சிறுகதை
எம். பிரபு
என் தலை, முகம், கை, கால் முதுகு எல்லாம் பயங்கர வலி. கை பாதங்களில் ரத்தம், எந்தப் பகுதியில் இருந்து பட்டது என்று சரியாக ஞாபகமில்லை. அந்த வலியிலும் எப்படி இந்த சிமெண்ட் தரையில் நேற்று படுத்து உறங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை. அறை முழுக்க இருட்டுதான், ஆனால் பொழுது விடிந்து விட்டதற்கான உணர்வு எனக்கு ஏற்படுத்தியது. ஆம், அப்படியாகத்தான் இருக்கும்.
நேற்று அந்த மூவரும் இருக்கும் போது அறையில் வெளிச்சம் இருந்தது. ஆம், எனக்கு நினைவுள்ளது என் தலைக்கு மேலே ஒரு குண்டு பல்ப் பிரகாசமாகவே எரிந்தது. பிரகாசமாக.
நான் எழ முயன்றேன். சிரமப்பட்டுத்தான் எழுந்தேன். கால்கள் இரண்டும் சரியான வலி. கைகளும் தலையும் அப்படியே. அந்த சிறிய அறைக்குள் ஏதாவது ஒரு மூலையில் சிவிட்ச் இருக்கும். இருக்க வேண்டும்.
கண்களை அகல விரித்துக் கொண்டு சுவர்களை தடவினேன். நல்ல வேளை என் கைகளும் கால்களும் கட்டப்படவில்லை. அதுவரைக்கும் அவர்களை பாராட்டலாம். பாராட்டலாம்? ஆம், பாராட்டலாம். நான்கு பக்கமும் கீழிலிருந்து தடவினேன். விளக்கின் சிவிட்ச் தட்டுப்படவே இல்லை. இரும்புக் கதவும் வெளியிலிருந்து பூட்டப்படிருந்தது. உள்ளே தாழ்ப்பாள் இருப்பதாக தெரியவில்லை. தடவும்போது அப்படித்தான் தோன்றிற்று.
என் வலது காதை அந்த இரும்புக் கதவின் மேல் அழுத்தி வைத்துக் கொண்டேன். ஒரு சத்தமும் கேட்கவில்லை. நேற்று ஏற்பட்ட பயம் இன்னும் அதிகமாகியது. இருதயம் இன்னும் அதிவேகமாய் துடித்தது. அது மட்டும் கேட்டது.
நேற்று அவர்கள் என்னை பாடு படுத்தியது நினைவிற்கு மீண்டும் வந்தது. நேற்று நடந்ததும் இன்று நடந்ததும் கனவாக இருக்கக் கூடாதா என்று மனம் விரும்பியது. இன்னும் சிறிது நேரத்தில் நான் விழித்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். எவ்வளவு நன்றாக இருக்கும். நான் என் சொகுசு மெத்தையில் எழுந்து – ஓ இது கனவா? என்று நினைத்து மறுபடியும தூங்க வேண்டும். ஆனால் மீண்டும் இதே சம்பவம் கனவில் வரக்கூடாது. ஆம், வரவே கூடாது.
என் கன்னத்தை அரைந்தேன். மேலும் வலித்ததே தவிர, நான் கனவிலிருந்து – தூக்கத்திலிருந்து எழவே இல்லை. எழவே இல்லை.
ஆக நேற்று நடந்த சம்பவமும் இன்று நடந்துக் கொண்டிருப்பதும் உண்மையே! உண்மையே! எப்படி இந்த உண்மையை எதிர்கொள்ளப் போகின்றேனோ? மேலும் அதிக பயம் என்னைச் சூழ்ந்துக் கொண்டது.
என்னால் வெகு நேரம் நிற்க முடியவில்லை. தரையில் அமர்ந்தேன். நேற்று நடந்த நிகழ்வை அசைப்போட்டுப் பார்க்கின்றேன்.
அசைப்போட்டு ...
நான் அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வெளியே வந்துக் கொண்டிருந்தேன். மனதும் அப்போது சந்தோசமாக இருந்த தருணம். வீட்டிற்கு சென்று என் அழகிய மனைவி கையால் சூடாக தேநீர் அருந்த எண்ணம் கொண்டிருந்த நேரத்தில் அதுவும் கார் கதவின் பிடியை திறக்கும் தருவாயில் திடுதிடுப்பென ஒரு மஞ்சள் நிற வேனில் இருந்து மூன்று மஞ்சள் நிற ஆடை அணிந்த ஆடவர்கள் என்னை இழுத்துக் கொண்டு அந்த வேனில் தள்ளினர். ஒருவன் கையில் துப்பாக்கி.
நான் என்ன ஏது என்று கேட்பத்ற்குள் ஒருவன் அந்த இருட்டு வேனில் தாறுமாறாக என் கன்னங்களை அறைந்தான். சரியான வலி. என் இரு கைகளையும் இன்னொருவன் இறுக பிடித்துக் கொண்டான். யப்பா! நான் படாத பாடுபடட்டேன்.
வேன் எந்த பாதையில் சென்றது என்று தெரியவில்லை. அறைந்த அறையில் என் வாயைத் திறந்து பேசுவதற்கும் கத்துவதற்கும் மிகவும் சிரமமாக இருந்தது. இருப்பினும் நான் என் ஆதங்கத்தை வெளிப்படுத்தவே செய்தேன்.
“யார் ... யார் நீங்கள்? எதுக்காக என்னை இப்படி சித்தரவதை செய்றீங்க?”
அந்த மூவரும் எதுவும் பேசவில்லை. பின்னால் இருந்து அந்த மஞ்சள் சட்டை சிலுவார்க்காரன் ஒருவன் என் முதுகிலே தன் துப்பாக்கியால் ஓங்கி தாக்கினான். அம்மா! வலி தாங்க முடியவில்லை.
“வாயை மூடிக்கொண்டு பேசாமல் வா!” என் முன்னால் உட்கார்ந்து இருந்தவன் என் வயிற்றை ஒரு குத்துவிட்டு அப்படிச் சொன்னான்.
“நீங்கல்லாம் யாரு. நான் என்ன தவறு செஞ்சேன்?”
“வாயைத் திறக்காதே!” பின்னால் இருந்தவன் ஒரு தடியால் என் கால்களை அடித்தான்.
“ஆ ... !”
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு வேன் ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தது. வேனை ஓட்டியவன் வெளியிலிருந்து கதவைத் திறந்தான். வேன் உள்ளே இருந்தவன் காலால் எட்டி என் பிட்டத்தை உதைத்தான், நான் வெளியே மண்ணில் சாய்ந்தேன். சிறு சிறு கற்கள் என் முகத்தை பதம் பார்த்தன. இப்போது அந்த நான்கு மஞ்சள் சீருடைக்காரர்களை ஒரே வரிசையில் பார்த்த போது கண்கள் கூசிற்று. ஆம், மஞ்சள் நிறம் எனக்கு ஆகாத - பிடிக்காத நிறம்.
பிறகு இருவர் என் கைகளை இறுக்கி என் இடுப்புக்குப் பின்னால் இறுக பிடித்துக் கொண்டர். நான் என்னை விடுவிக்க முயற்சி செய்தேன்.
“தப்பி ஓடவா முயல்கின்றாய்! இந்தா வாங்கிக்கோ.” என் வலது காலை முன்னிலிருந்து உதைத்தான். யம்மா ! மீண்டும் பயங்கர வலி.
என்னை அந்த மூவரும் என் முதுகையும் கைகளையும் பற்றிக் கொண்டு லிப்ட் அருகே சென்றனர். அதனுள்ளும் இருட்டு. எத்தனையாவது மாடிக்கு செல்கிறது என்ற எந்த குறியீடும் லிப்ட் உள்ளே தெரியவில்லை. என்ன லிப்ட் இது. இதைக்கூடவா இப்படி சரிசெய்யாமல் இருப்பார்கள்.
ஏதோ ஒரு மாடியில் பல அறைகள் பூட்டப்பட்டிருந்தன. அதில் ஓர் அறைக் கதவைத் திறந்து உள்ளே தள்ளினார்கள்.
விளக்கு போடப்பட்டது. ஒருவன் நாற்காலியில் அமர்ந்தான். மற்ற இருவர் என்னை கீழே தள்ளி நான் எழாமல் இருக்க என் கழுத்தையும் முதுகையும் அழுத்தினர்.
“என்னை ஏன் இப்படி சித்தரவதை செய்கிறீர்கள்? நான்தான் எந்த தப்பும் செய்யலியே?”
“எந்தத் தப்பும் செய்யவில்லை?” உட்கார்ந்திருந்தவன் நக்கலாக கேட்டான்.
“அதான் நான் சொல்லிட்டேன்ல. நீங்கல்லாம் யாரு? போலிஸ் மாதிரி தெரியிலியே?”
“எந்தத் தப்பும் செய்யவில்லை? நன்றாக யோசித்துப் பார்.”
“நிச்சயம் சிசிடிவி உங்கள எல்லாம் படம் பிடிச்சிருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில போலீஸ் வந்திடுவாங்க, அப்பத் தெரியும்!” சற்று தைரியமாகவே ஆவேசத்துடன் பேசினேன். இவனுங்களுக்கு என்ன பயப்படுவது.
நான் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் ஏதும் கூறாமல் அந்த இரும்புக் கதவைத் திறந்து மூவரும் வெளியாகினர். கதவு பலமாக சாத்தபட்டது. நான் மெதுவாக நடந்து சென்று அந்த இரும்புக் கதவை திறக்க முயன்றேன். வெளியிலிருந்து பூட்டப்பட்டிருக்க வேண்டும். அறையில் மின் விளக்கும் நின்றது.
சாப்பிட ஒன்றும் கொடுக்கவில்லை. பசியும் தாகமும் மாறி மாறி தாக்கின. பிறகு எப்படி அந்தத் சிமெண்ட் தரையில் உறங்கிப் போனேன் என்று தெரியவில்லை. ஆம், தெரியவில்லை. மறுநாளும் வந்தது.
ஒரு காரணமும் சொல்லாமல் எதுக்கு என்னை இங்கு அடைத்து வைத்துள்ளனர் என்று என் மண்டைக்கு அப்போது எதுவும் எட்டவில்லை. அவர்களும் நேற்று ஒன்றும் சொல்லாமல் கிளம்பி விட்டனர்.
இன்றைக்காவது என்னை விடுவிப்பார்களா? என் கைத்தொலை பேசியையும் அவர்கள் நேற்று பிடுங்கி விட்டனர். எங்கும் தொடர்பு கொள்ளவும் முடியாது.
நான் விழித்து அரை மணி நேரத்தில்(சரியாக யூகிக்க முடியவில்லை) அறையினுள் வெளிச்சம் வந்தது, கண்கள் கூசிற்று. கதவு திறக்கப்பட்டது. அந்த மூன்று மஞ்சள் சீருடைக்காரர்கள் உள்ளே நுழைந்தனர். ஒருவன் உணவுப் பொட்டலமும் தேநீர் பையும் கொடுத்தான். அப்பாடா என் சந்தோசத்திற்கு அளவே இல்லை. நான் இந்த மாதிரி தேநீரை சுடச்சுட பையில் ஸ்ட்ரா போட்டு குடிப்பது பிடிக்காது, ஆனால் இந்த நிலமையில் பிடிக்காததும் பிடித்துப் போவதுதான் அதிசயம்.
நாசி லெமாக்கையும் தேநீரையும் முடித்தப் பிறகு உடல் வலிகள் குறைந்த மாதிரி இருந்தது. ஆம், அப்படித்தான் இருந்தது. நாற்காலியில் உட்கார்ந்தே சாப்பிட்டுப் பழக்கப்பட்ட நான், தரையில் உட்கார்ந்து சாப்பிட்டது எனக்கே ஆச்சயர்த்தை உண்டு பண்ணியது.
“போதுமா?” நேற்று பேசியவன் கேட்டான், அவனுக்காக வரவழைக்கப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்து கேட்டான். மற்ற இருவரும் என் பின்னால் நின்றனர்.
“ம்ம்ம் ... எதுக்காக என்னை அடைச்சி வெச்சிருக்கீங்க? என்னை கடத்தி வெச்சும் ஒரு பிரயோஜனமும் இல்ல. எங்கக்கிட்ட நீங்கள் கேட்கும் அளவுக்கெல்லாம் பணம் இல்ல!”
“ஹா ... ஹா ... ஹா நீ யார் நாங்கள் உன்னை கடத்துவதற்கு?”
“பின்னே எதுக்கு என்னை இங்க சிறையில் பூட்டி வெச்சிருக்கீங்க? நீங்க போலிசும் இல்ல.”
“நீ எந்த நாட்டில் பிறந்து, வாழ்ந்து இவ்வாறு முட்டாள்த்தனமாக பேசுகின்றாய்?”
“நான் பொறந்த நாடு இது. இது கூடவா எனக்குத் தெரியாது?”
“அது தெரிகின்றது. எல்லா நாட்டின் சட்டத்திட்டங்கள் வெவ்வேறு. அதிலும் எங்களின் சட்டத்திட்டமே வேறு.”
“நான் என்ன கொள்ளையடிச்சேனா, கொலை செஞ்சேனா இல்ல லஞ்சம் வாங்கினேனா? அது என்ன நீங்க எல்லாம் போலீசை விட மேலா?”
“அப்படியே வைத்துக்கொள். நீ செய்தது இந்தக் கொடூரங்களுக்கு அதற்கும் மேல்.”
என்ன இந்த மஞ்சள் சட்டைக்காரன் குழப்புகின்றான். என் மனசாட்சிப்படி நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லை. நான் உண்டு என் வேலை உண்டு என்றவாக்கிலேயே என் வாழ்க்கைப் பயணத்தை கடத்தி வருகின்றேன். என்னைக் காணாமல் இப்போது என் மனைவி எவ்வளவு பாடுப்பட்டுக் கொண்டிருப்பாள்.
“அப்படி என்ன கொடூரம்?”
“நீ படித்தவந்தானே?”
“இதென்ன கேள்வி?”
“எழுதப் படிக்கத் தெரியும்தானே?”
“படிக்காமத்தான் இப்ப நல்ல ஒரு வேலையில் இருக்கேனா?”
“எங்கக்கிட்டே நீ திமிரா பேசாதே!” உட்கார்ந்திருந்த மஞ்சல் சட்டைக்காரன் சொன்னதுமே, என் பின்னால் நின்றுக் கொண்டிருந்தவன் என் தலையைக் பலமாக நான்கு முறை குட்டினான். ஆ ... ! என்ன ஒரு வலி அது.
“நான் இப்படி அடைக்கப்பட்டதுக்கும் என் படிப்புக்கும் என்ன சம்மந்தம்?”
“நிறைய சம்பந்தம் உண்டு, தம்பி.”
எனக்கு மீண்டும் ஒன்றும் புரியவில்லை. என் புரியாத்தண்மையை புரிந்துக் கொண்டு என் முகத்தில் விட்டான் ஒரு குத்து முன்னால் இருந்தவன். என் தலை கீழே அப்படியே குனிந்தது. ஆம், அப்படியே குனிந்தது. மீண்டும் தலையை எழ வைக்க முடியவில்லை. முடியவில்லைதான்.
கவிழ்ந்த என் முகத்தை நிமிர்த்த என் தலை முடியை பிடித்து இழுத்தான் பின்னால் நின்றிருந்தவன்.
“பள்ளிக்கூடத்தில் எழுத்துக் கூட்டி படித்தாயே, அதன் பிறகு படித்தாயா?”
என்ன முட்டாள்த்தனமான கேள்வி கேட்கிறான் இவன்.
“நான் நல்லாத்தானே படிச்சேன். பரீட்சையில், எல்லாத் தேர்விலும் நல்ல மார்க் வாங்கித்தானே, இப்போ நல்ல வேலையில் இருக்கேன்.”
“அது தெரிகின்றது.”
“அப்புறம் என்ன?”
“ஆனால் நீ தேர்வுக்கு மட்டும்தான் படித்தாய். தொடர்ந்து புத்தகங்களை வாங்கியோ அல்லது நூலகத்திலோ புத்தகங்களையோ இதழ்களையோ எடுத்துப் படிக்கவே இல்லை.”
“இது எப்படி உனக்குத் தெரியும்? அது என்ன பெரிய குற்றமா?”
“எங்களின் சட்டப்படி அது குற்றம்தான். உன்னை தொடர்ந்து படிக்கத்தானே உன் சிறிய வயதில் சிரமப்பட்டு எல்லா மொழி எழுத்துக்களையும் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் அதை முறையாக தொடர்ந்து நீ பயன்படுத்தவே இல்லை.”
எனக்கு மண்டைக்குள் சூடு பிடித்தது.
“இப்படிப்பட்ட சட்டம் இருக்கிறதா? எனக்குத் தெரியாதே!”
“இந்த நாட்டின் எங்களின் சட்டம் இது, தம்பி. நீதான் படிக்கிறதே இல்லையே.”
“ஆனால் இப்படிப் பிடிப்பட்டவர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டதே கிடையாதே.”
“உன் முட்டாள்த்தனம், அது எங்கள் சாமர்த்தியம்.”
“யார் நீங்கள்?”
“நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வா!”
“எனக்கு என்ன தண்டனை?”
“நீ புத்தகங்கள் பத்திரிக்கைகள் வாங்கி முறையாகப் படிக்கும் வரை மற்றவர்களையும் படிக்க வைக்கும் வரை நாங்கள் உன் போன்றவர்களை பின் தொடர்ந்துக் கொண்டே இருப்போம்! விடவே மாட்டோம்! அதற்கு முன், உனக்கு இங்கு பிரம்படிகள் வழங்கப்படும்.”
அவன் அதைச் சொன்னப் பிறகு, நான் அவர்களை நிமிர்ந்துப் பார்க்கவில்லை. அவர்கள் கதவைப் பூட்டிச் செல்லும் வரை குனிந்தவாரே தரையில் அமர்ந்துக் கொண்டிருந்தேன்,
முற்றும்
Comments
Post a Comment