சிறுகதை

எம். பிரபு
‘அன்புள்ள பரீடாவிற்கு, வாப்பா எழுதிக்கொள்வது. இங்கு நான் நலம். அங்கு எல்லோரும் நலம் பெற தினமும் துவா செய்கின்றேன்.
கடையில் வியாபாரம் எப்போதும் போலத்தான் உள்ளது. பெரிய மாற்றம் ஏதும் இல்லை. நான் அங்கு வர இன்னும் மூன்று மாத காலம் பிடிக்கலாம்.
உன் அண்ணன் என்ன செய்கிறான்? நான் அனுப்பும் பணத்தைக் கொண்டு ‘மெஸ்’ ஒன்றை ஆரம்பிக்க போவதாக சொன்னான். இன்னமும் அதைப் பற்றி மூச்சு பேச்சே காணாம். முடிந்தால் அவனிடம் சொல்லி எனக்கு கடிதம் எழுதச் சொல்லவும். ஒரு தொழிலை ஆரம்பித்துப் பார்த்தால்தான் அதன் அருமை பெருமை தெரியும். சும்மா வெருமனே நான் கொடுக்கும் காசில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் உருப்பட முடியாது. நான் அனுப்பும் பணத்தை அவனிடம் கொடுக்கும் போது கணக்கு வழக்கை சரியாக வைத்துக்கொள். இங்கு வந்துப் பார்த்தால்தான் என் அவதி அவனுக்குப் புரியும். உங்க உம்மாவுக்கும் புரியும். உன் உம்மாவுக்கும் சென்ற வாரம் இதைப் பற்றி எழுதியுள்ளேன்.
உன் படிப்பெல்லாம் எப்படி உள்ளது? நீ மேற்படிப்பை தொடர்வதற்கு என்னால் முயன்ற அளவு செய்து கொடுப்பேன். நீ எதைப் பற்றியும் கவலைப் படாதே. பஷிருக்குத்தான் படிப்பு ஏறவில்லை. நீ தான் அதை ஈடுக்கட்ட வேண்டும். உன் உம்மா மாதிரி ஊர் கதை பேச வீடு வீடாக போய் விடாதே. நீ அப்படி செய்ய மாட்டாய் என்று தெரியும். இருந்தாலும் சொல்லி வைக்கின்றேன்.’
அதற்கு மேல் வாத்தியார் தொடரவில்லை. வாயில் வெற்றிலையை தினித்து குதப்பிக் கொண்டிருந்தார். நான் என் கைகளை தலைக்குப் பின்னால் கட்டினேன்.
“புறங்கை கட்டாதே ...பா,” என்றார். எதற்கு அப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. வீட்டிலும் நான் அப்படி செய்தால், அம்மா ஏசுவார். காரணம் கேட்டால் சொல்ல மாட்டார்.
‘கிலொமெட்ரிகோ பென்னில்’ மை விட்டு விட்டு வந்ததில் கடிதத்தில் எழுதிய எழுத்துக்களும் சரியாக பதிந்தும் பதியாமலும் இருந்தன. வாத்தியாரின் மகளுக்கு என் எழுத்துக்களை படிக்க முடிந்தால் சரி. படிக்க முடியாவிட்டாலும் பாதகமில்லை.
“இன்னும் என்ன எழுதனும்?”
நான் முதலாளியை ஒரு தடவை கூட வாத்தியார் என்று அழைத்ததில்லை. கடைக்கு வருபவர் போவோர் எல்லாம் ‘வாத்தியாரே!’ என்று அழைப்பார்கள். வாத்தியாருக்கு ‘வாத்தியார்’ என்ற பட்டம் எப்படி வந்ததென்று தெரியவில்லை. அது என்னமோ ஒரு விசயத்தை சொல்வதென்றால் பிறரின் பெயரையொ அல்லது முறையைச் சொல்லி அழைக்கும் பழக்கம் என்னிடம் என்றும் இருந்ததில்லை. என் அப்பாவையும் அம்மாவையுமே அப்படிக் கூப்பிட்டதும் இல்லை. அப்படியே அப்படி கூப்பிட்டு இருந்தாலும், கணக்கிடலாம். அது ஏன் என்றும் புரியவில்லை. சொல்ல வேண்டிய விசயத்தை நேரே சொல்லிவிடுவேன். தூரத்தில் இருந்தாலும் பெயர் சொல்லி அழைக்காமலேயே விசயத்தை சொல்லி விடுவேன்.
“எழுதறதுக்கு இன்னும் இடம் இருக்குள்ள ... பா?”
வாத்தியார் வாயை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு வெற்றிலையை குதப்பிக் கொண்டே கேட்டார். நான் வாத்தியார் உட்காரும் மேசையில் அமர்ந்து கையில் பேனாவுடன் காத்திருந்தேன். வாத்தியார் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டும் பொருட்களை அடுக்கிக் கொண்டும் இருந்தார். வேலையாள் சுப்பையா, கடை உள்ளே உள்ள குறுக்கலான படிகளில் ஏறி மதிய உணவு சாப்பிடப் போய் விட்டான். வாத்தியார் சமைத்த சாப்பாடுதான். இத்தனைக்கும் சாயங்காலம் மணி நான்காகி விட்டது.
புதிதாக கடைக்கு வரும் வாடிகையாளர்கள் யார் முதலாளி என்று குழம்பிப் போய் விடுவார்கள். அந்த அளவுக்கு அவரின் கல்லாப் பெட்டி(வெறும் லாச்சிதான்) மேசையை ஆக்கரமித்து கொண்டிருந்தேன். சிறிய மேசைதான். கடை வரிசையில் தொங்களில் இருக்கும் இந்த ஒட்டுக் கடைக்கு பெரிய மேசை வைக்க ஏது இடம்.
அந்த ‘ஏரோகிராம்’ தாளே சிறிய அளவுதான் இருக்கும். என் எழுத்துக்களோ பெரிது பெரிதாக இருக்கும்.
“இன்னும் கொஞ்சம் இடம் தான் இருக்கு,” என்றேன்.
“அதுக்குள்ள நிறைஞ்சிரிச்சா ... பா?” கடைக்கு வெளியே சென்று அல்லூரில் எச்சிலைத் துப்பிவிட்டு மீண்டும் என் அருகே வந்து கடிதத்தை தன் மூக்குக் கண்ணாடியின் வழிப் பார்த்தார். அவரது வெள்ளை கோரை தலைமுடி எங்கள் தலைக்கு மேல் விசிறிய காற்றாடியினால் கலைந்தது. வாத்தியார் கையால் அதனை சரி செய்தார்..
“ஆமா. இன்னும் என்ன எழுதனும்?” என்று என் வாய்தான் வினவியதே தவிர, என் நினைப்பெல்லாம் வாத்தியார் போட்டுக் கொடுக்கப் போகும் தேநீரிலும், ஜேம் பிஸ்கெட்டிலும்தான் இருந்தது.
“கடைசி வரியைப் படி ... பா.”
“உன் உம்மா மாதிரி ஊர் கதை பேச வீடு வீடாக போய் விடாதே. நீ அப்படி செய்ய மாட்டாய் என்று தெரியும். இருந்தாலும் சொல்லி வைக்கிறேன்,” என்றேன்.
“எக்காரணத்தைக் கொண்டும், உன் மாமா உஸ்மானை வீட்டினுள் சேர்க்க வேண்டாம் என்று உன் உம்மாவிடம் சொல்லி வை. தம்பி தம்பியென வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டு அங்கேயே குடித்தனம் செய்யப் போகிறான். அப்போதே அவனை ஒரு பெண்னைப் பார்த்து நிக்காஹ் செய்து கொண்டு கையோடு இங்கே வந்து எனக்கு ஒத்தாசையா இருக்கச் சொன்னேன். யாரும் எனக்கு மதிப்பு தருவதில்லை. இன்னும் இடம் இருக்கா ...பா?”
“ம்ம்ம் ... இல்ல.”
“சரி, படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே வீட்டு வேலையிலும் உன் உம்மாவுக்கு ஒத்தாசையா இரு. இன்ஷா அல்லாஹ். அடுத்தக் கடிதத்தில் வேறு விசயங்கள் எழுதுவேன். இப்படிக்கு உன் அன்பு வாப்பான்னு போட்டு முடிச்சிரு ...பா.”
வாத்தியார் சொன்னதை என் எழுத்தை கொஞ்சம் சிறியதாக்கி எழுதி முடித்தேன். எப்போதும் இப்படித்தான். எழுவதற்கு இடம் பற்றாக்குறையாக இருந்தாலும், அவர் இன்னும் சொல்லிக் கொண்டே போவார். நானும் எழுதுவதைப் போல பாவனை செய்வேன். ஆனால் எழுத மாட்டேன். எழுதிய ஏரோகிராம்மை பிறகு வாத்தியாரே ஒட்டிக் கொள்வார். பெரும்பாலும் என்ன எழுதினேன் என்பதை படித்துப் பார்க்க மாட்டார். நல்ல வேளை, இல்லாவிட்டால் அதை மாற்று இதை மாற்று என்று நிஜமான வாத்தியார் வேலைப் பார்த்தார் என்றால் எனக்குத்தான் சங்கடம்.
கடைக்குள் சில வாடிக்கையாளர்கள் வந்தனர். வாத்தியார், அவர்கள் கேட்டதை எடுத்துக் கொடுத்து அவர்களின் தீகா லீமா புத்தகத்தில் எழுதிக் கொண்டார். பணம் கொடுத்தவர்களின் பணத்தை நான் உட்கார்ந்திருந்த மேசை லாச்சியை திறந்து அதில் போட்டார். லாச்சியில் நூறு வெள்ளிக்கும் குறைவாகவும், சில்லறை காசுகள் ஐந்து வெள்ளிக்கு அளவுதான் இருக்கும் போல.
சாப்பிட மேலே ஏறிப் போன சுப்பையா இன்னும் கீழே இறங்கி வரவில்லை. அவன் அப்படித்தான். அதுதான் சாக்கு என்று மேலே சாப்பிட்டு விட்டு கீழே இறங்க ஒன்றரை மணி நேரமாகி விடும். சாப்பிட்டு தூங்கி விடுவான் போல. கடையில் வாத்தியார் ஒருவர் மட்டுமே கடை மேல் உள்ள சிறிய பகுதியில் தங்கி விடுவார். சுப்பையா காலை எட்டு மணிக்கு வந்தால் ஆறு மணிக்கு கிளம்பி விடுவான். அவன் வீடு இந்தப் பட்டணத்தை தாண்டி ஒரு தோட்டப்புறத்தில் உள்ளது. கடைசி பஸ் ஆறு முப்பதுக்கு. வாத்தியார் கடை அடைக்க இரவு 8 மணிக்கு மேல் ஆகிவிடும்.
வாத்தியார் பின்னால் தேநீர் கலக்கச் சென்றார். வாடிக்கையாளர் ஒருவர் வந்து தேங்காய் எண்ணெய் ஒரு போத்தல் அடித்துக் கொடுக்குமாரு கேட்டார். நானும் வேறு வழியில்லாமல் டின்னிலிருந்து அடித்துக் கொடுத்தேன். புத்தகத்தில் எழுதிக் கொள்ளச் சொன்னார். அவர் பெயரை வினவினேன். அவர் சொன்னார். நான் எழுதவில்லை. நான் என்ன இந்தக் கடை ஊழியனா.
“ராமசாமி அண்ணன் எண்ணெய் ஒரு போத்தலுக்கு வாங்கினார்!”
“என்னா எண்ணெய்?”
“தேங்கா எண்ணெய்.”
வாத்தியார் இரண்டு பேருக்கும் தேநீரை கிலாஸில் கொண்டு வந்து வைத்தார். தீகா லீமா புத்தகத்தில் கணக்கை எழுதினார்.
“பிஸ்கெட் எடுத்துக்கோ.”
“உங்களுக்கு?”
“வேண்டாம்.”
நான் எனக்கு பிடித்த அன்னாசி ஜேம் பிஸ்கெட்டுக்களை டின்னிலிருந்து நான்கு எடுத்துக்கொண்டு வாசலில் போடப்பட்டிருக்கும் ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து ஆசை தீர சாப்பிட்டேன். அங்கு எப்போதும் இரண்டு ஸ்டூல்கள் இருக்கும். சமயங்களில் கடைக்கு வருபவர்கள் வாத்தியாருடன் அங்கு உட்கார்ந்து உரையாடுவர்.
எனக்கு வாத்தியாரின் வீட்டுக் கதைகள் அவர் எனக்குச் சொல்லாமலேயே அவர் எழுதச் சொல்லும் கடிதங்களின் மூலம் தெரிந்து விடும்.
இந்த ஒரு வருடத்தில் அவர் ஊருக்கு அனுப்பிய கடிதங்களின் சாராம்சத்தில் அவ்வளவு வேறுபாடு இருக்காது. அவர் மனைவிக்கு தெரிவிக்கும் விசயத்தைதான் மகளுக்கும் பின் மகனுக்கும் எழுதச் சொல்வார். எனக்கென்னவோ அவர் கடிதம் அனுப்பாமல் இருப்பதே நல்லது என்று தோன்றியது. ஆனால் முடியாதே, அந்த சுவையான தேநீரும் பிஸ்கெட்டும் பறிபோய் விடுமே.
பணப் பிரச்சனை, மனைவி மற்றும் அவரது மகன் அவரை பொருட்படுத்தாமை. மகள் மட்டுமே சிறப்பு. அவரது அக்காள் அல்லது தம்பிக்கு கடிதம் எழுதினாலும் இதைப் போன்ற பிரச்சனைகள்தான் அங்கும் மேலோங்கி இருக்கும்.
எப்போதாவது ஒருமுறை அவர் நண்பர்களுக்கு எழுதுவார். அதில் உள்ளடக்கம் சாதாரணமாகவும் மேலோட்டமாகவும் இருக்கும். கடிதங்களை நான் எழுதுவதோடு சரி. சுப்பையா அதை வீட்ற்கு போகும் வழியில் போஸ் செய்து விடுவான்.
சுப்பையா அதன் பிறகுதான் கீழே இறங்கி வந்தான். அவன் தேநீர் குடிப்பது குறைவு.. அதனால் வாத்தியார் தேநீர் போடுவதென்றால் முன்கூட்டியே அவனிடம் கேட்டப்பிறகுதான் தேநீர் போடப் போவார். இன்று அவன் தாமதமாக சாப்பிடச் சென்றதால் வாத்தியார் கேட்கவில்லை.
சுப்பையா என்னிடம் அவ்வளவாக பேசமாட்டான். ஆனால் பாட்டு கேஸட்டுக்களை மட்டும் நாங்கள் இருவரும் அடிக்கடி மாற்றிக் கொள்வோம். நான்தான் அடிக்கடி அவனிடமிருந்து இரவல் வாங்குவேன். அவன் வேலை செய்கிறான். அவ்வப்போது புது படக் கேஸட் வாங்கிக் கொள்ளலாம். இப்போது ‘நான் பாடும் பாடல்’ கேஸட் பாடல்களைத்தான் வீட்டில் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். அதை சீக்கிரம் கொடுத்து விடவேண்டும், தாமதித்தால் முறைப்பான்.
சுப்பையாவுக்கு என்னை விட ஒரு வயதுதான் மூப்பு. ஆறாம் வகுப்பு வரைக்கும்தான் படித்திருக்கின்றான். இல்லாவிட்டால் இந்த வருடம் அவன் என்னை மாதிரியே பாரம் ஐந்து படித்துக் கொண்டிருக்க வேண்டியவன். தனக்கு எழுதப்படிக்க சரியாக வராததால், தாழ்வு மனப்பான்மை எப்போதும் அவனுக்கு உண்டு. அதனாலேயே என்னிடம் அவ்வளவாக பேசுவதில்லை. அப்படித்தான் படித்த கர்வத்தில் நான் நினைத்துக் கொள்வேன்.
வாத்தியாருக்கு நான் வாரத்திற்கு ஒரு கடிதமோ அல்லது இரண்டு கடிதமோ எழுதுவது வழக்கம். இதற்காக நான் பிரத்தியேகமாக நாளில் அங்கு போய் உட்கார்ந்து எழுதுவதில்லை. எப்போது நான் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சொல்லி அம்மா அனுப்புகின்றாரோ அப்போது மட்டும் போவேன், சனி ஞாயிறுகளில் நான் கடைக்குச் சென்றாலும் கடிதம் எழுதும் பழக்கத்தை நான் வைத்துக் கொள்வதில்லை, அப்போதுதான் டிவியில் தமிழ்ப் படம் போடுவான் அல்லது மற்ற எனக்கு பிடித்த நிகழ்ச்சிகள் ஒளியேறும்.
தேநீரைக் குடித்து விட்டு சைக்கிளில் வீட்டிற்கு வர மணி ஐந்து முப்பதாகி விட்டது.
“என்னா சீனி வாங்கி வரத்துக்கு இவ்வளவு நேரமா? தே தண்ணீ வேணுமா?” அம்மா தம்பியுடன் தாவா பிஸ்கெட்டுடன் குசினியில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்பா இன்னும் வேலை முடிந்து வரவில்லை.
“அண்ணந்தான் ஒட்டுக் கடையில் குடிச்சிருக்குமே.”
“ஆமா,” என்றேன்.
குளித்து, சாமியெல்லாம் கும்பிட்ட பிறகு ‘நான் பாடும் பாடல்’ கேஸட்டைப் போட்டேன். என்ன பாட்டு ...என்ன ராகம். இளையராஜாவை ஒரு நாள் நேரடியாக பார்த்து விட வேண்டும்.
“இப்படியே சினிமாப் பாட்டுக் கேட்டுக்கிட்டும் அந்த ஒட்டுக் கடை வாத்தியாருக்கு ஊருக்கு லட்டர் எழுதிக் கொடுத்துக்கிட்டு இரு. எஸ்.பி.எம்மில் பாஸ் பண்ண மாதிரிதான்.” அம்மாவின் உபதேசம் ஆரம்பமாகியது.
நான் பாட்டுக் கேட்டால் அம்மாவுக்கு பிடிக்காதே. இதுக்காக நான் அம்மா போன்று பக்திப் பாடல்களைக் கேட்டுக் கொண்டா இருக்க முடியும். படிப்பெல்லாம் இரவு 9 மணிக்கு மேல்தான்.
நான்கு நாட்கள் கழித்து மீண்டும் வாத்தியாரின் ஒட்டுக் கடைக்குச் சென்றேன். அம்மா தேங்காய்ப் பூவும் நெத்திலியும் வாங்கி வரச் சொன்னார். அன்று வெள்ளிக்கிழமை, இன்றைக்கு வேறு யாருக்காவது கடிதம் எழுதுகிற வேலை இருந்தாலும் இருக்கும். இன்றைக்கு வேறு பிஸ்கெட் சாப்பிட ஆவல் கொண்டிருந்தேன். வாத்தியார் தேங்காய்ப்பூ ரொட்டியெல்லாம் எடுத்துச் சாப்பிட சொல்ல மாட்டார்.
கடையில் வாத்தியார் ஒருவரே இருந்தார். வாடிக்கையாளர் ஒருவருக்கு அரிசியை திராசில் நிறுத்திக் பேப்பர் பையில் கட்டிக் கொண்டிருந்தார், சுப்பையாவைக் காணாம். மேலே சாப்பிடப் போயிருப்பான் போல.
“என்னா வேணும்?” வாத்தியார் என்னை நேரே பார்க்காமல் கல்லாவில் பணத்தைக் எண்ணிக் கொண்டே கேட்டார். நான் வேண்டியதை சொன்னேன்.
வாத்தியாரின் முகம் எப்போதும் போல இல்லை. அவரின் சிரித்த முகம் அன்று எங்கோ தொலைந்து போயிருந்தது. வாத்தியார் நான் கேட்ட தேங்காயை மிசினில் துருவ ஆரம்பித்தார். அப்போதும் அமைதியாகவே இருந்தார்.
“இன்னிக்கி லெட்டர் ஏதாவது எழுதனுமா?”
“ஒன்னும் வேண்டாம்.”
ஏன் வாத்தியார் இப்படி கடுப்பாக பேசுகிறார்? எப்போதும் என்னுடன் இப்படிப் பேச மாட்டாரே. ஒரு வேளை கடிதத்தில் ஏதாவது தவறுதலாக எழுதி விட்டு அதை வாத்தியார் கண்டுப் பிடித்து விட்டாரோ என்ற பயம் ஏற்பட்டது. ஆனால் நான் என் பயத்தைக் காட்டிக் கொள்ளவில்லை.
நான் வாங்கிய பொருட்களின் கணக்கை மேசையில் அமர்ந்து தீகா லீமா புத்தகத்தில் எழுதினார். அப்போதும் அவர் என் முகத்தைப் பார்க்கவில்லை.
என்ன பேச்சுக் கொடுக்கலாம் என்று யோசித்தேன்.
“சுப்பையா சாப்பிடப் போயிட்டானா?”
“இல்ல.”
“வெளியே போய்ட்டானா?”
“அவன் வேலைக்கி வந்து மூனு நாள் ஆச்சி. சரி நீ வீட்டுக்குப் போ, மழை வர்ர மாதிரி இருக்கு.”
வாத்தியார் என்னை இப்படி விரட்டியதும் இல்லை. சுப்பையாவைப் பற்றி மேலும் கேட்க நினைத்தேன். ஆனால் இப்போது வாத்தியாரின் நிலமை சரி இல்லாததால், நான் வீட்டுக்கு கிளம்பினேன்.
மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து ஒட்டுக் கடைக்கு சென்றேன், அப்போதும் வாத்தியார் பிடி கொடுக்காமல்தான் என்னிடம் பேசினார். சுப்பையாவும் கடையில் இல்லை. சுப்பையாவிடம் கடுப்பாக இருந்தால் அதை ஏன் என் மீது காண்பிக்கின்றார் என்றுதான் புரியவில்லை.
முன்பெல்லாம் லாச்சியை பூட்ட மாட்டார். இப்போது அவ்வப்போது பூட்டிக் கொள்கின்றார். இப்போது யார் அவருக்கு கடிதம் எழுதிக் கொடுப்பது என்றும் தெரியவில்லை. முன்பு போல் அவரே எழுதிக் கொள்கிறார் போலும். வீட்டில் இதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை.
ம்ம்ம் ... ருசியான தேநீருக்கு எங்கே போவேன்?
-முற்றும்-
Comments
Post a Comment