அவள் அம்மாவின் முகத்தையே அன்னாந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“பிள்ளைகளை எந்தப் பள்ளிக்கு அனுப்பனும்னு பெற்றோருக்கு உரிமை இருக்கு. நம்மை யாரும் கட்டாயப் படுத்தக் கூடாது,” தமிழ்ச்செல்வியின் அப்பா அங்கும் இங்கும் நடந்துக் கொண்டே பேசினார்.
“நானும் பெற்றோர் தானே, எனக்கும் என் பிள்ளையை எந்தப் பள்ளியில் சேர்க்கனும்னு உரிமை இருக்குத்தானே? தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள் குறையறதுக்கு காரணமே நம்மலப் போல உள்ள பெற்றோர்தான்.” அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை. நேற்றே இதைப் பற்றி சொல்லியிருக்கலாம் போல என அவருக்கு தோன்றியது.
அவர்கள் இருவரின் தகராற்றில், இனி என்னவாகும் என பயந்து போனாள் தமிழ்ச்செல்வி. தமிழ்ப் பள்ளியில் படிப்பது அவ்வளவு பெரிய ஆபத்தா என்று யோசித்தாள்.
“அதுதான் அவளை உன் விருப்பம் போல ரெண்டு வருசம் தமிழ்ப்பள்ளியில பாலர் வகுப்புக்கு அனுப்பியாச்சே, அது போதும்.”
“நீங்க இப்ப அவளை சீன பள்ளியில் சேர்த்தா, கற்றல் கற்பித்தல் எல்லாம் அவளுக்கு சிரமமாகி விடும்.”
“நேத்து நான் இதைப் பத்தி பேசினப்போ பேசாம இருந்ததிட்டு, இப்ப வந்து குதிக்கிற?”
அவளின் அப்பா அப்படி சொன்னதும் அவள் அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அதன் பின் தமிழ்ச்செல்வியை நோக்கி,
“நான் சொல்வதை கவனமாக கேளு. தமிழப் பள்ளிக்கு உன்னை அனுப்புவது வெறும் நண்பர்கள் கூட்டத்தை உருவாக்கி சந்தோசமாக இருப்பது மட்டும் இல்லை. தமிழ்ப் பள்ளியில் படிப்பதை நாம் பெருமையா நினைக்க வேண்டும். நாம்தான் நம் தாய் மொழி தமிழைப் பேனிக் காக்க வேண்டும். சரிதானே தமிழ்?” தமிழ்செலிவியின் அம்மா அவளை அணைத்துக் கொண்டார்.
“ஆமாம் மா, ரொம்ப சரி!”
“என்னா ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்திட்டீங்க?” அவள் அப்பாவிற்கு தன் ஆசை நிறைவேறாமல் போய் விடுமமோ என்றாகிவிட்டது.
“என்னங்க சொல்றீங்க? தமிழ்ப் பள்ளியா இல்ல மத்தப் பள்ளியா?”
இப்படித் தன் மனைவி கேட்டதும் அவர் சற்று ஆடித்தான் போனார்.
முற்றும்
வானம்பாடி (1.9.2024)
Comments
Post a Comment