சிறுகதை எம்.பிரபு இதுவும் ஒரு சாதாரணக் கதைதான் . உலகத்தில் எல்லா பாகங்களிலும் நடந்த கதைதான். காலம் காலமாக நடந்த, நடந்துக் கொண்டிருக்கும், இனி நடக்கப் போகும் கதை. புதுமை ஏதும் இல்லாத கதை. கதையில் முடிவும் இல்லாத கதை. ஆனால், இதுவும் ஒரு கதைதான். *** “உங்களுக்கு ஒன்றும் புரியாது , சார்! இது எங்கள் பிரச்சனை!” திரு மயில்வாகனம் தன் இரு கைகளையும் கட்டிக் கொண்டு , இருக்கையில் உட்காராமல், மிஸ்டர் மைல்ஸ் முன் நின்றுக் கொண்டிருந்தார். தலைக்கு மேல் காற்றாடி சுழன்றுக் கொண்டிருந்தாலும் அவரது பருத்த உடலை அது ஒன்றும் சீண்டவில்லை. படி ஏறி வந்ததில் மூச்சு வேறு வாங்கியது. “உட்காருங்க மிஸ்டர் மயில் , ” மிஸ்டர் மைல்ஸ் எவ்வளவு வற்புறுத்தியும் , திரு மயில்வாகனம் நாற்காலியில் அமரவே இல்லை . பத்து நிமிடங்களாக நின்றுக் கொண்டுதான் இருந்தார். அவரது சட்டையும் உடலும் , வியர்வையால் நனைந்திருந்தன. வியர்த்திருந்த நெற்றியை கைக்குட்டையால் அடிக்கடி துடைத்துக் கொண்டார். “பரவாயில்லை , உட்காருங்க. உட்காருங்க மிஸ்டர் ம...