சிறுகதை
எம். பிரபு
காலையில் காடியை வெளியே எடுத்த போதுதான் அதனைப் பார்த்தேன். தபால் பெட்டிக்குள் கடிதம்.
எப்போதுமே எங்கள் வீட்டிற்கு தபால் வருவதோ குறைவு. வந்தாலும் தென்றல்/வானம்பாடிதான் மாதத்திற்கு இரண்டு முறை வரும். பிறகு, காப்புறுதிக்கான கடிதம் வரும். இது என்ன அதிசயமாய், அதுவும் நேற்று இரவு போடப்பட்டிருக்கலாம். நேற்று ஞாயிற்றுக்கிழமை வேறு.
காடியை விட்டு கிழே இறங்கி அதனை எடுத்தேன். தபால்த் தலை ஏதும் ஒட்டப்படாத அந்த வெள்ளை நிற நீண்ட கடித உரையில் அழகாக என் பெயர் விஷ்னு என்று ஆங்கில எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது.
அதனை எடுத்துக் கொண்டு காடிக்குள் நுழைந்தேன். கம் போட்டு ஒட்டப்பட்டிருந்தது. சரி, அலுவலகத்தில் போய் பிரித்துக் கொள்ளலாம் என்றிருந்தேன்.
என் மனைவி விநிதா இனிமேல்தான் எல்.ஆர். டி ஏறி, தான் வேலை செய்யும் பேரங்காடிக்குச் செல்வாள். அவள் வேலை நேரம் அப்படி.
காடியை அலுவலக வலாகத்தில் நிறுத்திவிட்டு, சற்று அவசரமாகவே அந்தக் கடிதத்தை பிரித்தேன்.
அழகிய கையெழுத்துக்களில் தமிழில் எழுதியிருந்தது:
விஷ்னு, என்னை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆனால் நான் உங்களை மறக்கவே இல்லை. மறக்கவில்லை, மறக்கவே இல்லை. மறக்கவும் முடியாது. நீங்களும் என்னை மறக்க மறுக்க இயலாது.
அவ்வளவுதான் எழுதியிருந்தது. கையெழுத்து அவ்வளவு அழகு. கண்களுக்குள் ஒத்திக் கொள்ளலாம்.
யார் இது? நல்ல வேளை இந்தக் கடிதம் என் மனைவி கைக்கு கிடைப்பதற்கு முன்பாகவே நான் எடுத்து விட்டேன். அதை நான்தான் எடுப்பேன் என்று தெரிந்துதான் ...
எழுத்தைப் பார்த்தால், ஒரு பெண் எழுதிய எழுத்துக்கள் போன்றுதான் உள்ளது. எனக்கு என் மனைவிக்கு முன்பு, வேறு காதலி இருந்ததில்லையே. பிறகு எப்படி இது, இந்தக் கடிதம் சாத்தியம்?
என் அலுவலகத்திலும் என்னைத் தவிர வேறு இந்திய பெண்களோ ஆண்களோ இல்லை. பிறகு எப்படி இந்தக் கடிதம், எனக்கு? தவறுதலான முகவரிக்கும் இந்தக் கடிதம் அனுப்பியிருக்க வாய்ப்பில்லை. கடிதத்தில் என் பெயர் அழகாகவே எழுதப்பட்டிருக்கிறது.
அன்று முழுவதும் அலுலகத்தில் வேலை செய்யவே முடியவில்லை. எப்படா வீட்டிற்கு போய் சோபாவில் சாய்வோம் என்றுதான் இருந்தது. பல முறை அந்தச் சிறிய கடிதத்தை படித்து விட்டேன். அந்த எழுத்துக்கள் அசிங்கமாக இருந்திருந்தால், அப்போதே கிழித்துப் போட்டிருப்பேன். ஆம், அப்படித்தான் செய்திருப்பேன்.
நிச்சயம் இந்தக் கடிதத்தை ஓர் அழகிதான் எழுதியிருப்பாள். எனக்கு புத்தம் புது அழகிய மனைவி இருக்கும் போது, ஏன் என் மனம் இப்படி நிலைத் தடுமாறுகின்றது? எனக்கே இது ஆச்சர்யமாக தோன்றியது.
என்னை சோதிக்க இப்படி ஒரு கடிதத்தை என் மனைவியே எழுதியிருப்பாளோ? ஆனால், இது அவளது எழுத்துக்கள் அல்லவே. ஒன்றும் புரியவில்லை.
இந்த விசயத்தை விநிதாவிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற சிந்தனையும் எழுந்தது. அதை வீடிற்கு சென்ற பின் முடிவு செய்து கொள்ளலாம். ஆம், வீட்டிற்கு சென்ற பின் பார்த்துக் கொள்ளலாம்.
சாயங்காலம் மணி 6.15க்கெல்லாம் நான் வீடு வந்து சேர்ந்தேன். தபால் பெட்டியை எட்டிப் பார்த்தேன். கடிதம் ஏதும் இல்லை. நிம்மதியாக இருந்தது. என் மனைவி இன்னும் வரவில்லை. அவள் வருவதற்கு இரவு 10.30க்கு மேல் ஆகி விடும். ஓவர் டைம் இல்லையென்றால், ஏழு மணிக்கு மேல் வந்து விடுவாள்.
விநிதா வருவதற்குள் சமைத்து விட வேண்டும். அரிசி கழுவி குக்கரில் போட்டேன். குளிர்சாதனப் பெட்டியில் சிவப்பு முல்லங்கி, கத்திரிகாய் ஒன்று இருந்தது. பிளாஸ்டிக் கூடையில் உருளைக் கிழங்கு இருந்தது.
சாம்பார் வைத்தேன். நெத்திலி பொறித்தேன். நாளைக்குத்தான் பசார் மாலாமில் காய்கறிகள், கோழி, மீன் வாங்க வேண்டும. எல்லா வேலைகளும் நடந்துக் கொண்டிருந்தாலும், என் மண்டையில் இன்று காலையில் கிடைத்த கடிதம் குறித்துதான் நினைவோட்டம் இயங்கிக் கொண்டிருந்தது.
இரவு எட்டு மணிக்கே சாப்பிட்டு விட்டேன். முன்பெல்லாம் விநிதா வரும் வரைக்கும் சாப்பிடாமல் காத்திருப்பேன். அவள்தான், எதுக்கு அவளுக்காக உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றாள். அவள் தன் உடம்பை கெடுத்துக் கொண்டால் பரவாயில்லை போலும்.
காலையில் கிடைத்த அந்தக் கடிதத்தை பத்திரமாக என் அறையினுள் இருக்கும் லாச்சியில் ஒரு புத்தகத்தின் உள்ளே வைத்திருக்கின்றேன்.
அநேகமாக வினிதா அந்த புத்தகத்தை தொட வாய்ப்பில்லை. அது ஏ. சாமாட் சாயிட் எழுதிய ஹுஜான் பாகி நாவல். விநிதாவிற்கு மலாயில் எழுதவும் படிக்கவும் பிடிக்காது. அது ஏன் என்றும் தெரியவில்லை.
மணி பத்தாகி விட்டது. விநிதாவை அழைத்து வர வேண்டும். அதனால் காடியை வீட்டின் கேட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்தேன். கேட்டை திறக்கும் போது ஏதேச்சையாக தபால் பெட்டியைப் பார்த்தேன்.
அதனுள் மீண்டும் ஒரு கடிதம்!
அதனை லபக் என்று எடுத்து என் காற்சட்டை பைக்குள் தினித்தேன். என் இதயம் வேகமாக துடித்தது. அதனை என் காடிக்கு காட்டிக் கொள்ளாமல், காடியை செலுத்தினேன்.
என் முகத்தை எப்போதும் போன்று வைத்துக் கொண்டேன்.
என் மனது மட்டும் இரண்டு வகையாக மாறியிருந்தது. ஒன்று, கடிதத்தைப் பற்றி விநிதாவிடம் சொல்லச் சொன்னது, இன்னொன்று அப்படியே விட்டு விடச் சொன்னது.
“சாப்டீங்களா?”
“ஆ ... சாப்ட்டேன் ... சாப்ட்டேன். சாம்பார் வெச்சி நெத்திலி பொறிச்சேன். ஒகேதானே?”
“அது போதும்.”
அதுக்கு மேல் அவளிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை.
“ஏன், ஒரு மாதிரியா இருக்கீங்க?”
“இல்லையே, எப்போதும் போலத்தானே இருக்கேன்.”
வீட்டிற்குள் நுழைந்ததும் முதல் வேலையாக, குளியல் அறைக்குள் நுழைந்தேன்.
கடிதத்தை பிரித்தேன்.
விஷ்னு, நான் யாரென்று கண்டுப் பிடித்து விட்டீர்களா? அது அவ்வளவு சுலபம் அல்ல தான். ஆனால், எப்படியும் நான் யாரென்று கண்டுப் பிடித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
நாம் சந்திக்க வேண்டும், நாளை சாயங்காலம் உங்கள் அலுவலகம் பக்கத்தில் இருக்கும் பர்கர் கிங்கில் சந்திக்கலாம்.
அவ்வளவுதான் எழுதப்பட்டிருந்தது.
என்னடா இது வம்பா போச்சு. தன்னையும் அறிமுகப் படுத்திக் கொள்ளாமல் எப்படி நாளைக்கு இவளை சந்திப்பது?
பிறகு என் அறைக்குச் சென்று கடிதத்தை ஹூஜான் பாகி புத்தகத்தில் நுழைத்தேன். இரண்டு கடிதங்களாகி விட்டன். இன்னும் எத்தனை கடிதங்கள் வரப்போகிறதோ?
படுக்கை அறையில் குளிரூட்டியின் குளிரில் மனைவியின் கதகதப்பு எப்போதும் எனக்குத் தேவைப்படும். இன்று நான் ஒருக்களித்து படுத்துக் கொண்டேன்.
என் சிந்தனை பூராவும் அந்தக் கடிதத்தின் மீதுதான். எப்போதும் நாந்தான் விநிதாவின் உடலை கட்டிப் பிடித்து தூங்குவேன். இன்று அவள் என்னைப் கட்டிப் பிடித்துக் கொண்டாள். அது இப்போது இடைஞ்சலாக இருந்தது. மிக இடைஞ்சல்.
நாளை, வேலை முடிந்து பர்கர் கிங்க்கு போய் அவளைப் பார்ப்பதா வேண்டாமா? ஒரு கால் அவள் என்னுடன் இடைநிலைப்பள்ளியில் படித்த தோழியாகவும் இருக்கலாம். யாராக இருக்கும்? இன்றைக்கு எப்படியாவது இதுக்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும். ஆம், முடிவு கட்டியாக வேண்டும்.
இன்றும் என்னால் முறையாக கணக்கு வழக்குகளை கவனிக்க இயலவில்லை. மதியானமும் நான் சாப்பிடவில்லை. தேனீர் மட்டுமே அருந்தினேன்.
யார் அந்தப் பெண்? ஒரு வேளை நான் அவள் அழகில் மயங்கிவிட்டால், அது விநிதாவிற்கு நான் செய்யும் துரோகம் ஆகி விடாதா? துரோகியே விகடகவியாகி விட்டார். நான் துரோகியாகி விடுவேனோ?
ஐந்து மணியானதும் நான் அவசரமாக கீழே இறங்கினேன். இதயம் பட படவென துடித்தது. என் தோள்ப் பையை காரினுள் போட்டு விட்டு, என் தலைமுடியை வாரினேன். காடியின் பக்கவாட்டு கண்ணாடியில் என் முகத்தை சரிப்பார்த்துக் கொண்டேன்.
பர்கர் கிங் உணவகத்தினுள் நுழைந்தேன். அவ்வளவாக ஆட்கள் இல்லை. இந்தியப் பெண்கள் யாரும் அங்கு அமர்ந்திருக்கவில்லை.
இனிமேல்தான் அவள் வருவாளோ? அவள் வருவாளா?
அவள் அலைபேசி எண்களையாவது கடிதத்தில் எழுதியிருக்கக் கூடாதா.
நான் ஒரு மூலையில் சென்று அமர்ந்தேன். எனக்கு அப்படி உட்காரத்தான் பிடிக்கும். மீண்டும் தலைமுடியை வாரினேன். கடிதம் அனுப்பியவள் விநிதாவை விட அழகாக இருந்து விட்டால் நான் என்ன செய்வது?
பத்து நிமிடம் காத்திருந்தேன். எந்த இந்தியப் பெண்ணும் வரவில்லை.
அப்போதுதான் அவன் வந்தான். ஆம், அவந்தான். அந்தச் சீனன். மிகவும் பரிட்சியமானவன். இவன் ஏன் இங்கே வரவேண்டும்? நான் ஒரு அழகிய பெண்ணுக்கு காத்திருக்கும் தருவாயில், இவன் இங்கிருந்தால் காரியமே கெட்டு விடுமே.
அவன் ஒருத்தன்தான் வந்திருப்பான் போல.
என்னைப் பார்த்து புன்னகைத்தான். வேறு மேசையில் போய் உட்கார்ந்தால் பராவாயில்லை. அவன் சாப்பிட ஆர்டர் கொடுக்காமல் நேரே என் மேசைக்குத்தான் வந்தான், வீனாப்போனவன்.
“ஹலோ விஷ்னு!” என்னை ஒரு மாதிரியாகவே அழைத்தான். நக்கல் கலந்த உச்சரிப்பு.
என் முன்னுக்கு உட்கார்ந்தான்.
“என்ன விஷ்னு, பார்த்து ரொம்ப நாளாச்சு.” மீண்டும் ஒரு மாதிரியாக புன்னகைத்தான்.
“ஆமாம், சான்.” அது மட்டும்தான் என் வாயிலிருந்து வந்தது.
“கூப்பிட்டாக்க, போனை எடுக்கிறதே இல்லை.”
இவன் நம்பரை அப்போதே பிளாக் செய்திருக்க வேண்டும்.
சான்னுடைய கடுகடுப்பான மூஞ்சியை பார்த்துக் கொண்டே கடையின் வாசற்கதவையும் நோக்கினேன். எந்தத் தமிழ்ப் பெண்ணும் வந்தபாடில்லை.
“நாலு மாதம் ஆகிருச்சி விஷ்னு. நாலு மாதம் ஆகிருச்சி. நீ என்னா நினைச்சிக்கிட்டிருக்கே?”
“வந்து ... சான். இப்போதைக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.”
“கல்யாணத்த ஆடம்பரமா செய்யறதுக்கு முன்னுக்கு யோச்சிருக்கனும்.”
அது என் இஷ்டம். இதை என் மனிதில்தான் சொல்ல முடிந்தது.
“அது ... அது வந்து, காடி ஒன்னு வாங்கிட்டேன்.”
“தெரியும் ... தெரியும். புது காடிதான் பாவிப்பீங்களோ?”
இவன் யார் என் சொந்த விசயத்தில் தலையிட?
“எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு.”
“இந்த நான்கு மாதம் உன்னை சும்மா விட்டு வெச்சிருந்ததே பெரிய விசயம்.”
“அதுக்காக நான் பணத்தை கொள்ளையடிச்சா உனக்கு கொடுக்க முடியும்?” எனக்கே ஆச்சர்யமாக இருந்தது எப்படி அவனிடம் பேசினேன் என்று.
சான், என் கரங்களை பிடித்து அழுத்தினான். சுற்றும் முற்றும் பார்த்தான். எனக்கு வலி தாங்க முடியவில்லை. ஆனால் கத்தவில்லை. எப்படியோ என் கைகளை இழுத்து அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டேன்.
“ஒழுங்கு மரியாதையா என் பணத்தை கொடுக்கிற வழியைப் பாரு. இல்லாட்டி உன் காருக்கு என்ன நடக்கும் என்பதை நீயே பார்ப்பே!”
சான் சென்று விட்டான்.
என்னால் உடனே அங்கிருந்து எழுந்து கிளம்ப முடியவில்லை.
முற்றும்
Comments
Post a Comment