அனுபவம் எம். பிரபு படிப்பதும் , எழுதுவதும் எனது ஆரம்பப் பள்ளிக் காலக்கட்டத்திலேயே தோன்றியதாகும். மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே எனது முதல் படைப்பை வாசகர்களுக்கு வழங்கிவிட்டேன். அதாவது , பள்ளி ஆண்டு மலருக்கு ஆங்கிலத்தில் ‘ My Dog’ என்ற சிறிய கட்டுரையை எழுதினேன். ஆறாம் வகுப்பு வரை ஆங்கிலம் , தேசிய மொழி மற்றும் தமிழிலும் எழுதி வந்தேன். இது இடைநிலைப் பள்ளி வரையில் தொடர்ந்தது. வீட்டில் எங்கள் தகப்பனார் திரு. எஸ். மாதவன் வார இதழ்கள் , மாத இதழ்கள் வாங்கிப் போடுவார். அம்மா , திருமதி ஆ. அம்பிகாவும் அவருக்குப் பிடித்த பக்தி சம்பந்தமான புத்தகங்களுடன் குமுதம் மற்றும் எங்களுக்கு அம்புலிமாமா போன்ற புத்தகங்களையும் வாங்கிப் படிக்க வைப்பார். தேசியப் பள்ளியில் பயின்றதால் , எங்கள் தாயார் அதே பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி , பள்ளியிலும் வீட்டிலும் தமிழ் மொழி போதித்தார். அதனால் எழுத்துக் கூட்டி கூட்டி , மதம், சமயம் தொடர்பான புத்தகங்களைத...